March

March

நேபாளத்தில் ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு!

president_and_madam.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேபாளத்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று நேபாளத்தின் த்ரிபுவான் விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் விமான நிலையத்தில் வரவேற்றார்.

நேபாளப் பிரதமர் புஷ்பகமல் தஹலின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, இவ்விஜயத்தின்போது இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையிலான இருதரப்பு நல்லுறவுகள் குறித்து நேபாள ஜனாதிபதி கலாநிதி ராம்பாரன் யாதெவ், பிரதமர் புஷ்பகமல் தஹல், வெளிவிவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் உட்பட அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இவ்விஜயத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பங்கேற்றுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு இதுவரை அழைத்துவரப்பட்டோர் தொகை 2,396

trico.gifமுல்லைத் தீவிலிருந்து இதுவரை திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலம் 2,396 பேர் கூட்டி வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் இடம்பெறும் தாக்குதல்களில் படுகாயமடைந்தோரும் அவசர நோயாளிகளும் இவர்களுக்கான உதவியாளர்களுமே இவ்வாறு கப்பல் மூலம் திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டுள்ளனர்.

திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் “கிறீன் ஓசன்’ கப்பலில் 282 பேர் புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஆறாவது தொகுதியாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக திருமலை சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதியிலிருந்து ஐந்து தடவைகளாக இதுவரை நோயாளர்கள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த உதவியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 இற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயமடைந்தவர்களும் திருமலை, வைத்தியசாலை தவிர மேலதிகமாக கந்தளாய், பொலநறுவை, மன்னார், வவுனியா வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

யுத்தநிறுத்தத்திற்கான புதிய அழைப்பை கொழும்பு நிராகரிப்பு

Dr Kohonaவிடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளுமாறு புதிதாக விடுக்கப்பட்ட அழைப்புகளை கொழும்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

சரணடையுமாறு சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் யுத்தநிறுத்தம் தேவைப்படாததாக அமையும் என்று வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் சண்டை இராது. மோதல் தானாகவே நின்றுவிடும் என்று கலாநிதி கோஹண கூறியுள்ளார்.

மோதல்களை நிறுத்துமாறு இந்தியா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாகவே பாலித கோஹண இதனை தெரிவித்திருக்கிறார். இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது என்று தூத்துக்குடியில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததுடன் ஒவ்வொரு நாளும் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதை ஐ.நா. அனுமதிக்குமா?அதேபோலத்தான் இதுவும் – பா.நடேசன்

nadesanltte.jpgதமது வாழ்விடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து தமிழர்களை வெறியேற்ற முயற்சிப்பது மிகப் பெரிய வரலாற்றுத் தவறு. காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதை ஐ.நா. அனுமதிக்குமா? அதேபோலத்தான் இதுவும் என்று விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு நடேசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது …

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கான உங்களின் பதில் என்ன?

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா வேறு நாடுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே யாரும் போரை நிறுத்தும் படி அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

காசா பகுதியை விட வன்னியில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. உலக நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, அது அணிசேரா நாடுகள், ஐ.நா. போன்றவற்றிலும் உறுப்புரிமை உள்ள நாடு. உலகின் இந்த நிலைப்பாடு ஆளுகைக்கு உட்பட்ட நாடு என்ற வாதத்தின் அடிப்படையிலானது அல்ல. இருந்த போதும், ஐ.நா. மற்றும் உலகின் மனிதாபிமான சமூகம் என்பன வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முக்கிய கவனத்தை இதுவரையில் செலுத்தவில்லை.

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்து வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை பாரம்பரியமாக வாழ்ந்து வரும் அவர்களின் இடங்களில் இருந்து வெறியேற்றுவதற்கு முயற்சிப்பது வேதனையானது. நான் ஒன்றை கேட்கின்றேன், தீர்வு ஒன்றை காண்பதற்காக காசா பகுதியில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐ.நா. ஆதரிக்குமா?

