நாட்டின் இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கம் இவ்வருட மேதினத்தினை அமைதியான முறையில் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவர்கள், பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிருவாகச் செயலாளர் சிவலிங்கம், நிதிச் செயலாளர் எஸ்.செபஸ்டியன், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், பிரதேச சபை உறுப்பினர்களான நாகராஜ், சிவானந்தன், கிறிஸ்டோபர், மனோகர் சங்கத்தின் பிரதி தலைவர் புண்ணிய மூர்த்தி, உபதலைவர் தங்கவேலு, செயற்குழு உறுப்பினர் கே.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத் தமிழ் மக்கள் எமக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர். இந்த அங்கீகாரத்தின் ஊடாக மலையகத் தமிழ் மக்களுக்காக நாம் நேர்மையாக சேவையாற்ற திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
இன்று வடக்கில் இடம்பெறுகின்ற மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மால் இயன்ற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இவ்வாறானதொரு நிலையில் மக்களைத் திரட்டி மே தினக் கூட்டங்களைக் கொண்டாடும் மனநிலை எவருக்குமில்லை. ஆகவே இந்த மேதினத்தன்று தொழிலாளர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் எமது தொழிற்சங்க கொடிகளை ஏற்றி தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காகவும் நாட்டின் சமாதானத்துக்காகவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இதேவேளை மஸ்கெலியா, றம்பொடை, புரட்டொப், பூண்டுலோயா பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் விநியோகத்திட்டங்களை மே தினத்தன்று திறந்து வைக்கவுள்ளோம். இவ்வாறு மலையகத்தில் சுயநலம் கருதாத அரசியல் கலாசாரமொன்றினை நாம் ஆரம்பித்து வைக்கின்றோம். இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்குமாறு நாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசியுள்ளோம் என்றார்