புலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முனனெடுக்கப்படும் அதேசமயம், இரட்டை வாய்க்காலுக்கு தெற்காக உள்ள பிரதேசம் மும்முனைகளில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் எஞ்சியுள்ள 4.5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் வேண்டப்படும் புலிகளின் தலைவர்கள் பலர் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக் கடல் கடல் நீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணை ஒன்றை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மேலும் 250 மீற்றர் நீளமான பிரதேசத்தை முன்னேறி கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகள் மோட்டார், பீரங்கிகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து வடக்காகவும், மேற்காகவும் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது மற்றும் 53 வது படைப் பிரிவினரை இலக்கு வைத்து புலிகள் நேற்றைய தினமும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை வட்டுவாக்கல் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்போது அங்கிருந்து வடக்கு நோக்கி முனனேற ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.