ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகக் கடமையாற்றி தனது பதவிக்காலத்தை நேற்று நிறைவு செய்த கலாநிதி ஏ. ஜி. ஹுஸைன் இஸ்மாயில் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை பதில் உபவேந்தராக கட மையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் 28ம் திகதியாகிய நேற்று அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
April
April
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில் இம்மாணவி கல்வி பயின்று வந்தவராவார்.
நேற்றுக் காலை அம்மாணவியின் பாட்டனார் வழமை போல் அவரை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்றுவிட்டு வந்துள்ளார். பாடசாலைவிடும் வேளையில் அவரை அழைத்துச் செல்ல அவரது பாட்டனர் சென்ற போது, அம்மாணவி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது
இச்சம்பவத்தினால் அப்பாடசாலை மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாணவியின் தந்தையான சதிஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு நோயாளர்கள்,காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ,உதவியாளர்கள் 527 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதேவேளை இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் நேற்று புல்மோட்டைக்கு விஜயம் செய்தார்.இந்திய மருத்துவர் குழுவைக் கொண்ட வைத்தியசாலைக்கும் இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் அவர் நேரில் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இன்று காலை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் 25 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகளும் தாக்குதல் படகுகளும் முல்லைத்தீவு கடற்பிரதேசத்துக்குள் நுழைவதை அவதானித்த கடற்படையினர் அவற்றின்மீது உடனடியாகத் தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலை; 4.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகளும் கலிபர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இரண்டு தாக்குதல் படகுகளையம் படையினர் தாக்கியழித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் காரணாக கடற்படைப் படகு ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதுடன் 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலின்; 3ம் கட்டத்துக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று மாலையுடன் முடிவடைந்தன. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. இந்திய பொதுத் தேர்தல் 5 கட்டமாக் நடக்கிறது. கடந்த 16ந் தேதி முதல்கட்ட தேர்தல் 124 தொகுதிகளிலும் 23ந் தேதி 2ம் கட்ட தேர்தல் 141 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. 3ம் கட்டமாக 107 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் 107 தொகுதிகளில் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
107 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 14 கோடியே 40 லட்சத்து 2 ஆயிரத்து 265 பேர் ஆவர்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குமிடையில் நிச்சயம் நடைபெறும். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் 70 வீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடமத்திய, சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அரசாங்கம் பெற்ற வெற்றியை ஐ.தே.க. விமர்சித்துக் கொண்டிருக்காமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம்வாய்ந்த வேட்பாளர் ஒருவரை நியமித்து வெற்றியீட்டிக் காட்டட்டும்.
முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டபோது 62.8 வீத வாக்குகளைப் பெற்றார். அவர் இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டபோது 51 வீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகப் போட்டியிட்டால் இதுவரையில் எவரும் பெற்றிருக்காதவாறு 70 வீத பெரும்பான்மையை நிச்சயம் பெறுவார். மேல் மாகாண சபைக்கு கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 50.6 வீதமானவர்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இம்முறை 63.23 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

‘தகவல் வெளிவந்தது. அது பேர்லின் கோபன்ஹேகன் ஸ்ரொக்ஹோம் லண்டனுக்கும் தெரியவந்தது. ஹேக்கில் இருந்து ஜெரூசலம் வரை பரிஸில் இருந்து சூரிச் வரை. மக்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு சரியான தருணம். மின் அஞ்சல் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது. கைத்தொலைபேசிகளினூடாகவும் தகவல்கள் விரைந்தது. சில மணி நேரங்களிலேயே அந்தக் கோபம் முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் உள்ள தூதுவராலயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளானது. இதன் உச்ச கட்டமாக லண்டனில் உள்ள தூதரகத்திற்கு முன்னால் 15 வயதுச் சிறுமி தீக்குளிதால். அழகிய சிறுமி தீப்பிளம்பானால்.’ பெரும்பாலும் பிரித்தானியாவின் தேசியப் பத்திரிகைகள் அனைத்தினதும் முதற் பக்கத்தை பெற்றுக் கொண்டது அச்செய்தி.
இது இன்று நேற்று அல்லது கடந்த சில வாரங்களாக லண்டனிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் நடைபெறும் போராட்டங்கள் அல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1999 பெப்ரவரி 17யைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள். எதிரிகளால் பயங்கரவாதி என்றும் குழந்தைகளைக் கொல்பவர் என்றும் வர்ணிக்கப்படுபவர். ஆனால் அவரது விசுவாசிகள் சூரியன் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் போற்றும் பிகெகெ – குர்திஸ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதை அடுத்தே உலகம் முழுவதும் பரந்து வாழும் குர்திஸ் மக்கள் வீதிகளில் இறங்கினர். முதல் எதிரியும் ஓச்சுலானை கைது செய்த நாடுமான துருக்கியினதும் கைது செய்யப்பட்ட நாடான கென்யாவினதும் தூதரகங்கள் புலம்பெயர்ந்த குர்திஸ் மக்களின் முற்றுகைக்கு உள்ளானது.
இன்று லண்டன் உட்பட உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்படும் போராட்டங்களுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் பிகெகெ தலைவர் ஒச்சுலானை விடுவிக்கும்படி நடந்த போராட்டங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு வருமுன் காப்பு என்பதைத் தவிர வேறு பாரிய வேறுபாடுகள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போலல்லாது குர்திஸ் தொழிலாளர் கட்சி மார்க்ஸிச லெனினய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். அதனால் அமெரிக்காவினதும் அதன் சார்பு அணியினதும் கழுகுப் பார்வையில் எப்போதும் இருந்த அமைப்பு. தமிழீழத்தைப் போன்று ஒரு நாட்டிற்குள் மட்டும் அவர்களது குர்திஸ்தான் தாயகம் அடங்கவில்லை. வடக்கு ஈராக், மேற்கு ஈரான், தென்கிழக்கு துருக்கி, சோவியத்தினதும் சிரியாவினதும் சிறு பகுதியை உள்ளடக்கியதே குர்திஸ் மக்களின் தாயகமான குர்திஸ்தான். எண்ணை வளம் மற்றும் புவியியல் அமைவு காரணமாக காலத்திற்குக் காலம் வேறு வேறு நாடுகளால் புற அரசியல் சக்திகளால் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் சதிராடப்பட்டு வந்தது. (இக்கட்டுரையின் நோக்கம் இதைப்பற்றி ஆராய்வதல்ல. அது பற்றி தனியாக ஆராய்வதே பொருத்தமானது.)
பிகெகெ தலைவர் அப்துல்லா ஒச்சுலான் கென்யாவின் தலைநகர் நைரோபியில் வைத்துக் கைது செய்யப்பட்டதும் அதற்குப் பின் ஓச்சுலான் வழங்கிய வாக்குமூலங்களும் ஓச்சுலான் மீதிருந்த விம்பங்களைத் தவிடுபொடியாக்கியது. துருக்கிய சிறைகளில் இருக்கும் குர்திஸ் கைதிகள் சிறை ஆடைகளை அணிந்தாலோ அல்லது துருக்கிய தேசிய கீதத்தை பாடினாலோ அவர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்தியது ஓச்சுலானின் தலைமை. ஆனால் ஒச்சுலான் தன்மீதான வழக்கை துருக்கி அரசு மீதான வழக்காக மாற்றுவதை விடுத்து எதற்காக ஆயிரக் கணக்காண குர்திஸ் இளைஞர் யுவதிகள் போராடினார்களோ உயிரிழந்தார்களோ அதனைக் கைவிட்டார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டார். தனது தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டார். போராளிகளை ஆயுதங்களைக் கைவிடும்படி கோரினார். துருக்கிய படைகளிடம் சரணடையும் படியும் கோரினார். ஒச்சுலானின் கட்டளைப்படி ஒரு பகுதியினர் ஆயுதங்களை ஒப்படைத்தனர். சரணடைந்தனர். ஓச்சுலானுடைய பழக்கங்கள் பயங்கரமானது ஆனால் ஒச்சுலான் விடவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் குர்திஸ்தானுக்கான சோசலிஸக் கட்சியின் செயலாளர் கெமல் புர்கே ‘ஒரு தனிமனிதனின் வாழ்வுக்காக மக்களை தியாகம் செய்ய முடியாது’ என்று தனது கட்சியின் 25வது ஆண்டு நிகழ்வில் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் பெரும்பாலும் தங்களது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டனர். ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் தங்கள் இலட்சியத்திற்காக வேறு வடிவங்களில் போராடவில்லை. மாறாக அரசிடம் சரணாகதி அடைந்தனர். அன்று யாருக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அதே மக்களுக்கு எதிராக அரசுடன் இணைந்து தங்கள் ஆயுதங்களைத் திருப்பினர். இன்றும் மக்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அதே காரணத்திற்காக வே பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றிக் கட்டப்பட்ட சூரியத்தேவன் போன்ற விம்பங்கள் இன்று ஈடாடிப் போயுள்ளது. ‘தலைவர்’ தலைமையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படும் போராட்டம் ஒரு மணி நேரத்திற்குள் சைக்கிளில் சுற்றிவரக் கூடிய எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்கள்’ என்ற இராணுவத் தந்திரோபாயத்தை முழுவதுமாக நம்பியிருந்த புலம்பெயர்ந்த புலி உறவுகளுக்கு ஏப்ரல் 5ல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வன்னியில் இருந்து வந்த கட்டளைகள் யதார்த்தத்தைப் புரிய வைத்தது. மறுநாள் ஏப்ரல் ஆறாம் திகதி அவசரமாகக் கூடி உடனடியாக உலகெங்கும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. (தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்)
ஓச்சுலான் அன்று கைது செய்யப்பட்ட சூழலும் புலிகளின் தலைமை இன்று சுற்றி வளைக்கப்பட்ட சூழலும் ஒன்றல்ல. (வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதயில் இருந்து ஏற்கனவே வெளியேறி விட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளாரா இல்லையா என்பது இன்றும் மில்லியன் டொலர் கேள்வியாகவே உள்ளது.) இன்னும் 50000 மக்கள் வரையும் பணயமாக வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரச இயந்திரம் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு அல்லது அதற்கான முயற்சிக்கு என்ன விலையையும் எத்தினை ஆயிரம் உயிர்களையும் பலிகொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளது. இன்று புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசுக்கு அவர்களைப் பலிகொடுப்பதிலும் எவ்வித உறுத்தலும் இருக்கவில்லை. இதுவரை 7000க்கும் அதிகமான பொது மக்கள் கடந்த மூன்று மாதங்களில் கொல்லப்பட்டு உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு உள்ளது. 14 ஆயிரம் பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
இலங்கை அரச கூறுவது போல் வே பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமை அப்பகுதியில் இருந்தால் அது அப்பகுதியில் பணயம் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மிக மிக மோசமான துரதிஸ்டமாக அமையலாம். வரலாறு காணாத மனித அவலம் ஒன்று அங்கு நிகழும் அச்சம் உள்ளது. புலிகளின் தலைமைக்கு நிகழும் ஆபத்தின் எதிரொலியாக யுத்தப் பகுதிக்கு வெளியே தயார் நிலையில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் எல்லைப் புற சிங்களக் கிராமங்களில் மோசமான படுகொலைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அது இனக்கலவரம் ஒன்றுக்கு இட்டுச்செல்லும் சூழலும் உள்ளது.
வன்னி மக்கள் தற்போது இரு கொலை இயந்திரங்களுக்கு இடையே மாட்டுப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவிக்கின்றனர். இரு புறம் இலங்கை இராணுவ இயந்திரம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் அறிந்த எதிரி. அந்த எதிரி இவ்வாறு நடந்து கொள்வான் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர். அதனால் அந்த எதிரியைக் கையாளவும் அவர்கள் தெரிந்திருந்தனர். கடந்த அறுபது வருடங்களாக் அதனைச் செய்தும் அதனிடம் இருந்து தப்பியும் வந்துள்ளனர். ஆனால் தங்போது தங்கள் சூரியபகவானாகவும் கடவுளின் அவதாரமாகவும் கண்டவர்கள் தங்களைப் பணயம் வைத்த போதும் அவர்களின் கொலை இயந்திரத்தை தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதும் அவர்களால் அதனைக் கையாள முடியவில்லை.
