தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கியமானது. எண்பதுக்களில் மிகப் பெருந்தொகை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக ஆரம்ப காலங்களில் விளங்கியது. ஆனால் இந்த அமைப்பினுள் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் காரணங்களால் மிகப்பெரும் தொகையானவர்களைக் கொண்டிருந்த இவ்வமைப்பு மிக விரைவிலேயே அதன் கட்டமைப்புகள் குலைந்து பலவீனமான நிலைக்குச் சென்றது.
தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராட்டத்திலும் பார்க்க உட்படுகொலைகளில் தங்கள் கூடுதல் உறுப்பினர்களை இழந்த அமைப்பும் புளொட் அமைப்பே. அதன் தலைவரும் உட்படுகொலையிலேயே உயிரிழக்க வேண்டி இருந்தது.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்தொகையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தாங்கள் அங்கம் வகித்த அமைப்பின் வரலாற்றை பதிவுசெய்ய முற்படுகின்றனர். ஏனைய விடுதலை இயக்கங்களிலும் பார்க்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அரசியல் விவாதத் தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தேசம்நெற் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய பதிவுக்கும் மீளாய்வுக்குமான தளமாக ஆகி உள்ளது.
இது விமர்சனத்திற்கான களம் என்பதிலும் பார்க்க உண்மையை அறிவதற்கான தகவல் பரிமாற்றத்திற்கான களமாக ஆகி உள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மனியில் இடம்பெற்ற மாநாட்டின் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து வந்த இந்தப் பதிவுகளை தற்போது தனிப்பதிவாக்கி உள்ளோம்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)
http://thesamnet.co.uk/?p=23385
