October

October

மழையுடன் கூடிய மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் வரை உயிரிழப்பு! வெள்ளப் பெருக்கினால் பலரைக் காணவில்லை!

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் ஐந்து பேர்வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதால் இவ்வுயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய இணைப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் தொடாச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவம் இதனால், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்சரிவினால் மலையகத்தில் பதுளைக்கும் அப்புத்தளைக்குமிடையிலான வீதி முடப்பட்டு போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மறுப்பு.

கடந்த யூன் மாதம் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டு அதன் மேயராக பதவி வகித்த முகமட் உவைஸ் இம்தியாஸை மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அங்கு வசித்து வரும் இம்தியாஸ் அங்கிருந்து வெளியேறுவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் ஜனாதிபதியிடம் தனது வீட்டுப்பிரச்சினை குறித்து கூறியிருப்பதாகவும், வீடமைப்பு அதிகாரசபை ஊடாக விரைவில் தனக்கு வீடொன்றைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாகவும், அது வரை மேயர் இல்லத்தில் இருக்குமாறு அவர் கூறியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவிக்கையில், இம்தியாஸ் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மூன்று மாதங்கள் கால அவகாசம் கோரியதாகவும் அது வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மேயர் இல்லத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், இதனால், மேயர் வாசஸ்தளத்திற்கு நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்துவதை கொழும்பு மாநகரசபை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவிற்காக நூறு பிக்குகளுடன் தானும் சிறைசெல்லத் தயார் என மாதுலுவாவே தேரர் தெரிவிப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்கோவிற்கு பதிலாக தாம் சிறையிலிருக்கத் தயார் என கோட்டை நாகவிகாரையின் விகாராபதி வண. மாதுலுவாவே தேரர் தெரிவித்துள்ளார்.

போன்சேகாவிற்குப் பதிலாக நூறு பிக்குகளுடன் தானும் சிறைச்சாலையில் இருப்பதற்குத் தயாரெனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் நன்றிகெட்ட விதமாக நடந்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு அதை ஒன்று படுத்திய பொன்சேகாவிற்காக தாம் எதனையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் மாதுலுவ தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Prof_Hooleகடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இருந்து இலங்கைத் தமிழ் மக்கள் சுமுகமான வாழ்நிலைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் கல்விச் சமூகத்தின் கல்விநிலையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சமூகத்தின் அதி உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக மோசமான சீரழிவை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது. தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் பல்கலைக்கழகத்தை இலங்கையின் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றக் கூடிய தகுதியும் ஆளுமையும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கூடிய சமூகப் பொறுப்பு இருப்பதால் அவரை நோக்கி இக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களும் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்மடலின் இறுதியில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பில் பெயர்களைப் பதிவு செய்து இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கவும். இம்முயற்சிக்கு உங்கள் நண்பர்கள் உறகளின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
._._._._._.

மதிப்பிற்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு,

பல்கலைக்கழகங்களே தெளிவான பார்வையையும் தலைமைத்துவத்தையும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் தலைமைத்துவம் இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை புதிய திசைவழி முன்னேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என நாங்கள் நினைக்கின்றோம். மேலும் தமிழ் கல்விச் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வழங்கவும் இது வாய்ப்பாகி உள்ளது.

இதன் கீழ் கையெழுத்திட்ட எங்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களினது நல்வாழ்விலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மிகுந்த அக்கறையுண்டு. பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தேர்வில் போட்டியிட உள்ளார். நீங்கள் அவரை அப்பதவிக்கு கொண்டுவருவதற்கு வேண்டியனவற்றை செய்ய வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வரவேண்டும் என்று கோருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இலங்கையில் கூடிய தேர்ச்சியுடைய கல்வியியலாளர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்பித்த அனுபவம் உடையவர். இவரினால் உபவேந்தர் பதவி மதிப்படையும்.

2. University Grand Commissionஇல் 15 பல்கலைக்கழகங்களை நிர்வகித்தமை அவருக்கு இந்த பல்கலைக்கழகங்கள் இயக்கப்படுகின்ற முறை அதனை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சட்டங்கள் என்பனவற்றில் மிகுந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதனால் இவரினால் உயர்ந்த அளவு தரத்தில் நிர்வாகத்தை திறம்படச் செயற்படுத்த முடியும்.

3. இவர் இலங்கையின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவராதலால், பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத்தர முடியும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தை அமைக்க உள்ள நிலையில் பொறியிலாளரான இவரின் தனிப்பட்ட தொடர்புகள் பொறியியல்துறையை அமைப்பதற்கு மிக அவசியமானது. மேலும் இவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபம்மா ராவோ உடன் பணியாற்றியவர் என்பதால் இந்தியவில் இருந்து நிதி உதவிகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அமெரிக்காவில் தனக்கு இருந்த பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் வந்ததன் மூலம் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் தனது பொறுப்புணர்வை வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டி உள்ளார்.

