குறைந்தபட்ச புரிந்துணர்வு செயலாக்க குழுவின் முன்மொழிவுகளும் பொதுக்கூட்டத்தின் உடன்பாடுகளும்

யூன் 21 2009ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்‘ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2 2009ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓகஸ்ட் 2 2009ல் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக 15 சந்திப்புக்களில் ஆராய்ந்து அதன் தொகுப்பாக இவ்வறிக்கையைத் தயாரித்து உள்ளனர். இதனை  8 2010 இல் இடம்பெற்ற பொதுச் சந்திப்பில் – MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim – அங்கு கூடியோர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அவர்களின் கையொப்பங்கள் பிடிஎப் அறிக்கையில் இணைக்கப்பட்டு உள்ளது. அறிக்கையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

இதன் பிரதிகள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலே குறிப்பிட்ட எட்டு விடயங்கள் தொடர்பான விரிவான கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
._._._._._.

புரிந்துணர்வு என்பது ஜனநாயகம் பற்றியது. ஆனால் அது குறைந்த பட்சமாக அமைய வேண்டி இருப்பது அதனுள் ஈடுபடுபவர்களிடையே அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. சகல மக்களது முன்னேற்றத்தை வேண்டி, கூடியளவு மக்களை ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதே குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முனைவதின் பிரதான நோக்கமாகும். அவ்வாறான பொது வேலைத் திட்டத்தினை அமைப்பதாயின், அதன் முதற் கட்டமாக குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைக் கொள்கைகள், விளக்கங்கள் என்பவற்றை ஐயங்கள் இல்லாது உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பார்வையில் இலங்கையின் அரசியலில் அதற்கென ஒரு சரித்திரம் உள்ளது. தேசியவாதிகளிடையே இன ரீதியான உடன்பாடு உருவாகி உள்ளதையும், அது சிங்கள மக்களிடையே மொழி – மத உணர்வுகளில் எழும் பேரினவாதமாகவும், தமிழ் மக்களிடையே அதன் எதிர்ப் – பிரதிவாதமான தமிழ்த் தேசியவாதமாக உருவாகி உள்ளது.
  
இந்த நிலைப்பாடுகளையும் கடந்து, இலங்கைத் தேசியத்திலும், வர்க்க நிலைப்பாடுகளிலும் தளம் கொண்டு இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் உட்படுத்தும் குறைந்தபட்ச வேலைத் திட்டங்களுக்கான தேடல்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன. இவை பொதுவாக இடதுசாரி அரசியல் அமைப்புகளால் சமத்துவம் – சமதர்மம் என்ற சித்தாந்த வழிமுறைகளுடன் முன்வைக்கப்பட்டன. ஆனால் இம் முயற்சிகளும் அமைப்புகளும், காலப் போக்கில் சிங்களப் பேரினவாதத்தால் பலவீனப்படுத்தப்பட்டது. இன ரீதியில் எஞ்சியோர் தமிழ் தேசியவாதத்தின் முதன்மைப்படுத்தலை ஏற்றுக்கொள்ள நேரிட்டது.  

இதன் பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து இதுவரைகாலமும் தமிழீழக் கோரிக்கையும் தமிழீழப் போரும் ஒருமுகப்பட்டது. அதன் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை பலவந்தமாக நியமித்துக் கொண்டனர். அதற்கான உக்கிரமான நான்கு ஈழப் போர்களையும் அவற்றின் விளைவுகளையும் இலங்கையின் சரித்திரம் குறித்துக் கொண்டுள்ளது.

வைகாசி 2009ல் உலகநாடுகளின் உதவிகளுடன் இப்போரினை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால் ஏற்பட்ட பலத்த அழிவுகளுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிய தமிழ் மக்கள் தம்சார்பில் எடுக்கப்பட்ட இன, சமுதாய, அரசியல் நிலைப்பாடுகளை – பொருளாதார உறவுகளை அனுபவரீதியில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பெயரிலான எந்த முயற்சியும் அரசியல் – சரித்திர ரீதியிலும் ஆய்வு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகமுள்ள இலங்கையில் அரசியற் கட்சிகளே பெரும்பாலும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதனால் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கு அக்கட்சிகளிடையே இணக்கங்களை ஏற்படுத்துவது அடிப்படையானது. இவ்வாறான முயற்சிகள் தமிழ் கட்சிகளிடையே இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டியது அத்துடன் மக்களையும் அவர்களது சமுதாய அமைப்புகளையும் இந்த குறைந்த பட்ச புரிந்துணர்விற்குள் உள்ளடக்க வேண்டியதும் அவசியமானது.

