Multiple Page/Post

பிரான்ஸில் பௌத்த வழிபாட்டிடத்தின் மீது தாக்குதல்

vesak.jpgபிரான்ஸ் நாட்டில் உள்ள பௌத்த மத வழிபாட்டு இடம் ஒன்றை தமிழில் பேசியவர்கள் சிலர் தாக்கி சேதம் விளைவித்ததாக முறையிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் உள்ள சர்வதேச பௌத்த மையம் என்ற வழிபாட்டிடமே நேற்று மாலை அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டதாக அந்த வழிபாட்டிடத்தின் தலைமை மதகுரு தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டிடம் சோடனை செய்யப்பட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இது பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் எட்டு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், வந்தவர்கள் தமிழில் பேசிக்கொண்டதாகவும், அவர்கள் கைகளில் தடிகள் கொண்டுவந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் ஆட்களே இதற்கு காரணம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்

ரொறன்ரோ நகரில் தமிழர்கள் மாபெரும் பேரணி: போக்குவரத்து செயலிழப்பு எனத் தகவல்

canada1.jpgஇலங்கையின் வடக்கே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகளால் ரொறன்ரோ நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தமிழர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கார்டினர் நெடுஞ்சாலை இரவு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸார் 7:50 மணியளவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பில் கனடிய அரசாங்கம் உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான கோர்மி தேவா தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரொறன்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும், நகரின் முக்கிய பாதையான கார்டினர் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக செயலிழந்திருந்தது.

கண்டி அஸ்கிரிய மைதானம் யாருக்கு சொந்தம் திரித்துவக் கல்லூரிக்கா, அஸ்கிரிய ஆலயத்துக்கா -இன்று கண்டியில் உயர்மட்டக் கூட்டம்

asgiriya.jpgகண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானம் கண்டி திரித்துவக் கல்லூரிக்குச் சொந்தமானதா? அல்லது அஸ்கிரிய பீடத்துக்குச் சொந்தமானதா? என்ற சர்ச்சை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை விட்டு திரித்துவக் கல்லூரி இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டுமென அஸ்கிரிய ஆலயம் திரித்துவக் கல்லூரிக்கு கடிதம் மூலம் அறவித்துள்ளது.

இதனால் இப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று திங்கட்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் திரித்துவக் கல்லூரி பிரதிநிதிகளும் அஸ்கிரிய ஆலயப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு தரப்பினரும் இம்மைதானம் தமக்குரியது என்று உரிமை கோரிவருகின்றனர்.

1911 ஆம் ஆண்டு இந்த மைதானக் காணியை இலங்கை அரசிடம் இருந்து திரித்துவக் கல்லூரி குத்தகைக்குப் பெற்றுக்கொண்டதுடன் அது தொடர்பான ஆவணத்தில் அன்றைய இலங்கையின் ஆளுநர் (கவர்னர்) ஒப்பமிட்டதாகவும் இக்கல்லூரியின் அதிபரும் ஒய்வு பெற்ற பிரிகேடியருமான டபிள்யூ.ஜீ.கே.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இக்கல்லூரி மேலும் காணியை குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளும் அனுமதியும் வர்த்தமானி மூலம் பின்னர் வெளியிடப்பட்டது எனவும் அவர் கூறினார்.

1985 இல் மேலும் சில காணிகளை மைதானத்துடன் இணைத்துக் கொள்வதற்கு குத்தகை உடன்படிக்கை ஒன்று அரச காணி சட்ட விதிகளின் கீழ் கைச்சாத்திடப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அதில் ஒப்பமிட்டார். 2005 இல் சில காணிகள் இதற்கு வாங்கப்பட்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அது தொடர்பான ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளார்.

இது தொடர்பாக தகுந்த ஆவணங்களும் உறுதிகளும் எம்மிடம் உள்ளன. இதற்கான வரிகளும் எம்மால் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அதிபர் தெரிவித்தார். இதேவேளை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண உடுகம ஸ்ரீ புத்தரஹிந்த தேரர் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்;

கண்டி திரித்துவக் கல்லூரியின் இந்த மைதானம் தொடர்பான குத்தகைக்காலம் காலாவதியாகிவிட்டது என்றார். நூறு வருடங்களுக்கு மேலாகக் கண்டி திருத்துவக் கல்லூரியுடன் இணைந்துள்ள இந்த மைதானம் 1980 களில் அன்றைய இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவரும் அமைச்சரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான காமினி திஸநாயக்காவினால் சர்வதேச கிரிக்கெட் மைதானமாக தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் பலிப்பான ஸ்ரீ சந்தானந்த சர்வதேச பாடசாலை அதிபரிடம் அஸ்கிரிய மைதானத்தை வைபவரீதியாக கையளித்துள்ளார். இதனையடுத்தே இந்தப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளது.

யாழ். குடாநாட்டிற்குள் ஊடுருவியுள்ள புலிகளை உடனடியாக சரணடையுமாறு இராணுவம் அறிவிப்பு

saran.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்துள்ள மக்களோடு மக்களாக விடுதலைப்புலி உறுப்பினர்களும் ஊடுருவியுள்ளனர் என்றும் இவ்வாறு ஊடுருவிய புலி உறுப்பினர்களை உடனடியாக சரணடையுமாறும் இராணுவத்தினர் அறிவித்து வருகின்றனர்.
வலி. மேற்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆட்டோ வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தனர்.

அவ்வறிவிப்பில், யாழ். மாவட்டத்துக்குள் அண்மைக்காலமாக புலி உறுப்பினர்கள் ஊடுருவி வருகின்றனர். இவ்வாறு ஊடுருவி வரும் புலி உறுப்பினர்களுடன் தொடர்புவைத்திருப்பதையோ, உணவு வழங்குவதையோ முற்றாகத் தவிர்ப்பதோடு அவர்கள் தொடர்பான விடயத்தை உடனடியாக எமக்கு அறிவித்து உதவுங்கள்.

