Multiple Page/Post

இலங்கையில் இருந்து வந்த படகு கடலில் மூழ்கி 9 தமிழர்கள் பலி

boat.jpgபோர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்திய கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

indiannavyship.jpgதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தென் இந்திய கரையோரப் பகுதிகளில் ஊடுருவக் கூடுமென்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளா மற்றும் தமிழ மாநிலக் கரையோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விடுதலைப் புலி உறுப்பினர்களை ஊடுறுவ விடாது தடுப்பதற்கு விகேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லெப்டினன் ஜெனரல் நோபல் தும்புராஜ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்: மே தின பேரணிக்கு தடை

may-day.jpgதேர்தல் நடைபெறுவதால் மே தின ஊர்வலம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படுகிறது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஊர்வலம் நடத்துவார்கள். பின்னர் பொதுக் கூட்டம் நடத்துவார்கள்.

சென்னையில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஊர்வலமாக சென்று, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள். பின் வீர வணக்கமும் செலுத்துவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடப்பதால், மே தின ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணைய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகள் மாவட்ட எஸ்பி அலுவலகம், கமிஷனர் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. சென்னையில் மே தின ஊர்வலம் நடத்த 8 அரசியல் கட்சிகள் அனுமதி கேட்டுள்ளன. தேர்தல் கமிஷன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அரசியல் கட்சிகளின் தொழிற் சங்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

புலிகளின் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிடமுடியாது- ஹிமாலயன் டைம்ஸ்:

himalayan-times.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென தி ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலையமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இதனால் இன்னமும் மிகவும் வலுவாலன நிலையில் காணப்படுவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அ.தி.மு.க. பேச்சாளர் மீது செருப்பு வீச்சு; தி.மு.க. தொண்டர் கைது

மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேத்துப்பட்டு அம்பேத்கார் திடலில் தெருமுனை கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் சிங்கை அம்புஜம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தி.மு.க.வை தாக்கி ஆவேசமாக பேசினார். தலைவர்களையும் விமர்சித்து பேசினார். இதை கேட்டுக்கொண்டிருந்த தி.மு.க. தொண்டர் விஜய ஜம்பு திடீரென ஆவேசம் அடைந்து செருப்பை கழற்றி வீசினார். அந்த செருப்பு பேச்சாளர் மீது விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய வரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தன்ர். உடனே போலீசார் விஜயஜம்புவை கைது செய்தனர்.

பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில் ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்கள் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் அங்குள்ள கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சகல மீனவப் படகுகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு புலிகளின் தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்:-

பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள மிகவும் குறுகியதும், ஒடுக்கமானதுமான பிரதேசத்தில் முற்றாக முடக்கிவிடப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள் எவ்வாறாவது தப்பிச் செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர். பிரபாகரன் மற்றும் அவரை சுற்றியுள்ள முக்கியஸ்தர்கள் மாத்திரம் தப்பிச் செல்வதற்கென ஆறு பாரிய படகுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன தொழில் நுட்ப கருவிகள், ஜி. பி. எஸ். கருவிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட சகல வசதிகளையும் கொண்டதாக இந்த படகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தப்பிச் செல்பவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட மேலும் 5 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார். எனினும், புலிகள் எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாத வகையில் சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகள் தங்களது பாதுகாப்புக்காக பணயமாக பிடித்துவைத்துள்ள பொது மக்கள் தரைவழியையோ கடல் வழியையோ பயன்படுத்தி எந்த விதத்திலாவது தப்பி பாதுகாப்பு படையினரை நோக்கி வர தயாராகக் காத்திருக்கின்றனர். இந்த மக்கள் தரைவழியால் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி தடுத்துவரும் புலிகள் இந்த மக்கள் கடல் வழியை பயன்படுத்தி தப்பிச்செல்வதையும் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் உள்ள சகல மீனவப் படகுகளை உடைத்து தகர்க்கும் வகையிலும், எரித்து நாசமாக்கும் வகையிலும் புலிகளின் உயர்மட்டம் தமது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

பிரபாகரனைக் காப்பாற்றுவது சர்வதேசத்தின் நோக்கமல்ல மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறார் டேவிட் மிலிபான்ட்

pr-con.jpgபிரபாகரனை காப்பாற்றுவது சர்வதேச சமூகத்தின் நோக்கமில்லை. அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் மீது அக்கறை கொண்டே செயற்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பைத் தொடர்ந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

25 வருடமாக தொடரும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் காலம் உருவாகியுள்ளது. யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள போதும் சமாதானத்தின் மூலமே உண்மையான வெற்றி ஏற்படும். தடுத்து வைத்துள்ள பொதுமக்களை புலிகள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று பணியாற்ற ஐ.நா., ஐ.சி.ஆர்.சி. மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ப்படவேண்டும். அரசாங்கம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதை நாம் வரவேற்கிறோம். மனிதாபிமான செயற்பாடு களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை மீள்குடியேற்ற அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரித்தானியாவிலுள்ள தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரிட்டனில் வாழும் இலங்கை வாழ்தமிழ் மக்கள் தமது மக்களுக்காக இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர், அரசாங்கம் துரிதமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதோடு அம்மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்று சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

பிரான்ஸ் அமைச்சர்

இங்கு உரையாற்றிய பிரான்ஸ் தூதுவர் பேர்னாட் குச்னர் கூறியதாவது:

மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். 25 வருட காலமாக தொடரும் யுத்தத்திற்கு முடிவு கட்டப்படவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த மக்களுக்கு உதவி வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ சகல நாடுகளும் முன்வரவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களை பாதுகாக்கவும் மீட்கவும் ஆவன செய்யப்பட வேண்டும் என்றார்.

