May

May

மதவாச்சி சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

sri-lanka-army.jpgஏ9 வீதியில் மதவாச்சி பிரதான சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸார் வேறு பகுதிகளுக்குத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலகவின் உத்தரவின் பேரில் இவர்களுக்கு இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து தென்பகுதிக்கு வருகின்ற வாகனங்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் அனுமதி பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் பல மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த புகாரையடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இவர்களின் இடமாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் புதியவர்கள் அவர்களின் இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடபகுதியில் இருந்து தெற்கு நோக்கி எந்த வாகனங்களும் வருவதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருவதனால் விசேட அனுமதி பெற்று வரவேண்டும். அதேபோல தெற்கில் இருந்தும் வடக்கு நோக்கி வாகனங்கள் செல்லவும் அனுமதி பெறவேண்டும்.

இந்த பாதுகாப்பு நடைமுறையை மீறி சில வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்படும் நிலையில் இனவாதம் பேசும் இடதுசாரிகள் தேர்தல் மேதினம் நடத்துகின்றனர்

mayday01.jpgஅகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்பட்டு கிடக்கிறது. இனவாதம் பேசியே சில இடதுசாரிகள் தம்மை தொழிலாளர்களது தோழனாக காட்டிக் கொண்டிருக்கின்றனர். வேதனக் குறைவால் தோட்டத் தொழிலாளர் பலர் வேதனைக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்து வரவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலை மையமாகக் கொண்டு சிலர் தேர்தல் மேதினம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம், வடக்கில் வாடுவோருக்கு உதவுவோமென இன்னொரு பகுதியினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த மக்களின் நிர்க்கதி நிலைக்கு காரணமானவற்றை களைந்தெறியவோ அதைப் பற்றி பேசவோ தொழிலாளர் தலைமைகள் பேசத்தயங்குவதும் மௌனிப்பதும் கவலைக்குரியதே. எனவே ஐக்கிய உணர்வோடு அவலங்களை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு நுவரெலியா கூட்டுறவுச் சங்க விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.

மலையக சோசலிச சக்திகளினதும் இடதுசாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் சார்பில் இடம் பெற்ற இம் மேதினக் கூட்டத்தை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை செங்கொடிச் சங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மௌனஞ்சலியும் செலுத்தப்பட்டது. செங்கொடிச் சங்க பொதுச் செயலாளர் ஒ.ஏ.இராமையா உரையாற்றுகையில்;

இலங்கையில் ஒருபக்கம் பொருளாதாரப்பிரச்சினை. மறுபுறம் யுத்தப் பிரச்சினை. இவ்விரண்டுமே இன்று சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. யுத்தம் முடிந்து விட்டதாக அரசு கூறுகிறது.வரலாறு காணாதளவு யுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கில் சோசலிச இயக்கம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுவும் அரசுக்கு ஆதரவான குழுவும் அங்குள்ளன. வடக்கில் இன்று காணப்படும் நிலை நாளை எமக்கும் வரலாம். இதனை மறந்த நிலையில்தான் மலையகத்தில் பலர் வரலாற்றுத் துரோகம் இழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

மலையகத்திலும் வடகிழக்கிலும் புதிய சோசலிச இயக்கம் உருவாக வேண்டும். எங்களது சக்தி உதிரியாக சிதறி இருக்காமல் அனைவரும் சேர்ந்து உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.  நாங்கள் நாட்டைப் பிரிக்கும் ஆதரவாளர் அல்ல. ஐக்கியப்பட்ட இலங்கையில் சமத்துவம் கோருகிறோம். தமிழர்கள் செறிந்து வாழுமிடத்தில் சுயாட்சியோடும் சுதந்திரத்தோடும் வாழவேண்டும். பொருளாதார நிலை அனைவரையும் பாதிக்கின்றது. எனவே அந்த வீழ்ச்சியிலிருந்து மீட்சி வேண்டும் என்றார்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தனதுரையில்;  உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற மார்க்சின் குரலை பலர் மறந்துவிட்டார்கள்.ஆனால் முதலாளிமார் மறக்கவில்லை.உலக முதலாளிகளே ஒன்றுபடுங்களென அவர்கள் அதனைப் பின்பற்றுகின்றார்கள். தொழிலாளர்களிடையே பிளவுகள், முதலாளிகள் ஐக்கியப்படுகிறார்கள். மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினை தீரவேண்டுமானால் சகல சங்கங்களும் ஒன்றுபடல் வேண்டும். ஒற்றுமை மூலம்தான் தொழிலாளியால் தலை நிமிர முடியும் என்றார்.