மேலுள்ள ஐந்து விடயங்களிலும் போராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு சமனான தகுதியுடைய ஒருவரை காண்பது கடினமாகவே உள்ளது. இவர் முன்னர் 2006ல் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் சில அரசியற் சக்திகளால் தனது கடமையைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். அப்போது முடியாமற் போன பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு இப்போது சந்தர்ப்பம் வழங்கப்படுவதே நியாயமானது.

நீங்கள் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்பும் ஒருவர் என்பதாலும் அமைச்சராக இந்த விடயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஒரு இடம் இருப்பதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களுக்கு வெளிப்படையான உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பு:

http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm

திரு ராரின் கொன்ஸ்ரன்ரைன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் – நீங்காத நினைவுகள் : இணுவையூர் நவேந்திரன்

Kutralam_Nagarajanமிகக் கனத்த மனத்துடன் இக்கடினமான செய்தியை எழுதும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். குற்றாலம் என்றவுடன் எமக்கெல்லாம் மனதில் குதித்தோடும் எண்ணம் – இந்தியாவில் உள்ள குளுமையான இடமான குற்றாலமும் அதில் சில்லென்று ஓடும் அருவியும் மலையும் அதன் சூழலும். ஆனால் அதே குளுமையுடனும் அதே பெயரில் வாஞ்சையுடனும் எம்மிடையே ஒரு மாமனிதன் நேற்றுவரை நடமாடினான். ஆனால் அம்மாமனிதன் இன்று எம்முடன் இல்லை. (தோற்றம் 16 05 1966 – மறைவு 28 09 2010)

நாட்டியப்பாடலில் “இமயம்” என்று அழைக்கப்படக்கூடிய குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் செவ்வாய் (28 09 10) 6.30 மாலையில் தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.

தன்னிகரற்ற ஒரு பாடகன் பாடலாசிரியன் இசையமைப்பாளன். இம்மூன்றும் ஒருசேர அமைவது மிக அபூர்வம். ஆனால் இவை அனைத்தின் சொந்தக்காரன் கற்றாலம் நாகராஜன். இவரது பாடலில் மயங்காதவரே இலர். சிறுவர்களில் இருந்து முதியோர்வரை இவரது இசைப் பிரியர்கள்.

ஒருமுறை பழகினால் காந்தம் மாதிரி இழுக்கும் அதீத மனோபாவம் இவரது உன்னத மனித குணத்தால் இவரது குறைகளை எல்வாம் மறந்து மீண்டும் மீண்டும் இவரை நாடி ஓடும் அகஅழகு கொண்டவர்.

1992ம் ஆண்டளவில் திரு கணேசனால் லண்டனிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். நுhற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான என்றுகூடச் சொல்லக்கூடிய நாட்டிய அரங்கேற்றங்களில் பாடிய முடிசூடா மன்னன். பாடல் வடிவமைப்பதிலும் இசையமைப்பதிலும் ஈடு இணையற்ற தனித்திறன் கொண்டவர்.

Kutralam_Nagarajanராஜாவின் “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலுக்கமைய யாரையும் குறை கூற மாட்டார். எல்லோரிலும் ஒரு நிறைவுகாணும் ஒரு உன்னத மனிதப்பிறவி. இவரது குழந்தை உள்ளத்தால் யாராலும் வெறுக்கப்பட முடியாதவர்.

இசைப்பரம்பரையில் தோன்றிய காரணத்தால் சிறுவயதில் இருந்தே இயற்கைஞானம் கொண்டவர். ஆனாலும் 20 வயதுவரை சங்கீதத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் சங்கீதமேதை வி ஆர் கிருஷ்ணன் என்பவரிடம் இசையை பயிலும் அரிய வாய்ப்பைப் பெற்றார்

இவரது குரு வி ஆர் கிருஷ்ணன் தியாகராஜா சுவாமிகள் இசைப்பரம்பரையில் வந்த செம்மங்குடி சீனிவாச ஜயர் அவர்களின் மாணவர் எனடபது குறிப்பிடத்தக்கது. காலம் தாழ்த்தி 20 வயதில் இசையைப் பயின்றாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டியப் பாடலுக்கு குற்றாலம் நாகராஜன் என முத்திரை பதித்து தனக்கென்று ஒரு அசையா இடத்தை சென்னை மக்களிடம் பிடித்துக் கொண்டார்.

