Multiple Page/Post

முதியோர்கள் 58 பேர் சமளங்குளம் முதியோர் இல்லத்தில் பராமரிப்பு

20090424063601srilanka4.jpgவன்னி யில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 58 பேர் சமளங்குளம் அரசினர் பாடசாலையில் இயங்கத் தொடங்கியுள்ள வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தமாக 66 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வயோதிபம் காரணமாக மரணமடைந்ததாகவும், இருவர் உறவினர்களின் வேண்டுகோளுக்கமைய அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய 58 பேர் இந்த முதியோர் இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலருக்கு உறவினர்கள் எவரும் இல்லையென்றும் பலர் தாமாக இயங்க முடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் அவையினர் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவையும் வழங்கி பராமரித்து வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தொண்டர்கள் இவர்களைப் பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதியோர் இல்லத்திற்கு எம்.எஸ்.எப். மற்றும் இன்ரநஷனல் ஹன்டிகப்ட் எனப்படும் வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம் ஆகியன தேவையான மெத்தைகள், சக்கர வண்டிகள் போன்றவற்றை வழங்கி உதவியுள்ளன. இந்த இல்லத்திற்குத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒக்ஸ்பாம் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போலி நோட்டுக்களுடன் மூவர் பொலிஸாரால் கைது

இரண்டாயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் மூவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர் பயன்படுத்திய கார், 33 போலி நோட்டுக்கள் மற்றும் ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபா பணம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். p/6 -285572 என்ற இலக்கமே 33 போலி நோட்டுக்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் போலி நோட்டுக்கள் எவ்வாறு, எங்கு அச்சிடப்பட்டது. இவற்றுக்கு எந்த அச்சகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வில்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலித ஜயரத்ன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.

கல்முனை ஐஸ்வாடியில் ஆயுதங்கள் மீட்பு

gun00.jpgகல்முனை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட ஐஸ்வாடியொன்றிலிருந்து சனிக்கிழமை இரவு ஆயுதங்கள் சில விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்தே கடற்கரையிலுள்ள பழைய ஐஸ்வாடிக்கு இரவு 9.30 மணியளவில் சென்ற படையினர் அங்கிருந்த சில ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பிஸ்ரல்1, கைக்குண்டு2, ரி.56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள்60, ரவைக்கூடுகள்2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பகுதியில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

திருகோணமலை – கொழும்பு ரயில்சேவை நேரத்தில் மாற்றம்

29-train.jpgதிரு கோணமலை கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதன்படி திருகோணமலையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ரயில் காலை 10 மணிக்கும் இரவு 7 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 7.30 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கொழும்பிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்ட ரயில் காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 9 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றம் திருகோணமலையிலிருந்து இரவு ரயிலில் கொழும்பு செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் காலை 6 மணிக்கு கொழும்பை சென்றடைந்த இந்த ரயில் தற்போது பெரும்பாலும் காலை 8.30 மணிக்கு கொழும்பை சென்றடைவதால் அலுவலகங்களில் கடமையாற்றுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இந்தப் பாதிப்புக்குப் பரிகாரம் காண ரயில்வே பகுதியினர் முன்வரவேண்டுமென அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பசில் ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் புல்மோட்டை அகதிகளை பார்வை

Wanni_War_IDPsஜனாதி பதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ. இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்தனர்.

புல்மோட்டை இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி மக்களையும் இவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் வன்னி அகதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சஹணகம (நிவாரணக்கிராமம்) இடைத்தங்கல் முகாம் வேலைகளையும் பார்வையிட்டனர்.

இந்த முகாமில் இருபதாயிரம் குடும்பங்களை குடியமர்த்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பத்தாயிரம் பேரை குடியமர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நலன்புரி நிலையத்தின் வேலைகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் முதலில் 10 ஆயிரம் பேரை இங்கு குடியமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களை வேறுஇடங்களில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜனாதிபதியின் ஆலோசகர், ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் புல்மோட்டையில் இயங்கும் இந்திய தளவைத்தியசாலைக்கும் சென்று அங்கு சிகிச்சை பெறும் வன்னிமக்களையும் பார்வையிட்டனர்.  இதேவேளை, இந்திய டாக்டர்கள் ஐவர் இங்கிருந்து செல்வதால் புதிய டாக்டர்கள் பொறுப்பேற்றனர்.

டெங்கு பரவுவதைத் தடுக்க தவறியோருக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவுவதனை தடுக்கத் தவறிய ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாத்ததும்பறை சுகாதார உத்தியோகஸ்தர் திருமதி எச். எம். சல்வத்துர ஆராச்சி வத்துகாமம் பகுதியில் இவ்வாறு டெங்கு பரவுவதை தடுக்க தவறியவர்களை அடையாளம் கண்டுள்ளார். பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அண்மைக்காலமாக 21 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடி க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இவர்கள் உதாசீனமாக இருந்துள்ளனர்.

