2024

2024

மனித உரிமை பேரவையின் வெளியக பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் (UNHCR) தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் இந்த பொறிமுறை பயனற்றது என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறை இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் உதவும் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பொறிமுறையால் யாருக்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க நன்மைகளும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பு நாடுகளின் வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்ற விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தன்மை மற்றும் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்தும் ஐ.நா மதிப்பிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோட்பாடுகளுக்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கிறது எனவும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் ஹிமாலி அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பொதுத் தேர்தலில் முதல் AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் !

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி , 59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட்  என்ற தொழிலதிபர் AI தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஸ்டீவ் எண்டாகாட் தன்னைப் பற்றிய AI உருவாக்கிய படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த வேட்பாளர் AI ஸ்டீவ் என்று அழைக்கப்படுவதாக கூறப்படும் அதேவேளை, AI ஸ்டீவ் தேர்தலில் வெற்றி பெற்றால், AI அல்ல ஸ்டீவ் எண்டாகோட் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நாட்டு அரசாங்கம் பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு மேலும் AI வேட்பாளர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை உலகில் AI வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 25 பேர் பலி !

இஸ்ரேல் – ஹமாஸ்  போர் நீடித்து வரும் நிலையில் காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இதுவரை காசாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

96 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை !

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தஜிகிஸ்தான்  நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 10 இலட்சமும் மத தலைவர்களுக்கு 18 இலட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

இந்தநிலையில், 1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவான நிலையில் இந்நாட்டில் ஒரு கோடி மக்கள் வசிப்பதுடன்  இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் – இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை வலியுறுத்தல் !

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என விசேடமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட இலங்கையினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது உட்பட அதன் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதித்துறை சுதந்திரம், நாட்டின் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகள் விடுவிக்கப்படுவது வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பதற்றங்கள், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல்கள் மற்றும் தடுப்புக்காவலின் போது மோசமான முறையில் நடத்தப்படல் போன்ற நிலைமைகள் குறித்து கரிசனைக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் !

உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்கா, ரஷ்யா, பித்தானியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை ரஷ்யாவும் அமெரிக்காவும் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது சீனாவின் வசமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக உலக நாடுகள் சுமார் 91.3 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் தற்போது 9,585 அணு ஆயுதங்கள் செயற்பாட்டிலுள்ளதாகவும், இதில் சீனாவிடம் மட்டும் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியது தாய்லாந்து!

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை தாய்லாந்து அரசு நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது.

இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹஜ் யாத்திரையில் வெப்ப அலை – 550 யாத்ரீகர்கள் உயிரிழப்பு !

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று கூறப்படுகிறதுடன் அவர்களில் பெரும்பாலோர் நீர்ச்சத்து குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் வெப்பமான காலநிலையில் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், அவர்களில் பலர் மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடகாவில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்யும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.