இவரது இசைத்திறன்கண்டு தனது சரித்திரத்தில் முதன்முறையாக “சிறந்த பரதநாட்டிய பாடகன் ” என்று பட்டமளித்து Music Academy madras கெளரவித்தது.

இசையின் உச்சத்தைத் தொட்ட இவர் நினைத்திருந்தால் பணத்தின் உச்சத்தையும் தொட்டிருக்கலாம். மூன்று தலைமுறைக்குத் தேவையான சொத்தை இவரால் தேடியிருக்க முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான இளம் இசைப்பயிர்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டிய இவர் பணத்தின் பக்கம் கவனம் செலுத்தாதது இவரது மகனும் மனைவியும் செய்த துர்ப்பாக்கியமே.

வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது இயற்கை நியதி. இருப்பினும் காலத்திற்குக் காலம் நல்லவர்களும் தோன்றத்தான் செய்கிறார்கள். வல்லவர்களை காலம் மறந்துவிடும் வரலாறு இருக்காது. ஆனால் நல்லவர்களிற்கு வரலாறு உண்டு. இவர்களை காலம் மறக்காது.

குற்றாலம் நாகராஜனின் இசைச்சேவை சாதனை மிகப்பெரியது. அவரது வெற்றிடம் இலகுவில் நிரப்ப முடியாதது.

அவரது பிரிவால் வாடும் மகன் சங்கீத்திற்கும் துணைவி கோமதிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது பூதவுடல் ஈமக்கிரியைகளுக்காக சென்னைக்கு அனுப்பப்பட இருக்கிறது. லண்டனில் இறுதி மரியாதை இன்று (03Oct 2010) காலை இடம்பெற்றது.

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்:( 07916 134 976 – pandkassociates@aol.com)

குறைந்தபட்ச புரிந்துணர்வு செயலாக்க குழுவின் முன்மொழிவுகளும் பொதுக்கூட்டத்தின் உடன்பாடுகளும்

யூன் 21 2009ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்‘ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2 2009ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓகஸ்ட் 2 2009ல் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக 15 சந்திப்புக்களில் ஆராய்ந்து அதன் தொகுப்பாக இவ்வறிக்கையைத் தயாரித்து உள்ளனர். இதனை  8 2010 இல் இடம்பெற்ற பொதுச் சந்திப்பில் – MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim – அங்கு கூடியோர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அவர்களின் கையொப்பங்கள் பிடிஎப் அறிக்கையில் இணைக்கப்பட்டு உள்ளது. அறிக்கையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

இதன் பிரதிகள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலே குறிப்பிட்ட எட்டு விடயங்கள் தொடர்பான விரிவான கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
._._._._._.

புரிந்துணர்வு என்பது ஜனநாயகம் பற்றியது. ஆனால் அது குறைந்த பட்சமாக அமைய வேண்டி இருப்பது அதனுள் ஈடுபடுபவர்களிடையே அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. சகல மக்களது முன்னேற்றத்தை வேண்டி, கூடியளவு மக்களை ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதே குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முனைவதின் பிரதான நோக்கமாகும். அவ்வாறான பொது வேலைத் திட்டத்தினை அமைப்பதாயின், அதன் முதற் கட்டமாக குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைக் கொள்கைகள், விளக்கங்கள் என்பவற்றை ஐயங்கள் இல்லாது உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பார்வையில் இலங்கையின் அரசியலில் அதற்கென ஒரு சரித்திரம் உள்ளது. தேசியவாதிகளிடையே இன ரீதியான உடன்பாடு உருவாகி உள்ளதையும், அது சிங்கள மக்களிடையே மொழி – மத உணர்வுகளில் எழும் பேரினவாதமாகவும், தமிழ் மக்களிடையே அதன் எதிர்ப் – பிரதிவாதமான தமிழ்த் தேசியவாதமாக உருவாகி உள்ளது.
  
இந்த நிலைப்பாடுகளையும் கடந்து, இலங்கைத் தேசியத்திலும், வர்க்க நிலைப்பாடுகளிலும் தளம் கொண்டு இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் உட்படுத்தும் குறைந்தபட்ச வேலைத் திட்டங்களுக்கான தேடல்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன. இவை பொதுவாக இடதுசாரி அரசியல் அமைப்புகளால் சமத்துவம் – சமதர்மம் என்ற சித்தாந்த வழிமுறைகளுடன் முன்வைக்கப்பட்டன. ஆனால் இம் முயற்சிகளும் அமைப்புகளும், காலப் போக்கில் சிங்களப் பேரினவாதத்தால் பலவீனப்படுத்தப்பட்டது. இன ரீதியில் எஞ்சியோர் தமிழ் தேசியவாதத்தின் முதன்மைப்படுத்தலை ஏற்றுக்கொள்ள நேரிட்டது.  

