October

October

பொய் செய்தி வெளியிடும் இணையத்தளம் குறித்து மக்களுக்கு அறிவூட்டல்

000lakshman_yapa_abeywardena.jpgபொய்யான செய்திகளை பிரசுரித்து வரும் சில இணையதளங்கள் குறித்து மக்களை அறிவூட்ட உள்ளதாகவும், இவை குறித்த தகவல்கள் அடுத்த வாரம் முதல் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடவுள்ள தாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறி பல பொய்யான செய்திகளை சில வெப்தளங்கள் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வருகின்றன.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது

211009proelanco.jpgபுதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது! ஒரு இலட்சம் தொகையும், சான்றிதழும் குடியரசுத்தலைவர் வழங்வுள்ளார் !

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு “இளம் அறிஞர் விருது”வை நேற்று அறிவித்துள்ளது. இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர்மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள்(2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்றனவாகும்.
 
சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர்.சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார்.சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து,இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன்.எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம்,புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம்,இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார்.இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும்.உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார்.தேசிய அளவில் 42 கட்டுரைகளும்,இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி,தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்சுதமிழ்,  தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள்,வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

 சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை,முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “பாரதிதாசன் பரம்பரை” என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர்பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் தேசம்நெற்றின் வாழ்த்துக்கள்

யூனிஸ்கானின் இராஜினாமா நிராகரிப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

141009younuskhan226.jpg2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை யூனிஸ்கான் கப்டனாக நீடிப்பார். அவரது இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

யூனிஸ்கான் இராஜினாமா விவகாரம்

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்து இருப்பதாக பாகிஸ்தான் அணி மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் சட்டசபை கமிட்டி யூனிஸ்கானிடம் விசாரணை நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த யூனிஸ்கான் கப்டன் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் இராஜினாமா முடிவை கைவிடும்படி வற்புறுத்தினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யூனிஸ்கானிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் அணித் தேர்வு மற்றும் கப்டன் பதவிக் காலம் குறித்து சில நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில் கூறியதாவது:- யூனிஸ்கான் இராஜினாமா ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவரை கப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் எந்த நியாயமும் இல்லை.

அவரது எதிர்ப்பு நடவடிக்கையை நான் உணர்கிறேன். நான் அவரது நிலையில் இருந்து இருந்தால் அதனைத் தான் செய்து இருப்பேன். இந்த ஆண்டு ஜனவரி மாத்தில் யூனிஸ்கான் கப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில சமயங்களில் கப்டன் பதவிக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது.

யூனிஸ்கான் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருந்தால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் அணி கப்டனாக நீடிப்பார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளார். யூனிஸ்கான் தேர்வாளர்க ளால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் தான் கப்டன் என்பது எங்களது முடிவாகும்.

அவர் கப்டன் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.

ஆளுவோருக்கோர் அஞ்சல் : இனியவன் இஸாறுதீன்

IDPs_Cooking(விடுதலைப் புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே  முகாம்களிலுள்ள 280000 தமிழ்மக்களை மீளக்குடியேற்றுவோம் என்று கூறுகிறது அரச தரப்பு. அந்த தமிழ் மக்களில் விடுதலைப் புலிகளும் தலைமறைவாகி இருக்கிறார்கள் என்று கூறுகிறது குற்றப் புலனாய்வுப்பிரிவு. ஆனால் ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம் – எங்களை இன்னமும் ஏன் அரசியற் கைதிகளாய் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? ’ என்று அந்த ஆறாத் துயர்கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் கேட்கிறார்கள் தங்கள் தாய்மொழியில்)
 
எத்தனை காலம் நாம்
புதைத்து வைத்திருக்கிறோம்
எங்கள் அவலத்தை?

எத்தனை பேரிடம் நாம்
மறைத்து வைத்திருக்கிறோம்
எங்கள்  காயத்தை?

