April

April

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஒளிக்கதிர்கள் நாடெங்கும் வீசட்டும் – பிரதமர்

pm-srianka.jpgமக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி சமாதானத்தின் ஒளிக்கதிர்களை நாடுமுழுவதிலும் பரவச் செய்து பிறக்கும் சிங்கள, தமிழ் புத்தான்டினை ஏனைய காலங்களை விடவும் இம்முறை மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிய பயங்கரவாதமானது நிரந்தரமாக இல்லாதொழிவதைக் காண்பதே அனைத்து இலங்கைவாழ் மக்களினதும் பிரார்த்தனையாக அமைந்தது. உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இவ்வாறு கொண்டாடுவதற்கு வழியமைத்துத் தந்தவர்ள் எமது வீரமிக்க இராணுவத்தினரே. இவர்களின் உயிர்தியாகத்துடன் கூடிய பணியை சிறிதும் மறந்துவிட முடியாது. வீரமிக்க இராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்பிவிட்டு உறுதியற்ற அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள், இராணுவத்தினரின் மனைவி, மக்கள் அச்சமின்றி மன அமைதியுடன் இருப்பதற்குக் கிடைத்துள்ளமையானது இம்முறை புத்தாண்டின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.

பயங்கரவாதிகள் காட்டிய போலியான எல்லைகளில் சிக்குண்டு காணப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை உண்மையான முறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் பேதங்களின்றி அனைத்து மக்களும் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறந்ததொரு எதிர்காலத்தை அடைவதற்கான வழி பிறந்துள்ளது.

கிழக்கிலே பயிரிடப்பட்ட நிலங்களிலிருந்து சிறந்த அறுவடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பயிரிடாதுள்ள வடக்குப் பிரதேச நிலங்கள் நாளை பயிரிடும் நிலங்களாக மாறும். அப்போது மிகவும் செழிப்புள்ள நாடொன்றை வருங்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது சகலருக்கும் சமாதானம், மகிழ்ச்சி பொருந்திய இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

சுபீட்சம், புத்தெழுச்சி கொண்டுவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்

mahinda-rajapaksha.jpgநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான புதியதோர் உதயத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் எமது மக்களுக்கு சுபீட்சத்தையும் புத்தெழுச்சியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புது வருடத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மகிழ்ச்சிபொங்கும் இன்றைய தினத்தில் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் உள்ள எமது மக்கள் தேசம் முழுவதற்குமான ஒரு புதுவசந்தத்தை முன்னறிவிப்புச் செய்யும் புத்தாண்டின் மரபுகளை கடைபிடிக்கின்றனர். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுபட்டு சுதந்திரத்தை அனுபவிக்கும் கிழக்கு வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் சுதந்திர உணர்வோடும் சேர்த்து பால்பொங்கவைக்கும் தமது பாரம்பரிய மரபுடன் இப்புதுவருடத்தை வரவேற்கின்றனர். அதேபோன்று வடபகுதி மக்களும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சத்திற்கும் சுதற்திரத்திற்குமான சாதகமான அடையாளங்களை இப்புதுவருடத்தில் காண்பர்.

இப் புதுவருடம் எமது மக்களிடடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் மேலும் பலப்படுத்தி புதிய நம்பிக்கைகளை கொண்டுவரும் அர்த்தம் நிறைந்த பெருநாளாக இருக்கும். இது எமது அரசாங்கமும் எமது மக்களும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சமாதானத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அர்ப்பணிப்புகளின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது.

புலரும் புத்தாண்டு எமது தேசத்திற்கு சமாதானத்திற்கான புதியதோர் உதயத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதோடு உலகின் கெளரவத்தையும் நன்மதிப்பையும் எமது நாட்டுக்குக்கொண்டுவரும். எமது மக்கள் புதுவருடத்தின் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பேணுவதன் மூலம் ஏற்படுகின்ற ஐக்கியம், சகோதரத்துவம் என்பன நாட்டின் சுபீட்சத்திற்கு வழியமைக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பை மதித்து இம்முறை புதுவருடத்தை சம்பிரதாயபூர்வமாக பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய விடுமுறை தினமான இந்த புதுவருட பண்டிகைத் தினத்தில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினர். பொலிஸார் மற்றும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்!

