Multiple Page/Post

வடக்கு கிழக்கின் ஏழு மாவட்டங்களில் 34 ஆயிரம் கண்ணிவெடிகள் வெடிபொருட்கள், மீட்பு

வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இராணுவத்தினர் மாத்திரம் இதுவரை 45 கோடி 4 இலட்சத்து 2 ஆயிரத்து 744 சதுர மீற்றர் (450,402,744) நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட் களை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து படையினர் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் பார்ப்பற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டது.

பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள், நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் துரித மீள்குடியேற்றத்திற்காக படையினர் மற்றும் ஏனைய அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஊடகவியலாளர் குழுவினர் காண முடிந்தது.

பரிய தம்பனை, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் எப்.எஸ்.டி.யினால் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை காண முடிந்தது. இதன் போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளரு க்கு கருத்து தெரிவித்த பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை அரசாங்கத்தின் வேண்கோளுக்கிணங்க படையினரும், பல்வேறு வெளிநாட்டு நிபுணத்துவ அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

2002ம் ஆண்டு முதல் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை இராணுவத்தின் மீட்டெடுத்துள்ளனர். 17,323 கண்ணிவெடிகள், 19 யுத்த தாங்கி ஒழிப்பு கண்ணிகள் 16,994 வெடிபொருட்கள் இவற்றில் அடங்கும் என்றார்.

சுவிஸர்லாந்தை தளமாகக் கொண்ட (பெடரே ஷன் சுவிஸ் டீமைனில்) எப்.எஸ்.டி. என்ற அமைப்பு பெரிய தம்பணை, பெரிய பண்டிவிரிச்சான் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இப் பிரதேசத்தில் 2 கோடி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 571 சதுர மீற்றர் (20,274,571) நிலப்பரப்பிலிருந்து பெருந்தொகையாக கண்ணிவெடிகளையும் பல்வேறு வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக எப்.எஸ்.டி.அமைப்பின் பிரதிநிதியான இந்திய நாட்டைச் சேர்ந்த மேஜர் ராஜு தெரிவித்தார்.

அடர்ந்த காடுகளும், பாலடைந்த பிரதேசங்களாகும். இருப்பதால் பல்வேறு நவீன இயந்திரங்கள், உத்திகள் இதற்கு பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடி அகற்றும் இராணுவ படைப்பிரிவின் பொறுப்பாளர் கேர்ணல் பிரசந்த விமலசிறி உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நீதியும் சமாதானமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்: சரத் பொன்சேகா நத்தார் செய்தி

pr-can.jpgநீதியும், சமாதானமும் நிறைந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தமது நத்தார் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். அச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், பாவ சாபத்தில் இருந்து மீட்கும்படியாகவும் சிலுவையில் தன்னைத் தானே ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும்படியாக இந்தக் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட எனக்குக் கிடைத்த பாக்கியத்திற்காக நன்றி கூறுகிறேன்.

2009 ஆம் ஆண்டு எனக்கு விசேடமான வருடம். எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொண்டுவந்த வருடம். அதாவது, இவ்வருட நத்தார் சந்தோஷத்தோடு சமாதானம் நிறைந்த ஒரு சமூகம் ஒன்று உருவாவதற்கு நான் வழிநடத்திச் சென்ற உறுப்பினர்கள் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை அனைத்து மக்களுக்கும் உரித்தான கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு செல்லத் தடைசெய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலமாகிய மருதமடு மாதா தேவாலயத்திற்கு மறுபடியும் கத்தோலிக்கர்கள் சுற்றுலாச் சென்று பயமின்றிச் சுதந்திரமாக வணங்கி வரக்கூடியதாயிருக்கின்றபடியால் இன்று எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவிருக்கிறது.

கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் மத வழிபாடுகளுக்காக அந்த உன்னதமான பூமியை மீட்டெடுப்பதற்கு போராட்டத்தில் உயிர்நீத்த சகல மக்களையும் அதேபோல் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் சிவில் படையினரையும், எல்லாப் படையணிகளையும் இங்கு நான் நினைவு கூருகிறேன்.