எத்தனை இடங்களில் நாம்
தொலைத்துவிட்டிருக்கிறோம்
எங்கள் கனவுகளை?

எத்தனை தலைமுறையாய் நாம்
தேடிக்கொண்டிருக்கிறோம்
எங்கள் வாழ்க்கையை?

உங்களிடம்தான் கேட்கிறோம்
சொல்லுங்கள் தலைவர்களே!

துடிக்கும் இதயம்
உங்களுக்கிருந்தால்
எங்கள் ஆன்மாவின் பாடலை
நீங்களும் கேட்கலாம்

எங்களை நீங்கள்
என்னவும் செய்யலாம்
எப்படியேனும்
தடுத்து வைக்கலாம்

மானுடத்தை மறுக்கலாம்
மனிதநேசம் எதிர்க்கலாம்
மக்கள் மகிழ்ச்சி கெடுக்கலாம்
மண்ணில் இருக்கத் தடுக்கலாம்

புலிகளை அழிக்கலாம்
போரை நிகழ்த்தலாம்
முட்கம்பி முகாமுக்குள்
முடக்கியும் வைக்கலாம்
ஆனால் நாங்கள்
விடுதலை பற்றியே சிந்திப்பதனை
எப்படித் தடுக்கலாம்?

புழுதியில் புரண்டாலும்
குருதியில் நனைந்தாலும்
வறுமையில் உழன்றாலும்
நாங்கள் வாழ்வதற்கான கனவுகளை
எப்படித் தடுக்கலாம்?

தாட்சண்யமில்லா உங்கள் மனச்சாட்சியை
தீட்சண்யத்தோடு தட்டி எழுப்பினால்
எங்கள் ஆன்மாவின் பாடலை
நீங்களும் இசைக்கலாம்

பேதத்தை வேதமாய்
போதித்துப் போதித்து
(இன)வாதம் வளர்க்கலாம்
சர்வ சன சமரசம் பேசிப்
போதமாய் கதைக்கலாம்

மனிதநெறி இழந்து
மதவெறி பிடித்த
தமிழீழத் தலைவர் போல்
மானுடத்தின் விதையழித்து
மக்களை ஏமாற்றலாம்

வீதிகளில் ஊர்வலம் போன
கொலையாயுதங்களையும்
குடிசைகளுக்குள் ஒழிந்துகொண்டு
எட்டிப் பார்த்த மனிதத்தை
சமாதானம் ஒழித்து
சமாதியாகிப்போன சர்வாதிகாரத்தை
எப்படி மறக்கலாம்?

எங்கள் வானமும்
இருண்டு கிடப்பதால்
எங்கள் சிறகுகளும்
வானம் அறியாததால்
நாங்கள்
சுதந்திரம் பற்றியே சிந்திப்பதை
எப்படித் தடுக்கலாம்?

என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்?

நீங்கள் நீட்டுகின்ற
கரட் துண்டுகளுக்காகக்
கழுத்தை நீட்டும் கழுதைகள் என்று
எங்களை நினைக்கலாம்
ஆனால்
எங்கள் கனவை
எங்கள் கவிதையை
எங்கள் விடியலை
எப்படித் தடுக்கலாம்?

அக்கிரமம் செய்த அராஜகவாதிகளையும்
அகிம்சாவாதிகளையும் பிரித்தறியும்
நேர்மை நியாயம் எனும் ரசாயனம்
இல்லாமல் போகலாம் உங்களிடம்
ஆனால்
எங்கள் பசியை
எங்கள் சிந்தனையை
எங்கள் ஆன்மாவின் துடிப்பை
எங்கள் தாய்மொழியின் ஓலத்தை
உங்களால் எப்படி ஒழிக்கலாம்?

கூட்டுக்குத் தீ வைத்த
குருவிகள் இல்லை
மனிதர்களில்தானே
நாட்டுக்குத் தீ வைத்த
நயவஞ்சகர்கள்
இதை உணராமலா
ஜனங்களோடும் ஜனநாயகத்தோடும்
விளையாடுகிறீர்கள்?

