April

April

நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். – சி.வி.விக்கினேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

 

எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராவார். எனவே பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச்செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூறமுடியும்? ஆனால் அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார்.

 

தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச்சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.

 

ஆனால் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

 

இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கமே இயங்குகின்றது.

 

தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர்.

 

இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசியலமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவுசெய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர்.

இவ்வாறானதொரு பின்னிணயில் வட, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.

 

ஆனால் மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ்மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அத்தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிகநீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

 

எனவே இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிகமுக்கியமானதாகும்.

அமெரிக்காவின் குப்பைகள் இலங்கைக்கு ஏன் வந்தன..? – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாச!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம் செலுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமெரிக்காவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பலொன்று அண்மையில் அமெரிக்கா போல்டீமோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

 

இந்த கப்பலில் 764 கொள்கலன்களில் பாரிய கழிவுத்தொகை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

 

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்பரப்புக்களில் இறக்குமதி – ஏற்றுமதி மற்றும் பரிமாற்றங்களின் போது மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

இது மிகவும் மோசமான நிலையாகும். அமெரிக்காவின் போல்டீமோர் பகுதியில் குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாலேயே இந்த கப்பல் இலங்கை நோக்கி பயணிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இல்லையெனில் எமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு காணி உரிமை – அமைச்சரவை அங்கீகாரம்!

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரத்தை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.

 

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கல் எனும் பெயரிலான குறித்த முன்மொழிவை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையில் இல்லாத பெருந்தோட்ட தொழில் முயற்சி மறுசீரமைப்புக்கள் இராஜாங்க அமைச்சின் ஒத்துழைப்புடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட வலயத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வாழும் 4,151 பயனாளிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

 

அத்தோடு, குறித்த குடும்பங்கள் தற்போது வசிக்கின்ற காணிக்களுக்கான உறுதிப் பத்திரத்தை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலவச நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

 

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 800,000 மாணவிகளுக்கு இவ்வாறு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது.

 

ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பிரேரணை முன்வைத்திருந்தார்.

பாடசாலையின் விவகாரங்களில் இராணுவமும் பொலிஸாரும் தலையிடுகின்றனர் – கார்த்திகை பூ விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

 

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை , பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜிடம் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

 

முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

கடந்த வாரம் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக, தெல்லிப்பழைப் பிரிவு பொலிஸார் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும், விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

 

இலங்கை அரசியலமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின் பாடசாலை மட்ட வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.

 

இத்தகைய சுதந்திரங்களை மதிக்காத, தெல்லிப்பழை பொலிஸாரின் அச்சுறுத்தல்களுடன் கூடிய விசாரணை செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அடக்குமுறைகளை பிரயோகின்ற செயற்பாடுகளாகும்.

 

கல்விச் செயற்பாடுகளில் தெல்லிப்பழை பொலிஸாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினைக் கோரிநிற்கின்றோம். என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் வறுமை – உலகவங்கி

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.

 

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனினும், நாட்டில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் காணப்படுவதாக உலக வங்கியின் சமீபத்திய ஈராண்டு வளர்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசாரதேரவை விடுவிக்க கோரிய மனுவை நிராகரித்த மேல் நீதிமன்றம்!

4 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) நிராகரித்துள்ளது.

 

தனது சேவை பெறுபவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை மனு இன்றைய தினம் காலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த மனுவை நிராகரித்தார்.

 

கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்துக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை !

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை புதன்கிழமை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக நாளை முதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளன.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வை திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இவர்களில் தேவைப்படும் மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளன. மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படும் மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலையினை கருத்திற் கொண்டு, மாணவர்களின் பாடசாலை கற்றல் நிறைவு பெறும்வரை தொடர்ச்சியாக இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, ஆளுநரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து இதில் பங்காற்றவுள்ளன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் 06 மாத காலத்திற்குள் இந்த செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா..? – தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் நளின் பண்டார!

குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவது உண்மையாயின் குண்டுத்தாக்குதலை நடத்த இந்தியாவுக்கு உதவி செய்தது யார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.

 

மைத்திரிபால சிறிசேனவை எவரோவொருவர் இயக்குகிறார் என்பதை அறிய முடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (1) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பாரதூரமானவை. குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

 

முன்னாள் ஜனாதிபதியின் கருத்துக்கு அமைய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக இருந்தால். இந்தியாவுக்கு உதவி செய்தது யார் என்பதையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.மைத்திரிபால சிறிசேனவை எவரோவொருவர் இயக்குவது தெளிவாக தெரிகிறது.

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸுக்கு பொறுப்பாகுவதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகுவற்கு முன்னர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியானதன் பின்னர் ஸ்கொட்லன்ட் யாட் விவகாரத்தை அவர் மறந்து விட்டார்.

 

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எதிரணியின் பக்கம் இருக்கும் போது குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதலைக் கண்ணீர் வடித்தார்.

 

பாராளுமன்றத்துக்கு கறுப்பு சால்வையுடன் வருகை தந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.ஆளும் தரப்புக்கு சென்று அமைச்சு பதவியேற்றதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை மறந்து விட்டார்.

 

குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவது தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

 

மக்கள் வைராக்கியத்துடன் உள்ளார்கள்.சட்டத்தின் ஊடாக தண்டனை கிடைக்காவிடின் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த ஆபத்தான கழிவுப் பொருட்கள்..?

அமெரிக்காவின் பல்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான கப்பல் இலங்கையை நோக்கி ஆபத்தான கழிவுகளுடன் பயணித்துக்கொண்டிருந்தது  என்பது குறித்து தங்களிற்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் சரக்கு கப்பலான டாலி 764 தொன் ஆபத்தான பொருட்களுடன் இலங்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்கள் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் கொண்ட 57கொள்கலன்கள கப்பலில் காணப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

56 கொள்கலன்களில் அபாயகரமான எரிபொருட்கள் இதர அபாயகரமான பொருட்கள் வெடிபொருட்கள் லித்தியம் அயன் பற்றரிகள் போன்றன காணப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலின் ஏனைய கொள்கலன்களில் என்ன அபாயகரமான பொருட்கள் காணப்பட்டன என ஆராய்ந்துவருவதாக அமெரிக்க தேசிய போக்குரவத்து  பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்பு துறைமுக அதிகாரசபையின் தலைவர் கொழும்புதுறைமுகத்திற்கு வந்துசேருவதற்கு 72 மணித்தியாலத்திற்கு முன்னரே கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து அறியத்தருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் ஏப்பிரல் 21ம் திகதி இலங்கைக்கு வரவிருந்தது அவர்கள் ஏப்பிரல் 17ம் திகதி எங்களுக்கு அறிவிக்கவேண்டும் போதுமான காலம் இருந்தது கப்பலில் ஆபத்தான பொருட்கள் காணப்பட்டால் நாங்கள் உரிய நடைமுறைகளின் கீழ் கொள்கலன்களை தனிமைப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.