- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் தலைமையிலான இந்தியத் தூதரகக் குழு ஒன்று இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது. நாளை மாலை வரை இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்புப் பிரிவு இணைப்பாளர் கப்டன் பிரதாப்சிங், அரசியல் பிரிவு அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று செல்கின்றனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழகம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் விஜயம் செய்து அங்கு இந்தியப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வர்.
யாழ். குடாநாட்டில் கலாசாரப் பரிவர்த்தனைத் திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றிலும் மக்களின் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் இந்தியா ஆற்றக்கூடிய ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இக்குழு கண்டறியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது
இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு கட்டுநாயக்க அதிவேப் பாதை அமைப்புப் பணிகள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டபின்னர் நேற்று நாடு திரும்பிய அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளரிடம் இதனைத் தெரிவித்தார்.
சீன வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார். இலங்கையில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா ஒரு பில்லியன் டொலர்களை ஏற்கவே வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இதேவேளை, சீனாவின் சின்சுவான் பிரதேசத்தில் இலங்கையின் உதவித் தூதுவர் காரியாலயம் ஒன்றைத் திறப்பது தொடர்பாக சீனாவின் கம்யனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் அமைச்சர் பேச்சசுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களிலில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவத்தினரின் உதவியை வழங்க உள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் செயற்பாட்டிற்கும் அவற்றை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்திய இராணுவக் குழுவினர்ää இலங்கை அதிகாரிகளுக்கு உதவிகளை வழங்குவார்கள் எனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவ வல்லுனர்களையும் இராணுவ உபகரணங்களையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இங்கு இராணுவ வல்லுனர்களை அனுப்பும் விடயமானது சாத்தியமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மருத்துவ குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கொலனியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டயகம பிரதேசத்தில் முன்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முற்பகல் வேளை வரை ஆசிரியை முன்பள்ளிக்கு வருகைதராததால் பெற்றோர்கள், ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ளமையை அறிந்து அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த இந்த முன்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டமையானது டயகம பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் போராட்டத்திற்கு பின்னர் மகுடம் சூடிய பெடரர், பீட் சாம்ப்ராஸின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கௌரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி அரங்கேறியது.
கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், 6ஆம் நிலை வீரர் அமெரிக்காவின் அன்டி ரொடிக்கும் சந்தித்தனர். இறுதிப் போட்டிக்கே உரிய விறுவிறுப்புடன் இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடினர். இதனால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இதில் 4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6, (86), 7-6, (75), 3-6, 1-614 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரொடிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர். 27 வயதான பெடரர் 6ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க பீட் சாம்ப்ராஸின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம்பெற்றார்.
ஓய்வு பெற்ற பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும் அமெரிக்க ஓபனை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால், பிரெஞ்ச் ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையினால் வைத்திய சேவைகளின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது. உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு சுற்றிக்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்யக் கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடெங்கிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மட்டுமே இன்று இடம்பெற்றதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் கூறினார். அதேவேளை, உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பான முரண்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் இன்றுடன் இந்த உலகுக்கு பிரியா விடை கொடுக்கிறார். அவரது உடல் இன்று லாஸ் ஏஞ்சலெஸில் அடக்கம் செய்யப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் வருவோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். டிக்கெட் இல்லாமல் வர முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான டிக்கெட் கோரி ஆன்லைன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 17 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பபட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பில் இறுதிச் சடங்குகளைக் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரசிகர்கள் பெருமளவில் கூடி வருவதால் பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் ஏற்பட்டால் தடுக்கவும் போலீஸார் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவுகின்றன.
அவரது பிரதேப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் கூட வெளியாகவில்லை. இரண்டு முறை அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதையும் தனது இசையாலும்இ நடனத்தாலும் கட்டிப் போட்ட ஜாக்சன் இன்று நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டு பிரிகிறார். இதனால் அவரது கோடானு கோடி ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில் ஐவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரில் தொழில் அமைச்சில் கடமை புரியும் இருவர், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆகியவர்களின் பெயர்களை பயன்படுத்தியே இவர்கள் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமைச்சர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து தருவதாக பொய் வாக்குறுதிகளை கூறியே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சில அமைச்சுக்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததோடு இது தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இது தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் அனுமதியை கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் முன்தினம் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
பாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.
கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி, சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தரங்க பரணவிதான 72 ஓட்டங்களைப் பெற்றார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பரணவிதான இப்போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைப் பெற்றதோடு அதிகூடிய ஓட்டத்தையும் பதிவு செய்துகொண்டார்.
தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 342 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணிக்காக யூசுப் யொஹானா 112 ஓட்டங்களையும் மிஸ்பாஉல் ஹக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடிய இலங்கை அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த பரணவிதானவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கூடிய எண்ணிக்கையாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.
50 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்ற நிலையில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னதாகவே சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.
இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.