இந்நிலையை புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் வெளிப்படுத்தவில்லை. வன்னி மக்களின் நலன்களை அப்போராட்டங்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக அப்போராட்டங்கள் சில சமயம் வன்னி மக்களின் உணர்வுகளுக்கு மாறாகவே அமைந்துள்ளது. வன்னி மக்களின் அவலங்கள் மீது ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரச இயந்திரம் தன் இனவாத நடவடிக்கைகளைக் கூர்மைப்படுத்தி உள்ளது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட இனவாதத்தையுடைய அரச இயந்திரம் மனிதாபிமான நடவடிக்கைகளை வெறும் பிரச்சாரத்திற்காகவே மேற்கொள்கிறது. இலங்கை அரசு பயங்கரவாதிகளாக வர்ணிக்கும் புலிகள் சிங்கள மக்களைப் பணயமாக வைத்திருந்தால் இதே மனப்பாங்குடன் அவர்களை நடத்தியிருக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்திடமும் எழுவது தவிர்க்க முடியாதது.
அரசினுடைய செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களும் இந்த யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேறுபவர்கள் விடயத்தில் பாராமுகமாகவே உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்ததை அவர்கள் துரோகத்தனமாகவே பார்க்கின்றனர். ஆனால் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த புலி ஆதரவு அமைப்புகள் ‘வன்னி மண் அவர்களின் பூர்வீக மண்’ என்ற பிரச்சாரத்தை மையப்படுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேறவிடாது தடுக்கும் புலிகளுக்கு கருத்தியல் அரணை உருவாக்கினர். அப்படி வெளியேறுபவர்கள் இராணுவத்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும், கருக்கலைப்புச் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். இவற்றையெல்லாம் ஒரு இனவாத அரச இயந்திரம் செய்யத் தயங்காது. ஆனாலும் சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை அரச இயந்திரம் சில முகத்தைக் காப்பாற்றும் விதிமுறைகளை பின்பற்ற முயல்வதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசின் எதிர் நடவடிக்கைகளில் மட்டும் தங்கி இருந்து அரசியல் செய்து றிம்மில் சைக்கிள் ஓடுவதாகத்தான் புலிகளின் பிரச்சாரங்கள் உள்ளது.
இலங்கை அரசினுடைய முன்னெடுப்புகள் ஒன்றும் புலிகளுக்குக் குறைந்தது அல்ல. பிகெகெ தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் இலங்கை அரசுக்கும் ஒரு பாடமாக அமையும். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சமூசத்தின் ஒரு தனிமனிதனையோ ஒரு அமைப்பையோ பணிய வைப்பதன் மூலம் அச்சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளுணர்வைப் பணிய வைத்துவிட முடியாது. ஓச்சுலானாக இருக்கலாம் பிரபாகரனாக இருக்கலாம் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் பக்க விளைவுகளே அவர்கள். ஒச்சுலான் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளாகியும் இன்னமும் துருக்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இராணுவத் தாக்குதல்களும் நிகழ்கிறது. அதற்குக் காரணம் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரும் குர்திஸ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை துருக்கி முன்வைக்கவில்லை. குர்திஸ் மக்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஒச்சுலான் கைது செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒருவகை ஸ்தம்பிதம் ஏற்பட்டு இருந்தாலும் இப்போது மீளவும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் தலைதூக்குகின்றது. ஒச்சுலான் ‘ஆயுதங்களைக் கீழே போடுங்கள்! சரணடையுங்கள்!’ என்று சொன்னாலும் அதற்கு பணியாது பிகெகெயின் சில தலைவர்கள் ஆயுத நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அந்த முல்லைத்தீவுச் சிறுநிலப்பரப்பில் எதுவும் நடக்கலாம். அங்கிருந்து பெரும்பாலும் பிரபாகரன் தப்பி இருக்கலாம். சிலசமயம் இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று போராடலாம். அல்லது சரணடையலாம். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. எது எப்படியானாலும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மிக மோசமான ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அரசு தனது ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனஒடுக்குமுறையைக் களைந்து தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தவறினால் இந்த நச்சுச் சூழற்சி மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. பிரபாகரனும் புலிகளும் மட்டுமல்ல பிரச்சினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வை முவைக்க முடியாத இலங்கை அரசும் அரச இயந்திரமும் முக்கியமான பிரச்சினை.
