Multiple Page/Post

சில தமிழ் பகுதிகளில் மக்கள் இராணுவ வீதித் தடைகளைக் கோருகின்றனர் !

சில தமிழ் பகுதிகளில் மக்கள் இராணுவ வீதித் தடைகளைக் கோருகின்றனர் !

வடக்கில் இராணுவ நீக்கம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ வீதித் தடைகள் அகற்றப்பட்டு பாதைகள் திறந்துவிடப்பட்டமை தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்கள், இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இராணுவத் தடைகளை மீள எற்படுத்துமாறு கோருகின்றனர் என வடக்கு ஆளுநர் வேதநாயகன் அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பகுதிகளில் களவுகள், வன்முறைச் சம்பவங்கள், கள்ள மண் ஏற்றுவது, கள்ள மரம் வெட்டுவது போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாலேயே இக்கோரிக்கை வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா

தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா

தனிச் சிங்களச் சட்டம் என்பது ஆங்கிலம் மட்டும் தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை என்கிறார் முன்னாள் இலங்கை ராஜதந்திரியும் இலங்கை நிர்வாக சேவைத்துறை பயிற்றுவிப்பாளரும் பத்தி எழுத்தாளருமான அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம். இவர் தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டு வந்ததாகச் சுட்டிக்காட்டி, தனிச் சிங்களச்சட்டம் என்பது அப்படியான ஒரு மாயயை தான் எனத் தெரிவித்தார். தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம், The Official Language Act (No. 33 of 1956), என்பதை ஆங்கில மொழி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெப்பிகாரத்திலேயே, ‘தனிச் சிங்களச் சட்டம்’ என முத்திரை குத்தினார் என்ற அடிப்படையில் தர்மகுலசிங்கம் தன் கருத்தை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 1956இல் மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டிருக்காவிடில் இன்றுள்ள நிலைக்குத் தமிழ் மொழி வளர்ச்சியடைந்திருக்க மாட்டாது எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நன்மதிப்பிற்குரியவராக இருந்த பேராசிரியரர் நந்தி 1956 ஆம் ஆண்டு மொழிக்கொள்கையால் தமிழ் மொழியடைந்த வளர்ச்சியைப் பெருமிதமாகக் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தரப்படுத்தல் கூட எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மட்டும் இருந்து பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உருவான நிலையை மாற்றி, இலங்கையின் சகல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்கின்ற நிலையை ஏற்படுத்தியது இந்தத் தரப்படுத்தல் தான் எனவும் அவர் தெரிவித்தார். அதனால் தான் தற்போது எல்லா மாவட்டங்களிலும் ஓரளவுக்காவது ஒரு சில வைத்தியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளனர் என்பதையும் தர்மகுலசிங்கம் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் தமிழர்களுடைய பிரச்சினையை இந்த அரசாங்கத்துடனேயே பேசித் தீர்ப்பதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம், அதனால் தமிழ் தலைமைகள் விவேகமாகச் செயற்பட்டு ஜனாதிபதி அனுரவின் தலைமையிலான இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சகோதரங்கள். நாங்கள் இந்தியாவிடம் போய் நிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது ! எல் எஸ் எஸ் பி தலைவர் திஸ்ஸ விதாரண

தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது ! எல் எஸ் எஸ் பி தலைவர் திஸ்ஸ விதாரண..!