அக்குறைந்தபட்ச புரிந்துணர்வு அரசியல் – பொருளாதாரம் மக்கள் – இனங்கள் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும். அதற்கு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சாசன அடிப்படையில் காலனித்துவ சுதந்திரம் பெற்றதில் இருந்துள்ள சரித்திரத்தை ஆராய வேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னான மூன்றில் இரண்டு பகுதி காலம் 1) தமிழ் மக்கள் இன ரீதியிலும், 2) சிங்கள மக்கள் வர்க்க ரீதியிலும், அரசியல் -பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான அடிப்படையில் எட்டப்படும் புரிந்துணர்வு பூரணமான மக்கள் வளர்ச்சியைத் தருவதற்கும் நடைமுறைச் சாத்தியமானதாய் அமைவதற்கும் 1) இலங்கை, 2) பிராந்தியம், 3) சர்வதேசம் என்ற நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கடந்த முப்பது வருட ஒடுக்கு முறைகள், அவஸ்தைகளுள் இருந்து வெளிவர எத்தனிக்கும் தமிழ் மக்கள் தனித்து நின்று பூரண அபிவிருத்தியை, வளர்ச்சியை கண்டுவிடமுடியாது, ஆகவே அயற் சமூகங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

எனவே புரிந்துணர்வு முயற்சிகளுக்கு அரசியல் – பொருளாதார வடிவங்கள் தந்து, அவற்றிடையேயான தொடர்புகளை ஏற்படுத்த முயல வேண்டும். அவை இன, மத, பிரதேச பிரதிபலிப்புகளாக இல்லாது அனைவரினதும் அபிலாசைகளாக உருவாகிட ஒத்தாசையாக இருக்க வேண்டியது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முன்வருவோர்களது பணிகளாகும்.  

அதேவேளை இலங்கையின் இன, சமூக – பொருளாதார, சமுதாயப் பிரச்சனைகளை தனித்தனியாகவோ அல்லது ஒரே தடவையிலாகவோ அணுகுவது? இவ் அணுகுமுறையில் எவை தீர்வுக்காக முதன்மைப்படுத்தப்பட வேண்டும்? எவ்வாறான நிலைப்பாடுகள் இவற்றிடையே பொதுத் தளத்தை உருவாக்க உதவும்? என்பவை பற்றிய முடிவுகளும் இங்கே அவசியம்.

இவ்வாறான பின்னணியில் தேசம் ஆசிரியர்கள் த. ஜெயபாலன், த. சோதிலிங்கம் மற்றும் சு.வசந்தி, ரவி சுந்தரலிங்கம் ஆகியோரது ஆனி 03, 2009 சந்திப்பின்போது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை ஊர்ஜிதம் செய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்று தேவை என்ற முடிவு ஏற்பட்டது. அதன்படி லண்டன், லேய்ற்றன்ஸ்ரோனில் ஆனி 21, 2009 தேசம் இணையத்தளத்தின் முக்கிய பங்குடன் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவணி 02, 2009 அதே இடத்தில் இம்முயற்சியை முன்னெடுப்பதற்கான மற்றுமொரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.

அதன் முடிவுகளாக
(1) இலங்கையில் இடம்பெறும் சர்ச்சைகளின் முக்கிய விடயங்களின் தேர்வும்
(2) அவைபற்றிய விளக்கங்களை ஆய்வு வடிவத்தில் தருவதற்கான தனிநபர்களின் பட்டியலும்
(3) அந்த தனிமனிதர்களே ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் செயற்குழுவாக இயங்கவும்
(4) ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் இணைப்பாளர்கள் த ஜெயபாலன், த சோதிலிங்கம், எஸ் பேரின்பநாதன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஒருவருடகாலமாக தனது பல இருப்புகளின் போது ஆவணி 02, 2009 புரிந்துணர்வுக் கூட்டத்தால் தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகளை தம்மிடையே விவாதங்களினாலும் கலந்துரையாடல்களினாலும் பரிசீலனை செய்த அமைப்பின் செயற்குழு ஆவணி 08, 2010 லண்டன், வோல்தம்ஸ்ரோவில் தனது தேடலின் முடிவுகளாக அரசியல், பொருளாதாரம், மக்கள் வளம் என்ற வகையில் சில கருத்துக்களை மக்களது பரிசீலனைக்கும் பொது முடிவுக்கும் சமர்ப்பித்தது. அவர்களின் முடிவுகளை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வு குழுவின் மொழிவுகளாக அடிப்படை நிலைப்பாடுகள் (Principles) பிரகடனங்கள் (Proclamations), கோரிக்கைகளாக (Propositions) என வகைப்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவை ஆவணி 02, 2010ல் இடம்பெற்ற புரிந்துணர்வுக் குழுவின் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்ச புரிந்துணர்விற்கான முன்மொழிவுகள்

(1) அடிப்படை நிலைப்பாடுகள்
 
1. இலங்கையின் இனபபிரச்சனையால் உருவான உள்நாட்டுப் போர் இலங்கை அரசின் இராணுவத்தால் அடக்கப்பட்டுவிட்டாலும் அதற்கான இறுதித் தீர்வு அரசியல் வழியால் அமைவதாகும்.
 