பல மதத்தவர்களும் வாழ்கின்ற இந்த நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வரவேற்கும் இந்த நத்தார் மிக முக்கியமானதாகும். சிங்களம் மற்றும் தமிழ் பேசும் கத்தோலிக்க மதத்தவர்களைப் போன்றே பௌத்த, இந்து, முஸ்லிம் மதத்தவர்களுக்கும் இன்று ஓர் புதிய இலங்கை ஒன்றை அதாவது, ஒற்றுமையான சமாதானத்தின் முன் அநீதியான காரியங்களை அகற்றி, சாதாரணமான கீரிடத்தை தரித்துக்கொள்ளவும் மத வாழ்க்கை உயர்வாக எண்ணும்படியுமான இலங்கையை நிர்மாணிக்கும் பொறுப்பு உண்டு. இந்த படிப்பினையை ஒட்டி கத்தோலிக்கர்களைப் போன்று அனைத்து மதத்தவர்களும் நடப்பதற்கு பிரதிக்ஞை செய்துகொள்ளவேண்டும்.

பௌத்தர்கள், இந்து மத குருமார்கள் போதித்தவையும் இயேசு கிறிஸ்து போதித்தவையைப் போன்றவைதான்.  நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே இங்கு மிக முக்கியமானது. பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழியில் இவ்வாறு கூறப்படுகிறது:
உத்தம மனுஷன் தேவனுடைய கிருபையைப் பெறுவான். தீய எண்ணங்கள் உள்ளவனை நியாயம் தீர்ப்பார். மனுஷன் துன்மார்க்கத்திலே நிலைத்திருப்பதில்லை.
நீதிமானின் வேர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

அந்த உன்னதமான இயேசு கிறிஸ்துவின் நத்தார் பிறப்பைக் கொண்டாடும் நாம் நீதிமிக்க மனுஷராக, நீதிமிக்கதான ஒரு சமூகத்தையும் உண்டாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அந்தப் பரிசுத்தர் காட்டிய உன்னதமான வழி இதுவே.

சகல கத்தோலிக்க மதத்தவர்களுக்கும் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த நத்தாரைப் பிரார்த்திக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் 53 புதிய தபாலகங்கள் – தபால் சேவையை மேம்படுத்த 2,135 மில். ஒதுக்கீடு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளில் தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய இந்தப் பகுதிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி தெரிவித்தார். இதன்படி, ஜனவரி மாதத்திலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வட பகுதியில் 53 தபாலகங்கள் புதிதாக நிர்மாணிக் கப்படவுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததும், வடக்கில் புதிய தபால் ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தற்காலிக பணிப்பாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வன்னியில் யுத்தத்தின் காரணமாக சேதமான தபாலகங்களைப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ஏனைய தபாலகங்களில் உள்ள தொலைத்தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதேநேரம், தபால் ஊழியர்கள் மூலமாகத் தொலைபேசிப் பாவனை, இணையம் ஆகியவற்றுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். வடக்கே அடுத்த மூன்றாண்டு திட்டத்தில் தபால் சேவையை மேம்படுத்த 2, 135 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா புதிய நடவடிக்கை – விசாக்கள் தொடர்பில்..

indian-visa.jpgஇந்தியா வுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள்,  இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில்,  நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது. விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார். முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஷ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர். இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம்,  தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது 

40,000 மெ.தொ. அரிசியை உடன் இறக்குமதி செய்ய அரசு முடிவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வரும் கேள்வியை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

தனியார் வர்த்தகர்கள் பண்டிகைக் காலத்திற்கென விசேடமாக 44 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ள நிலையிலேயே அரச வாணிப கூட்டுத்தாபனம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதில் 15 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 28 ஆம் திகதியும் மிகுதி 25 ஆயிரம் மெற்றிக் தொன், அரிசி அடுத்த வாரமளவிலும் இலங்கையை வந்தடையவிருப்பதாக செயலாளர் பி.பி. ஜயசுந்தர மேலும் கூறினார்.