வெவ்வேறு கூட்டு முன்னணிகளில் இணைந்து கொண்டாலும், தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் அழுத்தம் கொடுத்துவரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டங்களை துரிதப்படுத்துவதாக தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ள திஸ்ஸ விதாரண, இப்புதிய அரசியலமைப்பினூடாக தமிழர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தான் வலியுறுத்தி இருப்தாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முயற்சிகள் எடுத்த போதும் அவர்களிடம் இதுபற்றிய புரிதல் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார் திஸ்ஸ விதாரண. “மஹிந்த ராஜபக்சவைச் சுற்றி இருந்தவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு எதிராகச் செயற்பட்டனர். கோட்டபாயா ராஜபக்ச அரசியலமைப்புப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. ரணில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் முயற்சி எடுத்தார் ஆனால் அவர் சம்ஸ்டியை ஏற்கவில்லை” எனபதையும் சுட்டிக்காட்டினார் அவர்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் திஸ்ஸ விதாரண தலைமையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் வரையப்பட்டது. அதன்போது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு விஜயம் செய்த திஸ்ஸ விதாரண, புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக எழுபதுக்களில் தன்னோடு பயணித்த இடதுசாரிச் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து அத்தீர்வுத் திட்டத்திற்கு வலுச்சேர்க்க முற்பட்டிருந்தார். ஆனால் அத்திட்டத்தில் இருந்த சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கூட பின்னர் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் அழுத்தங்களினால் நீக்கப்பட்டு மிகப் பலவீனமான நிலையை எட்டியது.

இப்போது, தமிழ் மக்களையும் இணைத்து பயணிக்கும் ஒரு பொதுத் தலைமைத்துவமாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. அனைவருக்குமான இலங்கை, அதில் எல்லோரும் சரி சமானமாக நடத்தப்படுவார்கள் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது. அதனால் இப்புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இந்த அரசியல் அமைப்பில் சிறுபான்மையினங்களுடைய பாதுகாப்பு, அவர்களுடைய அரசியல் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது பற்றிய தீர்மானங்கள், அனைத்து சமூகங்களுடனும் கலந்தாலோசித்தே எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரா தெரிவித்துள்ளார். அதே கருத்தையே ஜேவிபி இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியவாதக் கட்சிகளைப் பொறுத்த வரை, தமிழரசுக் கட்சி சமஸ்டித் தீர்வைக் கோருகின்றது, தீர்வின் பெயரில் சர்ச்சைப்படவில்லை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு சாத்தியமில்லை என்கிறது. ஜனநாயகத் தமிழ் தேசிய முன்னணிக்கு அரசியல் கொள்கை என்று ஏதும் இல்லை. இந்தியாவின் 13வது திருத்தம், மாகாணசபையோடு அவர்கள் திருப்திப்பட்டுள்ளனர். முன்னாள் முதலமைசசர் வரதராஜப் பெருமாளும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் அமோக ஆதரவோடும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேச வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் கருதவில்லை.

79 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்செய்யப் பயணம் ! இந்த முடிவு சரியானதா ?

79 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்செய்யப் பயணம் ! இந்த முடிவு சரியானதா ?

79 இலங்கையர்கள், இஸ்ரேலில் தொழில் செய்வதற்காக நேற்றுப் பயணப்பட்டனர் என வெளிநாட்டு தொழில் வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவி கோசலா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாயம் மற்றும் கட்டிட நிர்மாணங்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர். உலகத்தின் மிகப் பதட்டமான பிராந்தியமாக மாறியுள்ள மத்திய கிழக்கிற்கு குறிப்பாக இஸ்ரேலுக்கு இவர்கள் தொழில்பெற்று சொந்த விருப்பில் அல்லது தேவைகளின் அழுத்தங்களால் இவ்வேலைக்குச் செல்கின்றனர். இஸ்ரேல் மத்திய கிழக்கு யுத்தத்தின் காரணியாகவும் மையப்புள்ளியாகவும் இருக்கையில், இலங்கையர்களை அந்நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவது, மனித உரிமைவாதிகள் தங்கள் புருவத்தை உயர்த்தும்படி செய்துள்ளது.

