May

May

முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் – கருணாநிதி

karunanithi.jpgதேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
:
மக்களவை தேர்தல் ஒன்றிரண்டு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. 68 சதவிகிதம் வாக்குப் பதிவுகள் நடந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று ஒரு சில இடங்களில் செய்திகள் வந்த போதிலும், சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்த சிறு கோளாறுகள்கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் சில நாட்களாக தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

வவுனியா முகாம்களில் தற்போது தொற்றுநோய் பரவல் இல்லை- அரசாங்க அதிபர்

chals_.jpgவவுனியாவில் உள்ள முகாம்களிலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களிலும், உள் நாட்டில் இடம்பெயர்ந்த இரண்டு லட்சம் பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதுமான வசதிகளின்றி இருப்பதாகவும், மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதாக வரும் செய்திகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களிடம் கேட்டபோது, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்றார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

ஆனால் அதற்கு முன் கடும் வெயில் காரணமாக கொப்பளிப்பான் எனப்படும் சிக்கன் பாக்ஸ் நோய் பரவியதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்துக் கேட்டபோது, அது பற்றி தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் தலைமையகம் ஜே.வி.பி.க்கு உரித்தானது – சோமவன்ச

somavamsaa.jpgநாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தையும் நல்லாட்சியையும் வழங்கக்கூடிய ஒரே கட்சி ஜே.வி.பி. மட்டுமேயாகும். இன்னும் சிறிது காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இருக்கும் இடம் தெரியாது மக்களே செய்து விடுவார்கள் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா ஜே.வி.பி.க்கே உரித்தானது. அதனைக் கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லை பன்னிப்பிட்டிய வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. கட்சியின் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் கலந்து கொண்டு பிரதான உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு

mullivaikaal-01.jpgஎஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தப்பிவரும் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 14ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் இறுதியாக அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து நேற்றுக்காலை பெருந்தொகையான பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததாகவும் இவர்களை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்த வண்ணம் உள்ளதாக பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கரையாமுள்ளி வாய்க்கால் மற்றும் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தை உள்ளடக்கிய மிகவும் குறுகிய பிரதேசத்திற்கு படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டுவாக்கல் பிரதேசத்தின் ஊடாக கடந்த இரு தினங்களாக புலிகளின் பாரிய மண் அணைகளை தகர்த்த வண்ணமும், கைப்பற்றிய வண்ணமும் வேகமாக முன்னேறிச் சென்ற 59வது படைப் பிரிவினர் பொதுமக்கள் சிக்குண்ட பிரதேசத்தை அண்மித்திருந்தனர்.

நேற்றுக் காலை தொடக்கம் குறித்த சில மணிநேரத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து புலிகள் தப்பிவரும் சிவிலியன்களை தடுக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.புலிகளின் கடும் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் வர ஆரம்பித்ததை அடுத்து இராணுவத்தினர் புலிகளை இலக்குவைத்து பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் அந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை அண்மித்த பிரதேசத்திற்குள்ளும் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளை நோக்கி பொதுமக்கள் வருகைதந்த வண்ணம் உள்ளதாகவும் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகளின் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை பாதுகாத்து சிகிச்சை அளிக்கும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முள்ளியாவளை பிரதேசத்திற்கு அவசர அவசரமாக விரைந்த ஹெலிகள் அநுராதபுரத்தை நோக்கி காயமடைந்தவர்களை அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் விமானப்படை ஹெலிகள் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இதுவரை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்துள்ளனர்.

இலங்கையில் மனிதப்பேரவலத்தை கண்டித்து மலேசியாவில் இன்று பெரும் பேரணி

இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்து வரும் மனிதப் பேரவலத்தை கண்டித்து மலேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.  இது தொடர்பாக மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உலகின் எந்த மூலையிலும் நடந்திராத அளவிற்கு மிகக்கொடுமையான மனித பேரவலத்தைச் சந்தித்து நிற்கின்றது வன்னிப்பெரு நிலம். வன்னி நிலம் எங்கும் ஓடி ஓடி ஒதுங்கி கடைசியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவதுடன், அனைத்துவிதமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கொண்டு இப்படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கண்மூடித்தனமான தாக்குதல்கள் மூலம் அப்பாவி மக்களை அச்சுறுத்தி அவர்களை ஆண், பெண், வயது முதிர்ந்தோர், நோயாளர்கள், குழந்தைகள் வேறுபாடின்றி கொன்று குவித்து உளவியல் ரீதியாகவும் உணவு, மருந்து தடைகள் மூலம் அவர்களைத் துன்புறுத்தி வருகின்றது. நூறு, இருநூறு என்றிருந்த கொல்லப்படுவோரின் எண்ணிக்கை இன்று ஆயிரம், இரண்டாயிரம் என உயர்ந்து நிற்கின்றது.