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் அனைத்துலகத்திற்கு ஆபத்தானது அல்லாத உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து சிறிலங்காவின் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு சில நாடுகள் கவலைப்படுவது வேதனையானது. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் துன்பத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளை புரிவதுடன், மனித பேரவலத்தையுத் தடுக்க முன்வர வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ன?

சிங்கள படையினரின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களினால் இங்கு நாளாந்தம் 50 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். சிறுவர்களின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதலினால் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவதனை அனைத்துலக சமூகத்தின் செயற்திறன் அற்ற நடவடிக்கை ஊக்கிவிக்கின்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் ஒன்றை மட்டும் தான் வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஆடுகளை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. அதற்கான உங்களின் பதில் என்ன?

வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது. அவர்களை நேர்காணல் காண்பதற்கு இராணுவத்தினரால் வழிநடத்தப்படும் ஊடகங்களையே அனுமதித்து வருகின்றது. துன்பத்தினாலும், அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் இராணுவத்தை விடுவிப்பவர்களாக சித்தரிக்கின்றது.

ஆனால், சில அனைத்துலக ஊடகங்களின் தகவல்களின் படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா சென்ற மக்கள் மீண்டும் வன்னிக்கு திரும்பவே விரும்புவதாக அறியமுடிகின்றது. இந்த தமிழ் மக்களை பிரச்சாரத்திற்கான கேடயமாக சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருவதுடன், அவர்களை நிரந்தரமாக அகதிகளாக்கவும் முற்பட்டு வருகின்றது.

அரசு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்தி பெருமளவில் திட்டமிட்ட பிரச்சாரத்தினை படை நடவடிக்கைகளுடன் இணைத்து மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு தொடர்பான சிறிலங்கா அரசு காண்பித்து வரும் அசிரத்தையும், தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையும் நோக்கும் போது ஒன்று மட்டும் உறுதியானது. அதாவது, படையினர் மேற்கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தான்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என சில நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதற்கான உங்களின் பதில் என்ன?

இவை எல்லாம் தமது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நடவடிக்கையை மெருகுபடுத்தும் வார்த்தைகள். ஜனநாயக வழிகளில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக முன்மொழிந்த சுயாட்சியும், தமிழ் மக்களின் உரிமையுமே எமது நோக்கம்.

எனவே, பெருமளவில் தமிழ் மக்களை அவர்களின் வாழ்நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடாது. அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்து கொண்டு தடை முகாம்களுக்கு நிதிகளை வழங்குவார்களாக இருந்தால் அது உண்மையாகவே இது ஒரு வரலாற்று பேரழிவும், தவறுமாகும்.

மிகவும் கொடூரமான அரசுகள் பலவந்தமாக பொருமளவில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களின் செர்ந்த இடங்களில் மீண்டும் குடியேற்றியதாக உலகின் எந்தப்பகுதியிலும், எப்போதும் வரலாறு இல்லை. ஆனால், அனைத்துலக சமூகம் தமது சுருதியை மாற்றியுள்ள போதும் மீண்டும் பழைய கோசத்தையே தற்போதைய புதிய சூழலிலும் பயன்படுத்தி வருவது வருத்தமானது.

மீளக்குடியமர்த்துதல், மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு நிதி உதவிகளை நேரடியாக வழங்குவது தொடர்பாக அனைத்துலக கொடையாளி நாடுகளுக்கான உங்களின் கருத்துக்கள் என்ன?

கொழும்பு போன்ற பிரதேசங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் உரிமைகளையோ, பாதுகாப்பையோ கூட அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது. மக்களை மீளகுடியமர்த்துவதாக சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்து வரும் வாக்குறுதிகள் அவர்கள் கொடுக்கும் நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றதும், அதே வேகத்தில் காணாமல் போய்விடும்.

