2021

2021

கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரியை கணவன் – பிள்ளைகள் முன்னிலையிலேயே சுட்டுக்கொன்ற தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதும் அவர்களுடைய அண்மைக்கால நகர்வுகள் பாரிய அதிருப்தியை அனைவரிடமும் ஏற்படுத்தி வருகின்றது.

முக்கியமாக உயர் பதவிகளில் இருந்து பெண்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுப்பதவிகள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கான் வாழ் பெண்களிடையே அதிருப்தி மேலெழ ஆரம்பித்துள்ளது.

Taliban kills pregnant police officer in Afghanistan in front of her family  || ஆப்கானிஸ்தான்; தலீபான்களால் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலைஇந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் பொலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.

ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

“மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் – வகுப்பின் நடுவே திரை.” – தலிபான்களின் கீழ் பல்கலைகழகங்களின் நிலை !

தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால்,வகுப்பின் நடுவே திரை கட்டி மாணவர்கள் ஒருபுறம் மாணவிகள் ஒருபுறம் எனப் பிரித்து அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர். இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.

இதனால், ஆப்கானிஸ்தானில் 1990களில் இருந்ததுபோல் தலிபான்கள் கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து இயல்பை முடக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால், லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர். கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் எந்தவிதத்திலும் இல்லாமல் இருந்தது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டமாக இருந்தது. மீறுவோர் மிக மோசமான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆனால், 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நுழைந்த பின்னர் தலிபான்களின் ஆதிக்கம் குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் ஆதிக்கம் இல்லாத ஆப்கனில் பெண் கல்வி பெருமளவில் உயர்ந்தது. பெண்கள் சினிமா துறையில் கூட பளிச்சிட்டனர். அதுபோல் பாப் ஸ்டார்களும் உருவாகினர். இப்படியிருக்க கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. ஆனால், தலிபான்கள் தாமாகவே முன்வந்து இந்த முறை எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர். பெண் கல்வியை அனுமதிப்போம் என்றனர். பெண்கள் கல்வி கற்க அனுமதித்திருந்தாலும் கூட பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளனர்.

பல்கலைக்கழக வகுப்பறைகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே அமர வைக்கப்பட்டு நடுவில் ஒரு திரையும் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்ததும் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கழித்தே மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கண்களைத் தவிர முகத்தை முழுமையாக மூடும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களை மதிப்போம் என்று தலிபான்கள் கூறியிருந்தாலும் கூட இதுபோன்ற கெடுபிடிகளும், கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதும் போன்ற தலிபான்களின் நடவடிக்கை தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

தலிபான்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது வீழ்ந்தது பஞ்ச்சீர் மாகாணம் !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த 15-ந்தேதி தலிபான் படையினர் கைப்பற்றினார்கள். அதிபர் அஷ்ரப்கனி நாட்டை விட்டு ஓடி விட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இதுசம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அனைத்து மாகாணங்களும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் கட்டுப்பட மறுத்தது.

இந்த மாகாணத்தில் முன்னாள் புரட்சிப்படை தளபதி அகமதுஷாமசூத் மகன் அகமது மசூத் தலைமையிலான வடக்கு கூட்டணி படை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அந்த பகுதியை கைப்பற்ற தலிபான்கள் முயற்சித்தனர்.

 

இதற்கு வடக்கு கூட்டணி படை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. தலிபான்கள் படைகளை உள்ளே நுழைய விடாமல் இரு வாரங்களாக வடக்கு கூட்டணி படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

இதையடுத்து மாகாணத்தின் 4 பக்கங்களில் இருந்தும் தலிபான் படையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களை எதிர்த்து வடக்கு கூட்டணி படையினரால் போராட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தலிபான் படைகள் முன்னேறியது.

இதையடுத்து வடக்கு கூட்டணி படை முக்கிய இடங்களை விட்டு பின்வாங்கியது. இந்த நிலையில் தலிபான்கள் தாக்கியதில் வடக்கு கூட்டணி படையினரின் செய்தி தொடர்பாளர் பாகீம்தாஸ்தி, முக்கிய தளபதிகள் கைதர்கான், முனீப் அமிலி, வாதூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனால் வடக்கு கூட்டணி படை நிலை குலைந்தது. இந்த படையின் தலைவர் அகமதுமசூத், முன்னாள் துணை அதிபர் அமர்துல்லா சலே ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பஞ்ச்சீர் பகுதி தலிபான்களிடம் வீழ்ந்துள்ளதுள்ளதாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றது.

காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை! : இன்பத் தமிழ் வானொலி உரையாடல்

“கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” பாரதி சிவராஜா

இலங்கையின் இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளையும் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் என்ற விடயம் சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருந்தது தெரிந்ததே. இதன் காரணமாக புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இவ்வாறான நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சிலர் தங்களை கட்சியில் இருந்து விலகி நிற்கின்றனர். லண்டனில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நீண்டகாலம் காதலித்த பெண்ணுடன் உறவு முறிவு ஏற்பட்டு பின்னர் வேறொருவரை காதலித்து மணம் முடித்தது தொடர்பில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றும் முடுக்கிவிடப்பட்டு தங்களை முற்போக்காளர்கள் என கூறிக்கொள்ளும் 20 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். ஆயினும் தமிழ் சொலிடாரிட்டி கையெழுத்திட்டவர்கள் சமூக விரோத அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றும் கட்சியயை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வக்கற்றவர்கள் என்றும் சாடியிருந்தது.

கையெழுத்துப் போராட்டத்தில் கையெழுத்திட்ட பாராதி சிவராஜா, கையெழுத்திடுவதற்கு முன் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் பற்றி மேற்கொண்ட உரையாடல் இது. “கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” கையெழுத்திட்ட ஏனைய 19 மார்க்சிய பெண்ணியலாளர்கள் இவ்வுரையாடலை எந்தப் பார்வையில் பார்ப்பார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

‘காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை’ என்ற இந்த உரையாடல் காதலர் தினத்தை முன்னிட்டு 2018 பெப்ரவரி 10ம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து வலைத்தளமூடாக ஒலி பரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் கருத்துக்களம்’ நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்டது. பாரதி சிவராஜா வட்ஸ்அப் ஊடாக பலருக்கும் அனுப்பிய இப்பதிவு தேசம்நெற்றையும் அடைந்தது. இப்பதிவின் முக்கிய பகுதி சுருக்கித் தரப்பட்டுள்ளது.

இதன் எழுத்துவடிவம்:

பாரதி: காதல் என்பது ஒரு பீல் தான். காதல் ஒருக்கா தான் வரும் என்டதில எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காதல் கட்டாயமா வரும். வரலாம். காதல் என்கிறது ஒரு தேடல் தான். அது மனிதர்களிடம் உணர்வு இருப்பது வரைக்கும் அது வந்துகொண்டு இருக்கும். 18 வயசில தான் வரும் 16 வயசில தான் வரும் 60 வயசில வராது என்கிறதெல்லாம் பச்சைப் பொய்யான விஷயம். எந்த வயசிலயும் காதல் வரலாம். எத்தனை தடவையும் வரலாம்.

வானொலிக் கலைஞர்: காதல் என்பதை திருமணம் என்ற வரையறைக்கு அப்பால் தான் தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கக்கூடிய காதல் என்பது எமது சமூகத்தால் எச்சரிக்கை உணர்வுடனேயே அங்கீகரிக்கப்படுகிறது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதை ஒருத்தரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதை திருமணம் என்கின்ற ஒரு மார்ஜினுக்குள் வைத்த பிறகு தான் உங்களுடைய காதல் அங்கீகரிக்கப்படுமே தவிர…

பாரதி: காதலைத் திருமணம் என்டுறத்தோடு கொண்டு போனாலே அது காதல் இல்லை என்பது தான் என்னுடைய வாதம். எல்லாரும் சொல்லுவாங்க காதல் கல்யாணத்துல முடிக்கிறது தான் வெற்றி என்டு. ஆனால் கலியாணத்தில் முடிந்தால் அது தோல்வி. நீங்க அங்க ஒரு புளொக் போட்டிடுவீங்க. நீ என்னும் ஒருத்தரை காதலிக்க ஏலாது என்டு.

வா.கலைஞர்: காதலை நீங்கள் திருமணத்துக்கு கொண்டு வந்து வைத்தால் காதல் முடிந்தது அது தோல்வி என்று நீங்கள் சொன்னீர்கள். ஏன்? நமது பண்பாடு என்ன சொல்லுகிறது, காதல் வந்து திருமணத்தில் முடிந்து, ஒன்றாக இணைந்து, ஒரு ஜென்மம் பூராகவும் வாழ்ந்து போவதுதான் காதல். அப்படி இல்லாட்டி அது நெறி தவறிய வாழ்க்கை என்றுதானே தமிழ் பண்பாடு சொல்கிறது?

பாரதி: தமிழ் பண்பாடு என்று சொல்லாதீர்கள். தமிழ் கலாச்சாரம். கலாச்சாரம் மாறும் பண்பாட்டில் எங்கயுமே அப்படி சொல்லவில்லை. ஒருத்தரோட வாழ்ந்து, ஒருத்தரோட சாகுறது தான் பண்பாடு என்று தமிழ் பண்பாட்டில் இல்லை. காதல் போய் கலியாணத்தில தான் முடியும் என்டா, நீங்க கலியாணம் முடிச்சிட்டு இன்னும் ஒருத்தரையும் லவ் பண்ணக்கூடிய ஒரு செட்டப் இருக்குமென்றால் அது பிரச்னை இல்லை. ஆனால் கலியாணம் என்டுறது அப்பிடியே முடிச்சுவிடுறீங்க. காதல் என்டுறது ஒரு பீலிங் தான், நீங்க அது முடியும் முடியாது என்டதெல்லாம் இல்லை. அது எவ்வளவு தூரம் உங்களோட ரவல் பண்ணுது என்டத தான் நீங்க பார்க்கனும்.

நீங்க ஒராளோட இருக்கிறீங்க. ஒராள் உங்களோட பாசமா இருக்கிறார். அதை லவ் என்டு பீல் பண்ணுறீங்க. ஒராளோட பழகுறீங்க அவங்க மேல ஈர்ப்பு வருது. அது தான் லவ்.. அது லவ் இல்லை. இது தான் லவ் என்டு யார் தீர்மானிக்கிறது?

எங்கட ஆட்களை எல்லாம் பாருங்க. நீங்க என்ன கள்ள வேலை செய்து காசு சம்பாதிச்சாலும் மனிசி ஒன்டும் சொல்ல மாட்டா. சந்தோஷமா இருப்பா. ஆனா மனுஷன் வேற ஒரு பிள்ளைய பார்த்தவுடன கள்ளக் காதல் என்டுவா. அப்ப இவ்வளவு காலம் உழைச்சது கள்ள காசு தானே? அது என்ன அந்த ரெண்டு மனநிலை எங்க இருந்து வந்தது?

இதில என்னும் முக்கியமான விசயத்தை நான் சொல்ல வேணும் என்னென்றால் மதங்களை நீங்க பார்த்தீங்க என்றால் ஆண்கள் பல காதல் செய்யலாம். பல திருமணம் செய்யலாம். ஆனா பெண்கள் ஒரு காதல் தான் செய்யனும். ஒரியினலா இருக்க வேணும். அப்படி போனாலும் உடன்கட்டை ஏறிடனும்; அல்லாட்டி வெள்ளைப் புடவையை கட்டிட்டு இருக்க வேணும்; பொட்டை அழிச்சிட்டு இருக்கனும்; கலர் அஸ்திரம் கட்டக்கூடாது ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கும் கிருஷ்ணணுக்கு ஆயிரமாயிரம் அது எவ்வளவு என்டு தெரியா. நபி என்றவர் எத்தனையோ கல்யாணம் முடித்து இருப்பர். மதங்களுக்கு ஆண்கள் நாலு கல்யாணம் முடிக்கலாம்.