இத்தனை இன்னல்கள் அனுபவிக்கும் அந்த மக்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். உலகு எங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உறவுகள். புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர்.

வீதி தோறும் முக்கிய அலுவலகங்கள் தோறும் தூதரங்கள் தோறும் பேரணியாய் அணிதிரண்டு நிற்கின்றனர். உணவு துறந்து, வீடு வாசல்கள் துறந்து வீதியே வாழ்வு என முழங்கி முழங்கி போராடுகின்றனர்.  நாமும் தமிழர்கள் தான். நாம் என்ன செய்கிறோம்? அங்கு சாகின்ற அந்த உறவுகளுக்கு தமிழர்கள் என்ற முறையிலும் மனித நேயம் மிக்கவர்கள் என்ற முறையிலும் என்ன செய்யப் போகிறோம்?

நமது தொடர் முயற்சியாக நாளை (இன்று) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் இலங்கைத் தூதரகத்திற்கு முன் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தமிழர்களுக்கு இந்த பேரணி நடைபெறவில்லை. சாவின் விளிம்பில் இரத்தக் களரியில் செத்துக்கொண்டும் உறவுகளைக் காப்பதற்கு கூடுகின்ற பேரணி இது.

இன்றைய இக்கட்டான நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல் மிகத் தேவையானதாய் இருக்கின்றன. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இம்மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதம் இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.  தமிழர்களின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நமது உறவுகள் கொன்று குவிக்கப்படுவதை எதிர்த்து பேரணியாய் வீதியில் அணிதிரள வேண்டும்.

மனிதக் கேடயங்களாக தமிழ் மக்களைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு எமது கூடியபட்ச கண்டனத்தை வெளிப்படுத்த வரலாறு காணாத பேரணியாய் ஒன்றிணைவோம் என ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இன்றும் நாளையும் 25வது முதலமைச்சர்கள் மாநாடு

25th-cm-con.jpgமட்டக்களப்பில் இன்றும், நாளையும் (15,16) நடைபெறவுள்ள 25வது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென எட்டு முதலமைச்சர்களும் இன்று (15) மாலை மட்டக்களப்பு நகரை வந்தடையவுள்ளனர். (16) நாளை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜலால் டி சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித விஜியமுனி சொய்சா, வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் இன்று மாலை உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்து மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். இம்மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளவென அழைக்கப்பட்டிருந்த மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் நேற்று மாலை மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.

இம்மாநாட்டிற்கென குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கென இன்று இராப்போசனமொன்று கிழக்கு மாகாண முதல மைச்சரினால் வழங்கப்படவுள்ளது.

நேற்று உணவுப் பொருட்களை இறக்க முடியாமல் ஐசிஆர்சி கப்பல் திரும்பியது

green-ocean2.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் போர்ப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான உக்கிர மோதல்கள் காரணமாக அவற்றை அங்கு கரையிறக்கமுடியாமல் போனதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

கிறீன் ஓசியன் என்ற கப்பலில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மூன்று தினங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் போர்ச்சூழல் காரணமாக அந்த முயற்சி நேற்றும் கைகூடவில்லை எனவும் சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

கிறீன் ஓசியன் கப்பலில் 25 மெட்றிக்தொன் உணவுப் பொருட்களும், ஓரியன்டல் பிரின்ஸஸ் என்ற கப்பலில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 500 மெட்றிக் தொன் உணவுப் பொருட்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் கொடியுடன் கடற்படையின் பாதுகாப்புடன் நேற்று காலை முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் கரையோரப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக கப்பல்கள் இந்த உணவுப் பொருட்களை கரையிறக்கமுடியாமல் போனதாக சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

அதிகூடிய மின் அழுத்தமே மின் துண்டிப்புக்கு காரணம் – மின்வெட்டு நடைமுறைக்கு வராது

wdj-senavi.jpgநீர் மின் உற்பத்தி குறைந்துள்ள போதும் எக்காரணம் கொண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன அறிவித்துள்ளார்.

