இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் இன்று(09) பதவிப் பிரமாணம் செய்தார்.
அதற்கமைய இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர், தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இந்தியப் பிரதமராக பதவியேற்று நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்ரபதி பவனில் இந்தியப் பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இன்றிரவு 7.15 அளவில் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள உறுப்பினர்கள் விழா அரங்கிற்கு வருகைதந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலகத் தலைவர்களும் அதிதிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விழா அரங்கிற்கு வருகைதந்ததை அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் நரேந்திர மோடி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.