Multiple Page/Post

ஈழக்கொடியை மீண்டும் உயர்த்த எவருக்கேனும் இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி

041109ma.jpgஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடியினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள். எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.

எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள். எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.

இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.

பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.

இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கைது

1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி கட்டிட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டின்  பேரில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றில் சமூகம் அளிக்காத நிலையிலேயே இவருக்கான தண்டனை முன்னர் விதிக்கப்பட்டிருந்தது.
 
மத்திய வங்கியின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்காக வெடிபொருள் நிரப்பிய லொறியை கொழும்பிற்கு கொண்டு வந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர் தற்போது குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். செல்லத்தம்பி நவரட்னம் என்ற இவர், செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஹோம்ஸ் இலங்கை வருகை

John_Holmes_UNஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) இலங்கை வருகிறார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் அவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

இதன் போது அவர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதோடு வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் நலன் குறித்து நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்

ncet_elected.jpgநோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்  நடைபெற்றது.  இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது.

தமிழீழ தனியரசு கோட்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் வலியுறுத்தி தமிழ மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் 2767 பேர் வாக்களித்துள்ளனர்.

தேசிய ரீதியாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விபரங்கள் வருமாறு
1. பியோனார் மொக்ஸ்நெஸ்
2. பஞ்சகுலசிங்கம் கந்தையா
3. ஜெயசிறீ பாலசுப்பிரமணியம்
4. ஆதித்தன் குமாரசாமி
5. தர்மசீலன் தர்மலிங்கம்

பிராந்திய ரீதியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் வருமாறு
வடக்கு பிராந்தியம்
1. றூபன் ஐயாத்துரை
தெற்கு தென்மேற்கு
1. றெஐி டேவிட்ராஐ்
மேற்கு பிராந்திரயம்
1. விஐயசங்கர் அசோகன்
மத்திய பிராந்தியம்
1. இராசகுமார் குமாரசாமி
கிழக்கு பிராந்தியம்
1. சிவகணேஸ் வடிவேலு
2. இராசேந்திரம் பொன்னுத்துரை
3. சிவராஐா வல்லிபுரம்
4. கண்ணன் நாகேந்திரம்
5. மேரி புளோரிடா யூடின் பிரான்சிஸ்
6. ராஐரட்ணம் வேலுப்பிள்ளை

மேற்படி தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அனைவரும் நோர்வே ஈழத் தமிழர் அவையின் இரண்டு அவைகளில் ஒன்றான நோர்வே ஈழத் தமிழ் மக்கள் அவை(House of Eelam Tamils in Norway-HETN) என்ற அவையில் அங்கம் வகிப்பர்.
 

45 மாணவர்கள் திடீர் மயக்கம்

கட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்த 45 மாணவர்கள் நேற்று திடீரென உடல் உபாதைக்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுவான அம்பகாஹேன மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே உடல் உபாதைக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவிற்கு பிரிஎப் எச்சரிக்கை

Paramakumarடிசம்பர் 12ல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவடைந்ததும் அக்கருத்துக் கணிப்பை மேற்கொள்ளும் தமிழ் தேசிய சபை கலைக்கப்பட வேண்டும் என பிரிஎப் ஒழுங்கு செய்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நவம்பர் 1ல் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்களுக்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தன்னார்வ அமைப்புகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர்.

இவ்வெச்சரிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசிய சபையின் முன்னணி உறுப்பினரான பரமகுமரனைத் தொடர்புகொண்ட போது எமது அமைப்பை ‘கலைக்கிறதோ நிப்பாட்டுறதோ அவர்களின் கையில் இல்லைத் தானே’ எனத் தெரிவித்தார். நவம்பர் 1ல் இடம்பெற்ற கூட்டத்தில் ‘எல்லா விதமான எல்லாமும் கதைக்கப்பட்டது தான். ஜனநாயகம் பேச்சுச் சுதந்திரம் எதையும் நம்பாதவர்கள்’ என்று தெரிவித்த பரமகுமரன் ‘காலகட்டத்தில் அவர்களை மாற்றி எடுக்கிற பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. மாறுகிற தேவை அவர்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தங்களது கட்டுப்பாடுகளை மீறி அமைப்புகள் செயற்படுவதாகவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிலர் தங்கள் பற்றிய விமர்சனங்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவை நிறுத்தப்பட வேண்டும் என அழைக்கப்பட்டவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர். அண்மைக் காலமாக பிரிஎப் ற்கு சார்பானவர்கள் அல்லது சார்பான அமைப்புகளைச் (வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு) சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்நிலை தொடர்பான விமர்சனங்களை வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே நவம்பர் 1ல் நடைபெற்ற பிரிஎப் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரிஎப் நிர்வாகம் நாதன் குமார் தலைமையில் இருந்த போதும் ‘தனம்’, ‘ரூட் ரவி’ ஆகியோரே பிரிஎப் யை கட்டுப்படுத்துகின்றனர். நவம்பர் 1ல் இடம்பெற்ற பிரிஎப் கூட்டத்தில் எச்சரிக்கைகள் ‘தனம்’ என்பவரிடம் இருதே வந்துள்ளது. பிரித்தானியாவில் வெவ்வேறு வகைகளில் சேகரிக்கபட்ட மொத்த நிதிகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். இந்த நிதி பற்றிய கட்டுப்பாடு தனம், ரூட் ரவி, ரெஜி ஆகியோரின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.

ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுக்களின் நடுப்பகுதியில் இவர் யாழில் இருந்த போது கிருஸ்ணானந்தன்; என்பவரால் இயக்கப்பட்டு வந்த ஊற்று ஆய்வு நிறுவனத்தை பலாத்பாரமாக அவரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். கிருஸ்ணானந்தன் அவரது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு அவரது வீடும் அங்கு இயங்கி வந்த ஆய்வு நிறுவனமும் புலிகளின் அலுவலகம் ஆக்கப்பட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அவ்வீடும் ஊற்று நிறுவனமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமாகக் கருதப்பட்டு இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் பகுதிகளில் அவ்வாறான ஒரு ஆய்வு நிறுவனமும் ஊற்று போன்ற அறிவியல் சஞ்சிகையும் இதுவரை தோன்றவில்லை.

இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தொடர்ந்தது. கனடாவில் தேடகம் போன்ற அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மஞ்சரி சஞ்சிகை எரிக்கப்பட்டது. ரிரிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் லண்டன் குரல் பத்திரிகைகளின் பிரதிகளை தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இச்சிந்தனை முறை இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மாற்றமடையவில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு தனக்கிருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை அவுஸ்திரேலியா பொறுப்பேற்கவேண்டும் இந்தோனேசியா அறிவிப்பு

Oceanic_Viking_Refugeesஅவுஸ்தி ரேலியாவின் சுங்கப் பிரிவுக்கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து இந்தோனேசிய கரைக்கு வந்துள்ள 22 இலங்கையரும் தங்களது நாட்டில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்களின் அகதி அந்தஸ்தை தீர்மானிக்கும் நடவடிக்கைகளுக்காக 4 வாரங்களிலிருந்து ஆகக்கூடியது 2 வாரங்களுக்கு அவர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.அதன்பின் அவர்கள் வெளியேறுவது அவசியம் என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் தீகு பைசாசியா ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்கு கூறினார்.

இந்தோனேசிய கடற்பரப்பில் கடந்த மாதம் இடைமறிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலுள்ள புகலிடம் கோரும் 78 இலங்கையரும் இந்தோனேசியாவின் தன்ஜுங் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு இணங்கியதாக வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.

நான்கு தொடக்கம் 6 வாரங்களுக்கிடையில் அவர்களை அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமர்த்துவதென்ற உறுதிமொழியை அடுத்தே அவர்கள் இந்தோனேசியாவுக்குச் செல்ல இணங்கியிருந்தனர். இந்த இலங்கையரில் ஏற்கனவே யூ.என்.எச்.சி.ஆரினால் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நான்கு வாரங்களில் மற்றொரு நாடொன்றில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரியோனோ வியோபோ சனிக்கிழமை கூறியுள்ளார். அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவோரை இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப பொறுப்பேற்க வேண்டும் அல்லது அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது ஓசனிக் வைக்கிங் கப்பலில் 56 பேர் தங்கியுள்ளனர். அவர்களை இந்தோனேசியாவுக்குள் செல்லுமாறு அவுஸ்திரேலியா தூண்டி வருகிறது.

மலையகப் பகுதிகளில் கடும்மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgமலை யகப் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரேந்தும் பகுதிகளான காசல் ரீ, மவுசாகலை,கென்யோன், விமலசுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் அதிகளவிலான வெள்ளநீர் சேர்ந்துள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா பகுதிகளிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக் குள்ளாகியுள்ளனர். அத்துடன், பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழை காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் மலையகத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாமென கட்டிட ஆராய்ச்சி நிலைய புவியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பெற்றோலிய, நீர்பாசன சபை ஊழியர்களின் போராட்டம் முடிவு

091009ecb.jpgஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர்ப்பாசன சபை ஊழியர்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கையினை இன்றுடன் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமனம்

161109roshan.jpgகூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். கூட்டுப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்ததையடுத்து, ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றும் அதேவேளை விமானப்படைத் தளபதியாகவும் கடமையாற்றுவார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.