May

May

மட்டக்களப்பு நகரில் 4ஆவது நாளாகவும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்பு

sri-lankan-schools.jpg மட்டக்களப்பு நகரப் பிரதேசப் பாடசாலைகளுக்கு இன்று 4 ஆவது நாளாக மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால் பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே சமூகமளித்திருந்ததாக வலயக் கல்விப் பணிமனை தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா(வயது 08) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அச்சநிலை பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் வெசாக் வைபவம்

vesak.jpgகொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நாளை 08 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ளது.

ஆசிரம மண்டபத்தில் மாலை 7.15 மணிக்கு நுகே கொடை பாகொடை தியான நிலையத்தில் வண. ஓலந்த ஆனந்த தேரோ, புத்த பெருமானின் செய்திகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

வவுணதீவில் ஆசிரியர் சுட்டுக்கொலை

gun00.jpgமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் நேற்றுக்காலை (06.05.2009) பாடசாலை ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வவுணதீவு பாவற்கொடிச் சேனையிலுள்ள பாவற் கொடிச்சேனை பாடசாலை யில் கடமையாற்றும் பால சிங்கம் ரவீந்திரராசா (33) எனப்படும் ஆசிரியரே இதில் கொல்லப்பட்டவரென வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வரும் இவ் ஆசிரியர் நேற்றுக்காலை பாடசாலை சென்று கொண்டிருந்த போது 7.20 மணியளவில் கண்ணங்குடா பிள்ளையாரடியில் வைத்து தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுச் சென்றுள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான இவ் ஆசிரியர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.பட்டதாரி ஆசிரியரான இவர் மங்கிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், தற்காலிகமாக மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

64 பீப்பாய்கள் – 13,440 லீட்டர் மண்ணெண்ணெய் புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போது 64 பீப்பாய்களில் நிரப்பப்பட்டிருந்த 13 ஆயிரத்து 440 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 15 வெற்றுப் பீப்பாய்களை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதலில் அதிசக்தி வாய்ந்த கிளேமோர்கள், படகு வெளி இணைப்பு இயந்திரம் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது, அங்கிருந்து ஒவ்வொன்றும் 210 லீட்டர்களைக் கொண்ட 64 பீப்பாய்களை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பின் மற்றுமொரு பிரதேசத்தில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய தேடுதல்களின் போது 9 குதிரை வலுவைக் கொண்ட படகு இயந்திரம் – 01, 60 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 08, 12.5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு – 01, 7 கிலோ எடையுள்ள கிளேமோர் – 01, 4 கிலோ எடையுள்ள கிளேமோர் – 03, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் – 03 மற்றும் 1.5 கிலோ எடையுள்ள கிளேமோர் – 01, கைக்குண்டுகள் – 53, 750 ரி – 56 ரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பெட்டி – 01, 1500 எப். என். சி. ரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பெட்டி – 02 மற்றும் ரி – 56 ரக துப்பாக்கிகள் – 08 என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: சபையில் ஸ்ரீ காந்தா

parliament-of-sri-lanka.jpgபிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த ஸ்ரீகாந்தா தொடர்ந்து பேசியதாவது:-

வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களினது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையால் அவர்கள் அனைவரும் எவ்வேளையிலும் கொல்லப்படலாமென குறிப்பிட்டார். இந்த அரசுக்கு போரை நடத்துவதற்கு வெளிநாட்டுப் பணம் தேவை. இந்திய அரசின் ஆயுத உதவிகள் தேவை. ஆனால் அவர்களின் அறிவுரைகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்தைப் பகைத்துக்கொண்டு உள்நாட்டில் ஆட்டம’் போட நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சர்வதேச சமூகம்  இலங்கை அரசுக்கு விரைவில் உணர்த்தும்.

