March

March

வட இந்தியாவில் “ஹோலி” மோதல்:8-பேர் பலி;250-பேர் காயம்

holi.jpgஉத்தரப் பிரதேசம்,பிகார் மற்றும் தில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 8-பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,வாராணசியில் புதன்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின்போது மசூதி சுற்றுச்சுவர் மீது வண்ணப்பொடியை தூவியதால் ஏற்பட்ட மோதல் வகுப்பு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இதே மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ஏற்பட்ட வகுப்பு மோதலில் 6-பேர் காயமடைந்தனர்.

காஸிபூரில் நடந்த வகுப்பு மோதலில் 16-வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.முஸாஃபர்நகர் மாவட்டத்தில் லிசாத் கிராமத்தில்,ஹோலி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினர் குடித்துவிட்டு பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 6-வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

பிகாரிலும் “ஹோலி” கலவரங்கள் நடைபெற்றன. மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தில்லியில் தையல் வேலை செய்துவந்த இளைஞர் உறவுப் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவர்கள் மீது வண்ணப்பொடியை வீசினர்.இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

ஜெய்ப்பூரில் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஹோலி கொண்டாடிய மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தனர். மாநிலம் முழுவதும் ஹோலி மோதல்களில் 200-பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே ரயில் மீது தண்ணீர் பலூனை வீசியெறிந்ததில் பயணி ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.

பிரிட்டிஷ் தூதுக்குழு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் சந்தித்துப் பேச்சு

hisbullah.jpgபிரித்தானிய உயர் ஸ்தானிகராலய தூதுக் குழுவினருடான சந்திப்பொன்றினை, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, விளையாட்டுத்துறை மற்றும் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டார்.

இச்சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அடிப்படைத் தேவைகள், சூழ்நிலை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இவ்வைபவத்தின்போது கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கருத்துகளை மாகாண அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரித்தானிய தூதுவர் டொக்டர் பீட்டர் கெயில், தென்னாசிய உதவிப் பணிப்பாளர் பிலிப்பாடர்ன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் டெங்கு தீவிரம்

batti-01.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவிவருவதாகவும், கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எஸ். தட்சணா மூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பாலமுனை மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளதாகவும், பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை; ஈழம் கட்டவே விரும்புகிறோம்: கவிஞர் காசி ஆனந்தன் விகடனுக்கு வழங்கிய பேட்டி

kasi-anandhan.jpgகாசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பான  பேட்டி வருமாறு:- 

‘பத்துத் தடவை பாடை வராது .பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!  செத்து மடிவது ஒருமுறைதானடா,  சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று

கேள்வி: கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழீழக் கைதிகள் துடிதுடிக்க அடித்து, வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குட்டிமணியின் கண்களைப் பிடுங்கிச் செருப்புக் கால்களின் கீழிட்டுச் சிங்கள சிறைக் காவலர்கள் வெறியாடிய காலம். அன்று தமிழகத்தில் எழுந்த பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை நன்றியுடன், நெகிழ்வுடன் பார்க்கிறோம். 83-ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாடு அன்று நடைபெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தாயகத் தமிழர்கள் ஈழச் சொந்தங்களுக்காகத் தங்கள் உடலைத் தீயின் பசிக்குத் தின்னக் கொடுத்த தியாகங்கள் அன்று இல்லை. இத்தனை காலமும் மறைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. ‘இன உணர்வைப் புதைப்பது என்பது விதையைப் புதைப்பது போலத்தான்’ என்பதைத்தான் உங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.

கேள்வி:அன்று பிரதமர் இந்திராகாந்தி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இன்றைய மத்திய அரசு புலிகளுக்கு எதிராக உள்ளது பின்னடைவுதானே?

உண்மைதான். மத்திய அரசு புலிகளை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சிகள், போர் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை காங்கிரஸ் தவிர்த்த தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட ‘விரும்பத்தகாத விளைவு’ காரணமாக இந்த இடைவெளி ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருதரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

நல்ல நோக்கத்தோடு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையினரைப் புலிகள் சுட்டுக் கொன்றது நியாயமா?’ என்று இந்திய அரசின் சார்பாகக் கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். புலிகளோ, ‘எங்கள் போராளி திலீபனை இழந்தோமே, பெருமதியான தளபதிகள் குமரப்பாவையும் ஜானியையும் இன்னும் பல தளபதிகளையும் அமைதிப் படை சுட்டு வீழ்த்தியதே. போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்கள் 12 ஆயிரம் பேர் அமைதிப் படையால் கொலை செய்யப்பட்டார்களே, 300-க்கும் அதிகமான ஈழச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்களே, இவையெல்லாம் சரிதானா?’ என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளை இருதரப்பும் முற்றிலுமாக மறக்க ஏலாதுதான். ஆனால், சில விட்டுக்கொடுப்புகள் இந்தியாவுக்கும் தமிழீழ மக்களுக்கும் இன்றியமையாதது. அண்டை நாடான இந்தியா அறம் தழுவிய ஈழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத் திந்தியக் கட்சிகளே எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, மத்திய அரசு மட்டும் எங்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

கேள்வி: சமீபத்திய போரின் தொடர் வீழ்ச்சிகள் புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

ஒரு மாதப் போரை வைத்து புலிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல், ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால், உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம்.

இதுவரை 52 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் இலங்கை ராணுவத்தைவிட்டுத் தப்பி ஓடியதாகத் தகவல்கள் சொல்கின்றன. விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர, ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. நிச்சயம் தற்காலிகப் பின்னடைவிலிருந்து புலிகள் மீண்டு எழுவார்கள். ஒரு பாரியத் தாக்குதலை சிங்கள ராணுவத்தின் மீது நிகழ்த்தி வெற்றியடைவார்கள்.