சீனாவில் மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம்

சீனாவில் முதல் முறையாக அந்நாட்டின் அமைச்சரவை மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது இருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வலுப்படுத்தி மேலும் விரிவுபடுத்தவும், இனரீதியான் சிறுபான்மையினர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்களுக்கான இவ்வகையான உரிமைகள் கூடுதலாக கிடைக்கவும், இந்த இரண்டு ஆண்டு கால செயற்திட்டம் உறுதி பூண்டுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டத்தின்படி, அரசின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்கிற பயமில்லாமல், உள்ளளூர் அரச அமைப்புகளை விமர்சிக்க மேலோங்கிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. மேலும் காவல்துறையின் சித்திரவதை மற்றும் அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த செயற்திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகவே சீனாவின் கம்யூனிஸ அரசு அடிப்படை மனித உரிமைகளை விட, பொருளாதார சீர்திருத்தத்தையே முக்கியமாக கருதி முன்னெடுத்து வந்துள்ளது என்று சீனாவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வந்துள்ளனர்.

சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: அத்வானி

advanil000.jpgகேரளாவில் பிரசாரம் செய்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி காங்கிரஸ் தலைவர் சோனியா ‌தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். அத்வானி சோனியாவின் விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக ஜார்கண்டில் ‌பேசிய சோனியா, வெளியில் இருந்து வரும் பயங்கரவாதிகளை விட, உள்நாட்டில் இருக்கும் சில மதவாத சக்திகள் மிகவும் அபாயகரமானவை என கூறியிருந்தார்.

சோனியா யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் , அது பா.ஜ., வை குறிவைத்து பேசப்பட்டது என அத்வானி குற்றம் சாட்டினார். சோனியா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரது கருத்து குறித்து பொது விவாதத்துக்கு தயாராக வேண்டும் என கூறினார் அத்வானி . நான்காவது அணி குறித்து பேசிய அத்வானி அது சந்தர்ப்பவாத கூட்டணி என சாடினார்.

அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி

karuna1.jpgபிறக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டில் அனைத்தின மக்களிடையேயும் இன, ஜக்கியம் இனஒருமைப்பாடு என்பவற்றை ஏற்படுத்தி நிலையான சமாதானமும் சகோதரத்துவமும் ஏற்ப்பட்டு எம் இலங்கைத் திருநாட்டில் புதியதோர் மாறுதலை உண்டு பண்ண வழிவிடட்டும். வன்னிப் போரின் அவலநிலை காரணமாக அகதிகளாக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள என் இனிய உறவுகள் கூடிய விரைவில் தங்களுடைய வாழ்விடங்களுக்குச் சென்று நிம்மதியான வாழ்வை நாடத்த மலரும் புத்தாண்டு வழிசமைக்கும் என்பதில் திடமான உறுதி கொண்டுள்ளேன்.

நாட்டில் தடம்புரண்டு நிலைகுலைந்து கிடந்த இனஜக்கியம் ஒருமைப்பாடு புரிந்துனர்வு என்பவற்றை மீண்டும் ஓர் எழுச்சி நிலைக்கு இட்டு செல்ல என்குகோர் சந்தர்ப்பத்தினை அளித்த கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு இம் மலரும் புத்தாண்டில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எமது நாட்டில் புரையோடிப் போயுள்ள அனைத்து இனமுரன்பாடுகளும் அனைத்து மக்களையும் சாதி மத பேதமின்றி வெகுவாக பாதித்துள்ள நிலை தளர்ந்து புதியதோர் பேதம் அற்ற சமூகத்தினை தோற்றுவிக்க மலரும் புத்தாண்டு வழி விடட்டும்.

எம் தேச மக்களுக்கு மலரும் புத்தாண்டு அமைதி, சமாதானம், அபிவிருத்தி எனும் உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்க வழியமைத்துக் கொடுக்கும் என்பதில் அனைத்து மக்களும் உறுதி பூணுவோம். சிதைந்து போய் கிடக்கும் எமது நாட்டை கடடியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற கரம் நீட்டி எழுவோம்.

தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்

Pirabakaran V_LTTEபுதுக்குடியிருப்பில் ஏப்ரல் 5ல் இடம்பெற்ற தாக்குதலில் பல நூறு போராளிகளை இழந்து காப்பாற்றப்பட்ட புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தங்கள் இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இதனைத் தெரிவிக்கின்ற போதிலும் புலிகள் உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தற்போது அங்கு இல்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்று உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார்.  (Related Article : Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதி முக்கிய தலைவர்கள் சிக்குண்ட நிலையில் இடம்பெற்ற மிக மூர்க்கத்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முழு இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான கொமாண்டர் தீபன் கொல்லப்பட்டு இருந்தார். இதுவரை புலிகளில் கொல்லப்பட்ட போராளிகளில் மிக மிக முக்கியமான கொமாண்டராக தீபன் இருந்துள்ளார். அவர் உட்பட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டு இருந்தனர். இவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும், வே பிரபாகரனின் மெய்ப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த கடாபியும் ஆட்லரிப் பிரிவுத் தலைவரான மணிவண்ணனும் அடங்கி இருந்தனர். இவர்களுடன் கிழக்கு பகுதிப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கீர்த்தி, மட்டக்களப்புத் தலைவர் நகுலன், ராதா படையணித்தலைவர் சீலாபரன், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவுத் தலவர் அமிதாப், மோட்டார் பிரிவுத் தலைவர் கோபால் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சுச் செய்திகள் தெரிவிக்கின்றது. ஆயினும் இப்போராளிகளது இழப்புப் பற்றி புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. புலிசார்பு ஊடகங்களும் மௌனமாகவே உள்ளன.

