இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது. – இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் அதிக முக்கியத்துவத்தை பெற்றிருந்தது. ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுர குமார பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் காரணியாக உள்ள எல்லை மீறிய மீன் பிடிப்புக்கான கைது பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் பேசினர். இதையடுத்து, இனி மீனவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையோ அல்லது வன்முறையோ இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முடிவு வரவேற்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அனுரகுமாரவின் மீனவர் பிரச்சனை அணுகுமுறை குறித்த தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது மனிதாபிமான செய்யாதிருப்பதே அடிப்படையிலான அணுகுமுறையா ? என டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியிருந்ததுடன் இது தொடர்பில் தொடர்ச்சியான எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் 27.12.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது.” என தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.