கேள்வி: போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, ஈழப் பிரச்னைக்குத் தீர்வாக ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை முன்வைக்கிறதே?

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஈழ மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சிறிய உரிமைகளைக்கூட ஈழ மக்களுக்கு வழங்காது. இலங்கை என்பது இரு தேசங்களின் நாடு என்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அதிகாரம் சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்னும் பிச்சை தமிழர்களுக்கும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் பின் உள்ள உண்மை.

அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசும்போதுகூட 7 சிங்கள மாகாணம், 2 தமிழ் மாகாணம், ஆக மொத்தம் 9 மாகாணங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்கிறார்கள். இப்போது நடக்கும் போராட்டம் மாகாணங்களுக்கு இடையேயான போராட்டமா, தேசங்களுக்கு இடையேயான போராட்டமா? ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் சுருக்கிச் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டாலோ, அல்லது இடைக்கால மாகாண சபைகள் அமைக்கப்பட்டாலோ, சாலை போடலாம், பாலம் போடலாம். ஆனால், நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை, ஈழம் கட்டவே விரும்புகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து அனுப்புமாறு தங்கள் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதே?

நன்றி. ஆனால், உணவு என்பது இன்றைய தேவையே தவிர, லட்சியம் அல்ல. உணவுதான் லட்சியம் என்றால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்க மாட்டான். களத்தில் புலி நஞ்சைச் சாப்பிட்டுச் சாக மாட்டான்.

கேள்வி:  போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது. புலிகளும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பற்றி?

புலிகளின் ஆயுதம் என்பது புலிகளைக் காக்க அல்ல, ஈழ மக்களைக் காப்பதற்காகவே’ என்று நடேசன் கூறியுள்ளார். ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்? இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டியது இலங்கை அரசிடம்தானே தவிர, புலிகளிடம் அல்ல.

திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு

tco-child-killed-01.jpgகடந்த இரு தினங்களுக்கு முன் திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுமியைப் பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் ஒரு மில்லியன் ரூபாவை அவரது குடும்பத்தினரிடம் கப்பமாகக் கேட்டிருந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: புகைப்படம் lankadeepa.lk

tco-child-killed-01.jpg

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வவுனியாவிற்கு விஜயம்

uk.jpgஇலங்கைக் கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பீட்டர் பேட்டன் தலைமையிலான குழு ஒன்று நேற்றயதினம் (12.03.2009) வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி முகாமிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அங்கு சென்ற இக்குழு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டது யாழ்தேவி வவுனியா வரையிலான சேவை இடைநிறுத்தம்

railways-in-jaffna.jpgகொழும்பு வவுனியா யாழ்தேவி கடுகதி ரயில் சேவை நேற்று வியாழக்கிழமை முதல் மதவாச்சி வரையே நடைபெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடபகுதி பயணிகள் மறுஅறிவித்தல்வரை மதவாச்சி சென்றே கொழும்புக்கான ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இந்த ரயில்சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாததுடன் மீண்டும் வவுனியாவுக்கான சேவை எப்போது நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படவில்லை. நீண்டகால இடைவெளிக்குப்பின்னர் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கான பகல்நேர ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் இடையிடையே இந்த ரயில் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மறுஅறிவித்தல் வரை இந்த ரயில்சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிழல் பாதுகாப்புச் செயலாளர் இன்று ஜனாதிபதியூடன் சந்திப்பு.

president_liam.jpgஇலங் கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்புச் செயலாளர் டொக்டர் லியம் பொக்ஸ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டனர்.நேற்று இலங்கைக்கு வருகை தந்த இவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நாளை நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டிலிருந்து 48 ஆயிரம் கிலோ சின்ன வெங்காயம் 36 ஆயிரம் கிலோ இறால் வகைகள் கொழும்பு வந்தன!

lorry_food.jpgயாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களான சின்ன வெங்காயம் இறால். பீட்றூட் கிழங்கு உட்பட மற்றும் மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு 23  லொறிகள் இன்று அதிகாலை 1.30 மணிக்கு வெலிசற களஞ்சியசாலையை வந்தடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்திற்குக் கடந்த செவ்வாய்கிழமை ஏ 9 வீதியினூடாக லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து  யாழ். குடாநாட்டு உற்பத்திப் பொருட்கள் அந்த லொறிகளில் ஏற்றப்பட்டன.
 
இன்று அதிகாலை வெலிசற களஞ்சியசாலைக்கு வந்துசேர்ந்த 23 லொறிகளில் 48 ஆயிரம் கிலோகிறேம் சின்ன வெங்காயம், 36 ஆயிரம் கிலோகிறேம் இறால், நண்டு வகைகள், மற்றும் பீட்றூட்,  கரட் உட்பட பெருந்தொகையான மரக்கறி வகைகளும் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் ஏற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தின் பிரதான உற்பத்தியான பழ வகைகள்,  புகையிலை மற்றம் பனை உற்பத்திப் பொருட்களை உடனடியாகச் சேகரிக்க அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போது அவற்றையும் தென் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

அக்குரஸ்ஸ தாக்குதல் சம்பவம் 10 தமிழ் இளைஞர்கள் கைது

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டியவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் (சி.ஐ.டி.) பத்து தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இத்தகவலை தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டீ. டபிள்யூ. பிரதாப்சிங்க தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அக்குரஸ்ஸ பகுதி தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பொலிஸார் பலரிடம் இருந்து வாக்கு மூலங்களைப்பெற்று வருகின்றனர். இந்த பத்து தமிழ் இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.