இதன் பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து இதுவரைகாலமும் தமிழீழக் கோரிக்கையும் தமிழீழப் போரும் ஒருமுகப்பட்டது. அதன் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை பலவந்தமாக நியமித்துக் கொண்டனர். அதற்கான உக்கிரமான நான்கு ஈழப் போர்களையும் அவற்றின் விளைவுகளையும் இலங்கையின் சரித்திரம் குறித்துக் கொண்டுள்ளது.

வைகாசி 2009ல் உலகநாடுகளின் உதவிகளுடன் இப்போரினை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால் ஏற்பட்ட பலத்த அழிவுகளுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிய தமிழ் மக்கள் தம்சார்பில் எடுக்கப்பட்ட இன, சமுதாய, அரசியல் நிலைப்பாடுகளை – பொருளாதார உறவுகளை அனுபவரீதியில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பெயரிலான எந்த முயற்சியும் அரசியல் – சரித்திர ரீதியிலும் ஆய்வு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகமுள்ள இலங்கையில் அரசியற் கட்சிகளே பெரும்பாலும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதனால் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கு அக்கட்சிகளிடையே இணக்கங்களை ஏற்படுத்துவது அடிப்படையானது. இவ்வாறான முயற்சிகள் தமிழ் கட்சிகளிடையே இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டியது அத்துடன் மக்களையும் அவர்களது சமுதாய அமைப்புகளையும் இந்த குறைந்த பட்ச புரிந்துணர்விற்குள் உள்ளடக்க வேண்டியதும் அவசியமானது.

அக்குறைந்தபட்ச புரிந்துணர்வு அரசியல் – பொருளாதாரம் மக்கள் – இனங்கள் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும். அதற்கு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சாசன அடிப்படையில் காலனித்துவ சுதந்திரம் பெற்றதில் இருந்துள்ள சரித்திரத்தை ஆராய வேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னான மூன்றில் இரண்டு பகுதி காலம் 1) தமிழ் மக்கள் இன ரீதியிலும், 2) சிங்கள மக்கள் வர்க்க ரீதியிலும், அரசியல் -பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான அடிப்படையில் எட்டப்படும் புரிந்துணர்வு பூரணமான மக்கள் வளர்ச்சியைத் தருவதற்கும் நடைமுறைச் சாத்தியமானதாய் அமைவதற்கும் 1) இலங்கை, 2) பிராந்தியம், 3) சர்வதேசம் என்ற நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கடந்த முப்பது வருட ஒடுக்கு முறைகள், அவஸ்தைகளுள் இருந்து வெளிவர எத்தனிக்கும் தமிழ் மக்கள் தனித்து நின்று பூரண அபிவிருத்தியை, வளர்ச்சியை கண்டுவிடமுடியாது, ஆகவே அயற் சமூகங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

எனவே புரிந்துணர்வு முயற்சிகளுக்கு அரசியல் – பொருளாதார வடிவங்கள் தந்து, அவற்றிடையேயான தொடர்புகளை ஏற்படுத்த முயல வேண்டும். அவை இன, மத, பிரதேச பிரதிபலிப்புகளாக இல்லாது அனைவரினதும் அபிலாசைகளாக உருவாகிட ஒத்தாசையாக இருக்க வேண்டியது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முன்வருவோர்களது பணிகளாகும்.  

அதேவேளை இலங்கையின் இன, சமூக – பொருளாதார, சமுதாயப் பிரச்சனைகளை தனித்தனியாகவோ அல்லது ஒரே தடவையிலாகவோ அணுகுவது? இவ் அணுகுமுறையில் எவை தீர்வுக்காக முதன்மைப்படுத்தப்பட வேண்டும்? எவ்வாறான நிலைப்பாடுகள் இவற்றிடையே பொதுத் தளத்தை உருவாக்க உதவும்? என்பவை பற்றிய முடிவுகளும் இங்கே அவசியம்.

இவ்வாறான பின்னணியில் தேசம் ஆசிரியர்கள் த. ஜெயபாலன், த. சோதிலிங்கம் மற்றும் சு.வசந்தி, ரவி சுந்தரலிங்கம் ஆகியோரது ஆனி 03, 2009 சந்திப்பின்போது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை ஊர்ஜிதம் செய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்று தேவை என்ற முடிவு ஏற்பட்டது. அதன்படி லண்டன், லேய்ற்றன்ஸ்ரோனில் ஆனி 21, 2009 தேசம் இணையத்தளத்தின் முக்கிய பங்குடன் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவணி 02, 2009 அதே இடத்தில் இம்முயற்சியை முன்னெடுப்பதற்கான மற்றுமொரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.