மேலதிக மின் அழுத்தம் காரணமாக நேற்று முன் தினம் (13) இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதையடுத்து நீர் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

அதனால் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோருகிறோம். இதன் மூலம் 30 வீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். நீர் மின் உற்பத்தி குறைந்த போதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறினார். இதேவேளை தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அமைச்சர், மின்சார சபை உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நேற்று முன்தினம் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார சபை மின்வெட்டை அமுல்படுத்தவில்லை எனவும் அதிகூடிய மின் அழுத்தத்தினாலேயே மின்சாரம் தடைப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.

அரசு கூறுவதற்கும் புதிய செய்மதிப் படங்களுக்கும் இடையில் முரண்பாடு – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு

மோதல் பகுதியில் சனச் செறிவுள்ள இடங்களில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுவதற்கும் புதிய செய்மதிப்படங்களும் கண்கண்ட சாட்சியங்களும் தெரிவிப்பதற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.

மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மீதான ஷெல் தாக்குதல் இடம்பெறுவதை அண்மைய செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களும் வெளிப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களைப் பயன்படுத்துவதில் இலங்கை இராணுவமோ புலிகளோ தயக்கம் காட்டுவதாகத் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச்சங்கமானது மோதல் வலயத்தின் செய்மதிப் புகைப்படப் பிரதிகள் தொடர்பான பூர்வாங்க ஆய்வறிக்கையை செவ்வாய்க்கிழமை பிரசுரித்திருக்கிறது. அது கனரக ஆயுதங்களைப் பாவித்ததால் ஏற்பட்ட குறிகளையும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பாவித்த கட்டமைப்புகள் அகற்றப்பட்டவற்றையும் காட்டுகிறது. மே 6 இற்கும் மே 10 இற்கும் இடையில் சாட்டுகிறது. மோதல் வலயத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பதையும் செய்மதிப்படம் காட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீண்டும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக மீண்டும் மீண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருப்பதாகவும் சனச் செறிவுடைய இடங்கள் மீது இலங்கைப் படையினர் ஷெல் தாக்குதல்களை எழுந்தமானதாக நடத்துவதாகவும் சாடியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமென உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கையின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாக அவசரமாக ஆராயப்பட வேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

ரணிலின் ஆளுமை பற்றி உலகு அறிந்திருப்பதாலேயே ஐரோப்பிய ஒன்றியம் அவருக்கு அழைப்பு

ranil-wickramasinghe.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பையேற்றே ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவரின் செயற்பாடுகள் காரணமாகவே அவரை உலக நாடுகள் வரவேற்கின்ற நிலையில் மீண்டும் அவர் மீது சேறுபூசும் நடவடிக்கையில் அரச ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுப்பயணம் குறித்து அரச ஊடகங்கள் சேறுபூசும் பழைய பல்லவியில் இறங்கியுள்ளனர். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அங்கு சென்றுள்ளார்.

நாட்டின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்குக் காரணம் எங்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அல்ல. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சமயம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட்டதே இன்று அவரை அழைப்பதற்கான காரணமாகும்.

இவ்வாறு உலக நாடுகளின் அழைப்பையேற்று ரணில் விக்கிரமசிங்க செல்லும் போது அவர் நாட்டுக்கு துரோகம் இழைக்கவும் காட்டிக்கொடுக்கவும் போயுள்ளதாக வீண் பழிகள் சுமத்துகின்றனர். அவர் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அரச தரப்பினர் தமக்கு இவ்வாறான அழைப்பு விடுக்கப்படாதன் வேதனையாலேயே இவ்வாறு அவர் மீது சேறுபூசுகின்றனர். நாட்டை நன்கு நிர்வகித்து ஆளக்கூடிய தகைமை அவரிடம் உள்ளதனை ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் தெரிந்து வைத்ததன் நிமித்தமே அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அவரது காலத்திலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு நாட்டில் சமாதானம் நிலவியதை முழு உலகமும் அறிந்ததன் நிமித்தமே உலக நாடுகள் இவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.