April

April

The World Press Photo of the Year – உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது !

2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர்.

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

 

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தமது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முகமது சலேம், 39 வயதான பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.

“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன். அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்ததற்கான காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார்.

விருது வென்ற குறித்த புகைப்படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்ட நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – மேலும் பதற்றமடையும் நிலவரம் !

இஸ்ரேல் ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

 

அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தாக்குதலை மேற்கொள்வோம் என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் அணுஉலைகளை தாக்கமாட்டோம் எனவும் இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது.என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதேவேளை; இஸ்ரேல் ஈரானில் தாக்குதலிற்கு தெரிவு செய்த இஸ்ஃபஹான் நகரம் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என முன்னாள் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ஃபஹான்ம் நகரம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் இஸ்ரேல் அந்த நகரத்தை தெரிவு செய்தது என்பது குறித்து அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் மார்க் கிமிட் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

இஷ்பஹான் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என குறிப்பிட்டுள்ள அவர் பயிற்சி ஆராயச்சி மற்றும் ஈரானின் அணுசக்திதிறமையை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இந்த நகரமே பிரதானமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிக்கு 800 ரூபாய்க்கு வடை – உணவக உரிமையாளர் கைது !

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே குறித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் சுற்றுலா பயணி ஒருவருக்கு 1900 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சித்த உணவக உரிமையாளர் ஒருவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்பட்ட யாழ்ப்பாண வைத்தியசாலை கழிவுகள் – மக்கள் போராட்டத்தால் உடனடியாக அகற்ற ஏற்பாடு!

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

 

இந்த நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான குப்பைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எவ்வாறாயினும், நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

அரியாலைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியை மறித்து, சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், கழிவுகளை உடனடியாக அகற்றி, மக்கள் வாழ்வதற்கு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

எந்தவொரு வைத்தியசாலையும் நிர்மாணிக்கப்படவில்லை எனினும் மிகவும் ஆபத்தான வைத்தியசாலைக் கழிவுகள் காணியில் கொட்டப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் வலியுறுத்தினார்.

“குறித்த இந்த காணி 10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கண் வைத்தியசாலை அமைப்பதற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. நீண்டகாலமாக இங்கு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இந்த காணியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. கழிவு பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில் துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அருகில் இருப்பவர்கள் சென்று பார்த்தபோது, மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள், இரத்தத் துணி துண்டுகள், ஊசி ஏற்றும் சிரஞ்சுகள், குளுகோஸ் ஏற்றும் குழாய்கள் என அனைத்தும் இங்கு இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள்.”

 

இப்பகுதியில் எவ்வளவு காலமாக வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது என்பது பிரதேசவாசிகளுக்கு தெரியவில்லை எனவும், அண்மைக்காலமாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததோடு, அங்கு எரிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பொது மக்கள் ஆராய்ந்தபோதே இந்த விடயம் அம்பலமானதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில், பிரதேச மக்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என போராட்டக்காரர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

 

“என்ன அடிப்படையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த வைத்திய கழிவை போட்டீர்கள்? இதனை எப்போது பாதுகாப்பாக அகற்றித் தருவீர்கள்? இவற்றை அகற்றிய பின்னர் நிலத்தடி நீரிலும், சுற்றுச்சூழலிலும் பாதிப்பு ஏற்படாமல் எப்படித் தடுப்பீர்கள்?”

 

போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கும் பிரதேச ஊடகவியலாளர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்துவதற்கு பிரதேச வாசிகள் இணங்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

 

பின்னர் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து வைத்தியசாலை கழிவுகளை ஏழு நாட்களுக்குள் (ஏப்ரல் 18ற்குள்) அகற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, அரியாலை பிரதேச மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வீழ்ச்சி கண்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள 354 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தற்போது 9,147 சிறுவர்கள் காணப்படுவதாக நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மாற்றீடான பாதுகாப்பின் கீழ், சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்படுவதுடன், சிறுவர்கள் குடும்பமொன்றின் கீழ் வளர்வது அவசியமானது என நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்தோடு, சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான பாதுகாவலரின் குடும்பத்தின் கீழ் சிறுவர்கள் வளர வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் பணியாற்றுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது..

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு – இரு பொலிஸ் அதிகாரிகள் கைது !

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொருட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

எனது சகோதரி மரணத்துக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையே காரணம் – சகோதரர் முறைப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ் குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

அதன் போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறே காரணம். இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து எனது சகோதரியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனிநபரின் வாழ்க்கை செலவிற்கு 16,975 ரூபாய் போதுமானது !

நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

 

மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டயானா கமகே

எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் களுத்துறை மற்றும் அளுத்கடை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை மோசமாக நடத்துவது மற்றும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற இரண்டு சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியான இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

 

சில நபர்கள் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையில் ஈடுபடுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

 

அத்துடன் இவர்களின் செயற்பாடுகள் நாட்டின் நற்பெயருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் – வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ்

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இதேவேளை, வட மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வட மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

 

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன” இவ்வாறு வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.