கிடைக்கின்ற தகவல்கள் காயத்திற்கு உள்ளான வே பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, அவரது மனைவி ஆகியோர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றன. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சில முக்கிய தலைவர்கள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

புலிகளின் தலைமை யுத்தப் பகுதியில் இருந்து தப்பித்ததும் அல்லது தப்பிச் செல்ல அனுமதிக்கபட்டதும் இலங்கை அரசாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பும் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதும் எழுந்தமான நிகழ்வுகளா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இவையனைத்தும் இந்தியா பொதுத் தேர்தலுக்கு நெருங்குகின்ற நிலையில் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே சமாதான அணுசரணையாளர் பொறுப்பில் இருந்து நோர்வே நீக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் கீழ்நிலைப் போராளிகள் சில நூறுபேரே உள்ளதாகவும் யுத்த நிறுத்த முடிவில் ஏனைய பிரதேசங்களைக் கைப்பற்றியது போல் இப்பிரதேசத்தையும் இராணுவம் பாரிய யுத்தம் இன்றிக் கைப்பற்றும் என்றும் தெரியவருகிறது.

இப்பிரதேசத்தில் இருந்து புலிகளின் தலைமை பின்வாங்கியது அல்லது எஸ்கேப்பானது உறுதியானால் அங்கு ஏற்படக் கூடிய பாரிய மனித அவலம் தவிர்க்கப்படும்.

முல்லைத் தீவில் புலிகளின் தலைமை தப்பித்துக் கொண்டது அல்லது தப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. இந்திய இராணுவத்துடனான மோதலின் இராணுவச் சுற்றி வளைப்பில் இருந்து புலிகளின் தலைமை அன்று தப்பித்துக் கொண்டது அல்லது தப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின் முல்லைத்தீவில் சிக்குண்ட புலிகள் தங்களது தலைமையைப் பாதுகாக்க மக்களை கேடயமாக்கியதும் அதானால் இலங்கை இனவாத அரசின் இராணுவத் தாக்குதலில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் வரையானோர் மோசமான காயங்களுக்கு உள்ளாயினர். மூன்று தசாப்த கால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை உறுதுணையாக இருந்த வன்னி மக்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க அதி உச்ச விலையைச் செலுத்தினர். இனவாத அரசின் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடிய மக்களை பிடித்து அடித்து முதுகுத்தோலை உரித்தனர். அல்லது தப்பியோடியவர்களை புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

எது எப்படி இருப்பினும் புலிகளின் தலைமை இன்று அப்பிரதேசங்களில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக அல்லது பின்வாங்கிவிட்டதாக தெரியவருகின்றது. இதனை கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் செய்திருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். ஆயினும் இப்போது தன்னும் அவர்கள் தப்பியோடியது அல்லது பின்வாங்கியது இன்னும் பல்லாயிரம் இழப்புகளை தவிர்க்க உதவியுள்ளது.

இணைத்தலைமை நாடுகள் இந்தியா உட்பட ஆதரவளித்த பீக்கன் புரஜக்ற் திட்டத்தின்படி;
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதி குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியும்  குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியின் கடைசி 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையான பகுதியும் கைப்பற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

அடுத்து  01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இது மிகவும் சிரமமானதும் அதிக காலத்தை வேண்டி நிற்பதுமான நடவடிக்கை.

இன்று பின்வாங்கிய புலிகள் மீண்டும் தங்களை சுதாகரித்துக் கொண்டு தாக்குதலை நடத்த தயங்க மாட்டார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுடைய அபிலாசைகளை திருப்திப்படுத்தும் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் ஏற்படுத்தவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தப் பொவதும் இல்லை என்ற உணர்வே பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் உள்ளது. அதனால் இன்று புலிகள் ஓரம் கட்டப்பட்டாலும் இலங்கை அரசினதும் அதனுடன் இணைந்து இயங்குகின்ற சக்திகளினதும் செயற்பாடுகள் மீண்டும் புலிகளின் தேவையை உச்சத்திற்கு கொண்டு வரும் என்கின்ற அச்சம் உள்ளது. இந்த வரலாற்று நச்சு சக்கரத்தை மாற்றி அமைக்கின்ற அரசியல் பலம் இன்னமும் இலங்கையில் இல்லை என்பதே வேதனையான உண்மை.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை பலவினப்படுத்தியதில் அன்றும் சரி இன்றும் சரி புலிகளின் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் நியாயமான அரசியல் லட்சியங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைமையின் நியாயமற்ற போராட்டங்களால் அடிபட்டுச் சென்றது மட்டுமல்ல எதிர்மறையாக அதுவே தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் வழிகோலியது.