வன்னியில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் எவ்வேளையிலும் விமான,எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்படலாம். ஆனால் அரசோ தனது இராணுவ நடவடிக்கையை மனிதாபிமான நடவடிக்கையெனக் கூறுகின்றது. தயவுசெய்து அந்தச் சொல்லைப் பயன்படுத்தி அந்தச் சொல்லுக்குள்ள புனிதத்தை கெடுத்துவிட வேண்டாம். வன்னியில் அரசு சிங்கள இளைஞர்களை பலியிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மக்களை படுகொலை செய்கிறது. புலிகளும் கொல்லப்படுகிறார்கள். எதிர்கால சந்ததி அழிந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் அரசியல் தீர்வு காண இன்னும் நேரம் கடந்து விடவில்லை. இப்போதும் நாமும் புலிகளும் தயாராகவே உள்ளோம். இந்த அரசு தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கிவிட்டோம் என்ற உணர்வை சிங்கள மத்தியில் ஊட்டுகிறது. இது அதிககாலம் நீடிக்காது. பொருளாதார நெருக்கடியை சிங்களமக்கள் உணரும்போது தெளிவடைவார்கள். பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்மக்கள் இப்போது கூட சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றனர். அவர்கள் ஒரு நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர். இந்த எண்ணத்தை தக்கவைப்பது சிங்கள மக்களினதும் அரசினதும் கைகளில்தான் உள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்தீன் ராஜினாமா

கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அமீர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார்.

இவரது ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்புத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம். முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார்.  தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் தாம் பதவி ஏற்கவிருப்பதாக யு.எல்.எம். முபீன் தெரிவித்தார்.

வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் மக்களிடம் ஒப்படைக்கப்படும் – ஜனாதிபதி

pr-tam-deli.jpgவடபகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் அங்குள்ள மக்களிடம் ஒப்படை க்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட பகுதியில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு சிவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அம்மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாகக் குடியேற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கென தமிழ்க் கட்சிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே ஜனாதிபதியினால் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்; பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர். அதனைக் கவனத்திற் கொண்ட ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள மக்கள் புலிகளின் நடவடிக்கைகளினால் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந் நிலையிலிருந்து அவர்களை மீட்கும் வகையில் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் அப்பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகோதர மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிய தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சகல தமிழ்க் கட்சிகளினதும் ஒத்துழைப்பு தமக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் எழும் சவால்களுக்கு இணைந்த பலத்துடன் முகங்கொடுத்த சகோதர மக்களைப் பாதுகாத்து அவர்களை நிரந்தர இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட வருமாறும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர பயங்கரவாதிகளைப் பலப்படுத்துவதிலல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களைத் தாம் அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் இடங்களில் அவர்கள் மீண்டும் அவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்க மாட்டோமெனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நகர்ப்பகுதிகள் மட்டுமன்றி கிராமியப் பிரதேசங்களின் வீதி, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம் உட்பட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து விரைவில் அம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கைகளில் தமிழ்க் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதில் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்படுமென தெரிவித்த ஜனாதிபதி எச்சந்தர்ப்பதிலும் எக்காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளுக்கு எத்தகைய ஆதரவும் வழங்கக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை : அரசாங்கம் அறிவிப்பு

sri_sri_ravi_shanka.jpgஇலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசத் தயாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் மக்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்தக் கூடாது என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாழும் கலைப்பயிற்சியின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்லத் தயாரில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு ரவிசங்கரிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

‘ஐ.நா. செய்மதிப் படங்களும், கருத்துக்களும் பக்கச்சார்பானதும் ஊர்ஜிதமற்றதுமாகும்’ – நீல் பூனே

_sri_lanka_sat_any.gifபாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த ஐ. நா. செய்மதிப்படங்களும், அவை குறித்த கருத்துகளும் பக்கச் சார்பானவையும் ஊர்ஜிதம் செய்யப்பட முடியாதவையெனவும் ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மனிதாபிமான இணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு கடந்த 04 ஆம் திகதி நீல் பூனே எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. செய்மதியினால் வெளியிடப்பட்டிருக்கும் படங்களையும் அதன் விவரணங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு தான் அனுமதி வழங்கவில்லையெனவும் அவை ‘ஐ. நா. வின் தேடல்’ என தவறாக அர்த்தம் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் பூனே கூறியுள்ளார். அவரது கருத்துப்படி மேற்படி படங்களும் அதன் விவரணங்களும்  தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட பிழையினால் இரகசிய குறியீடுகள் பாதுகாக்கப்படாமையினாலேயே பொது மக்களை சென்றடைந்துள்ளன எனவும் பூனே குறிப்பிட்டுள்ளார். பூனே அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :-

‘பலருக்கும் தகவல் மூலமாகவிருக்கும் செய்மதிப் படங்கள் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் ஐ. நாவுக்கான முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அவை ஐ. நா. செயலாளர் நாயகம் அல்லது சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுமதியுடனேயே பெறப்படும். இதேவேளை, ஊடகவியலாளர்கள் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு யூ. என். ஓசட் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பக்கச்சார்பானவை.