ஆழிப்பேரலை முகாமைத்துவ கட்டமைப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்து வந்திருந்தன. முன்னாள் அமெரிக்க அரச தலைவர் பில் கிளின்டன் கூட இதனை மேற்கொண்டிருந்தார். ஒன்றுமையையும் அரசியல் தீர்வையும் பலப்படுத்தும் வழி இதுவென கருதப்பட்டது. ஆனால் நீதித்துறையை தவறாக பயன்படுத்தி அதனை சிறிலங்கா அரசு சீரழித்து விட்டது.

தற்போது கூட மக்கள் முன்னணி அரசில் அங்கம் வகிப்பவர்களும், அரச தலைவரின் சொந்த கட்சியில் இருப்பவர்களும் தாம் இராணுவத் தீர்வுக்கே ஆதரவுகளை வழங்குவோம் எனவும் அதிகார பரவலாக்கத்திற்கு அல்ல எனவும் தெரிவித்து வருகின்றனர். போரை நிறுத்தி, மக்களை தமது வாழ்விடங்களில் வாழ அனுமதித்து, அவர்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதிப்பதே உண்மையான மனிதாபிமானம். தமிழ் மக்களின் பிரச்சினைகள், சிறுபான்மை மக்களை அரசு நடத்தும் முறை, மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பான சிறிலங்கா அரசின் உண்மையான தோற்றத்தை உலகில் உள்ள மனிதாபிமான சமூகம் தமதிக்காது உணர்ந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம்.

மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றதே அதற்கான உங்களின் பதில் என்ன?

தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெறியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் இது. இங்கு தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இங்கு தொடர்ந்து வாழவே விரும்புகின்றனர். சிறிலங்கா அரசு, ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகள் போன்றவை தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக தமது அறிக்கைகளில் தெரிவித்தவாறு அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் முட்கம்பிகளுடன் கூடிய முகாம்களுக்குள் அடைப்பதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

யாழ். குடநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தசாப்பதற்கு மேலாக அரசு ஆக்கிரமித்துள்ள இடங்களில் மீளக்குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிலும் இது நிகழ்ந்துள்ளது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் பின்னர் சம்பூரில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிஉயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் பல இடங்கள் தமிழ் மக்கள் செல்ல முடியாத பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களை தனக்கு ஆதரவான துணை இராணுவக்குழுவினரை பயன்படுத்தி அரசு மிரட்டி வருகின்றது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. கிழக்கில் மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஆபத்தான நிலமையில் தமிழ் மக்கள் இந்த தடை முகாம்களுக்குள் விருப்பத்துடன் செல்ல வேண்டுமா? தமது பாரம்பரிய வாழ்விடங்களை கைவிட்டு தமிழ் மக்கள் வெயேற வேண்டும் என ஐ.நா.வும், ஏனைய நாடுகளும் எதிர்பார்க்கின்றனவா? வெளியேறும் மக்களை தடை முகாம்களுக்குள் அடைப்பதற்கு அவை முயற்சிக்கின்றனவா? இந்த முயற்சி தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்துடன் தான் மேற்கொள்ளப்படுகின்றதா?

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்களை வெளியேற்றவும் முற்றாக அழிக்கவும் முயன்று வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 61 வருடங்களாக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அழைப்பை பயன்படுத்தி மக்களை வெளியேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னதையிட்டு உங்கள் கருத்து என்ன?

மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த கோரிக்கையை, தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசு ஏற்கெனவே நிராகரித்து விட்டது. தமிழ்நாடு தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இதனை சொல்லியிருப்பதை அரசியல் அழுத்தத்தால் சொல்லப்பட்ட ஒரு விடயமாகவே கொழும்பு பார்க்கின்றது.

அத்தோடு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை, ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான சிறிலங்காவின் படையெடுப்பக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும். அத்தோடு, பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கு பதில் வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதே ஓர் போர் நிறுத்தத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்று சொல்லியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆயுதங்களை கீழே போடுவதற்கான எந்த கோரிக்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். ஏனெனில், இந்த ஆயுதங்கள் எமது அரசியல் போராட்டத்தின் கருவிகள் மட்டுமன்றி, அவையே எமது மக்களின் பாதுகாப்பு கவசங்களுமாகும். இந்தியா இப்போது, போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களின் துன்பங்களைப் போக்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒர நிரந்தரத் தீர்வு காணவே சிறிலங்காவை வலியுறுத்த வேண்டும். என்றார்.