இனிமேல் ஏற்படப் போகும் மனித அவலங்களுக்காவது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் ஒப்படைத்து தங்கள் வரட்டுத்தனமான ஏகபிரதிநிதித்துவக் கோசத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்க வேண்டும். இலங்கை அரசும் அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க முடியும். இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்காண உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். அரசாக இருந்தாலும் புலிகளாக இருந்தாலும் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொண்டு இரு தரப்பும் வெற்றிகொண்டதான நிலையை உருவாக்கி தற்போதுள்ள இறுக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது மிகவும் கடினமாகி உள்ளது.
இலங்கை அரசு இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகளுடன் உடன்பட்ட புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் இறுதி 72 மணித்தியாலங்ளை எதிர்நோக்கி உள்ளது. அதனை இலங்கை அரசு இன்னும் சில தினங்களில் இந்த முல்லை யுத்தம் முடிவுக்கு வரும் என்கிறது. பா சிதம்பரம் இன்னும் இரு தனங்களில் நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றார். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா நடேசன் ஏப்ரல் 28 இலங்கை அரசபடைகள் பல்முனைத் தாக்குதலை தொடங்கிவிட்டனர் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களை வீதிகளில் இறங்கிப் போராடும்படியும் அழைத்துள்ளார். இளையவர்களுக்கு விடுக்கப்பட்ட மாணவ அமைப்பு ஒன்றின் அறிக்கை இன்று ஏப்ரல் 29 திகதியை குறிப்பாகச் சுட்டிக்காட்டி உள்ளது.
2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்) பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் இன்னும் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வருகிறது. இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கைகளை முடித்துள்ளது. இந்த மூன்றாவது ஆண்டின் முடிவில் அதாவது ஏப்ரல் 30ல் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என புரஜகற் பீக்கனில் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த 48 மணிநேரம் யுத்தப் பகுதியில் உள்ள மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகவும் அதே சமயம் மிகவும் ஆபத்தானதாகவும் அமைய உள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விளையாட்டு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. அவரை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முழுமூச்சில் எடுக்கப்படுகின்றன. விரைவில் அவர் பிடிக்கப்பட்டுவிடுவார் என நம்புகின்றோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்படித் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான சி.என்.என்னுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே ஜனாதிபதி இப்படிக்கூறியுள்ளார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க நேரிடும் அதன் பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் ஜனாதிபதி பேட்டியில் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் போர்நிறுத்தம் எதனையும் அறிவிக்கவில்லை இப்போது பிரபாகரனைப் பற்றியோ அல்லது வேறு எவரைப் பற்றியோ கவலைப்படவில்லை அது பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதுகிறேன் என்றார் ஜனாதிபதி.
லண்டன் நகரின் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை, நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை அக் குற்றச்சாட்டில் இருந்து பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று விடுவித்துவிட்டது. லண்டன் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இளவயது பிரிட்டிஷ் முஸ்லீம்களுக்காக லண்டன் நகரில் உளவு பார்த்ததாக வாஹீத் அலி, சாதீர் சலீம் மற்றும் முகமது ஷகீல் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் தாங்கள் லண்டனில் உள்ள சுற்றுலா இடங்களைப் பார்க்கவே வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர்.
வெடி குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துள்ள ஜூரிகள், வாகீத் அலி மற்றும் முகமது ஷகீல் ஆகிய இருவர் மீதும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாமுக்கு செல்லத் திட்டமிட்டது தொடர்பாக குற்றம் கண்டுள்ளனர்.
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ் எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து, அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.