May

May

வன்னிக் குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்களை வழங்கும் திட்டம் ஆரம்பம்

menikfarm.gifதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்டுகளை வழங்கும் திட்டம் நேற்று (07) காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது.

நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் பால் மா பக்கட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டு. மாவட்டத்தில் 5 ஆயிரம் பக்கட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி. ஈஸ்வரராஜா தெரிவித்தார். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற பால் மா பக்கட்டுகள் கையளிக்கும் வைபவத்தில் மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே. தவராஜாவும் கலந்துகொண்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ளோருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப ஐ.சி.ஆர்.சி. ஒத்துழைப்பு அவசியம்

medical_lorry.jpgபாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்  சிக்குண்டுள்ள மக்களுக்கென போதியளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு நல்குவது மிக அவசியம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்  சிக்குண்டு எஞ்சியுள்ள மக்களுக்கென தற்போது  ஓசன் கப்பலில் அனுப்பப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதியளவாக இருக்குமென நாம் நம்பவில்லை. அதனால் இம்மக்களுக்கு அதிகளவு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு ஐ. சி. ஆர். சி. ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில்  சிக்குண்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைப்பதற்குத் தேவையான அளவு உணவுப் பொருட்களும், கப்பலும் எம்மிடமுள்ளன. அவற்றை அம்மக்களுக்குக் கொண்டுசேர்க்க ஐ. சி. ஆர். சியின் ஒத்தாசையே எமக்குத் தேவையாக உள்ளது என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் :-

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐ. சி. ஆர். சி. மேற்கொள்ள வேண்டும்.

தற்போது அப்பகுதியிலுள்ள நோயாளர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஓசன் கப்பலில் தான் முப்பது மெற்றிக்தொன்படி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கின்றோம். நேற்று முன்தினமிரவும் இவ்வாறு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஐ. சி. ஆர். சியின் ஒத்தாசை கிடைக்குமாயின் 500 மெற்றிக் தொன் படி உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளோம் என்றார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மாலைதீவு உதவி

maldives_gifts.pngஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு; உதவும் வகையில் மாலைதீவு அரசாங்கம் அத்தியவசிய பாவனைப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது.

மாலைதீவு அரசாங்கத்தின் இலங்கைக்கான உயர் ஸதானிகர் அலி ஹஸைன் டிடி அன்பளிப்புக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரது செயலகத்தில் வைத்து கையளித்தார். 

தேயிலை விலை நான்கு வீதத்தால் அதிகரிப்பு

sri-lanka-upcountry.jpgசர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தேயிலை  விலை நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம் ஜயரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ தேயிலையின் விலை கடந்த வாரம் 320.00 ரூபாவிலிருந்து 360.00 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலைக் கொலுந்து ஒரு கிலோவுக்கு 55.00 ரூபா முதல் 62.00 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் நாட்டின் தேயிலை உற்பத்தியன் அபிவிருத்திக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் அமைச்சர் கூறினார்.

மருந்துப் பொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புக்கள் அதிகமாகக் கூடும்: சூசன் ரைஸ்

susanrice.jpgயுத்த வலயத்தில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புக்கள் உயர்வடையக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அமெரிக்கப் பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்படுவதாக இரண்டு தரப்பினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி வன்னியில் ஆட்டிலறித் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான குழுவினர் யுத்த வலயத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கூர்ந்து கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்துவதாகவும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென சூசன் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு நாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை பார்வையிட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் பூரண அனுமதியளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் படுகொலை துரைரட்ணம் கண்டனம்

era_thurairatnam.jpg மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாவற்கொடிசேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரான பாலசிங்கம் ரவீந்திரராஜா கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா அமைப்பின் முக்கியஸ்தருமான இரா. துரைரட்ணம் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கஷ்ட பிரதேசங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டுகின்ற போது சேவை நோக்குடன் அங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையானது கண்டிக்கத்தக்க விடயம். தற்பொழுது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷ்சிக்காவின் சம்பவம் குறித்த பீதியடைந்த கல்விச் சமூகம் அதிலிருந்து விடுபடாத நிலையில் இந்த படுகொலை; இடம்பெற்றுள்ளது. ஆயுத வன்முறை செய்யுமளவிற்கு ஆசிரியர்கள் நலிவடைந்தவர்கள் அல்ல. எனவே இந்த படுகொலை சம்மந்தமாக தீவிர விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் புதிய முகாம்

vavuniyatents.jpgவவுனியா பறையனாலங்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கென நிவாரண கிராமம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கிராமம் அமைக்கப்படுகிறது. வலயம் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமத்தில் மக்கள் வரைவில் குடியமர்த்தப்படுவர்.