இதைவிடுத்து அவர்களை மறைத்து வைத்து உணவளித்து தகவல் வழங்காது இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் செய்தியாளர்களை இலங்கை திருப்பி அனுப்பியமை குறித்து பிரிட்டன் ஏமாற்றம்

channel-4news.jpg
இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர் குழு ஒன்றை திருப்பி அனுப்பியது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை படையினரின் அந்தஸ்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர்களை, இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தப்பி முககாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் மோசமாக நடத்தப்படுவது, மற்றும் அவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவது ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற இவர்கள் மூவரும் பிரிட்டனின் ”சனல் 4” தொலைக்காட்சியை சேர்ந்தவர்களாவர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தாம் சில தவறுகளை செய்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டதாக, இலங்கை பாதுகாப்பு தகவல் மையத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் ஹுலுகல்ல அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மை தேவை என்ற நிலைமை இருக்கின்ற நிலையில், இவர்களை திருப்பி அனுப்புவதற்காக இலங்கை எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

sri-lankan-schools.jpgமட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவார காலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடைவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பியது. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுச்சிகா (8 வயது) பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவததையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே நிலவிய அச்ச நிலை காரணமாகவும்,மாணவியின் படுகொலையைக் கண்டித்து அனுஷ்டிக்கப்படட பாடசாலை பகிஷ்கரிப்பு காரணமாகவும் நகர பிரதேச பாடசாலைகளில் கடந்த 30 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஒரு வார காலத்தின் பின்பு பாடசாலைகளில் வழமை போல் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெற்றாலும் மாணவர் வரவு குறிப்பாக ஆரம்ப பிரிவுகளில் வழமை நாட்களை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.

அரசாங்கத் தடையை மீறி வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்ற 900 பேர் கைது

vesak.jpgஅரசாங்கத் தடையை மீறி வெசாக் பண்டிகையின் போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 900 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்தது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8ஆம் 9ஆம் திகதிகளில் மதுபானக்கடைகள் மூடப்ப்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டதுடன்  மதுபானம் விற்பனையை மேற்கொள்வதும்  தடை செய்யப்பட்டிருந்தது.

வெசாக் பண்டிகையின் போது நடத்தப்பட்ட சுமார் 850 சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைதானதாக கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவர்கள் மற்றும் மதுபானம் அருந்தியவர்கள் போன்றோரும்  இதில் அடங்குவர். நாடு பூராவும் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது. 

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக் கூட்டம் – கொழும்பில் நாளை ஆரம்பம்

european-union.jpgஐரோப்பிய நாடுகளுக்கும்  இலங்கைக்குமிடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது தொடர்பான இருநாள் உயர்மட்டக் கூட்டமொன்று நாளை 12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இக் கூட்டத்தின் போது இருபக்க நல்லுறவை மேலும் மேம்படுத்துவது, வர்த்தக உறவுகள்,  இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கள்,  அரசியல் நிலைமை என்பன தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவரின் பிரதிநிதியாக செக் குடியரசின் பிரதி-வெளிவிவகார அமைச்சர் ஹெலோனா பம்பசேவா தலைமையிலான குழுவினர்,  கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்புக்கு வந்து சேர்வர் என்றும் அவர் கூறினார். அதேநேரம் இக்கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்படவிருக்கும் சுவீடன் நாட்டவரின் பிரதிநிதியாக அந்நாட்டு வெளி விவகார அமைச்சுப் பணிப்பாளர் நாயகம் கார்ல்ஹெம்ரிக் எரிங்க்குளோனா,  ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் வெளிஉறவுகளுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ரீட் ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். இவர்களும் இன்று கொழும்புக்கு வந்து சேரவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது, நாளை முதல் இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகளும் பங்குபற்றவிருக்கின்றனர். 

ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

election-commission.jpgஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று மாலை 5.00 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரயுமான ராஜேஷ் லக்காணி தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் 13ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளன்று நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,

தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் வழிகாட்டும் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு கட்சி சின்னம், கொடி, போஸ்டர் போன்றவைகளை வைத்திருக்க கூடாது. உணவு பண்டங்கள் எதையும் வழங்கக் கூடாது. அங்கு 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூட்டமாக இருக்க அனுமதி இல்லை. முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்படும் நபர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். அந்த நபர்கள் குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது.

வேட்பாளராகவோ அல்லது வாக்களிக்க செல்லும் வாக்காளராகவோ இல்லாத பட்சத்தில் எந்த ஒரு அமைச்சரும் வாக்குச்சாவடிக்குள் செல்லக் கூடாது. அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்ட நபர் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பு அலுவலருடன் செல்லலாம். ஆனால், தொகுதி முழுவதும் பாதுகாப்பு அலுவலருடன் சுற்றி வரக்கூடாது.

அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு பெற்ற நபர்கள் வாக்களிக்க பாதுகாவலருடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகளை அரசியல் கட்சிகள் எப்படி பின்பற்றுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டைரக்டர் பாரதிராஜாவை விடுதலை செய்ய வேண்டும்: தா.பாண்டியன்

bharathi-raja.jpgடைரக்டர் பாரதிராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, ஓவியர் சந்தானம், திரைப்பட நடிகர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் சோனியா காந்திக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய அளவில் இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுள்ள சூழலில் அதைக் கண்டிக்கும் முயற்சியாகத்தான் இந்தக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த நியாயமான கோரிக்கையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் தண்டிக்க முயற்சி செய்யும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.