அதன் முடிவுகளாக
(1) இலங்கையில் இடம்பெறும் சர்ச்சைகளின் முக்கிய விடயங்களின் தேர்வும்
(2) அவைபற்றிய விளக்கங்களை ஆய்வு வடிவத்தில் தருவதற்கான தனிநபர்களின் பட்டியலும்
(3) அந்த தனிமனிதர்களே ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் செயற்குழுவாக இயங்கவும்
(4) ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் இணைப்பாளர்கள் த ஜெயபாலன், த சோதிலிங்கம், எஸ் பேரின்பநாதன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஒருவருடகாலமாக தனது பல இருப்புகளின் போது ஆவணி 02, 2009 புரிந்துணர்வுக் கூட்டத்தால் தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகளை தம்மிடையே விவாதங்களினாலும் கலந்துரையாடல்களினாலும் பரிசீலனை செய்த அமைப்பின் செயற்குழு ஆவணி 08, 2010 லண்டன், வோல்தம்ஸ்ரோவில் தனது தேடலின் முடிவுகளாக அரசியல், பொருளாதாரம், மக்கள் வளம் என்ற வகையில் சில கருத்துக்களை மக்களது பரிசீலனைக்கும் பொது முடிவுக்கும் சமர்ப்பித்தது. அவர்களின் முடிவுகளை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வு குழுவின் மொழிவுகளாக அடிப்படை நிலைப்பாடுகள் (Principles) பிரகடனங்கள் (Proclamations), கோரிக்கைகளாக (Propositions) என வகைப்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவை ஆவணி 02, 2010ல் இடம்பெற்ற புரிந்துணர்வுக் குழுவின் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்ச புரிந்துணர்விற்கான முன்மொழிவுகள்

(1) அடிப்படை நிலைப்பாடுகள்
 
1. இலங்கையின் இனபபிரச்சனையால் உருவான உள்நாட்டுப் போர் இலங்கை அரசின் இராணுவத்தால் அடக்கப்பட்டுவிட்டாலும் அதற்கான இறுதித் தீர்வு அரசியல் வழியால் அமைவதாகும்.
 
2. இலங்கையின் சமூக – பொருளாதாரப் பிரச்சனைகளும் இனப்பிரச்சனைகளும் ஒரே தளத்தை கொண்டிருந்தாலும் அவையிரண்டும் வேறானவை. (ஒருதளமும், அதேவேளை இருமுகங்களும் கொண்டவை)
 
3. சர்வதேச சந்தைப்படுத்தலில் இலங்கை மக்களுக்கு சார்பான எதிரான சாராம்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளது மறைவும் இவ்விரு பிரச்சனைகளையும் பொதுமைப்படுத்திப் பார்க்கக் கூடிய, இனவரைவுகளைத் தாண்டிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தந்துள்ளன.
 
4. இச்சந்தர்ப்பம் பூரணமான ஜனநாயகம் ஏற்படுத்தும் பொது இணக்கங்களுடாக மேலெடுத்துச் செல்லக் கூடியவை.
 
5. பூரண ஜனநாயகம் (full democracy) என்பது மக்களது சமூக – சமுதாய உடமைகளையும் அவற்றின் பூரணமான வளர்ச்சியையும் நுகர்வுகளையும் எய்துவதற்கான பாரம்பரிய சொத்துகளையும் அவை சார்ந்த உரிமைகளையும் தருவது.
 
6. இவை அனைத்தையும் ஊர்ஜிதம் செய்யும் பன்முகத் தன்மைநாடாக இலங்கையை சகல மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலமை அவசியம்.
 
(2) பிரகடனங்கள்
 
1. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே சாத்தியமாகும்.
 
2. இலங்கைவாழ் சகல தேசியச் சிறுபான்மை இனங்களின் உடமைப் பிரச்சனைகளின் தீர்வுக்கு அரசியல் அமைப்பினை மாற்றி அமைப்பது அவசியமானது.
 
3. மக்களின் பன்முக தேசியத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தரும் அலகுகள் கொண்டவையாக புதிய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். 

4. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இஸ்லாமிய, சிங்கள சமுதாயங்களின் உடமைகளும், உரிமைகளும் அரசியல் ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
 
5. இலங்கைவாழ் மக்களது சமூக, சமுதாயப் பிரச்சனைகள் இன, மத, சாதிய பாகுபாடுகள் இன்றி, அம் மக்களையொட்டிய அபிவிருத்தியின் போதே அற்றுப் போகும்.
 