இதில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்: க.அன்பழகன்

anbazhagan.jpgவிடுதலைப் புலிகள் தமிழர்களை தாக்குவதாலும் அவர்களை கேடயமாக பயன்படுத்துவதாலும் தமிழர்கள் அதிக அளவு இறக்கின்றனர் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் கூறியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பண்ருட்டியில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போதே இதை குறிப்பிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமும், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். போரை நிறுத்த சொல்ல நமக்கு உரிமை கிடையாது, மத்திய அரசுதான் சிங்கள அரசை வலியுறுத்தும். அதற்காக கருணாநிதி முயற்சி எடுத்தார். விடுதலைப் புலிகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் எண்ணிக்கை அதிகமானால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்,  இதனால் இந்தியாவும்,  தமிழகமும் பலன்பெறும். இந்த அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்டுகள் 3-வது அணி அமைத்து தவறான எண்ணத்தை பரப்புகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறிய வைகோஇ ராமதாஸ் அத்திட்டத்தை தடை செய்ய நினைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்றார் அன்பழகன்.

சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப சகல சமூகத்தினரும் முன்வரவேண்டும் – பிரதமர்

pmsl.jpgபெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்க ளின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்து கொண்டு சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பு வதற்கு சகல சமூகத்தினரும் முன்வரவேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மிகவும் கருணையுடன் சகல உலகவாழ் உயிரினங்களுக்கும் நற்பாதையைக் காட்டிச் சென்ற எமது புத்த பெருமானின் அளவற்ற நற்குணங்களை நினைவுகூர்ந்து உலகவாழ் பெளத்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புனித வெசாக் தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்திலே பெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்களின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்துகொண்டு சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புதற்கு உதவுமாறு சகல சமூகத்தினருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

பெளத்த தர்மத்தால் வளர்க்கப்பட்ட மனித சமூகமொன்றும், உயர் கலாசாரமொன்றும் எமக்குள்ளது. குரோதம், வைரம் போன்ற தீய குணங்களற்ற, ஏனையோருக்கு மதிப்பளித்து உயர் மனிதர்களாக வாழ்வதற்குரிய நற்பாதைகளையும், சமூகத்திலே தீயபழக்கவழக்கங்களுடன் வாழ்வதன் மூலம் ஏற்படக்கூடிய கெடுதிகளையும் பெளத்த தர்மமானது சிறந்த முறையில் போதித்துள்ளது.

சகல பேதங்களையும் துறந்து அமைதியானதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல விடயங்களையும் அரசாங்கமானது மேற்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்திலே மீண்டும் நற்பண்புகள் நிறைந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவது உங்களது கட்டாய கடமையாகும்.

வடக்கு பிரதேசத்தில் தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக மிகவும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து இருப்பிடங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படும். இச்சந்தர்ப்பத்திலே துணையற்றவர்களுக்கு உதவும் உயர் புண்ணிய கருமத்தை நிறைவேற்றுவதற்கு வெசாக் வாரத்தினுள் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இலங்பை வாழ் மக்களுக்கு புனித வெசாக் தினமானது சிறப்புற வாழ்த்துகிறேன். இவ்வாறு பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

வவுனியா செல்ல சர்வதேசத்துக்கு அனுமதியுண்டு; எமக்கில்லை : ஐ.தே.க.எம்.பி. ஜயலத்

drjayaalth.jpg“இலங்கை நிலவரத்தை நேரில் வந்து ஆராய்வதற்காக சர்வதேச நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எமது நாட்டின் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்குச் செல்ல பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சர்வதேசத்திற்கு அரசு விடுக்கும் செய்தி என்ன என்றே நாம் அரசிடம் கேள்வி எழுப்புகிறோம்” என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது “எமது பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடு தேவை இல்லை; எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என அன்று சிலர் கூறினர். இன்று இலங்கை நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதே போன்று இந்தியாவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கும், இலங்கை நிலைமையை நேரில் வந்து ஆராய அழைப்பு விடுக்கப்பட்டது.இலங்கை நிலையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுக்க ஒரு நாட்டுத் தலைவர் என்ற வகையில் உரிமை உள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று இலங்கை வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலைகளை ஆராய்ந்து சில கோரிக்கைகளை முன் வைத்தால், அதை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதா என நாம் கேட்கிறோம்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசு வவுனியா முகாம்களுக்குச் செல்ல அனுமதி அளித்தது. எமது நாட்டு பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்கோ மன்னாருக்கோ செல்ல அனுமதி தர பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கின்றது. இது குறித்துக் கேட்டால், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை எனக் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் செயற்படுகிறது என்றும் சர்வதேசத்திற்கு இலங்கை நிலைகுறித்து பல பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறது என்றும் எம்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. நாம் ஆட்சியில் இருக்கும் போதும் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் பயங்கரவாதத்தை எதிர்த்தே வந்துள்ளோம்.

யுத்தத்தினால் மட்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியாது. அரசியல் ரீதியான தீர்வே தேவை. அன்று வன்னியில் கட்டளை இடும் தளபதியாக இருந்த டென்சில் கொப்பெகடுவவும் இதனையே தெரிவித்திருந்தார். இன்று அவ்வகையான ஒரு தீர்வைக் கையாளவேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.யுத்தத்தினால் அல்லலுறும் மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்று கொடுத்து நாட்டில் சமாதானத்தை உருவாக்க அரசியல் தீர்வு ஒன்றினாலேயே முடியும் என அன்றும் ஐ.தே.க. தெரிவித்தது. இன்றும் அதனையே வலியுறுத்துகின்றது.” இவ்வாறு ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.