பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளுவதற்கு அவசியமான மருந்துப் பொருட்களும், முகமூடிகளும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கிணங்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் இவற்றை இறக்குமதி செய்துள்ளது. இதேநேரம், பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
நேற்று வரையும் சுமார் 1500 பேர் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபாபலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை, பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்களுக்கு 72 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட வேண்டிய ஒசெல்டமிவிர் என்ற மாத்திரைகள் 15 ஆயிரம், இந்நோய்க்குள்ளாகும் சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாணி மருந்து 240 போத்தல்கள், முகமூடிகள் இரண்டாயிரம் என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று கூறினார்.
அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் நேற்று முன்தினமிரவு கொழும்புக்கு கொண்டுவந்த இப்பொருட்கள் நேற்று மாலை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.
சுமார் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துப் பொருட்கள் தற்போது இலங்கை வசம் உள்ளன. மேலும், ஒரு தொகுதி மருந்துப் பொருட்களையும், முகமூடிகளையும் இறக்குமதி செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.