செய்மதியின் தரவுகள் உண்மையானவையா என உறுதிப்படுத்துவதற்கு அந்நாட்டிலிருந்து வெளியாகும் தரவுகளுடன் அவற்றை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை. கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகியிருந்த மேற்படி படங்களை கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்றே நான் பார்வையிட்டேன்.

யூ. என். ஓசட் இப்படங்களையும் இது தொடர்பான விவரணங்களையும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள எம்மிடம் அனுமதி கோரியிருந்த போதிலும் அவை ‘ஐ. நா. வின் தேடல்’ என தவறான அர்த்தம் தொனிக்கும் வகையில் அவற்றை வெளியிடுமாறு நான் அனுமதி வழங்கவில்லை. எப்படியாயினும், இரகசிய குறியீடுகளை பாதுகாக்காத வகையில் படங்களும் விவரணங்களும் அனுப்பப்பட்டமையினாலேயே அவை பொதுமக்களை சென்றடைந்துள்ளன என்பதை அறிந்துகொண்டேன்.

இத்தவறு எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு எனது தலைமையகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறாது.

வன்னியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் படம் இறுதியாக எமக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கிடைத்தது.  விரைவில் புதிய படங்கள் கிடைக்குமென நம்புகின்றோம்.  அப்போது தான் அங்கே இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருந்து சவால்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து எமக்கு தெரியவரும். அத்தகவல்களை உங்களுக்கும் கிடைக்கும் வகையில் செய்வோம்.

ஹோம்ஸ் கருத்து

யுத்தப் பிரதேசத்தினுள் சிவிலியன்கள் கொல்லப்படுவது அல்லது காயப்படுவது தொடர்பாக சில குறிப்பிட்ட ஊடகங்களில் வெளியிடப்பட்டது நம்பகமானது அல்ல என மனித உரிமைகளுக்கான ஐ. நா. பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐ. நா. வட்டாரெங்களை ஆதாரங்காட்டியே ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது.

ஐ. நா. சபையால் இவ்வாறான எந்தவொரு இழப்புக்களின் எண்ணிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. என ஐ. நா. கொழும்பு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஐ.நா. பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் இல்லை

parliament-of-sri-lanka.jpgஇலங்கையின் உள்விவகாரங்களில் இறைமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீடு களும் அழுத்தங்களும் இல்லை. மாறாக நாம் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அவை பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையுமே வழங்குகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். ஜே. என். பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் :- புலிகள் இயக்கம் தொடர்பில், நோர்வே அரசின் நிலைப்பாடு மாற்றமடைந்திருக் கிறது.

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலை மையைப் புரிந்துகொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது. நோர்வேயிலுள்ள எமது தூதரகம், புலிகளின் பயங்கரவாத வலையமைப்பினரால் தாக்கப்பட்ட உடனடியாகவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம்.

தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். இது விடயமாக நோர்வே அரசு வருத்தம் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துப் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தூதரகம் தாக்கப்பட்டதற்கு நட்டஈடு வழங்குவதாக நோர்வே கூறியது. ஆனால், நாம் அதனை ஏற்கவில்லை. எமது சொந்தக் செலவில் திருத்திக்கொள்வதாகக் கூறினோம். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை நோர்வே மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப் படும் புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தும் இலங்கைக்கு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன என்றும் ஜே. என். பீ. தலைவர் விமல் வீரவன்ச சபை ஒத்திவேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.  இந்தப் பிரேரணையை வழிமொழிந்த ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நோர்வேயில் தூதரகம் தாக்கப்பட்டதைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

‘பாதுகாப்பு வலயத்தில் எவ்வளவு பொதுமக்கள் இருந்தாலும் எமக்கு பொறு ப்பு இருக்கிறது. எனவே, புலிகளுக்குச் சார்பாகக் கோஷமெழுப்புவோருக்கு உண்மையைச் சொல்லுங்கள். புலிகளை இனிப் பயங்கரவாதப் பாதையில் ஒதுக்கி வைத்து விட்டு மக்களின் நலன்களைக் கவனிப்போம் என அமைச்சர் பதிலளித்தார்.

மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. கே. என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.