வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பு எண்ணிக்கையின் முடிவுகள் கருத்துக்கணிப்புக்களை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திஸ்ஸநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்னான புள்ளிவிபரங்களின் படியும் தேர்தலில் வாக்களிக்க்கப்பட்ட வீதத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸ்ஸநாயக்க ஐம்பது வீதத்திலும் பார்க்க அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகி வருகின்றது. இலங்கையின் 10வது ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க பதிவியேற்பார் என எதிர’பார்க்க முடிகின்றது.
தபால் மூல வாக்குக்கெடுப்புக்கு முதல் நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு வடக்கில் குறிப்பாக யாழில் ரணிலுக்கு சற்று அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தாலும் தெற்கில் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்று வருகின்றது. தெற்கில் அனுராதபுரத்தில் மட்டுமே ரணில் விக்கிரமசிங்க தற்சமயம் தபால் வாக்குகளில் முன்னணியில் நிற்கின்றார். ஏனைய மாவட்டங்களான குருநாகல், இரத்தினபுரி, கேகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அனுரகுமார திஸ்ஸநாயக்கா ஐம்பது வீதத்திலும் அதிகமான தாபால் வாக்குகளைப் பெற்று வருகின்றார்.
வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்று வருகின்றனர். தமிழ் பகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸவும் வாக்குகளைப் பெற அரியநேத்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து, அவர்களை ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.
மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது. இந்தத் தேர்தலிலும் இது இவ்வாறே அமையும் என்பதை தேசம்நெற் ஆரம்பம் முதலே சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.
தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வி வருகின்றனர். இவர்களுக்கு இனிமேல் தமிழர்களுக்கு தலைமை தாங்கும் எவ்வித தகுதியும் கிடையாது. தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தமிழ் தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது அவசியம்.
இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் பயணிப்பது மிக அவசியமானதும் அவசரமானதுமான தேவை. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. இதுவரை நாட்டை சூறையாடியவர்கள் இலகுவில் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவதும் கடினமானதாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும்.
Eeesan
வன்னி மக்கள் ஊழல்வாதிகளுக்குதான் வாக்களித்திருக்கிறார்கள்