இழந்த குருதி
இழந்த கண்ணீர்
இழந்த வியர்வை
இப்படி
ஓவ்வொரு இழப்பிலும்
புத்தனின் ஞானம்
முருகனின் கருணை
ஏசுவின் இரக்கம்
அல்லாஹ்வின் அருள் எல்லாம்
மனித நாகரீகம் பார்த்து
மருண்டுகொண்டிருக்கின்றன

அதனால் எச்சரிக்கிறோம்
‘சாதுமிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்களே
ஆனால்
‘சத்தியம் நிமிர்ந்தாலோ ஜெகமே தாங்காது’

யாழ். குடாவைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் – பயிற்சிகளை முடித்துக் கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் கடமையாற்றுதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்தார். வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில். ஏ-9 வீதியின் ஊடாக சென்று யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.  வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் அவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சி கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படும்;.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைச்சர்கள் நியமனம் – மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைக் கவனிக்கவென ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒவ்வொரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தலைமை தாங்குவார். யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நேற்றுக்காலை கச்சேரியில் மாநாடொன்று நடந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,  கொழும்பிலிருந்து வருகைதந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன,  பிரதியமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், ஹஸைன் பைலா,  மஹிந்த அமரவீர,  பிரேமலால் ஜயசேகர உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் இதில் பங்குபற்றினார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கவனிக்க வாரா வாரம் கூடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மேற்படி அமைச்சர்கள் அல்லைப்பிட்டி மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.

வடக்கில் 12095 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் நாளை மறுதினம் (22) முதல் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் 12 ஆயிரத்து 95 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேர் அவர்களது சொந்த வாழிடங்களில் நாளை மறுதினம் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.  வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவர்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலுமுள்ள பத்து பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 118 கிராம சேவகர் பிரிவுகளில் இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10017 பேர் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டி சுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 30 கிராம சேவகர் பிரிவுகளில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தி லுள்ள வவுனியா, வெங்கலசெட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் மேற்கு, மன்னார் நகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேரும் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட விருக்கும் 118 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணி வெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

சொந்த வாழிடங்களில் மீளக் குடியமர்த்தப்படும் இம் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சமைத்த உணவு நிவாரணமும், அதனைத் தொடர்ந்துவரும் ஆறு மாத காலத்திற்கு உலர் உணவு நிவாரணமும், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என்று அரசாங்க அதிபர்கள் கூறினர்.

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

IDP_Child_Carrying_Bucket_of_Waterமே 16ம் திகதிவரை வெள்ளான் முள்ளிவாய்க்காலிலிருந்து பின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் வந்துள்ள என் ஊராரையும், உறவினரையும் பார்ப்பதற்காக அண்மையில் வவுனியா சென்றேன். புறப்படுமுன் லண்டனிலிருந்து வெளிவந்த செய்திகள் எம்மை சற்று சிந்திக்க வைத்தாலும் இவையெல்லாம் உண்மைதானா என்பதை நேரே சென்று அறியவேண்டும் என்ற ஆவல் எம் பயணத்தை தொடரும்படி தூண்டியது.

விமானத்திலிருந்து வெளியேறும்போது எனக்குள்ளே சற்று தயக்கம். காரணம் பிரித்தானிய கடவுச்சீட்டு கொழும்பு விமானநிலையத்தில் விரும்பப்படாத ஒன்றென்றும், பலர் இம்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் ஊடகங்களின் விடாது தொடர்ச்சியான செய்திகளாக இருந்தன.

விமானநிலையத்தின் உள்ளே சென்றதும் swine flu வை அறியும் camera முன்னே வரிசையாக செல்லும்படியான அறிவித்தல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய்யப்பட்டது. அதிகாரிகள் monitor முன் இருந்து எமது உடல் வெப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று எம்மை வரவேற்பதுபோல் குடிவரவு அதிகாரிகளின் இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. கடவுச்சீட்டை கையளித்தபோது எந்த விதமான முகமாற்றமும் இல்லாது தனது கடமையை செய்துவிட்டு கடவுச்சீட்டை கையளித்தார் அந்த அதிகாரி.