இந்தியா எமக்குப் பாதகமாக செயற்படாது – லக்ஷ்மன் யாப்பா

l-yaappa-abayawardana.jpg“விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டால் போர்நிறுத்தம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்கவே தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வேகத்தை தணித்துள்ளோம்” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. ஆனால் இந்தியா எமக்குப் பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்குத் தெரியும். வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தக் காலப் பகுதியில் மக்கள் பெருமளவில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விடுதலை புலிகளின் போர் நிறுத்தக் கோரிக்கையை அரசாங்கம் பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி வைத்தியசாலைகளுக்கு போதுமானளவு மருந்துகள்

medicine.jpgவவுனியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கென போதியளவு மருந்துப் பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அதேநேரம் புலிகளின்பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கென புதுமாத்தளன் ஆஸ்பத்திரி உட்பட அப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் கப்பல் மூலம் திருகோணமலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மெண்டிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த ஆஸ்பத்திரிகளுக்கு அடுத்துவரும் ஓரிரு தினங்களிலும் கப்பல் மூலம் மருந்துப் பொருட்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று (01) அழைத்துச் செல்லப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த இராணுவ உயரதிகாரி, படகுகள் மற்றும் வேறு மார்க்கங்களினூடாக இதுவரை 2233 பேர் யாழ். குடாநாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார்.

அவர்கள் கோப்பாய், மிருசுவில், குருநகர் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் உள்ள 4 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களின் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு நலன்புரி முகாம்கள் கொடிகாமத்தின் மற்றொரு பகுதியிலும் கைதடியிலும் அமைக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள மக்களுக்கு தங்குமிட வசதி, மருத்துவ வசதி, உலர் உணவு அடங்கலான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காதவரை யுத்த நிறுத்தத்தை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை – போகொல்லாகம

rohitha-sir-john.jpgபுலிகள் ஆயுதங்களை கீழே வைக்காத நிலையில் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கம கூறினார். அப்பாவி தமிழ் மக்கள் புலிகளினால் பாதிக்கப்படுவதை நிறுத்துவதற்காகவே இலங்கையில் யுத்தம் இடை நிறுத்தப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதே தவிர புலிகளுக்கு சார்பாக வல்ல எனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னியில் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்றன. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் என்னுடன் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இலங்கை நிலைவரங்கள் தொடர்பாகக் கேட்டறிந்ததாகவும் கூறினார்.

மோதல்கள் இடம் பெற்று வரும் பகுதிகளில் 30 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்புக்குள்ளேயே பொது மக்கள் சிக்குண்டிருக்கிறார்கள். இவர்களை மீட்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முனைத்து வருகின்றது. இதேவேளை இராணுவ கட்டுப்பாடில்லாத பகுதிகளிலிருந்து தப்பிவந்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அங்கிருக்கும் எமது அதிகாரிகளூடாக மேற்கொண்டு வருகின்றது. புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி கடல் மார்க்கம் மட்டுமே எனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளும் பூரண திருப்தியுடனும் சந்தோஷத்துடனுமே இருக்கிறார்கள். அண்மையில் வவுனியா முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ்சும் தனது திருப்தியை வெளியிட்டிருந்தார். அகதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு முன்னெடுத்துள்ளது.  பொதுமக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அகதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியிருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி, சார்க் வெளிவிவகார அமைச்சர்களை நேற்று முன்தினம் சந்தித்தவேளை கூடிய விரைவில் வடக்கே பாரிய அளவிலான மீள்குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விருப்பதாக கூறியுள்ளார். அப் பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுத்ததும் மீள்குடியேற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