6. மனிதவள வளர்ச்சிக்கு, அபிவிருத்தித் திட்டங்களுடன் கூடிய இனங்களிடையே புரிந்துணர்வை வளர்த்தெடுக்க கூடிய கல்வி சார்ந்த திட்டங்களும் இடம்பெற வேண்டும்.
 
(3) கோரிக்கைகள்
 
1. இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற வரையறுப்பு சகல இராணுவ வகைகளிலும் விஸ்தரிப்பு காண்பதைத் தவிர்த்து, மக்களின் நேரடி நிர்வாகத்தை (civil adminstration) மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
2. இலங்கையின் பாதுகாப்பு படைகள், நிர்வாகம், மக்கள் சேவை என்ற சகல மத்திய, மாகாண அரச கருமங்களிலும் மக்களது விகிதாசாரம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
 
3. சகல திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவை தவிர்ந்த அபிவிருத்தி சார்ந்த குடியயேற்றத் திட்டங்கள் மக்களது மாகாண விகிதாசாரங்களை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.
 
4. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களது ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்களது புனர்வாழ்வு துரிதமாக இடம்பெற வேண்டும்.
 
5. உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்கப்படல் வேண்டும், தேவைக்கேற்ற அபிவிருத்திக்கான வளங்களும் வழங்கப்படல் வேண்டும். இவ்வகையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்களது மீள்குடியேற்றம், நிவாரணம் என்பவையும் இடம்பெற வேண்டும்.
 
இவையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அடிப்படை நிலைப்பாடுகள், பிரகடனங்கள், கோரிக்கைகள் என ஆவணி 08, 2010ல் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்). 

அறிக்கையும் அதில் கையெழுத்திட்டவர்களும்:

MoU_Report_By_MoUGroupLondon

குறைந்தபட்ச புரிந்துணர்வு தொடர்பான சந்திப்புக்களின் முன்னைய பதிவுகளுக்கு:

தமிழ் மக்களிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைகள். : வி சிவலிங்கம்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி

சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

சிறுவயதுத் திருமணம் பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

குறைந்த வயது சிறுவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பதிவாளர்களை வேலை நீக்கம் செய்து, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.நாட்டின் எப்பகுதியாயினும் இவ்வாறு செயற்படும் திருமணப் பதிவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பொலன்னறுவையில் நேற்று நடை பெற்ற வடமத்திய மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய் வுக் கூட்டத்தின் போது வெலிக்கந்தை பிரதேசத்தில் பெருமளவு சிறுமிகள் குறைந்த வயதில் திருமணம் முடித்து ள்ளதாகவும், 15 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிறுமி கூட அப்பிரதேசத்தில் தற்போது இல்லை யென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பான முறைப்பாடு தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு அங்கு சிறுவயதில் திருமணம் முடிந்த சிறுமிகளின் புகைப்படத்தையும் ஆதாரமாகக் காட்டினார். தனித்தனியே காணிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களுக்காக பெற்றோர் சிறு வயதிலேயே தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இத்தகைய சிறு பிள்ளைகள் இன்னும் சில மாதங்களில் பிள்ளைகளைப் பெற்று எவ்வாறு அவற்றை வளர்க்கப் போகின்றார்கள் என்பதை அந்த பெற்றோர் ஏன் சிந்திக்கவில்லையெனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். சிறுவர் தினம் கொண்டாடப்படும் இவ் வாரத்தில் இத்தகைய அநியாயங்கள் நடப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.

”எந்திரன்” – தமிழ்ப்பட ரசிகர்களைத் ‘தந்திரமாக’ ஏமாற்றும் பிரமாண்டமான படைப்பு : ரதிவர்மன்

Endiranமிகப் பிரமாண்டமான செலவில் (25-40 அமெரிக்க கோடிகள்), தயாரிக்கப்பட்டு ஒரே நாளில் உலகில் 2250 திரைகளில் வெளியிடப்பட்ட படம் எந்திரன். முதல்நாள் காட்சிகளே  25 கோடி (அமெரிக்க டாலர்ஸ்) களுக்கு விற்கப் பட்டிருக்கிறதாம். படத்தின் ஆதிமூலம் தமிழாகவிருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ‘டப்’ பண்ணப் பட்டிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு ஆங்கில மொழியில் சப் டைடிலும் போடப் பட்டிருக்கிறது. ஒரேயடியாக உலகமெல்லாம் 2250 திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பலவிதமான எதிர்பார்ப்புக்களையும் தூண்டி விட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பட வசூலைக் கொடுப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் பொழுது போக்குக்குத் தமிழ்ப் படங்களை நாடுகிறார்கள். இவர்களால் தமிழத் திரையுலகம் நன்றாகப் பணம் படைக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்ன படத்தைக் கொடுத்தாலும் அதை விழுந்தடித்துக் கொண்டு பார்க்க புலம்பெயர்ந்த தமிழ்க் கூட்டம் இருக்கிறது. நோர்வேயில் ‘எந்திரன்’ ஒரு பிரமாண்டமான ‘கொலோசியக் கட்டிடத்தில்’ திரையிடப்படுவதாத் தமிழகப் பத்திரிகைகள் பீற்றிக்கொண்டன.