விமான நிலையத்திலிருந்து hotel சென்றபோது இரவு 11 மணி இடையிடையே இராணுவமும் பொலிசும் எம்மை நிறுத்தி சோதனை செய்தார்கள். எந்த இடையுறுமில்லாது நடந்து கொண்டார்கள்.

மறுநாள் காலை வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றோம். காலை 5.45 மணிக்கு யாழ்தேவி புகையிரதம் கோட்டையிலிருந்து புறப்பட்டது. புறப்படுமுன் அத்தனை அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே செய்தார்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. புகையிரதம் மதவாச்சியை அடைந்தபோது அனைவரையும் அவரவர் பொதிகளுடன் வெளியே வருமாறு கேட்கப்பட்டோம். அத்தனை பொதிகளையும் சோதனை செய்தபின் என்னை அந்த அதிகாரி ‘வவுனியா போகமுடியாது’ என்று கூறிவிட்டார். ‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு MOD (ministry of Defence) அனுமதி வேண்டும்’ என்றார். அந்த அதிகாரியின் கடமை உணர்வை புரிந்துகொண்டு கடவுச்சீட்டுக்குள்ளே வைத்துக் கொடுத்தேன் என்னை வவுனியா செல்வதற்கு அனுமதித்தார்.

1985 ம் ஆண்டு லண்டன் செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் நின்றபோது என் நண்பர் கொக்காவில் இராணுவமுகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. புகைவண்டி வவுனியாவை அடைந்தபோது அந்த ஆண்டு என் கண்முன்னே வந்து போனது. 25 ஆண்டுகால நகர்வு ஓர் சினிமாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தது.

புகையிரத நிலையத்திலிருந்து வீடுசென்ற போது இது வவுனியாவோ இல்லை யாழ்ப்பாணமோ என்ற குழப்பம் எனக்குள்ளே. பார்க்குமிடமெல்லாம் பசுமையான வயல்களும் குளங்களுமாக வேலிகளேயில்லாமல் இருந்த வவுனியா நகர்ப்புறம் இன்று வயல்களும் குளங்களும் மண்ணால் நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாகவும் நான்கு பக்கமும் கிடுகுகளால் மூடி அடைக்கப்பட்ட வேலிகளாலும், ஒலிபெருக்கி மூலம் இரவுபகலாக ஓலமிடும் இந்துக் கோயில்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

வவுனியாவை யாழ்ப்பாண இந்து மயமாக்கும் திட்டமிட்ட செயல்பாடோ இதுவென்று என்மனம் என்னையே கேட்டது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வாழ்ந்த காலப்பகுதிக்கு வவுனியா தள்ளப்பட்டு விட்டதென்று முணுமுணுத்தார் என்னை கூட்டிச்சென்ற நண்பர்.

சில நாட்களே வவுனியாவில் தங்கிநிற்கக் கூடிய நிலையிருந்ததால் கிடைக்கின்ற பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து தகவல்களைப்பெறும் நோக்கில் அவர்களோடு பேசிக்கொண்டேன்.

“எம்மை யாருமே காப்பாற்றவில்லை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று  ஆரம்பித்தார்கள். நடந்தவற்றை அறியும் ஆவலில் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டேன்.

மன்னாரில் நடந்த போரில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ”கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள்  பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

”எதற்காக பொதுமக்கள் மீது பலாத்காரத்தை செலுத்தினார்கள்” என்று கேட்டபோது ”இழந்த பிரதேசங்கள் இராணுவத்திடம் பறிபோகுமென்று அவர்கள் என்றுமே எண்ணியதில்லை, பறிபோனதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்” என்றனர். தளபதி திலீபனிடம் ”எதற்காக மக்கள்மீது இப்படி பலாத்காரம் செய்கிறீர்கள்” என்று கேட்க ”இது மேலிடத்து உத்தரவு” என்றாராம்.