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.ஜோதிவேல் உரையாற்றுகையில்;  மறைந்துபோன இடதுசாரி இயக்கம் மலையகத்தில் மீண்டும் துளிர்விட இம்மேதினம் அடிகோலுகிறது. தோட்டத் தொழிலாளரின் அடிப்படை உரிமைகள் பல்வேறு வழிகளில் பறிக்கப்படுகிறது.பலவந்த வெளியார் குடியேற்றத்தால் காணிகள் பறிபோகின்றன. தோட்ட வைத்தியசாலைகளில் மருந்தில்லை. கொழுந்துக்கு விலை அதிகரிப்பில்லை. தோட்ட சேவையாளர்களுக்கு மனிதாபிமான ரீதியாக ஏழுபேர்ச்சஸ் காணி கூட வழங்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அரசு யுத்தத்தை காரணங்காட்டி தொழிலாளர்களை நசுக்கும் அதேவேளை, அமைச்சர்களது ஆடம்பர சொகுசு வாழ்வுக்கு வழி வகுக்கிறது. கேட்டால் யுத்தமென போலி முத்திரை ஒட்டப்படுகிறது என்றார்.

இக்கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் மரக்கறிக் தோட்டங்களும் சட்டரீதியாக அவர்களுக்கே உரித்தாக வேண்டும். பெருந்தோட்டங்களில் பெண்களே பெரும்பான்மையாக தொழில் புரிகின்றனர்.ஆனாலும் அவர்களுக்கு தகுந்த வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு உடை, மேலங்கி, தொப்பி, பாதணி உட்பட சீருடைகள் வழங்கப்பட வேண்டும்போன்ற தீர்மானங்களுடன் இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சர்வதேச உரோமர் கலாசார தினம்.( April 8: International Day of Roma ) – புன்னியாமீன்

international-day-of-roma.jpgஒவ் வொரு ஏப்ரல் மாதமும் 08ஆம் திகதி சர்வதேச உரோமர் கலாசார தினம் கொண்டாடப்படுகின்றது. உரோமர் கலாசாரம், உரோமப் பாரம்பரியங்கள்,  மற்றும் உரோமர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

20ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதிகளில்,  குறிப்பாக 1960களில் உரோம கலாசாரத்தைப் பேணுவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் பல இயக்கங்களும், அமைப்புகளும் அதிகளவில் உருவாகின. இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1971ஆம் ஆண்டில் லண்டனுக்கருகே ஓப்பிளிங்டன் Orpington    எனுமிடத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச உரோமானிய அமையத்தை International Romani Union (IRU),  உருவாக்கினர்.

1990ஆம் ஆண்டு போலாந்தில் உள்ள ‘செரொக்’ எனுமிடத்தில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச உரோமானிய அமையத்தின் International Romani Union (IRU),  கூட்ட முடிவின்படியே ஏப்ரல் 08ஆம் திகதி சர்வதேச உரோம கலாசார தினத்தை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

பொதுவாக இத்தினத்தை உரோம கலாசாரங்கள், உரோம பாரம்பரியங்கள்,  மரபுகள் என்பவற்றை வலியுறுத்தக்கூடிய வகையில் போட்டிகள்,  கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்பவற்றை நடத்தி இத்தினத்தை கொண்டாடுவர். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சோனியாவை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 220 பேர் கைது

06-sonia.jpgதேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னையில் இன்று நடைபெற்ற கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களில் 220 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – சோனியா

06-sonia.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சோனியா காந்தியின் பேச்சு..

இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதி்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.

இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.

என்றார் சோனியா காந்தி.

சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் வடக்கே கடும் தாக்குதல்: 378 பேர் பலி, 1122 பேர் காயம்

vanni-manitharkal.jpg இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவும், இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் வரை இடம் பெற்ற கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதலில் 378 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார் என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்தத் தாக்குதல்களில் 1122 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ள 378 உடல்களில், 106 உடல்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்தவர்கள் மேலும் பல சடலங்கள் வீதிகளில் இருப்பதாக தம்மிடம் கூறியதாகவும் அந்த அரச மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரச மருத்துவர் கூறுகிறார்.

