November

November

தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் ட்ரம்ப் – புடின் வாழ்த்து !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு தைரியசாலி என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஒரு வணிகர் ஆவார். அவர் அரசியலில் போதியளவு அனுபவத்தை கொண்டவர் அல்ல என்பதால் சில தவறுகளை அவர் விடலாம்.

எனினும், அவர் மீது உயிரை பறிக்கும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக புடின் கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் எனவும் புடின் விளக்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் டொனால்ட் ட்ரம்ப்பை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாம் எதுவிதமான பொய்களையும் கூறவில்லை – ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

நாம் மக்களுக்கு எவ்வித பொய்களையும் கூறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா  தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் எவ்வித பொய்களையும் மக்களிடம் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவ்வாறு ஏதேனும் பொய்யுரைத்திருந்தால் அதனை அம்பலப்படுத்துமாறு சவால் விடுப்பதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் – ஜனாதிபதி அனுர குமார உறுதி !

புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

‘எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசியலமைப்புகள் தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பரி அரசமைப்பு, 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படைச் சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.

 

 

புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும். புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும். கோத்தாபய ஆட்சிக் காலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.

 

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசியலமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்’ – என்றார்.

 

ஒத்திவைக்கப்பட்டது ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களை, ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க புதிய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சீர்திருத்த முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இச்சீர்திருத்தங்களின் கீழ், பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒரு தொகுதி (அலகு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் தேசிய கல்வி நிறுவனத்தால் (National Institute of Education) ஒன்று, ஆறு மற்றும் பத்தாம் ஆண்டு மாணவர்களைப் பயன்படுத்தி சுமார் இருநூறு பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டது.

 

முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான (Module) தொகுதி முறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

 

இந்தச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலைக் கல்வியை பன்னிரண்டாம் வகுப்போடு முடித்துவிட்டு, பொதுத் தேர்வை பத்தாம் வகுப்பில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது.

 

இந்நிலையிலேயே புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை, ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சி பலமாகவே இருக்கிறது – பொன் சிவசுப்பிரமணியம்

தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறியோர் அனைவருமே கொள்கைகளுக்காக வெளியேறவில்லை – சுய நலன் அடிப்படையிலும் ஆசனங்களுக்காகவும் சண்டையிட்டே வெளியேறினர் – பொன் சிவசுப்பிரமணியம்

 

 

 

 

 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுக்காப்புக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவு – பகிரங்கப்படுத்தியது என்.பி.பி !

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் அதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளளார்.

இதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்த சுமந்திரனிடம் 500 மில்லியன் நட்ட ஈடு கோரும் அங்கஜன் இராமநாதனின் தந்தை !

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடத்த பிரச்சார கூட்டம் ஒன்றில் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு ,தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்களுக்கு துப்பாக்கி தந்தவர் யார் என்பதை மறந்துவிட்டு தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் தமிழ்தேசியம் பேசுகின்றனர் – பிள்ளையான்

நான் ஒரு முன்னாள் போராளி. விடுதலைப் புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்” என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

 

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் தனது உரையில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

”ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள். இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம். நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது.

 

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

 

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

 

ஆகவே, எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும். தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார். பெயரை மறந்துவிட்டேன். அவர் ஒரு பெரிய வியாபாரி. அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி. பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது. இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன். இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சினை என்று வெளிநாட்டிற்கு சென்றார்.

 

அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது. மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது.

 

அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது. ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து வடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள். பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காக கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள்.

 

அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது. ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும்.

 

அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித் தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அழியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“என்.பி.பி அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு” – பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று புதன்கிழமை(06) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “என்.பி.பி அரசே தகுதியற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக ரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா?, நிர்வாக திறன் அற்ற பதில் பொதுமுகாமையாளரை உடனடியாக பதிவி நீக்கம் செய், என்.பி.பி அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு, அண்ணன் பதில் முகாமையாளர் ஊழலை மறைக்க தங்கை உள்ளக கணக்காய்வாளர், பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா?, ஊழலற்ற அரசின் தலைவர் நியமனம் இதுவா? என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வின் நியமிக்கப்பட்டார். அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களின் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக விநாயகமூர்த்தி சகாதேவன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழிப்பதே எமது நோக்கம் – அனுர குமார திசாநாயக்க

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுவதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணி எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

அத்துடன், அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகச் செயற்படுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் சேவைகளைக் குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ உட்பட குழு உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.