பலாத்காரமாக பிள்ளைகளைப் பிடிக்க வரும்போது பெற்றோர் அவர்களை எதிர்த்தால் அவர்களை அவ்விடத்திலேயே சுட்டுவிட்டு பிள்ளையை பிடித்துச்சென்ற சம்பவங்களை சிலர் கூறினார்கள். பிள்ளை மறுத்தால் பெற்றோருக்கு முன் பிள்ளையை சுட்டுவிட்டு இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டுவிட்டுப் போவார்களாம் போராளிகள்.

”பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட போராளிகளே தோல்வியின் முதல்காரணி” என்றார்கள். ஒருவாரகால  ஆயதப் பயிற்சியோடு களம் இறக்கி விடுவார்களாம். அவர்கள் எப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் தப்பிச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தார்களாம்.

தளபதி தீபன் இறப்பதற்கு முன்னதாக மிகப்பாரிய இராணுவ ஊடறுப்பொன்றை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் சென்றதாகவும், சென்ற வழியில் இராணுவத்தினர் முன்கூட்டியே நிலையெடுத்திருந்ததால் அதில் 450 க்கும் மேற்பட்ட போராளிகளையும், சொர்ணம் தனது காலையும் இழந்ததாக குறிப்பிட்டார்கள்.

நெஞ்சின் தோள்பகுதியில் குண்டுபட்ட தீபன் இரண்டு நாட்களாக களத்தில் நின்று போராடி மூன்றாம் நாள் எறிகணை பட்டு இறந்ததாகவும், பங்கர் வாசலிலே படுத்திருந்த விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி மீது செல் விழுந்து வெடித்து அவர் மரணித்துள்ளார்.

இறந்த உடல்கள் ஆங்காங்கே நாட்கணக்கில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த காட்சியையும், காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி ஆங்காங்கே கிடந்ததாகவும்; துர்நாற்றமெடுத்து ஈ மொய்க்கின்ற காட்சி சர்வசாதாரணமாக இருந்தது என்றார்கள்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பிவர முனைந்த பலர் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை சிலர் விபரித்தனர்.

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை கொடுத்து இரண்டு தேங்காய் வாங்கிய கதையை கூறிய அதேவேளை ஓரு இலட்சம் வரையான நெல் மூட்டைகளை விடுதலைப் புலிகள் அப்படியே இராணுவத்திடம் கைவிட்டு வந்ததாக கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்கள்.

ஓவ்வொரு இடப்பெயர்வின் போதும் கைவிட்டுச்சென்ற தமது உடைமைகளையும் இழந்த உறவுகளையும் எண்ணி கண்ணீர் வடித்தார்கள்.  பார்க்குமிடமெல்லாம் பிணங்களும், கேட்பதெல்லாம் மரணஓலங்களுமாக பல வாரங்கள் கழிந்தன என்று தேம்பித் தேம்பி அழுதார்கள்.

பங்கருக்குள் இருந்தபோது விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திருநாவுக்கரசு கடந்த இரு வருடங்களாக பிரபாகரனுக்கு சித்த சுவாதீனம் பிடித்து விட்டதென்று கூற அங்கிருந்த மற்றய விடுதலைப் புலிகளின் விசிறிகள் அவரோடு கைகலப்பிற்கு சென்று விட்டார்களென்று ஒருவர் தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது எப்படி இராணுவம் நடந்து கொண்டது என்று விடுதலைப் புலிகளின் மிகவும் நெருக்கமானவரிடம் கேட்க ”என் மனச்சாட்சியை தொட்டுச் சொல்கிறேன் மனிதர்களைப்போல் நடந்துகொண்டார்கள்” என்றார்.

அடுத்தநாள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காக சென்றோம். 25 ஆண்டுகால போரின் அழிவுகளை மக்கள் முகங்கள் மட்டுமல்ல வவுனியா நகரும் காட்டிக் கொடுத்தது.