நோர்வேய்த் தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழர்கள். இப்படம் அவர்களுக்கு என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்ற தெரியாது. திரையிடப்படும் இடங்கள் திருவிழா காண்கிறது என்று தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகள் பறைசாற்றின. ஆனால் ஹிந்தியில்  ‘ரோபோர்ட்’ என்ற பெயரில் (எந்திரன்) திரையிடப்பட்ட விடயங்களில் கைவிட்ட எண்ணக்கூடிய கூட்டம்தான் வந்திருந்தது. (01.10.10).

இது ஒரு வழக்கமான தமிழ்ப் படம், காதலிக்காக உலகத்தை அழிக்க முயலும் தமிழ்த் திரைப்படக் கதாநாயக வடிவத்தின் ‘இயந்திர் சொருபமாக ‘எந்திரன்’ படைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருத்தரான சங்கரின் கதையமைப்பு, இயக்கத்தில் மிக மிகப் பணச்செலவில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலப் படங்களான ‘அவதார’, ‘மெட்டரிக்ஸ்’ போன்றவற்றிக்கு இணையானது இப்படம் என்று இந்திய  தமிழ்ப் படங்கள் பெருமை கொட்டிக்கொள்கிறது.

கதாநாயகன் ( ரஜனிகாந்த், அறுபது வயதைத் தாண்டியவரா அல்லது தொட்டுக்கொண்டிருப்பவரா) டொக்டர் வசீகரன் (?) பத்துவருட கால கட்டங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய ஒரு இயந்திர மனிதனுக்கு டொக்டரின் காதலியான ஐஸ்வரியாவின் முத்தம் கன்னத்தில் பட்டதும் மனித உணர்வுகள் வந்து ஐஸ்வரியாவின் காதலை முழுமையாகப் பெற விஞ்ஞானத்தையே விழுங்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டு இயந்திர மனிதன் போராடுவதுதான் கதை.

திரைப் படங்கள் எடுப்பவர்கள் தனக்குத் தெரிந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ சாதாரண மக்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் படம் எடுப்பார்கள். அல்லது பொழுதுபோக்குக்காக ஜனரஞ்சகமான படங்கள் எடுப்பார்கள். அல்லது சமயத்தைப்போதிக்கக் கடவுள்களின் மகிமைகளைக் காட்டும் படங்களை எடுப்பார்கள்.

இதை எடுத்த சங்கரால், தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பல நாள் ஆசையான எப்படியும் உலக அழகியாகப் பட்டம் எடுத்த (1992) ஐஸ்வரியாவின் காதலான நெருங்கி நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தத்தான இந்தப் படம் எடுக்கப் பட்டதா என்ற கேள்வியின் திரைப்பட அமைப்பு எழுப்புகிறது.
 
அறுபது வயது முதுமை (பாவம் பார்க்கப் பரிதாபம்) முப்பத்தியாறு (மூ)முத்தழகுடன் பல நாடுகளுக்கும் பறந்து படம் பார்க்க வரும் இளைஞர்களைக் கிளு கிளுப்படைய வைக்க முயற்சிக்கிறது. இந்தக் கருத்துக்கு உதாரணம், காதலன் காதலி ஊடலில் தான்கொடுத்த முத்தங்களைத் திருப்பித் தரசொல்லிக் கதாநாயகன் கேட்க காதலி, காதலன்  வசீகரனின் கன்னத்தில் பட் பட்டென்று ‘உம்மாக்கள்’ கொடுக்க, அவள்கொடுக்கும் ‘இச்சுக்களின்’ நெருக்கம் பத்தாதென்று அடம் படிக்கிறார். உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த இயந்திர மனிதனை உருவாக்கிய ‘க(ல்)லாநிதி, இந்தக் கட்டத்தில் என்ன புதிய காதல் உத்தியை உட்புகுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. (இக்கட்டத்தைப் பெரிதுபடுத்தி விமர்சனம் எழுதப்பட்டதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.)

