14

14

இடம்பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் சிறந்த சேவையாற்றப்படுகின்றது : கண்டி ஆயர்

bis-kandy.jpg
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றப்படுவதையிட்டுத் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவரான கண்டி ஆயர் பேரருட்திரு. வியான்னி பர்னாண்டோ தெரிவித்தார். செட்டிக்குளத்திலுள்ள மனிக் பாம் நலன்புரி நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுத்திருப்பதையிட்டுத் தாம் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.

அங்கு விஜயம் செய்த ஆயர் குழுவை நலன்புரி முகாமில் வவுனியா அரசாங்க அதிபர் ஜி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். முகாமைப் பார்வையிட்ட குழு அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்குp போதிய வசதிகள் அளிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்தது. விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 88,000 மக்கள் 14 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதோடு தொழிற்பயிற்சி நெறிகள, மாணவர்கள் கற்பதற்கேற்ற பாடசாலை வசதிகளுடன் சிறுவர்களுக்கான முன்பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் பார்வையிட்ட ஆயர் குழு, “அரசாங்கத்துக்குத் தான் நன்றிகூற வேண்டும்;” என்று கூறினர். வன்னியில் தாம் அச்சத்துடனேயே வாழ்ந்ததாகவும் தற்போது இங்கு சந்தோமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்ததாக கண்டி ஆயர் தெரிவித்தார். “இத்தகைய சூழ்நிலையில் நாம் முதல் தடவையாக இங்கு விஜயம் செய்துள்ளோம். இடம்பெயர்ந்து வந்த மக்கள் இன்று சந்தோமாக இருக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை செல்ல வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றும் அவர் கூறினார். 

இலங்கையின் மனித அவலங்களைச் சுட்டிக்காட்டி 38 அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிண்டனுக்குக் கடிதம்

hillary-clinton.jpgஇலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பு, அவலங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைஸுக்கும் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக இழுபறிபடும் அரசியல் தீர்வை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், டொம் லான்டொஸ், மனித உரிமைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழு உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளுடன் சீனத்தூதுவர் நேற்று சந்திப்பு

kandy1.jpgஇலங்கைக்கான சீனத் தூதுவர் சியூபிங் யென்ங், அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துப் பேசினார். கண்டியிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த விகாரைகளில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இலங்கை – சீனா இரு நாடுகளினதும், நட்புறவை மேலும் வலுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இலங்கைக்கான சீன நாட்டு புதிய தூதுவர் சியூ பிங் யென்ங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீன நாட்டு உறவுகளை பலப்படுத்தும் முகமாக இரு நாடுகளிலுமுள்ள வாலிப பெளத்த மத குருமார்களை இலங்கையிலிருந்து சீன நாட்டுக்கும் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கும் அனுப்புவதன் மூலம் எமது இரு நாடுகளுக்குரிய உறவுகளும் பலப்படுத்துவதற்கு ஒரு பிரதான காரணமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் புத்தபெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுகளிக்க வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை என்னால் அவதானிக்கின்ற பொழுது இந்த நாட்டு பெளத்தர்கள் பெளத்த மதம் மீது வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் என்னால் மிக தெளிவாக உணரக் கூடியதாக இருக்கின்றன.

இன்று இலங்கை பெளத்தர்கள் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து பெளத்தர்களும் ஸ்ரீதலதா மாளிகையையும் அதன் போதனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது போல் நானும் இச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்திருப்பது பெரும் அதிர்ஷ்டத்திற்குரிய ஒருவராக இருக்கின்றமை குறித்து மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.

சீனாவில் உள்ள பீஜிங் நுவர லீ குவான் விகாரையிலும் புத்த பெருமானின் புனித தந்தமொன்று உள்ளது. அதனை தரிசிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2007 இல் வந்ததை முன்னிட்டு இலங்கை – சீன நட்புறவு மேலும் வலுவடைந்ததையும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளுக்கு கூட இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் உற்சாகம் காட்டி வருவதையும் என்னால் அறிய முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட இந்தியாவில் “ஹோலி” மோதல்:8-பேர் பலி;250-பேர் காயம்

holi.jpgஉத்தரப் பிரதேசம்,பிகார் மற்றும் தில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 8-பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,வாராணசியில் புதன்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின்போது மசூதி சுற்றுச்சுவர் மீது வண்ணப்பொடியை தூவியதால் ஏற்பட்ட மோதல் வகுப்பு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இதே மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ஏற்பட்ட வகுப்பு மோதலில் 6-பேர் காயமடைந்தனர்.

காஸிபூரில் நடந்த வகுப்பு மோதலில் 16-வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.முஸாஃபர்நகர் மாவட்டத்தில் லிசாத் கிராமத்தில்,ஹோலி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினர் குடித்துவிட்டு பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 6-வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

பிகாரிலும் “ஹோலி” கலவரங்கள் நடைபெற்றன. மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தில்லியில் தையல் வேலை செய்துவந்த இளைஞர் உறவுப் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவர்கள் மீது வண்ணப்பொடியை வீசினர்.இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

ஜெய்ப்பூரில் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஹோலி கொண்டாடிய மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தனர். மாநிலம் முழுவதும் ஹோலி மோதல்களில் 200-பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே ரயில் மீது தண்ணீர் பலூனை வீசியெறிந்ததில் பயணி ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.

பிரிட்டிஷ் தூதுக்குழு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் சந்தித்துப் பேச்சு

hisbullah.jpgபிரித்தானிய உயர் ஸ்தானிகராலய தூதுக் குழுவினருடான சந்திப்பொன்றினை, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, விளையாட்டுத்துறை மற்றும் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டார்.

இச்சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அடிப்படைத் தேவைகள், சூழ்நிலை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இவ்வைபவத்தின்போது கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கருத்துகளை மாகாண அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரித்தானிய தூதுவர் டொக்டர் பீட்டர் கெயில், தென்னாசிய உதவிப் பணிப்பாளர் பிலிப்பாடர்ன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் டெங்கு தீவிரம்

batti-01.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவிவருவதாகவும், கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எஸ். தட்சணா மூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பாலமுனை மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளதாகவும், பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.