மட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவார காலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடைவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பியது. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுச்சிகா (8 வயது) பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவததையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே நிலவிய அச்ச நிலை காரணமாகவும்,மாணவியின் படுகொலையைக் கண்டித்து அனுஷ்டிக்கப்படட பாடசாலை பகிஷ்கரிப்பு காரணமாகவும் நகர பிரதேச பாடசாலைகளில் கடந்த 30 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
ஒரு வார காலத்தின் பின்பு பாடசாலைகளில் வழமை போல் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெற்றாலும் மாணவர் வரவு குறிப்பாக ஆரம்ப பிரிவுகளில் வழமை நாட்களை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.