அப்பகுதியில் ஷெல் தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது விடுதலைப் புலிகள் ஒரு பிரச்சாரமே என்றும் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் தங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த விதமான அழுத்தங்களையும் சந்திக்கவில்லை என்று அந்த அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போர் நடக்கும் பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் தகவல்களை சுயாதீனமான வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று வெளியேற்றப்பட்டார்

channel-4news.jpgஇலங்கை அரசிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று (10.05.2009) காலை 7.30 மணியளவில் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவின் சுயாதீன தொலைக்காட்சியான சனல் – 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிக்பற்றன் வோல்ஸ் என்பவர் உட்பட 3 பேர் அடங்குகின்றனர். இவர்கள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிக்கப்பூர் ஊடாக பிரிததானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வைத்து நேற்று பிரித்தானிய சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி தயாரிப்பாளரும், புகைப்படக்கலைஞரும், இவருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி இவர்கள் வெளியிட்ட இலங்கை தொடர்பான தவறான செய்தியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்; ஐ.நா.வில் “ஆர்2பி’ குறித்து தற்போது பேச்சு – பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வாரா பான் கீ மூன்?

UN_Logoவட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் விடுத்த அழைப்பு குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதும் கவனமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கும் அதே சமயம் “பாதுகாப்பதற்கான பொறுப்பு’ ( Responsibility to Protect (R2P)) தொடர்பான பேச்சு ஐ.நா. மட்டத்தில் இடம்பெறுவதாக அங்குள்ள இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை வரவேற்பு நிகழ்வொன்றில் பான் கீ மூனும் “பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (ஆர்2பி) விடயத்திற்கான பான் கீ மூனின் விசேட ஆலோசகர் எட்லக்கும் கலந்து கொண்டனர். இந்த “பாதுப்பதற்கான பொறுப்பு’ என்ற கொள்கையை எவ்விதம் இலங்கை விவகாரம் தொடர்பாக பிரயோகிக்க முடியும்? என்று லக்கிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. “இருதரப்புகளுக்கும்’ என்று லக் பதிலளித்திருக்கிறார்.

கென்யாவில் கொபி அனான் (முன்னாள் செயலாளர் நாயகம்) மேற்கொண்ட மத்தியஸ்த நடவடிக்கையின் போது ஆர்2பி ஆனது உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம் ஐ.நா. பொதுச் சபைத் தலைவருக்கு “ஆர்2பி’ விடயத்திற்கான ஆலோசகராக இந்திய முன்னாள் தூதுவர் நிரூபம் சென்னின் நியமனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என்று இன்னர்சிற்றி பிரஸ் லக்கிடம் கேள்வி எழுப்பியது. சென்னை இராஜதந்திர ரீதியாக பாராட்டியுள்ள அதேசமயம், 2005 இல் ஆர்2பி ஆவணம் தொடர்பாக மேலேழுந்து வந்த கடைசி நாடு இந்தியா என்று லக் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (மே 7) “ஆர்2பி’ தொடர்பாக நிரூபம் சென்னிடம் அவரின் கருத்துக்களை இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. விசேடமாக இலங்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை தொடர்பாக பதிலளிக்க மறுத்த அதேசமயம் 2005 இல் ஏற்பட்ட கருத்தொருமைப்பாட்டில் கடைசியாக இந்தியா இணைந்து கொண்டதென்பதை நிராகரித்தார். முதலிலேயே இந்தியா இதில் இணைந்து கொண்டதாக அவர் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். “ஆர்2பி’ ஆனது ஐ.நா.வின் சித்தாத்தமாகவே இருக்கவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றும் சென் கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பினர்கள் வீட்டோ செய்தால் அதனை இரத்து செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் கொள்கையே இந்த ஆர்2பி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எந்தவொரு பாரிய சக்தியினதும் தந்திரோபாயமான நிராகரிக்க முடியாத விடயங்களை இல்லாதொழிக்கவே இது உபயோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிரான விடயம் என்னவென்றால் சீனாவும் கணிசமான அளவுக்கு ரஷ்யாவும் இலங்கை விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுவதற்கு எதிராக “வீட்டோ’ அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன. இலங்கை விடயத்தை ஐ.நா.வின் அடித்தளத்தில் ஆராய்வதற்கே அவை மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன.

அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்கள் உதவி கோரி இலங்கை விண்ணப்பித்திருப்பது பற்றியும் இந்த விடயத்தில் இரத்தப்பெருக்கு மற்றும் வடக்கிலுள்ள முகாம்கள் தொடர்பான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமா என்று நிரூபம் சென்னிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. மனிதாபிமான விளைவுகளின் தாக்கத்தை அகற்றும் விடயத்திலான சரியான பாதையில் செல்லும் போது சர்வதேச நாணய நிதியம் எதனையும் குறைப்பதில்லையெனவும் நிபந்தனை விதித்து நிராகரிப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தன்னிச்சையாக கடன் தொகையை ஒதுக்கீடு செய்தாலோ சுயாதீனமாக ஆட்களை தடுத்து வைத்தாலோ அதற்கு கடனானது பயன்படுத்தப்பட்டால் அதனை நாணய நிதியம் செய்யாது என்று சென் அழுத்திக் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் (மே 8) இலங்கை அரசு பான் கீ மூனுக்கு விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக அவரின் சிரேஷ்ட ஆலோசகரிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. “செயலாளர் நாயகம் பயணம் மேற்கொள்வாரென நான் நினைக்கவில்லை’ என்று ஆலோசகர் பதிலளித்தார். அரசாங்கம் அதனை இப்போது பயன்படுத்த முடியும். இதற்குப் பதிலாக ஐ.நா. சாசன விதி 99 ஐ பான் கீ மூன் பயன்படுத்த வேண்டும் என்ற சிபார்சை அவர் முன்வைத்தார். அதாவது “ஆர்2பி’யின் பெயரால் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உள்ளடக்கவேண்டுமென்று அவர் கூறியுள்ளார். செயலாளர் நாயகம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆவணவரைவு இடமளித்திருப்பதாக பானின் ஆலோசகர் தெரிவித்திருக்கிறார். ஒரு மணித்தியாலம் கழித்து இது தொடர்பாக பான் கீ மூனின் பிரதி பேச்சாளரிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. ஆனால் பான் கீ மூன் மே 5 ஆம் திகதி கூறியிருந்ததை விட மேலதிகமாக கூறுவதற்கு தன்னிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் பான் கீ மூனின் விஜயங்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமை பிரதி பேச்சாளர் அறிவித்தார். அதில் இலங்கை விஜயம் உள்ளடக்கப்படவில்லை. பனாமா, பஹ்ரெய்ன் ஆகிய இடங்களுக்கே அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த “முன்னுரிமைகள்’ பலருக்கு வித்தியாசமாக தென்படுகிறது என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க “ஆர்2பி’ தொடர்பாக அதிக அளவுக்கு வலியுறுத்துபவரான பிரேஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மே 11 இல் (நாளை) பாதுகாப்பு சபை அமர்வுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரா என்று ஐ.நா.விலுள்ள பிரெஞ்சு தூதுவர் ஜேன் மொரீஸ் ரைபேர்ட்டிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. அச்சமயம் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்ட்டும் நியூயோர்க்கில் இருப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு தொடர்பான கூட்டத்துடன் பிரிட்டனுடன் நாம் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். சரியான வடிவம் கொடுப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ரைபோட் கூறியுள்ளார்.

சோனியாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: நெடுமாறன்- பாரதிராஜா

06-sonia.jpgசென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : “சோனியாகாந்தி கடந்த புதன்கிழமை தமிழகம் வருவதாக இருந்தது. அதை ரத்து செய்தார். அதனால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சோனியா சென்னையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைச் சற்றும் மதிக்காத அவர் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடவேண்டும். அனைவரும் கறுப்புச் சின்னம் குத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நானும் பாரதிராஜாவும் பங்கேற்கிறோம்’ எனக் கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.

வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் 200 விடுதலைப்புலிகள் சரண்

saran.jpgமோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் 200 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.