கடந்த காலங்களில் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களே இஸ்ரேலின் விவசாய, கட்டிடத் துறைகளில் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஓக்ரோபர் 7 தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனவாதத் தாக்குதலாலும் இஸ்ரேலில் பணியாற்றிய பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்புவதற்கே இஸ்ரேல் வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்கின்றது. இந்தியாவிலிருந்து இராணுவத்திற்கும் இஸ்ரோல் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தினிய மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களுடைய பறிக்கப்பட்ட உரிமைகளை கவனத்தில் கொள்ளாது, அவர்களுக்கு மாற்றீடாக தொழிலாளர்களை இலங்கையிலிருந்து அனுப்பி வைப்பது சரியான அரசியல் முடிவல்ல, என பாலஸ்தினியர்களுக்காகக் குரல் கொடுத்துவருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களின் காணிகளை அபகரித்து தனது குடியேற்றத் திட்டங்களை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஜனவரியில் டொனால் ட்ரம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும், அவருடைய மருமகன் ஜெராட் குஷ்னர் காஸா கடற்கரையில் புதிய கட்டுமானங்களை அமைத்து, பாலஸ்தீனியர்கள் அல்லாதவர்களை குடியேற்றத் திட்டமிட்டுள்ளார். அதற்கான ‘கிளீன் காஸா’ திட்டமே காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதல். இதற்கும் ஒக்ரோபர் 7 தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கிளீன் காஸா திட்டம் ஒக்ரோபர் 7, 2023க்கு முன்பு 2019ற்கு முன்னரே திட்;டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  – இரா.சாணக்கியன்

நாங்கள் அரசாங்கத்துடன் போய் சண்டை பிடித்து, அரசாங்கத்தை விமர்சனம் செய்து, அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை உடன் இருக்கின்ற அரசாங்கத்தில் அரசியல் தீர்வு விடயத்தை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் அதனை நாங்கள் சாதகமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவில் கருத்துரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இதன்போது சாணக்கியன்  மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே அரிசி தட்டுப்பாடு வந்தபோது அமைச்சர் தெரிவித்தார், சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 210 ரூபாவுக்கு அரசியும், 130 ரூபாவுக்கு தேங்காயும் கொள்வனவு செய்யலாம் என தெரிவித்தார். மக்கள் அதனை கொள்வனவும் செய்யலாம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு சதொச விற்பனை நிலையம் கூட இல்லை.  எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசாமல் இருக்க முடியாது. தற்போது அரிசி பாரிய தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளது. அது  விவசாயிகள் மத்தியில் பெரிய பிரச்சனையாக வந்துள்ளது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்கின்றது. எமது பிரதேசத்தில் பல விவசாயிகள் இருக்கிறார்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஹெக்டேயர்களில் வேளாண்மை செய்திருக்கின்றார்கள்.  தற்போது அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதன் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்குவதற்கான கோரிக்கை செய்யப்பட்ட அரிசி இலங்கைக்கு நேற்றைய தினம்தான் வந்து இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எமது பகுதி ஜனவரி பெப்ரவரி மாதத்தில் தான் நெல் அறுவடை செய்கின்ற காலம்.

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி தற்போது சந்தைக்கு வருமாறு இருந்தால் ஜனவரி 15ஆம் தேதி வரைக்கும் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்த அரிசி போய் சேரும். அந்த வேளையில் அரிசியின் விலை குறையும். அந்த சந்தர்ப்பத்தில் எமது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லின் விலை குறைவடையும். நெல்லின் விலை குறைவடையும் பகுதி பட்சத்தில் எமது விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொள்வார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம் என சொன்னார்கள். ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் என்றார்கள். அந்த இழப்பீட்டுத் தொகையும் விவசாயிகள் பயிர் மீண்டும் பயிர் செய்து மூன்றாவது உரம் இடும் காலப்பகுதியில் தான் அந்த தொகை வழங்கப்படும் இச்சூழ்நிலையில்தான் தற்போது அரசாங்கத்தின் நிலைமை சென்று கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த கூட்டுறவு சங்கங்களை இன்னும் மென்மேலும் பலப்படுத்தினால் அரிசி பிரச்சனைகள் போன்ற விடயங்கள் எழும்போது எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரம் மீது மோசடி விசாரணைப் பணியகம் விசாரணை !

ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரம் மீது மோசடி விசாரணைப் பணியகம் விசாரணை !

தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, பாக்கிய செல்வம் அரியநேத்திரம், பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்தன முதலான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகும் – கிளிநொச்சி ஊடக அமையம்

20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகும் – கிளிநொச்சி ஊடக அமையம்

கிளிநொச்சியில் சுயாதீன  ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை  இனந்தெரியாதோரால்  கடத்த முற்பட்டதையும்  தாக்கப்பட்டமையையும் கிளிநொச்சி ஊடக அமையம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வன்  போராடியபோது, கடத்தற்காரர்கள் தமிழ்ச்செல்வனைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தமிழ்ச்செல்வன்  கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் குறைபாடுகள், மக்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச் சூழல் சிதைப்பு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள்பாவனை போன்றவற்றுக்கு எதிராக மிகவும் துணிச்சலான முறையில் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் அளித்து வரும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவருடைய பணிகளை முடக்குவதற்கான உள்நோக்கைக் கொண்டதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன், யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்திலும் துணிச்சலாவவும் நேர்மையாகவும் பணியாற்றியவர். இத்தகைய சிறப்பு மிக்க ஊடகவியலாளர் ஒருவரின் மீதான தாக்குதலானது,  மக்களுடைய நல் வாழ்வுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கொள்ளப்பட வேண்டும்.  ஊடகவிலாளர் மீதான இந்தக் கடத்தல் முயற்சியும் தாக்குதலும் ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். நாடு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குவதோடு ஊடகத்துறைக்கும் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதேபோன்று அண்மையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்டமைக்கான சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்  தொடர்வதால்தான் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உறுதிய முறையில் உரிய நடவடிக்கையை அரசும் காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது. – இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது. – இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் அதிக முக்கியத்துவத்தை பெற்றிருந்தது.  ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுர குமார பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் காரணியாக உள்ள எல்லை மீறிய மீன் பிடிப்புக்கான கைது பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் பேசினர். இதையடுத்து, இனி மீனவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையோ அல்லது வன்முறையோ இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முடிவு வரவேற்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அனுரகுமாரவின் மீனவர் பிரச்சனை அணுகுமுறை குறித்த தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது மனிதாபிமான செய்யாதிருப்பதே அடிப்படையிலான அணுகுமுறையா ? என டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியிருந்ததுடன் இது தொடர்பில் தொடர்ச்சியான எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில்  27.12.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது.”  என தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு வாகனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

ஒளிபரப்பு வாகனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் பலி

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காசாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  இதில் அங்குள்ள அல்-அவ்தா மருத்துவமனையின் வெளியே நின்று கொண்டிருந்த பாலஸ்தீன ஊடகவியலாளர்களின் ஒளிபரப்பு வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். அவர்கள் ஐவரும் அப்பகுதியின் அல் குத்ஸ் எனும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் பாரிஸை தளமாகக்கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியாலளர்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி காசா போர் ஆரம்பமாகிய 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் 145க்கும் மேற்பட்ட பாலஸ்தின ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை காசாவின் சுகாதார அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி இதுவரையில் 45 ஆயிரத்து 399 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

மாமன் மத்திய வங்கியை கொள்ளையிட்டார் – வெளியே தலைமறைவு ! மருமகன் வரியில் மோசடி – உள்ளே சிறையில் !!

அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரம் ஆரம்பமாகிவிட்டது !

தங்களுடைய அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரம் இயங்க ஆரம்பித்து விட்டதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளியல் அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னான்டோ செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். முப்பிரவு கடன் மீள்வரைபு நிறைவேற்றப்பட்டு விட்டது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான உதவித்திட்டங்களும் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டது என அனில் ஜயந்த பெர்னாடோ தெரிவித்தார்.

மாமன் மத்திய வங்கியை கொள்ளையிட்டார் – வெளியே தலைமறைவு ! மருமகன் வரியில் மோசடி – உள்ளே சிறையில் !!

ரணிலுடைய ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி செய்த ரணிலின் நெருங்கிய நண்பரான அர்ஜூனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார். அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தற்போது அவருடைய மருமகன் அர்ஜூனா அலோசியஸ், மென்டிஸ் சாராயக் கொம்பனியின் உரிமையாளர் கோடிக்கணக்கில் வரி மோசடி செய்தமைக்காக உள்ளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அர்ஜூனா அலோசியஸின் தந்தையும் பிணைமுறி மோசடிக்குற்றச்சாட்டில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.