June

June

இஸ்ரேல் –  காசா போரை நிறுத்த அமெரிக்காவின் திட்டம் – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவு !

இஸ்ரேல் –  காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின்  முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் ரஷ்யா வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான போர் நிறுத்தம், ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தல் மற்றும் உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை மீளப் பெறுதல் போன்ற விடயங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

இஸ்ரேலியர்கள் குறித்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எவ்வாறாயினும் நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுவதுமாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை ஹமாஸ் கோருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது தடவையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் இன்று(09) பதவிப் பிரமாணம் செய்தார்.

அதற்கமைய இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர், தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இந்தியப் பிரதமராக பதவியேற்று நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்ரபதி பவனில் இந்தியப் பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இன்றிரவு 7.15 அளவில் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள உறுப்பினர்கள் விழா அரங்கிற்கு வருகைதந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலகத் தலைவர்களும் அதிதிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விழா அரங்கிற்கு வருகைதந்ததை அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் நரேந்திர மோடி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

நான்கு பணயக்கைதிகளை உயிருடன் மீட்ட இஸ்ரேலிய படையினர் !

காசாவில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேலிய படையினர் உயிருடன் மீட்டுள்ளனா்.

அதேவேளை இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்தாண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, இஸ்ரேலிலிருந்து ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில், 4 பேரையே இஸ்ரேல் இராணுவம் இவ்வாறு உயிருடன் மீட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு மேல் தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில், இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவென குறிப்பிடப்படுகின்றது.

எனினும், இந்த நடவடிக்கையின்போது, 200க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர், இஸ்ரேல் மேற்கொண்ட மிகமோசமான தனியொரு தாக்குதல் இதுவென, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவின் மத்தியிலுள்ள அல்நுசெய்ரட் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பணயக்கைதிகள் தொடர்மாடிக் குடியிருப்புகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, இஸ்ரேலிய படையினர் கடும் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனைதொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வானிலிருந்தும் தரையிலிருந்தும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட, பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை தங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, அவர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள் என்பது தெரியாது எனவும், இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம்,

மத்திய காஸாவிலிருந்து ஒரு பெண் உள்ளிட்ட 4 பிணைக் கைதிகளை தமது இராணுவம் மீட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைவரும் நோவா இசை விழாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிக்கல் மிகுந்த நகரச் சூழலில், கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு இடையே, பகல் நேரத்தில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பதை இந்த மீட்பு நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாகவும், எஞ்சியுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் இதேபோன்று மீட்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய ஹன்டா் பைடன் – மகனுக்கு பொதுமன்னிப்பு இல்லை என்கிறார் ஜனாதிபதி ஜோ பைடன் !

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளாா்.

போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ஹன்டா் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு தாராள அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவா்களால் அதை வாங்க முடியாது.

இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டா் பைடன் பொய்யாகக் கூறியதாக அவா் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.

இது குறித்து ‘ஏபிசி’ தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சட்டவிரோத துப்பாக்கி கொள்முதல் வழக்கில் அளிக்கப்படும் எந்தத் தீா்ப்பையும் ஏற்றுக்கொள்வேன். அந்த வழக்கில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் என் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கமாட்டேன்’ என்றாா்.

இந்த வழக்கு விவகாரத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹன்டா் பைடனுக்கு சலுகைகள் அளிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் – ஓமன் அரசு கண்டனம் !

இஸ்ரேல் இராணுவம் ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது’ ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இச் செயல் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. மேலும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஓமன் அரசு  கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் அமெரிக்கா தொடரும் – பெத் வான் ஷாக்

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த தலைமை இராஜதந்திரிகளின் அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இதில் பங்கேற்பதற்கச் சென்றிருந்த ஜுலி சங் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக்குடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பது அருமையாக இருந்தது – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அமெரிக்க தூதுவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தினை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு 553 மில்லியன் டொலர்கள நிதி உதவியை செயற்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையில் தனியார் துறையின் முன்னணி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் மேற்குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமி உதிக்கும் காட்சியை படம்பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் விபத்தில் பலி !

விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்படம் ஒன்றைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டத்தை மீறி பொஸ்பரஸ் குண்டுகளை லெபனான் மீது வீசிய இஸ்ரேல் – சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு விசனம்!

தெற்கு லெபனானில்  இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல்  படையினருக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலின் காரணமாக லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களால் 70 இற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுத் தாக்குதல் என்பது பொதுமக்களுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் என்பதுடன் இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயற்பாடாகும்.

அத்துடன் இந்த தாக்குதலால், 173 பேர் வரை பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை தேவைகள் ஏற்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி  பிரதமராக !

இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி  பிரதமராக பொறுப்பேற்க பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர்.

இதனையடுத்து, வரும் 8ம் திகதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மோடி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து தனதும் தனது அமைச்சரவையினதும் பதவி விலகலை சமர்ப்பித்தார். அப்போது அவர் பதவியேற்பு வரை பதவியில் நீடிக்குமாறு அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகாரித்த மற்றொரு ஐரோப்பிய நாடு !

பலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின்  , நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன.

இதனடிப்படையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பலஸ்தீனத்தை சுலோவேனியா அங்கீகத்துள்ளதுடன் பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதுடன் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றதுடன் இது குறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்றைய பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்ததோடு சுதந்திர பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும் மற்றும் இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நிலையில் இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.