ரஜினி ரசிகர் தீக்குளிக்க முயற்சி: ரஜினி வீட்டின் முன்பு பரபரப்பு

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டின் முன்பு ரஜினி ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், ரஜினியை பார்க்க வந்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நுழைய முயன்றபோது, காவலாளிகள் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரம் அடைந்த ரசிகர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தீக்குளிக்க முயன்றவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விருதுநகரை சேர்ந்த ரஜினி ரசிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்படவேண்டும் ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடைவிதிக்கவில்லை -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpg
ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும் எனக் கூறிய ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபயவர்தன ஊடகச் சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடை எதுவும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மாத்தறை ராகுலக் கல்லூரியில் இடம் பெற்ற சிறுவர்களுக்கான “எமது தாய் கூறும் கதை’என்ற புத்தகத்தை வெளியிட்டபின் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பத்திரிகைச் சுதந்திரம் நாட்டில் இல்லையென்று கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. ஒரு அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று அந்த அரசாங்கத்திற்கு சக்தியையும் வலுவையும் முன்னெடுத்துச் செல்பவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் மேற்கொண்டு வரும் இந்த அர்ப்பண சேவையை அரசாங்கம் மறந்துவிட்டது.

அதேபோல் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் தவறுகளையும் வெளிப்படையாகவே வெளியிட்டு அவைகளைத் திருத்திவரவும் பின் நிற்பதில்லை. துணிச்சலுடன் நேர்மையாகச் செயல்படுபவர்களே உண்மையான ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மைகளை எழுத வேண்டும். எதையும் மிகைப்படுத்தி பிழையான செய்திகளை எழுதுவது பத்திரிகைத் தர்மத்துக்கு பிழையானது. சிலர் சில பத்திரிகையாளர்களை தமது கைக்குள் வைத்துக்கொண்டு தவறான கருத்துகளை வெளியிட முனைவது பிழையாகும்.

ஊடகவியலாளர்கள் எப்பக்கமும் சாராது எப்போதும் நடு நிலைமையிலேயே எழுத வேண்டும். இந்தநாட்டின் பத்திரிகைச் சுதந்திரம் எக்காரணம் கொண்டும் இருட்டடிப்புச் செய்யப்படமாட்டாது. சிறுவர்களை நல்லொழுக்கத்துடனும் கலாசாரப் பண்புகளுடனும் வளர்த்தெடுக்கவும் இவ்வாறான புத்தகங்கள் மென்மேலும் படைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையை இப்போது மக்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். மேலும் இச் சிந்தனையின் மூலம் சகல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக மேதினத்தை அமைதியாக அனுஷ்டிக்கத் தீர்மானம் -திகாம்பரம் தெரிவிப்பு

unp.jpgநாட்டின் இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கம் இவ்வருட மேதினத்தினை அமைதியான முறையில் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவர்கள், பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிருவாகச் செயலாளர் சிவலிங்கம், நிதிச் செயலாளர் எஸ்.செபஸ்டியன், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், பிரதேச சபை உறுப்பினர்களான நாகராஜ், சிவானந்தன், கிறிஸ்டோபர், மனோகர் சங்கத்தின் பிரதி தலைவர் புண்ணிய மூர்த்தி, உபதலைவர் தங்கவேலு, செயற்குழு உறுப்பினர் கே.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத் தமிழ் மக்கள் எமக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர். இந்த அங்கீகாரத்தின் ஊடாக மலையகத் தமிழ் மக்களுக்காக நாம் நேர்மையாக சேவையாற்ற திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

இன்று வடக்கில் இடம்பெறுகின்ற மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மால் இயன்ற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இவ்வாறானதொரு நிலையில் மக்களைத் திரட்டி மே தினக் கூட்டங்களைக் கொண்டாடும் மனநிலை எவருக்குமில்லை. ஆகவே இந்த மேதினத்தன்று தொழிலாளர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் எமது தொழிற்சங்க கொடிகளை ஏற்றி தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காகவும் நாட்டின் சமாதானத்துக்காகவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை மஸ்கெலியா, றம்பொடை, புரட்டொப், பூண்டுலோயா பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் விநியோகத்திட்டங்களை மே தினத்தன்று திறந்து வைக்கவுள்ளோம். இவ்வாறு மலையகத்தில் சுயநலம் கருதாத அரசியல் கலாசாரமொன்றினை நாம் ஆரம்பித்து வைக்கின்றோம். இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்குமாறு நாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசியுள்ளோம் என்றார்