சமூகப் பணிகளைத் தவற விட்ட சைவ சமயமும் அதன் ஆலயங்களும் : மருத்துவ கலாநிதி என் சிவராஜா

Sivarajah_N_Dr( தற்போது வடக்கு கிழக்குத் தமிழர்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். அதுவும் இறுதியாக நடைபெற்ற யுத்தம் அவர்களது வாழ்நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. அவர்களது வாழ்நிலையை மேம்படுத்துவதிலும் எதிர்கால நம்பிக்கையை அளிப்பதிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சைவ ஆலயங்கள் மிக முக்கியமான பங்களிப்பினை அளிக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் ஆலயங்கள் கட்டப்பட்ட போதும் அவை மிகுந்த வருமானத்தை ஈட்டிய போதும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்கள் மட்டுமே சமூக அக்கறையுடன் செயற்படுகின்றன. ஏனையவை சுமூக கடமைகளை புறக்கணிக்கின்றன அல்லது தங்கள் இயலுமைக்கு ஏற்ப சமூகக் கடமைகளை மேற்கொள்வதில்லை.

அவ்வகையில் என் சிவராஜாவின் கீழுள்ள ஆய்வு பத்தாண்டுகள் பழமையானது ஆனாலும் சமூகநிலை இன்னமும் மோசமடைந்து உள்ளதே அல்லாமல் அதில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

யதார்த்தத்தை மீண்டும் ஓங்கிச் சொல்வதற்காக இதனைப் பிரசுரிக்கின்றோம்.

டொரன்டோ நகரில் 1999 ஆடித்திங்கள் 30 முதல் ஆவணித் திங்கள் 1 வரை நடைபெற்ற 7வது உலக சைவ மாநாட்டில் வாசிக்கப்பட்டது. )

._._._._._.

இந்த மாநாட்டின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பெருமுயற்சி வரவேற்கத் தக்கது. போற்றத் தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த முயற்சிக்கான வழிமுறைகளைப் பற்றி, பல கோணங்களிலிருந்து சிந்தித்துள்ளோம். விவாதித்துள்ளோம். பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்தே தீர்வுகளை தேடியுள்ளோம்.

நம் சொந்த மண்ணிலே, முக்கியமாக ஈழத்திலே தமிழிற்கும் சைவத்திற்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்ற ஒரு எண்ணத்தை பலரிடையே இது உருவாக்கியுள்ளது. இது ஒரு தவறான எண்ணமாகும்.

1995ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி, ஏறக்குறைய 700,000 தமிழர்கள், ஒரு இரவில் இடம்பெயர்ந்தார்கள். 7 மாதங்களின் பின், இடம்பெயர்ந்தோரில் அரைவாசிப்பேர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள். அங்கு அவர்களை வரவேற்றது இடிந்த சூறையாடப்பட்ட வீடுகளும், பள்ளிக்கூடங்களும், கோவில்களுமே.

வசதியுள்ளவர்கள் தங்கள் வீடுகளை திருத்தி அதில் வாழத்தொடங்கினார்கள். வசதியற்றவர்கள் செய்வதறியாது ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு சிலர் உதவினார்கள். இடிந்து போயிருந்த உள்ளங்களுக்கு ஊன்றுகோலாக இருந்தார்கள். குடிசைகளை திருத்துவதற்கு உதவினார்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் கொடுத்தார்கள், பாலர்களுக்கு பாடசாலைகளை அமைத்து ஆசிரியர்களை நியமித்தார்கள். பாடசாலை உபகரணங்களை கொடுத்தார்கள்.

இதற்கு மாறாக அந்த மக்கள், தங்கள் சைவ சமயத்தை விட்டு, அவர்களின் சமயத்தைத் தழுவினார்கள். இது நடந்து முடிந்த கதையல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் கதை. நாளையும் தொடரும் கதை.

