பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
அக்கட்சியில் சிலர் அண்மைக் காலங்களாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறி இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகின்றனர். கனரக ஆயுதங்களைப் பாவிக்க வேண்டுமென அவர்கள் கூறுகிறார்களா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
வன்னித் தாக்குதலில் கனரக ஆயுதங்களை உபயோகிக்க வேண்டு மெனவும் பாவிக்கக் கூடாதெனவும் இரு வேறு கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-
ஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரங்கே பண்டார அண்மையில் கனரக ஆயுதங்களை உபயோகிக்க வேண்டுமென சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேவேளை அக்கட்சியின் சிரேஷ்ட எம். பி., ஜயலத் ஜயவர்த்தன இதுபற்றிய தமது கவலையை தமிழ் தினசரியொன்றில் தெரிவிக்கிறார்.
மொத்தத்தில் இவர்கள் என்ன கூறவருகிறார்கள் என்பது குழப்பமாகவுள்ளதுடன் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும் கேட்கத் தோன்றுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.