நகருக்கு அண்மையில் உள்ள சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்தில் போராளிகளை மட்டும் வைத்து பராமரிக்கிறார்கள். வெறும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் அவர்கள் மிகவும் லாவகமாக நடமாடுகிறார்கள்.

உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டகைகளுக்குள் ஏதோ வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.

முகாமிலிருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய சிலருடன் பேசியபோது முகாமுக்குள் பல குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போவதாகவும், இந்த இறப்புக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலித்தீன் கூரைகளே காரணம் என்று வைத்தியர்கள் சந்தேகப்படுவதாக கூறினர்.

மேலும் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு யாழ்தேவி மூலம் கொழும்பை வந்தடைந்தோம். மறுநாள் லண்டன் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றபோது உள்ளேயும் வெளியேயும் விமானப்படை அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட முறை என்னை 2005 ம் ஆண்டு புலிகளின் புளியங்குள விசா காரியாலயத்தோடு ஒப்பிட வைத்தது.

2005ம் ஆண்டு யாழ் செல்வதற்காக தரைவழியாக புளியங்குளம் சென்றோம். வாகனத்தை விட்டு இறங்கியதும் “அ” க்கு போங்கள் “இ” க்கு போங்கள் “பு” க்கு போங்கள் என்று பயணிகளையும் வாகன உரிமையாளர்களையும் மந்தைகள் போல் நடாத்திய காட்சி என் கண்முன்னே வந்துபோனது.

கிளிநொச்சியிலுள்ள விசா காரியாலயத்துக்கு சென்றபோது அந்த இளம் அதிகாரி ”லண்டனிலே விடுதலைப் புலிகளிற்கு பணம்கொடுத்த ரசீது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”அப்படியென்றால் விசா கிடைக்காது” என்றார். ”விசா எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எவரும் பணம் கொடுப்பதில்லை” என்றேன்.

”அப்படி அறிவதாயின் உங்கள் area  பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அறியுங்கள்” என்றேன். என்னை கூட்டிச் சென்றவரின் முகமாற்றம் என்னை தொடர்ந்து பேசவிடாது தடுத்தது.  அப்போது எம் நீண்ட இருக்கையின் மூலையில் ஒருவர் காத்திருந்தார், அவரைக் காட்டிய அந்த அதிகாரி ”அதோ பாருங்கள் அந்த நபர் லண்டனிலிருந்து வந்தவர். இரு வாரங்களாக இங்கே வந்து போகிறார். இவர் லண்டனில்  விடுதலைப் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். அதனால் அவருக்கு தண்டனை இது” என்று சொன்னார்.

”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.

நடந்தவற்றை  அன்று பல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதை அன்று அவர்கள் விடுதலைப் புலிகளின் வளர்சியாகவே பார்த்தார்கள். மே18 வரை அதே நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.

அதனால்தான் அவர்களால் இன்றுள்ள உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்தும் புனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தக் கலையை கற்றுக் கொடுத்தவர்கள் நம்முடைய TULF என்பது அனைவரும் அறிந்ததே. 1977 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என்றார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்னதடை’ என்றார்கள். இவ்வாறே என் மனம் அங்குமிங்கும் போய்வர விமானம் லண்டனை வந்தடைந்தது.

‘புதினம்’ இணையத்தளம் மூடல்.

191009puthinam_com.jpgவிடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான ‘புதினம்’ திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை (This is to advise due to personal reasons this website will not be functioning anymore)  புதினம் வெளியிட்டுள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

வெளிநாட்டு புலிகளுக்குள் தொடரும் சொத்து பிரச்சினைகளின் எதிரொலியாகவே இந்த இணையத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

புலிகளுடனான தொடர்பைக் கண்டறிய கைதான அமெரிக்க செல்வந்தரிடம் விசாரணை!

3333raj-rajaratnam.jpgஅமெரிக் காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ்ராஜரத்னம் என்பவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம்  மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம்; புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.. ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.