பன்றி இறைச்சி விற்பனை பல பகுதிகளிலும் நிறுத்தம்

mexican.jpgபன்றிக் காய்ச்சல் உலகில் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கையிலும் பன்றி இறைச்சியை உண்பது தவிர்க்கப்பட்டுள்ளது. புத்தளம் கொழும்பு வீதியில் பல இடங்களில் பன்றி இறைச்சி விற்பனையாளர்களை ஞாயிற்றுக்கிழமை காண முடியவில்லை.

சந்தைகளில் பன்றி இறைச்சி விற்பனை நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகளில் பன்றி இறைச்சி வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வந்தது.  இங்குள்ள உல்லாசப்பயணிகள் ஹோட்டல்களிலும் பன்றி இறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் இப்பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு சுகாதார பகுதி அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.  பன்றிகள் நோய்களுக்கு உள்ளானவையா எனவும் பரிசோதிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமானநிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் வரும்போது அவர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதா என பரிசோதிக்கப்படுகின்றனர். பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் நிலையான வைப்பிலுள்ள நிதியை எடுக்க அனுமதி பெற வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்கள் நடப்பு வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் நிலையான வைப்பில் இடப்பட்டிருக்கும் நிதியினை மூலதன அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரத்தை உள்ளூராட்சி அமைச்சிடமிருந்து பெற வேண்டுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். தயாபரன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

உள்ளூராட்சி மன்றங்கள் முன்னைய வருடங்களின் நிலையான வைப்புக் கணக்கிலிருந்து பெற்று நடப்பு வருட அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற சட்ட விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினத் தலைப்பிற்கு மேலதிகமாக செலவு செய்வதாயின் வாக்குப் பணவகை மாற்றத் தின் மூலமே மேற்கொள்ள முடியும். கணக்காய்வு அத்தியட்சகரினால் ஏற்றுக் கொள்ளப்படாத கொடுப்பனவுக்குரிய தொகை அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் முதல்வர்கள், தலைவர்கள் மற்றும் அக் கொடுப்பனவுக்கான தீர்மானத்தை அங்கீகரித்த சபை அங்கத்தவர்கள் ஆகியோரிடமிருந்து அறவிடப்பட வேண்டிவரும்.

வெசாக் வார காலத்தில் ஏனைய மத உற்சவங்கள் நடைபெறக்கூடாது என்பது அரசியலமைப்புக்கு முரணானது – நுவரெலியா இந்து கலாசாரப் பேரவை

sri-lanka-upcountry.jpgபௌத் தர்களின் வெசாக் வாரத்தையொட்டிய காலப்பகுதியில் ஏனைய மதத்தவரின் உற்சவங்கள் நடைபெறக்கூடாதென்ற மனோபாவம் சகல மதங்களையும் பாதுகாத்து சகல மதத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கும் எமது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது.

இனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’. இவ்வாறு நுவரெலியா இந்துக் கலாசாரப் பேரவையின் தலைவரும், நுவரெலியா மாநகரசபையின் உறுப்பினருமான இரா.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்ற ஒரே மாதிரியான கலாசார வழிபாட்டு முறைகளைக் கொண்ட பௌத்த, இந்து சமய உற்சவங்களின் போது இத்தகைய முரண்பாடு தோன்றியிருப்பது அமைதியை விரும்புகின்ற பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் முழு நாட்டிற்குமே இது பாரிய பாதிப்புக்கு வழி கோலுவதாக அமையும்.

இவ்வாறு ஒரு மதம் சார்ந்த திருவிழாக்களைத் தடைசெய்து இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் காணப்படும் பரஸ்பர நல்லிணக்கத்திற்குப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியது.

ஒரு தேசிய பிரச்சினையாகவும் மாறிவிடலாம். இது தொடர்பாக ஜனாதிபதி கலாசார அமைச்சர் தேசிய நல்லிணக்க அமைச்சரும் மதத்தலைவர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் இறக்குவானை நகரின் முக்கியஸ்தர்கள் போன்றோர் கலந்துரையாடி ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆலயத்தின் உற்சவத்தினை எந்தவித தடையுமின்றி நடத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளிடம் தற்போது விமானங்கள் எதுவும் இல்லை; படையினர் தெரிவிப்பு

ltte_.jpgமுல் லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையில் அவர்கள் வசம் விமானங்கள் எதுவுமில்லையென படைத்தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பில் கடற்கரையோரமாக தற்போது புலிகள் 5 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் படையினர் விமானக் குண்டொன்றை கண்டுபிடித்ததாகவும் இது புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தும் ரகத்தைச் சேர்ந்த குண்டெனவும் படைத்தரப்பு கூறியது.

இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட போதும் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்களிடம் விமானங்கள் எதுவும் இருப்பதற்கான சாத்தியங்களில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.

இதேநேரம், கடந்த மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு முதலியார்குளம் பகுதியில் நடைபெற்ற தேடுதலின் போது புலிகளின் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எட்டுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இலகுரக விமானமொன்றை வைத்திருக்கும் சாத்தியங்களிருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறியிருந்தன. எனினும் அதனைப் படையினர் மறுத்துள்ளனர்.