திரு கோணமலை கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி திருகோணமலையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ரயில் காலை 10 மணிக்கும் இரவு 7 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 7.30 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கொழும்பிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்ட ரயில் காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 9 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றம் திருகோணமலையிலிருந்து இரவு ரயிலில் கொழும்பு செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னர் காலை 6 மணிக்கு கொழும்பை சென்றடைந்த இந்த ரயில் தற்போது பெரும்பாலும் காலை 8.30 மணிக்கு கொழும்பை சென்றடைவதால் அலுவலகங்களில் கடமையாற்றுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இந்தப் பாதிப்புக்குப் பரிகாரம் காண ரயில்வே பகுதியினர் முன்வரவேண்டுமென அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.