2024

2024

ஜனாதிபதி தேர்தலில் 15 தேர்தல் மாவட்டங்களில் அனுர குமார திசாநாயக்கவுக்கு முதலிடம் – செல்லுபடியற்ற வாக்குகளில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கு முதலிடம்!

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார்.

 

இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

 

அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் பட்டியலில் முழுமையான இலங்கை தீவிலும் அதிகப்படியான நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கொண்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விருப்பு வாக்கு நோக்கி நகர்த்தப்பட்டது இலங்கை ஜனாதிபதி தேர்தல் !

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவிதித்துள்ளது.

இதற்கமைய, விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, போட்டியில் இருந்து நீக்கப்படும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகளுக்கு அமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்தடுத்து வெளியாகும் தேர்தல் முடிவுகள் – வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸ பெற்ற வாக்குகளின் அரைவாசியை கூட பெறாத தமிழ்பொதுவேட்பாளர் !

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகின்றார். அண்மைய நிலவரப்படி 43.73 சதவித வாக்குகுளுடன் அனுரகுமார முன்னிலை வகிப்பதுடன் 30.24 சதவீத வாக்குகுளுடன் சஜித்பிரேமதாஸ இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதேவேளை தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு பாரிய ஆதரவு இருப்பதாக பிரச்சார காலத்தில் கூறப்பட்ட போதிலும் கூட தமிழர்பபகுதிகளின் தேர்தல் முடிவுகளின் படி சஜித்பிரேமதாஸ பெற்ற வாக்குகுளின் அரைவாசியை கூட தமிழ்பொதுவேட்பாளரால் பெறமுடியவில்லை என்பதையும் வாக்கு விகிதங்கள் தெளிவாக காட்டிநிற்கின்றன.

Vanni District – Total
வன்னி மாவட்டம் – மொத்தம்
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – kopay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Udupiddy Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Manipay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Kankesanturai Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Chavakachcheri Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி
May be an image of 4 people and text
Jaffna District – Kilinochchi Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்கா! மண் கவ்வுகிறது போலிகளின் தமிழ் தேசியம்!! …??? : த ஜெயபாலன்

வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பு எண்ணிக்கையின் முடிவுகள் கருத்துக்கணிப்புக்களை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திஸ்ஸநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்னான புள்ளிவிபரங்களின் படியும் தேர்தலில் வாக்களிக்க்கப்பட்ட வீதத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸ்ஸநாயக்க ஐம்பது வீதத்திலும் பார்க்க அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகி வருகின்றது. இலங்கையின் 10வது ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க பதிவியேற்பார் என எதிர’பார்க்க முடிகின்றது.

தபால் மூல வாக்குக்கெடுப்புக்கு முதல் நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு வடக்கில் குறிப்பாக யாழில் ரணிலுக்கு சற்று அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தாலும் தெற்கில் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்று வருகின்றது. தெற்கில் அனுராதபுரத்தில் மட்டுமே ரணில் விக்கிரமசிங்க தற்சமயம் தபால் வாக்குகளில் முன்னணியில் நிற்கின்றார். ஏனைய மாவட்டங்களான குருநாகல், இரத்தினபுரி, கேகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அனுரகுமார திஸ்ஸநாயக்கா ஐம்பது வீதத்திலும் அதிகமான தாபால் வாக்குகளைப் பெற்று வருகின்றார்.

வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்று வருகின்றனர். தமிழ் பகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸவும் வாக்குகளைப் பெற அரியநேத்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து, அவர்களை ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது. இந்தத் தேர்தலிலும் இது இவ்வாறே அமையும் என்பதை தேசம்நெற் ஆரம்பம் முதலே சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.

தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வி வருகின்றனர். இவர்களுக்கு இனிமேல் தமிழர்களுக்கு தலைமை தாங்கும் எவ்வித தகுதியும் கிடையாது. தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தமிழ் தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது அவசியம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் பயணிப்பது மிக அவசியமானதும் அவசரமானதுமான தேவை. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. இதுவரை நாட்டை சூறையாடியவர்கள் இலகுவில் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவதும் கடினமானதாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும்.

 

தேர்தல் கண்காணிப்பில் 8000 கண்காணிப்பாளர்கள் – இலங்கை வரலாற்றின் அமைதியான தேர்தல் !

உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் சுமார் 8000 கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் நடைபெற்ற நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், இன்றைய தினம் தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்குகள் எண்ணும் செயன்முறையையும் கண்காணிக்கவுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்றது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

இத்தேர்தல் செயன்முறை சுதந்திரமானதும் நியாயமானதும் முரண்பாடுகள் அற்றதுமான விதத்தில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 8000 பேர் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையிலான 68 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், பொதுநலவாய அமைப்பின் சார்பில் சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் சார்பில் 10 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சர்வதேச நாடுகளின் சார்பில் சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று உள்நாட்டில் இயங்கிவரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (பெப்ரல்) சார்பில் சுமார் 4000 கண்காணிப்பாளர்களும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான பிரசாரத்தின் (கஃபே) சார்பில் 1750 கண்காணிப்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கஃபே அமைப்பினால் 120 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மாக்கீன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் முக்கிய தேர்தல் மாவட்டங்களை இலக்காகக்கொண்டு 25 நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், அக்குழுக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இக்கண்காணிப்பாளர்கள் அனைவரும் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்னரான பிரசார செயன்முறைகள், தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு செயன்முறை, வாக்கு எண்ணல் மற்றும் முடிவு அறிவிக்கும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான சூழ்நிலை ஆகியவற்றை பரந்துபட்ட ரீதியில் கண்காணித்து வருகின்றனர்.

அதற்கமைய நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவும், இந்நிலை தொடர்வதன் ஊடாகவே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியானது மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதம் – யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க செல்லாத 35 சதவீத வாக்காளர்கள் !

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, 17,140,354 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன.

இதேவேளை இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  சற்றுமுன்னர் நிறைவடைந்து.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

நுவரெலியா 80%,
மொனராகலை – 77%,
பொலன்னறுவை – 78%,
இரத்தினபுரி – 75%,
கம்பஹா – 80%,
கொழும்பு- 75% – 80%,
அம்பாறை – 70%,
கிளிநொச்சி – 68%,
புத்தளம் – 75%

வன்னி 70%

யாழ்ப்பாணம் 65%

லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல் தாக்குதல் !

லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது.

தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

எகிறும் தேர்தல் முறைப்பாடுகள் – 24 மணித்தியாலங்களில் 337 முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதில், சட்ட மீறல்கள் தொடர்பில் 336 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளில் 4,929 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார்.

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். – எச்சரிக்கிறார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்  ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வொஷிங்டன் நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய  அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்ம் போட்டியிடுகின்றனர்.

தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இந்நிலையில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள்.

 

கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம். ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் கமலா யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான்” என்றார்.

மேலும், அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.

 

சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் ட்ரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.