புலிகள் எதிர்காலத்தில் தங்கள் அரசியலற்ற அரசியலைக் கைவிட்டு தங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவது அவசியம். அப்படிச் செய்யாத வரை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏகபிரதிநிதிகளாக அல்ல ஏகப்பட்ட பிதிரிநிதிகளில் ஒருவராகவும் வர இயலாது. துரதிஸ்டவசமாக இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள சமூகங்கள் மத்தியில் உள்ள அரசியல் தலைமைகள் ஒன்றும் புலிகளின் தலைமையிலும் பார்க்க குறிப்பிடத்தக்கவை என்றும் சொல்லிவிட முடியாததாலேயே இலங்கை இவ்வாறான ஒரு பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது. குறைந்தபட்சம் யுத்தம் முடிவுக்கு வரும் போது ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மீளவும் பலம்பெறுவார்கள். அவர்களைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியும்.

காயமடைந்த 18 சிவிலியன்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதி: பாதுகாப்பு பிரதேசத்தில் உணவு விலைகள் உச்சம்

pokkanai.jpgபாதுகாப்பு பிரதேசத்தில் இன்றும் 18 பொதுமக்கள் காயங்களுடன் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்களில் அனேகமானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. உணவுப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதனால், அங்குள்ள மக்கள் பெரும் கஸ்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சில கடைகளே இருப்பதாகவும் அவற்றில் – ஒரு கிலோ அரிசி 300 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோதுமை மா 350 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், வெங்காயம் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும், பால் மா பக்கட் ஒன்று (440 கிராம் நிறையுடையது) 2200 ரூபாவுக்கும், மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்தம் தொடர்கின்றது. தாக்குதல்கள் இல்லை என்கிறது இராணுவம்

army-wanni.jpgசித்திரைப் புத்தாண்டையொட்டி அரசாங்கம் அறிவித்த தாக்குதல் நிறுத்த அறிவிப்பையடுத்து, களமுனைகளில் பெரிய அளவில் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு வலயத்தினுள்ளே இருந்து விடுதலைப்புலிகள் இன்று காலை 9 மணியளவில் நடத்திய ஸ்னைப்பர் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நடத்திய எறிகணை தாக்குதலில் மற்றுமொரு இராணுவச்சிப்பாய் காயமடைந்ததாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்தினுள்ளே சிக்கியுள்ள பொதுமக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்குள் வருவதற்கு வசதியாக சித்திரைப் புத்தாண்டு பண்டிகை தினங்களாகிய இன்றும் நாளையும் (13, 14 ஆம் திகதிகள்) விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தமை தெரிந்ததே.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த தாக்குதல் நிறுத்தத்தை ஐநா சபை அதிகாரிகள் முன்னோடியான நடவடிக்கை என குறிப்பிட்டு வரவேற்றுள்ளார்கள். இந்தப் போர்நிறுத்தத்தின் மூலம் மோதல்கள் நடைபெறுகின்ற பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் சென்றடையக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எனினும் அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் குறித்து விடுதுலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தாங்கள் தடுத்து வைத்துள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறவிட வேண்டும் என கேட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் புத்தாண்டுப் பண்டிகை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தமது வன்முறைகளைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே வைத்து படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் பண்டிகைக்கால செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை ஏமாற்றவே போர் நிறுத்தம்: விடுதலைப்புலிகள்

nadesan.jpgதமிழகத் தையும், உலக நாடுகளையும் ஏமாற்றவே இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,  இலங்கை அரசின் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் இதுவரை 28 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இலங்கை ராணுவம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழகத்தையும், உலக நாடுகளையும் ஏமாற்றவே இலங்கை அரசு போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உடையார் கட்டு பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனையின் மீதும் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்துகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும், அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் நம்புவதாக கூறியுள்ளார்.

வைகோவை நாடு கடத்த வேண்டும்: நடிகர் கார்த்திக் ஆவேசம்

india-election.jpgதேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசினார். அப்போது, ’’ இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும்.

நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை’’ என்று ஆவேசப்பட்டார்.