வடக்கில் நீண்ட மற்றும் குறுகியகால அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெற்று வருவதனால் அரசியல் ரீதியான தீர்வு கைவிடப்பட்டு விட்டதாக கருதுவது தவறு. சர்வகட்சி குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணம்

mahinda.jpgஇரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணமானார். நேபாளப் பிரதமர் புஷ்பகமல் தஹலின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையிலான இருபக்க நல்லுறவுகள் குறித்து நேபாள ஜனாதிபதி கலாநிதி ராம்பாரன் யாதெவ், பிரதமர் புஷ்ப கமல் தஹல, வெளி விவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் உட்பட அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த விருக்கிறார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மேம்பாட்டுக்குமான இரு பக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி புத்தபிரானின் பிறந்த இடமான லும்பினிக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.

ஈழப்பிரச்சினைக்கான போராட்டமா? திமுக ஆட்சிக்கெதிரான போராட்டமா-கருணாநிதி

karunanithi.jpgஉச்ச நீதிமன்றம் விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ள சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் பொறுமை காக்கக் கூடாதா என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வழக்கறிஞர்கள் தொடங்கினர். பிறகு நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் முட்டை வீசியதாக வழக்கு அந்த வழக்கின் விஸ்வரூபமாக காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் என வன்முறைகள் நடைபெற்று, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இப்பிரச்னை சென்றுள்ளது.

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உதறித் தள்ளிவிட்டது. சில காவல்துறை அதிகாரிகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையிலிருந்து வேறு ஊர்களுக்கு இந்த அரசு மாற்றிவிட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஸ்ணா தலைமையில் விசாரணைக் கமிட்டியையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிட்டியின் முடிவை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் மட்டும் பொறுமை காட்டலாகாதா? குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும், அதனை இருசாராரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

அதேபோல் உச்ச நீதிமன்ற கருத்தை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2-ம் தேதி நீதி மன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும். இல்லையெனில், இது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான போராட்டமல்ல இங்குள்ள தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என கருணாநிதி கூறியுள்ளார்.

ஏ-9 வீதி இன்று திறப்பு

uthaya_nanayakara_.jpgயாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 வீதி இன்று (02) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்துக்காகவும், விநியோக நடவடிக்கைகளுக்காகவும் இப்பாதை இன்று திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப்பிடுகையில், 1985ம் ஆண்டுக்குப் பின்னர் ஏ-9 வீதியை பாதுகாப்பு படையினர் மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.

பாதுகாப்பு படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் ஏ-9 வீதியிலுள்ள பிரதான நகரங்களான பரந்தன், கிளி நொச்சி, ஆனையிறவு என் பன புலிகளின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டன.

இதன் பயனாக ஏ-9 தரைவழியைத் திறந்து விடக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு படையினரின் தரைவழி போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இப்பாதை முதலில் திறக்கப்படுகின்ற போதிலும் இப்பாதைக்கு அருகிலுள்ள சில பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகள் பூர்த்தியானதும் பொது மக்கள் போக்குவரத்துக்காகவும் இப்பாதை திறந்துவிடப்படும்.

2002ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் ஏ-9 வீதி பொது மக்கள் போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திறக்கப்பட்டது. பொது மக்கள் புலிகளுக்கு வரி என்ற போர்வையில் கப்பம் செலுத்தி மிகுந்த சிரமங்களுடனேயே இப்பாதை வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டனர். இச்சமயம் பாதுகாப்பு படையினர் இப்பாதையைப் பயன்படுத்தவில்லை.

பாதுகாப்பு படையினர் ஆகாய மற்றும் கடல் வழியாகவே யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பெரிதும் நன்மை பெறுவது போல யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டு மக்களும் நன்மை அடைவர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பொருளாதாரத்துறை பெரிதும் மேம்பாடு அடையும்.

இப்பாதையை உத்தியோகபூர்வமாகத் திறக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஒரு இராணுவ குழுவினரும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மற்றொரு இராணுவகுழுவும் இன்று பயணத்தை முதலில் ஆரம்பிக்கும் என்றார்.