இயந்திரத்துக்கு டாக்டரின் காதலி சானாவில் வந்த  (ஐஸ்வரியாவில்) வந்த காதலைப் புரிந்து கொண்ட, கதாநாயகனின் எதிரியான இன்னொரு விஞ்ஞானி, இயந்திர மனிதனை மடக்கித்  தன் தேவைகளுக்குப் பாவித்துப் பணம் சேர்க்க அயல் நாட்டு சக்திகளுடன் கூட்டுச்சேர்கிறான். ஐஸ்வரியாவின் காதலைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்ளாத இயங்திர மனிதன் தன்னனைப் போல் இன்னும் பல் நூறு இயந்திரங்களை உருவாக்கி சானாவுக்காக உலகை அழிக்க முயல்கிறான்.
தனது காதலியை இயந்திரத்திடமிருந்து காப்பாற்றவும் அதேநேரம் உலகைக் காப்பாற்றவும் கதா நாயகன் வசீகரன்(?) தனது விஞ்ஞான அறிவைப் பாவித்து இயந்திர மனிதனை அழித்து விடுகிறார்.

இயக்குனர் சங்கர் தனது உதவி இயக்குனர்களுக்குப் பல ஆங்கிலப் படங்களைக் கொடுத்து அவற்றில் வரும் விறு விறுப்பான கட்டங்களைப் பற்றிய தகவல்களைச் கேகரித்துத் தனது படங்களின் ‘தேவைகளுக்குப்’ பாவிப்பதாக எங்கேயோ படித்திருக்கிறேன். பல ஆங்கிலப் படங்கனின் காட்சிகளின், கருத்துக்களின் சாயல்கள் இப்படத்தில் தொட்டுத்தடவிக் கிடக்கின்றன.
 
இந்தப் படத்தில் கதை பற்றியோ நடிப்பு பற்றியோ பெரிதாக ஒன்றும் இல்லை. ஐஸ்வரியாவுடன் பல நாடுகளுக்குப் போய்க் கவர்ச்சி நடனம் ஆடவும் ஐஸ்வரியாவுக்கு விதமான ஆடைகளைப் போட்டு அழகு பார்க்கவும்  பிரமாண்ட செலவு செய்யப்பட்டிருக்கிறது

அதுசரி ‘கிளி மான்சரோ’ பாட்டுக்குரிய ஆட்டக் காட்சியை ஏன் தென் அமெரிக்காவில் பெரும்பாலும் எடுத்தார்கள்? கிளிமாஞ்சரோ ஆபிரிக்காவிலல்லவா இருக்கிறது? (தமிழர்களுக்குச் சரித்தரம் தெரியாதென்ற நினைவு போலும்!) இவர்கள் அந்தப் பாடலுக்குப் படம் எடுத்த இடம் ஒருகாலத்தில் நாகரிக மனிதர்களாயிருந்து ஸ்பானிய காலனித்துவ வாதியான பிரான்கோயி பிச்சாரோ (1528) என்பரால் அழிக்கப்பட்ட ‘இங்கா’ என்ற இன மக்களைக் கொண்டிருந்த  ‘மாச்சுப்பூச்சி’ (1400 ஆண்டுகளில் உருவாக்கிய நகர்) என்ற தென்னமரிக்க இடமாகும்.

இந்தப் படத்தை மக்கள் திரணடு வந்த பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி படத்தை ஓட்டுவது பிரமாண்டமான டெக்னிக் காட்சிகளாகும். இப்படியான காட்சிகளைப் பார்க்க விரும்புவர்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பக்கத்தில் அவர்கள் கொம்பியுட்டர் கேம் விளையாடும் போது சேர்ந்திருந்தால் மிகவும் விறுவிறுப்பாகவிருக்கும்.

இறுதியாக, இப்படம் 12 வயதுக்கு மேலுள்ள வயதுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று மேற்குலக தணிக்கை சபை சொல்லியிருக்கும் போது ‘எந்திரன்’ குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய படம் என்று தென்னிந்தியத் தமிழ் இணையத்தளம் ஒன்று புழுகித் தள்ளியிருக்கிறது.

குடும்பம் என்றால் அதில் சிறு குழந்தைகளும் அடங்குவார்கள், அதைப்பற்றி ஒரு சின்னச் சந்தேகம், கதாநாயகியை வில்லர்கள் துரத்தித் தங்கள் கூட்டத்தின் நடுவிற் கிடத்தி துப்பட்டாவை உரிவதை அந்தக் கூட்டத்திலுள்ள ஒருத்தர் மோபைலில் படம் எடுக்கிறார். இக்கேவலமான கட்டத்தை சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் தனது பேரன் யாத்திராவுடன் சேர்ந்திருந்து பார்ப்பாரா?