2. இலங்கையின் சமூக – பொருளாதாரப் பிரச்சனைகளும் இனப்பிரச்சனைகளும் ஒரே தளத்தை கொண்டிருந்தாலும் அவையிரண்டும் வேறானவை. (ஒருதளமும், அதேவேளை இருமுகங்களும் கொண்டவை)
 
3. சர்வதேச சந்தைப்படுத்தலில் இலங்கை மக்களுக்கு சார்பான எதிரான சாராம்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளது மறைவும் இவ்விரு பிரச்சனைகளையும் பொதுமைப்படுத்திப் பார்க்கக் கூடிய, இனவரைவுகளைத் தாண்டிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தந்துள்ளன.
 
4. இச்சந்தர்ப்பம் பூரணமான ஜனநாயகம் ஏற்படுத்தும் பொது இணக்கங்களுடாக மேலெடுத்துச் செல்லக் கூடியவை.
 
5. பூரண ஜனநாயகம் (full democracy) என்பது மக்களது சமூக – சமுதாய உடமைகளையும் அவற்றின் பூரணமான வளர்ச்சியையும் நுகர்வுகளையும் எய்துவதற்கான பாரம்பரிய சொத்துகளையும் அவை சார்ந்த உரிமைகளையும் தருவது.
 
6. இவை அனைத்தையும் ஊர்ஜிதம் செய்யும் பன்முகத் தன்மைநாடாக இலங்கையை சகல மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலமை அவசியம்.
 
(2) பிரகடனங்கள்
 
1. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே சாத்தியமாகும்.
 
2. இலங்கைவாழ் சகல தேசியச் சிறுபான்மை இனங்களின் உடமைப் பிரச்சனைகளின் தீர்வுக்கு அரசியல் அமைப்பினை மாற்றி அமைப்பது அவசியமானது.
 
3. மக்களின் பன்முக தேசியத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தரும் அலகுகள் கொண்டவையாக புதிய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். 

4. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இஸ்லாமிய, சிங்கள சமுதாயங்களின் உடமைகளும், உரிமைகளும் அரசியல் ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
 
5. இலங்கைவாழ் மக்களது சமூக, சமுதாயப் பிரச்சனைகள் இன, மத, சாதிய பாகுபாடுகள் இன்றி, அம் மக்களையொட்டிய அபிவிருத்தியின் போதே அற்றுப் போகும்.
 
6. மனிதவள வளர்ச்சிக்கு, அபிவிருத்தித் திட்டங்களுடன் கூடிய இனங்களிடையே புரிந்துணர்வை வளர்த்தெடுக்க கூடிய கல்வி சார்ந்த திட்டங்களும் இடம்பெற வேண்டும்.
 
(3) கோரிக்கைகள்
 
1. இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற வரையறுப்பு சகல இராணுவ வகைகளிலும் விஸ்தரிப்பு காண்பதைத் தவிர்த்து, மக்களின் நேரடி நிர்வாகத்தை (civil adminstration) மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
2. இலங்கையின் பாதுகாப்பு படைகள், நிர்வாகம், மக்கள் சேவை என்ற சகல மத்திய, மாகாண அரச கருமங்களிலும் மக்களது விகிதாசாரம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
 
3. சகல திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவை தவிர்ந்த அபிவிருத்தி சார்ந்த குடியயேற்றத் திட்டங்கள் மக்களது மாகாண விகிதாசாரங்களை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.
 
4. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களது ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்களது புனர்வாழ்வு துரிதமாக இடம்பெற வேண்டும்.
 
5. உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்கப்படல் வேண்டும், தேவைக்கேற்ற அபிவிருத்திக்கான வளங்களும் வழங்கப்படல் வேண்டும். இவ்வகையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்களது மீள்குடியேற்றம், நிவாரணம் என்பவையும் இடம்பெற வேண்டும்.
 
இவையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அடிப்படை நிலைப்பாடுகள், பிரகடனங்கள், கோரிக்கைகள் என ஆவணி 08, 2010ல் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்). 

அறிக்கையும் அதில் கையெழுத்திட்டவர்களும்:

MoU_Report_By_MoUGroupLondon

குறைந்தபட்ச புரிந்துணர்வு தொடர்பான சந்திப்புக்களின் முன்னைய பதிவுகளுக்கு:

தமிழ் மக்களிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைகள். : வி சிவலிங்கம்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *