19

19

கனடாவுக்குள் கப்பல் மூலம் பிரவேசிப்பதற்கு முயற்சித்த 76 இலங்கையர்கள் கைது

181009canada.jpgஇலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த “ஓசன் லேடி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார். எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

வன்னி தேடுதலில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம்

வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

அக்கராயன் குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களில் 25 மிதி வெடிகள் மீட்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. ரக குண்டொன்றும் 75 ரவைகளும் ரீ-56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பகுதியில் நடத்திய தேடுதலில் 11 கிளைமோர் குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தேடுதலை நடத்தியுள்ளன.

இதேவேளை திருகோணமலை மலையூற்று பகுதியில் கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

தெற்கு வசிர்ஸ்தானில் சண்டை தொடர்கிறது

181009taliban.jpgதெற்கு வசிர்ஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாவினர் வலுவாக இருக்கும் பகுதியில் இரண்டாவது நாளாக இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.

சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருதரப்பும் எதிர்தரப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றன.

இந்த பிராந்தியத்தின் வட பகுதியில் கவனத்தை செலுத்தி வரும் இராணுவம், வான் தாக்குதல் முறைகளையும் ஆர்டிலரிகளையும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வீதிகளில் கூட சண்டை இடம்பெற்று வருகின்றது.

இந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சத்திர சிகிச்சை நிபுணர் மஹ்பூப் திடீர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. எம். எம். மஹ்பூப் (52) நேற்றுக்காலை மாரடைப்பால் காலமானார்.

நேற்றுக்காலை 8 மணியளவில் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டபோது சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வேளை அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மாகாணம்: புதிய அமைச்சர்கள் தெரிவு பூர்த்தி

11upfa.jpgதென் மாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்யும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார்.

இவர்கள் விரைவில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை தென் மாகாண சபை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரே மீண்டும் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறின.

வாகன விபத்துக்கள் – 24 மணி நேரத்தில் ஐவர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒரு சிறுவனும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

கடவத்தை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். கடவத்தை 13 ஆவது மைக்கல் பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினரின் டிபெண்டர் ரக, வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் போதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி இறந்துள்ளார்.

விபத்துக்குள்ளான டிபெண்டரின் மீது பின்னால் பயணித்த லொறியொன்றும் காரொன்றும் மோதியதில் ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை ஹெட்டன், நோட்டன், பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதி, குடிபோதையில், வாகனம் ஓட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளதோடு சாரதியின் மனைவியும் மற்றொரு பெண்ணுமே இறந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை கட்டான பகுதியில் வைத்து டிரக்டர் ஒன்றில் மோதி 3 வயதுச் சிறுவர் ஒருவன் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

வீதியை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். களுத்துறை மக்கொனை பகுதியில் ஆட்டோ ஒன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று முன்தினம் (17) மாலை இடம்பெற்றது.

இதேவேளை களுத்துறை பகுதி கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இறந்தவர் பயாகலை, மொரகொட பகுதியை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுக்கு காரசாரமான விருந்து : த ஜெயபாலன்

Tissa_Vitharana_Profஒக்டோபர் 18ல் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுடனான கேள்வி நேரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேள்வி நேரத்திற்கு முன்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவு காரமாக இல்லாவிட்டாலும் உணவிற்குப் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரம் ‘யாழ்ப்பாண மிளகாய்த்தூள்’ போட்டது போன்ற காரத்துடன் அமைந்தது. மதிய உணவின் போதிருந்தே அமைச்சர் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. ‘இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் எப்படி இனவாத சக்திகளின் கை ஓங்கியுள்ள அரசின் அங்கமாக இருக்கின்றீர்கள்?’ என்றது முதல் ‘ஏபிஆச்சி தீர்வுத் திட்டம் குப்பைக் கூடையினுள் செல்லப் போகின்றது’ என்பதுவரை பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஏபிஆர்சி குழுவில் முன்னர் அங்கம் வகித்த எஸ் தவராஜா இக்கேள்வி நேரத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ் பாலாவின் குறுகிய அறிமுகத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. கேள்விகளை அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் வரையறை செய்திருந்த போதும் கேள்விகள் பல அம்சங்களிலும் எழுப்பப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, ஏபிஆர்சி தீர்வுச் செயன்முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும், அரசு வன்னி முகாம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, 30 ஆண்டுகால யுத்தம் அண்மையிலேயே முடிந்துள்ளதால் அரசு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் இன்னமும் காலம் அவசியப்படுகின்றது போன்ற கருத்துக்களே அமைச்சரின் பேச்சிலும் பதில்களிலும் தொனித்தது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர், புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் திஸ்ஸ விதாரன அங்கு தெரிவித்தார். மற்றுமொரு சமயத்தில் வெறும் விமர்சனங்களாக அல்லாமல் விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைத்து காத்திரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கருத்துக்களில் வந்திருந்த பெரும்பான்மையினர் உடன்படாத நிலையில் ஒருவர் மாறி ஒருவராக இலங்கை அரசின் இனவாத செயன்முறைகள் பற்றியும் அரசியல் தீர்வை அரசு தட்டிக்கழிப்பதைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். (இங்கு தேசம்நெற் வாசகர்களால் முவைக்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. கேள்வி பதில்கள் முழுமையாக விரைவில் தரப்படும்.)

மதிய உணவு முதல் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சரின் கருத்துடன் உடன்பட்டு ஒரே ஒருவரே தனது கருத்தினை முன்வைத்தார். இவர் இலங்கையில் இன சமத்துவம் என்பது கடைப்பிடிக்கவில்லை எனவும் குறிப்பாக தமிழ் தலைமைகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வன்னி முகாம் மக்களின் நிலைதொடர்பாக அங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு சபையில் இருந்த துணைத் தூதுவர் ஹம்சா பதிலளித்தார். வன்னி முகாம்களில் உலக உணவுத்திட்டம், ஹரித்தாஸ் போன்ற சர்வதேச என்ஜிஓ க்கள் உட்பட 53 என்ஜிஓக்கள் இலங்கையில் செயற்படுவதாகவும் மே 18க்குப் பின் பிபிசி போன்றவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட 300 ஊடகவியலாளர்கள் வன்னி முகாம்களுக்கு சென்று வந்தள்ளாதாகக் கூறினார். ஆனால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. துணைத்தூதுவர் ஹம்சா மேலும் குறிப்பிடுகையில் 70 000 வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு முடிவிற்குள் பெரும்பாலானவர்கள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வன்னி முகாம்கள் மூடப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளின் இறுதியாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிக் குறிப்பிட்டு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்பட்டதுடன் ‘திஸ்ஸநாயகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் சோடிக்கப்பட்ட வழக்கு’ எனக் குற்றம்சாட்டினார். மேலும் ‘திஸ்ஸநாயகம் புலிகளிடம் நிதிபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட காலப்பகுதியில் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்டு இருக்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்கையில் ‘ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீர கொல்லப்பட்ட போது அவருடைய மனைவி கொல்லப்படவில்லை. ஆனால் வே பிரபாகரன் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய முத்த பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கலாம். ஆனால் மனைவி மதிவதனி கொல்லப்பட்டார். 11 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இது எந்தவகையில் நியாயம்’ என அவர் கேள்வி எழுப்பியதுடன் ‘இவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டனர்’ எனவும் அவ்வூடகவியலாளர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தின் இடையே இவ்வூடகவியலாளர் தனது கேள்வியை எழுப்பிய போது அவர் கூட்டவிதிமுறைகளை மீறியதாக அவர் தொடர்ந்து கேள்வியை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. அதனால் பின்னர் அவருடைய கேள்வி இறுதிக் கேள்வியாக அமைந்தது. அமைச்சருடைய பதில்கள் தன்னை ஆத்திரமூட்டுவதாக அமைந்ததால் தான் இடையே குறிப்பிட்டதாகக் கூறிய அவ்வூடகவியலாளர் மேலுள்ள கேள்வியை எழுப்பினார். ஆனால் நிகழ்வுக்கு தலைமையேற்ற எஸ் தவராஜா இக்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

இதனை தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன் உடனடியாகக் கண்டித்ததுடன் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் வைத்தார். அதற்குள்ளாக மண்டபம் கையளிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது.

மதிய உணவில் 25 வரையானோரும் கேள்வி நேரத்தில் 70 வரையானோரும் கலந்துகொண்டனர். பொதுவாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தங்கள் வரவை உறுதிப்படுத்தியவர்கள் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு ரி கொன்ஸ்ரன்ரைன் ராஜேஸ் பாலா எஸ் தவராஜா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிகழ்வின் ஆரம்பத்தில் லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப்பட்டது தன்னுடைய தவறு என்றும் அதற்கு வருந்துவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

வழமையாக கேள்விகளுக்கு முகம்கொடுக்காத கேள்வி கேட்கப்படுவதை அசௌகரியமாகக் காண்கின்ற ஒரு சூழலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதும் தங்களை கேள்விக்கு உட்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தன. தாங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அமைச்சர் திஸ்ஸ விதாரனவை லண்டன் தமிழர்கள் கேள்விக்கு உட்படுத்தியதுடன் அரசு பற்றிய தங்கள் அச்சத்தையும் நம்பகத் தன்மையின்மையையும் உறுதிபடத் தெரிவித்தனர். இலங்கை அரச பிரதிநிதிகள் தமிழ் மக்களது கேள்விக்கு நேரடியாக முகம்கொடுக்க வைப்பது அவசியமாகின்றது. ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்சார்ந்து அரசைக் கேள்விக்கு உட்படுத்தும் அதே சமயம் சாதாரண பொதுமகனும் தனது உணர்வு சார்ந்து அவர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.