வா.கலைஞர்: அப்போ ஆணுடைய காதல் வேறு பெண்னுடைய காதல் வேறு அப்படியா

பாரதி: மனிதர்கள் என்பது இயற்கையான ஒரு படைப்பு. அதில் ஆண்பால் பெண்பால் இரண்டும் தான் இருக்கு. அதில் எப்படி இன்னொருத்தனுக்கு சட்டம். இன்னொருத்திக்கு ஒரு சட்டம்.

வா.கலைஞர்: இங்குதானே நீங்கள் சொல்கிற கலாச்சாரமும் பண்பாடும் என்பது உதைக்கிறது. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதிக்கப்பட்ட விதி? இங்க விதிக்கப்பட்ட நெறிமுறை?

பாரதி: அது நாங்கள் உருவாக்கிக் கொண்டது.

வா.கலைஞர்: உருவாக்கினது என்னவோ அதைத்தானே. அப்படி இருப்பவனை தானே நல்லவன்; நல்ல குடும்பம் என்று சொல்கிறார்கள்; பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரி ஒரு உணர்வை இங்கே எப்படி பார்ப்பார்கள் என்றால், கொச்சைப்படுத்தி தான் பார்ப்பார்களேயொழிய, அது அவருடைய ஃபீலிங் என்று யாரும் பார்ப்பது கிடையாது.

பாரதி: சமூகத்தில் மாற்றி செய்யப்படுகிற டைம்ல சமூகத்தில் அது பிரச்சினையான விஷயமாகத்தான் இருக்கு. சமூகத்திலிருந்து நாங்கள் ஒன்றை மாறி செய்யும்போது பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையாகவே நீங்கள் பார்க்கும்போது அது தான் சரியாக இருக்கும். அதற்கு நாங்கள் சொல்கிறோம், அறிவு ரீதியாக நாங்கள் பார்க்காத எந்த ஒரு விஷயமும் பிழையாகத் தான் இருக்கும்.

வா.கலைஞர்: அப்படியானால் உங்களிடம் கேட்டால் தமிழ் பெண்களிடம் காதல் பற்றிய பார்வை என்பது வித்தியாசமாக மாறிவிட்டதா? அதாவது தமிழ் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட காதலுக்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திவிட்டார்கள் என்பதே உங்களுடைய வாதம் அப்படியா?

பாரதி: நான் வாதமே செய்யத் தேவையில்லை. இங்கே வேண்டாம். எங்கட நாட்டுக்கே போய் பாருங்கோ. எத்தனையோ வீடுகளில் கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி. அப்ப இது இயற்கையான விஷயம் இது.

ரொம்ப கலாச்சாரமான தலிபான் இருக்கிற இடங்களிலேயே பெண்கள் வெளியில் வர இயலாது. பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு அங்கே இப்படியான விஷயங்கள் நடக்கிறது. இதுதான் உண்மை எந்த மதம், எந்த கலாச்சாரம் ஒன்றும் செய்ய இயலாது. அவங்களுக்கு வெளிப்படையாக செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லையானால் அவர்கள் மறைமுகமாக செய்வார்கள். இதுதான் இயற்கையான விஷயம்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!

உலகின் மிக உயர்ந்த திரையரங்கம் – லடாக்கில் அறிமுகம் !

இந்தியாவின் லடாக்கில் 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் முதல் மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது.

இது உலகின் மிக உயர்ந்த திரையரங்கமாக காணப்படுகின்றது. மேலும், பெரும்பாலான தொலைதூர பகுதிகளுக்கு சினிமா பார்க்கும் அனுபவத்தை கொண்டு வரவே  லடாக்கில் உள்ள லேவின் பல்டன் பகுதியில் 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் இந்த மொபைல் திரையரங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயரமான திரையரங்கம் - இந்தியாவில் அமைப்பு! - லங்காசிறி நியூஸ்

இந்த திரையரங்கு தொடர்பாக தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த நாடகக் கலைஞரான மேபம் ஓட்சல் கூறியுள்ளதாவது, ‘இது மலிவு விலையில் டிக்கெட்டுகளை வழங்குகிறது. மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளது.

அத்துடன் இருக்கை அமைப்பும் நன்றாக உள்ளது. இது இங்குள்ள மக்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது கலை மற்றும் சினிமா உலகிற்கு ஒரு கதவைத் திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைப்பாளர் சுஷில் தெரிவித்துள்ளதாவது ‘லேவில் இதுபோன்ற நான்கு திரையரங்குகள் நிறுவப்படும்.

இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கு திரைப்பட அனுபவத்தை கொண்டு வருவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியும்.

திரையரங்கு 28 டிகிரி செல்சியஸில் செயல்படக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட குறும்படம், லடக்கின் சாங்பா நாடோடிகளை அடிப்படையாகக் கொண்ட செகூல் ஆகியன வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019க்கு பின்னர் இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல் – இலங்கையரை நாடு கடத்த பல வருடம் முயற்சித்த நியூசிலாந்து அரசாங்கம் !

நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை, நாடு கடத்த நியூசிலாந்து அரசாங்கம் பல வருடங்களாக முயன்றது என நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 2011 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்து, அகதி அந்தஸ்து கோரினார். ஆனால் அவரது கோரிக்கை ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டது. பின்னர்  அகதி அந்தஸ்து டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தனிநபரின் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து  2016 ஆம் ஆண்டில் அவர் பொலிஸாரின் கண்காணிப்புக்குள் வந்ததுடன் அவரது அகதி அந்தஸ்து  2019 இல் இரத்து செய்யப்பட்டுடன் நாடு கடத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன என நியூஸிலாந்து பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் அகதி அந்தஸ்து வழக்கு தீர்க்கப்படும் வரை அதிகாரிகள் அவரை சிறையில் தடுத்து வைக்க முயன்றனர். ஆனால் அவ்வாறு செய்வதற்கு சட்டத் திட்டங்கள் இல்லாதமையினால் அது பயனிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.எஸ்.அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் நியூஸிலாந்தில் பதிவான பயங்கரமான தீவிரவாத தாக்குதலாக இது பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவே எங்கள் கூட்டாளி – ‘வன் பெல்ட், வன் ரோட்’ திட்டத்தில் இணைந்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது:
சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஓர் அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘வன் பெல்ட், வன் ரோட்’ முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என கூறினார்.

வெற்றியை கொண்டாட தலிபான்கள் வானை நோக்கி சுட்டதால் 17 பேர் பலி !

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்ருல்லா சாலே மறுத்துள்ளார். பின்னர் தலிபான் தலைவர்களும் இந்த தகவலை மறுத்தனர்.
ஆனால், பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான் வசம் வந்துவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியதால், தலிபான் படையினர் உற்சாகத்தில் திளைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வாறு, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் கூறி உள்ளன.
இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கண்டித்துள்ளார். வானத்தை நோக்கி சுடுவதை தவிர்த்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் என்று அவர் டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

அரசியல் அதிகாரம் கேட்டு போராடிய பெண்களை கடுமையாக தாக்கிய தலிபான்கள். !

ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் இளம் பெண்கள் காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்களை அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

உலக நாடுகள் வழங்கிய லட்சக்கணக்கிலான தடுப்பூசிகளை திருப்பியனுப்பிய வடகொரியா !

சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன.

வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 இலட்சம் டோஸ் அஸ்டராஸெனெகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்தது.

பக்கவிளைவு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி தடுப்பூசிகளை மறுத்ததாக உளவுத்துறையுடன் தொடர்புடைய தென்கொரியாவை சேர்ந்த சிந்தனைக் குழு ஒன்று தெரிவித்தது.

அதேபோல ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வடகொரியாவுக்கு வழங்க ரஷ்யா பல முறை முன்வந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது சீனாவால் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி வரை வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.

வடகொரியாவின் அரச ஊடகங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.