இது மதம் மாறியவர்களினதோ, அல்லது மாற்றியவர்களினதோ தவறு அல்ல. எங்கள் தவறு. சைவ மக்களின் தவறு. எமது சமூகத்தில் வாழும், நலிந்த சைவ மக்களுக்கு நாம் உதவவில்லை. இன்று நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், ஏறக்குறைய 1500 கோவில்களில், மூன்றில் ஒரு பங்கு கோவில்களில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மை பூசுவது முதல் புதிய தேர் அமைப்பது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும். பெரிய பெரிய வாகனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு இருக்கும் – ஆனால் திருவிழாக் காலங்களில் வாகனங்களை தூக்குவதற்கு போதிய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்தத் திருப்பணி வேலைகள் பெருஞ் செலவில், பெரும்பாலும் புலம்பெயர்ந்தோரின் பணச்செலவில் செய்யப்படுகின்றன.

கோவில் திருப்பணிக்காக சேர்க்கும் பணத்தில், ஏன் ஒரு பகுதியை, கோவிலை அண்டியுள்ள ஏழை மக்களுக்காக செலவிடக்கூடாது? அன்பளிப்பு கொடுப்பவர்கள் ஏன் இந்த நிபந்தனையை விதிக்கக் கூடாது?.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி 6 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளில் சராசரி 8% பாடசாலை போவதில்லை. யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள வசதி படைத்தோரின் பிள்ளைகளில் 100% பாடசாலை சென்றபோதும் பின்தங்கிய கிராமங்களிலும், பின்தங்கிய சமூகங்களிலும் உள்ள பிள்ளைகளில் 30-60% பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் வறுமையாகும். பாடசாலை பருவப் பிள்ளைகளில் 10 சதவீதமானவர்களுக்கு தந்தை இல்லை. ஒன்றில் அவர் இறந்திருப்பார், காணாமற் போயிருப்பார், அல்லது படையினரால் பிடிபட்டிருப்பார்.

3-5 வயதிற்கு இடைப்பட்ட முன்பள்ளிச் சிறுவர்களில் அரைவாசிக்கு மேல் பாலர் பாடசாலைக்கு போவதில்லை. இந்த வயதினரில் 50% போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சனத்தொகையில் 12% ற்கு மேற்பட்டவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். பெரும்பாலானவர்கள் தனித்து வாழ்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் மருந்துகள் பாவிக்கிறார்கள்.

கர்ப்பமாக உள்ள தாய்மாரில் 6% குருதிச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் யாழ். வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளில் 23 சதவீதமானவர்கள் நிறை குறைந்த பிள்ளைகளாக பிறக்கிறார்கள்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக சைவ மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம். மற்றைய சமயங்களை சார்ந்தவர்களுக்கு அவர்களின் சமய நிறுவனங்கள் உதவுகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில் யாழ்ப்பாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு கோவில்கள்தான் இப்படியான சமூக சேவைகளை செய்கின்றன. தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் இந்தப்பணியில் முன்னணியில் நிற்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக ஒரு மகளீர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இன்று 60 ற்கும் மேற்பட்ட, பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகள் வளர்கிறார்கள். அனைவரும் பாடசாலை செல்கிறார்கள். நால்வர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்.

அனாதரவான முதியோரையும் சேர்த்து பராமரிக்க சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதைவிட சைவநூல்கள் வெளியிட ஒரு அச்சகம், நூல் நிலையங்கள் முதலியவற்றை இந்தக் கோவில் நடத்துகிறது.

ஆனைக்கோட்டை கரைப்பிரான பிள்ளையார் கோவிலின் சிவகுமார சர்மா என்ற ஒரு சிவாச்சாரியார் இருக்கிறார். அந்தக் கோவிலைச் சுற்றி ஏழைக்குடும்பங்கள் பல உள்ளன. அவர்களில் சிலர் மதம் மாறிக்கொண்டிருக்கின்றனர். அந்தச் சிவாச்சாரியார் கோவிலுக்கு அருகாமையில் ஒரு பாலர் பாடசாலையை ஆரம்பித்துள்ளார். இரண்டு ஆசிரியர்களை அமர்த்தியுள்ளார். பாலர் பாடசாலை பிள்ளைகளை ஒழுங்காக கோவிலுக்கு வந்து பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளச் செய்கிறார். குழந்தைகளுக்கு விளங்கக்கூடிய வகையில் சைவ நெறிகளை புகட்டுகிறார். கிராமத்து முதியவர்களை பயன்படுத்தி பிள்ளைகளுக்கு அறநெறி வகுப்புக்கள் நடத்துகிறார். அத்துடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்குகிறார், சீருடை வழங்குகிறார். இவ்வளவையும், தனது சொந்த முயற்சியால் ஊரில் பணம் சேர்த்து, செய்கிறார்.

இப்படி ஏன் மற்ற கோவில்கள் செய்ய முடியாது?

கோவில் திருப்பணிகளை நிறுத்திவிட்டு சமூகத்தொண்டு செய்ய வேண்டும். என்று நான் சொல்லவில்லை. கோவிலுக்கு சேரும் பணத்தில் குறைந்தது 10 சத வீதத்தையாவது. சமூகப்பணிக்கு செலவிட வேண்டும் என்றே கேட்கிறேன்.

அன்பர்களே,

இக்கருத்துகள் புரட்சியானவையல்ல. புதியதும் அல்ல. இவை எமது பழம்பெரும் சமயப் பண்பாடு. இல்லையேல்

‘நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காமே’.

என்று திருமூலர் கூறியிருக்க முடியாது. ‘அநாத இரட்சகர்’ ‘ஆபத் பாந்தவர்’ என்று எம் இறைவனை போற்றுவதிலும் அர்த்தமில்லை.

கனடா இந்து மாமன்றம், லண்டன் மெய்கண்டான் ஆதீனம் trust, உலக சைவப் பேரவை போன்ற நிறுவனங்கள் ஒரு நிதியத்தை உருவாக்கி, அந்த நிதியத்தின் மூலம் கோவில்களால் நடத்தப்படும் சமூகப் பணிகளுக்கு (முக்கியமாக கல்வி, போசாக்கு, சுகாதாரம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து) பண உதவி செய்யும் முயற்சியை ஆரம்பித்து வைத்தல், அது தமிழுக்கும், சைவத்திற்கும் செய்யும் பாரிய பணி எனவும். இந்த மகாநாட்டிற்கு கிடைத்த பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.

இந்த ஏழாவது உலக சைவ மகாநாட்டில் பங்கு பற்றும் வாய்ப்பை எனக்கும் எனது துணைவியாருக்கும் தந்துதவியதற்காக மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.

Dr. N Sivarajah
Consultant / Coordinator, Jaffna Field Unit
WORLD HEALTH ORGANIZATION

Violence hurts more If you do nothing about it.

கொழும்பு – வவுனியா ரயில் கல்கமுவவில் தடம் புரண்டது: 20 பயணிகள் காயம்

mail-rain.jpgகொழும் பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற  ரயில் இன்று காலை கல்கமுவ அருகில் தடம் புரண்டதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக இன்று காலை யாழ் தேவி ரயில் சேவை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்கள்!

anura-priya.jpgவர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி – ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவருத்தித் திட்டத்தின்கீழ் அங்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக கலந்துரையாடல் நடத்தவும் திட்டங்களை அமுல்படுத்தவும் இரு குழுக்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.

இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு அங்கீகாரம் – சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றம் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இதன்படி திட்டமிட்ட நடவடிக்கைகள் பதுளை, மொனராகல, ஹம்பந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை,  நுவரெலிய மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

தங்கல்லையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கான உத்தேச காரியாலயத்துக்கான கட்டடம் ஒன்றை தங்கல்லையில் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை வெளிநாட்டு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல முன்வைத்திருந்தார். நான்கு மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்துக்காக 99.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்துக்கு  அங்கீகாரம் – இலங்கை மருந்தக சங்கத்தைக் கூட்டிணைக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். இச்சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானதல்ல என அமைச்சரவை ஏற்றுள்ளது.

தனது கூற்று தவறானதென சரத் பொன்சேகா ஐ. நா. வுக்கு அறிவிக்கவேண்டும் -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்

சரத் பொன்சேகாவின் கூற்றினால் எழுந்துள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டமைச்சு நாட்டுக்குப் பாதிப்பில்லாத வகையில் பதிலொன்றைத் தயாரித்து ஐ. நா. வுக்கு அனுப்புமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தனது கூற்று தவறானது என சரத் பொன்சேகாவே கடிதமொன்றை ஐ. நா. விற்கு அனுப்பினாலொழிய இந்நெருக்கடி ஏற்படுத்தும் பாதிப்பை தவிர்க்க முடியாது என தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்குப் பின் இது தொடர்பிலான அனைத்து நெருக்கடிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.

தகவல்,  ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

ஐ. நா. விடமிருந்து இவ் விவகாரம் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்தாக வேண்டியுள்ளது. இவ் விவகாரமானது அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் இவ் விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் ஐ.நா. வைத் திருப்திப்படுத்த முடியாது.

சரத் பொன்சேகா அரசியல் இலாபத்திற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டை வெளியிட்டதாகவும் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே இவ்வாறு செய்ய நேர்ந்ததாகவும்ää தாம் குறிப்பிட்டுள்ளது போன்று ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றும் கடிதமொன்றை ஐ.நா. வுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் இப் பிரச்சினை இலகுவாகும். இல்லாவிடில் இப் பிரச்சினை பூதாகாரமாகி பல நெருக்கடிககளை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும்.
 

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 4வது போட்டி இன்று

catak.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 3 ஓட்டங்களிலும், கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் 7 விக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2வது போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 4வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றனர். கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய, கடைசி போட்டியிலும் ஆடவில்லை. இந்த தொடரில் அவர் கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் மட்டுமே ஆடினார்.காயத்தால் ஆடியதால் அவரால் சோபிக்க இயலவில்லை. மேலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவரை ஷெவாக் பந்துவீச அழைத்தார். 1 ஓவருக்கு மேல் அவரால் வீச இயலவில்லை. யுவராஜ்சிங்குக்கு பதிலாக விராட் கோலி இடம்பெறுவார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதால் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

தற்காலிக கப்டன் ஷெவாக், டெண்டுல்கர் ஆகியோர் தொடர்நது துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசையும் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும். தொடக்க ஜோடியின் அதிரடியான ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும். கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக வீசினார்கள். இதேபோல் திறமையான பந்துவீச்சை இன்றும் வெளிப்படுத்தினால் நான்றாக இருக்கும். 2 போட்டி தடை காரணமாக டோனி ஆடமாட்டார்.

நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணி கொல்கத்தா போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும். அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்சான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருக்கிறார். அவர் களத்தில் இருக்கும் வரை அபாயம்தான். இதனால் அவரை தொடக்கத்திலேயே ‘அவுட்’ செய்ய இந்திய வீரர்கள் புதிய யுக்தியை கையாள வேண்டும்.

மற்றொரு தொடக்க வீரர் உபுல்தரங்க, கப்டன் சங்கக்கார ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசை பலவீனமாக இருப்பதால் ஜயசூரிய இன்று களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஈடன்கார்டன் மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் 2வது களத்தடுப்பு செய்வதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

பகல் இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 117வது போட்டியாகும். இதுவரை நடந்த 116 ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ஆட்டங்களிலும், இலங்கை 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லை.