கிளி நொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10 குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது.
இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்பு முகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கை கொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்பினைக் கோரியிருந்த போது அவர்களது தரவுகளை அவர்களது நிலமைகளைக் கேட்டு இந்தத் தொழில் வாய்ப்புக்கான உதவிகளை வழங்கிய யேர்மனி டோட்மூண்டிலிருந்து பவானி , யேர்மனி ஸ்ருட்காட்டிலிருந்து மனோகாந்தன், டென்மார்க்கிலிருந்து திரு.திருமதி குணரட்ணம் யோகமலர் மற்றும் டென்மார்க்கிலிருந்து சுஜாதா சண்முகநாதன் அவர்களும் முன்வந்து உதவிகளை வழங்கியிருந்தனர்.
இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தையல் மெசின்கள், தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள், சிறுமளிகைக்கடை, சைக்கிள் திருத்தும் கடை, கோழிவளர்ப்பு மற்றும் ஆடுவளர்ப்பு போன்றவற்றுக்கான ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது.