2024

2024

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது – அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள்

 

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பிவித்துரு ஹெல உறுமய தலைவர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். சிஐடியினர் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன, சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும், அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 16 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

வெற்றி பெறவேண்டும் என்று செயற்படும் அமைப்பு அல்ல தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் இந்த தீவில் உள்ள இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் சிங்கள தேசம் அங்கிகரிக்கப்பட்டு தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையால் மிகமோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

 

சிங்கள தேசம் தங்களின் பெரும்பான்மையினை வைத்துக் கொண்டு தமிழர் தேசத்தில் இருக்கின்ற நிலப்பரப்பினை ஆக்கிரமித்து அதனை திட்டமிட்ட சிங்கள மயமாக்கலினைத்தான் கடந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றது.

எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்காக இருந்தாலும், இன்று மிகப்பெரிய ஆபத்து நடக்க இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கக்கூடிய ரில்வின் சில்வா நேற்று ஒரு கூட்டத்தில் சொல்லியுள்ளர் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் அவசியம் இல்லை அது தமிழ்மக்களின் கோரிக்கையாகவும் இல்லை என்றும் சொல்லியுள்ளார்.

அதற்கான அடிப்படை ஒன்று இருக்கின்றது கடந்த ஐனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு புதியஅரசியல் அமைப்பு ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற கருத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் புதிய அரசியல் அமைப்பு 2015 ஆண்டு மைத்திரி பால சிரி சேன, ரணில் விக்கிரமசிங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கான புதிய அறிக்கை இடையில் ஸ்தம்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் இந்த புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அதன் ஊடாக தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வரைபினை தயாரிப்பதற்கு அன்று பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து தரப்புக்களும் ஒத்துளைத்திருந்தார்கள் அன்று பாராளுமன்றத்தில் ஈபிடிபியும், தமிழ்தேசியக்கூட்டமைப்பும்தான் மக்கள் பிரதிநிதிகள் இருந்தர்கள் அந்த வரைபினை தாயரிக்கும் குழுவின் தலைவராக கூட்டமைப்பு சித்தார்த்தனைதான் நியமித்திருந்தார்கள்.

இன்று அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாட்டினை எடுத்து பார்த்தால் தென்னிலங்கையில் ஊழலினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் வடகிழக்கில் ஊழல் வாதிகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போறது இல்லை. ஊழல் வாதிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்து மற்றைய முழுப்பேரும் உள்ளே போவார்கள்.

தேர்தலின் பின்னர் அவருக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறி அந்த பெரும்பான்மையினை எடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களைத் தான் தேடவேண்டும். அதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் பேரம் பேசுவது கடினமான விடயம் அவ்வாறு இருந்தால் தமிழர்களின் உரிமைசார்ந்த விடையங்களில் விட்டுக்கொடுப்புக்களை அவர்கள் செய்யவேண்டி வரும்.

அதனை தவிர்த்து ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை எடுப்பதாக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்த மற்றவர்கள் வெல்லவேண்டும் அவர்கள் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெரும்பான்மை எடுக்கும் வாய்ப்பு உள்ளன.

 

கொள்கையளவில் அவர் சொல்லியுள்ளார் தமிழ்தரப்புக்கள் தேர்தலின் பின்னர் தன்னை ஆதரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். நிபந்தனை இல்லாத ஆதரவினை கொடுக்கக்கூடிய ஒரோ ஒரு தரப்பு இந்த ஊழல் வாதிகள்தான் தங்களின் ஊழல் பிடிபடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றார்கள்.

அவர்கள் செய்யப்போது அவர்கள் ஒத்துளைப்பு கொடுத்து தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பு. இவற்றை பார்த்தால் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்தடவையாக தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று புதிதாக தொடங்கப் போகின்றது.

 

இதனை தடுப்பதாக இருந்தால் வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை பெற்று ஆகவேண்டும். அதுதான் எங்களின் இலக்கு.

 

நிறைவேற்றப்படப்போகும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பினை தமிழர்களின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டதாக வரக்கூடிய வரலாற்று தவறில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்ற வேண்டும். அதுதான் எங்கள் பணி. அதற்கான ஆணையினை தமிழ்மக்கள் வழங்க வேண்டும் என்பதற்காக கொள்கைப்பற்றுடைய உறுதியான உறுப்பினர்களைத்தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

 

இன்று தமிழ் தேசியம் வளரும் நிலையினையே காட்டிக்கொண்டிருக்கு சமஸ்டி என்று உச்சரிக்கக் கூடாது என்று சொன்ன தமிழ்தேசிய கட்சிகள் சமஸ்டியினை பற்றி கதைக்கவேண்டிய இடத்திற்குள் வந்துள்ளார்கள்.

13 ஆம் திருத்தம் தான் ஒற்றையாட்டிசியினை தூக்கி பிடித்தவர்கள் கடந்த ஐனாதிபதி தேர்தலில் எல்லோரும் கூடி தமிழ் தேசியத்திற்காக சுயர்நிர்ணய ஆணையினை கொடுங்கள் என்று ஆணையினை கேட்கவேண்டி வந்தது.

அது எல்லாம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலப்பாடு தமிழரசு கட்சி சுமந்திரன் சமஸ்டியினை பற்றி வாய்திறக்கவில்லை. ஆனால் ஐனாதிபதி தேர்தலில் சொன்னார் சமஸ்டிதீர்வு தான். நாங்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரோ ஒருதீர்வு என்று.

தமிழ் தேசியம் மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது இயக்கத்தினை அழித்து தமிழ்தேசித்தினை கரைத்துவிடலாம் என்று போக விரும்பிய பாதை கரைந்துள்ளது. என தெரிவித்தார்.

கொல்லப்பட்டார் ஹமாஸ் இயக்க தலைவர் யஹ்யா சின்வார் !

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டிட இடிபாடு ஒன்றில் சின்வாரின் உடல் இருப்பதை இஸ்ரேலிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று நேற்று (17.10.2024) கண்டுபிடித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு சோதனை மற்றும் பல் மாதிரிகளை பயன்படுத்தி சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

யஹ்யா சின்வர், கடந்த வருடம் ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய பின்புலமாக செயற்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலியர்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் காசா படையினரை ஆயுதங்களை கீழே போடும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை திருப்பி அனுப்புபவர்கள் வெளியே சென்று வாழ்வதற்கு இடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்சவவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி விடுத்துள்ளார்.

அண்மையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வின்சத யஸஸ்மினி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீட்டு எடுக்கும் நோக்கிலேயே, மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்வதினை விரும்பவில்லை என்றும் வின்சத யஸஸ்மினி தெரிவித்துள்ளார்.

பெறுமதியற்ற நாமலை இந்த தேர்தலில் பூச்சியமாக்கி கொள்ளையிட்ட மக்கள் பணத்தை மீள கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென யசஸ்மினி ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்திருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவாகும் இவ்வாறு நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை தேவையான போது வெளிப்படுத்தப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

எதிர் தரப்பினர் கூறுவதை போல விசாரணை அறிக்கையை நினைத்தப்படி வெளியிடுவதற்கு இது ஒன்றும் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல எனவும் விஜித ஹேரத் சாடியுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.

 

அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் ஏன் தயங்குகின்றது என்பதை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய விஜித ஹேரத்,

 

ஒவ்வொரு தனிநபர் கோரிக்கையின் அடிப்படையில் அவற்றை வெளியிட முடியாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், தங்கள் பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக உள்ளோம்.

 

கம்பன்பில கூறுவதை போல அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய தலைமைகளின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் – அனந்தி சசிதரன் சூளுரை!

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 ற்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் தமிழ்தேசிய கட்சிகளில் பெண்களுக்கான போதுமான அங்கீகாரம் வழங்கப்படாத நிலை இருப்பதுடன் முதன்மையான வேட்பாளராக ஒரு பெண் வேட்பாளர் கூட இப்பகுதிகளில் நியமிக்கப்படவில்லை. குறித்த நிலைமைகள் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.

 

ஜனாதிபதியிடம் மக்களின் பிரச்சினைகளை முறையிடும் திட்டம் !

தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகம் 03 தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இதன்படி, 0112-354 550, 0112-354 354, 0114-354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும்.

 

இந்த மூன்று தொலைபேசி இலக்கங்களும் 24 மணி நேரமும் செயற்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது – நாட்டு மக்களுக்கான உரையில் ரணில் விக்ரமசிங்க !

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. புதியவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவார்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில்,

 

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம். உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது.

இதன் காரணமாக காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும், நான் ஜனாதிபதி தேர்தலில் காஸ்சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஐக்கியதேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன.

 

இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைகின்றனர்.புதிய ஜனநாயக கட்சியாக போட்டியிடுகின்றனர்.

எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இவர்கள் அனைவரும் உரிய அனுபவம் உள்ளவர்கள்.

 

இவர்கள் கடந்த காலங்களில் தங்கள் பணியை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துள்ளனர். கடந்த இரண்டு வருடகாலமாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களிற்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான அனுபவம் உள்ளது.

 

ஆகவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும்.அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது,நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு குறுகிய காலத்தில் 3,045 முறைப்பாடுகள் !

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் 811 முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதுடன் சுற்றிவளைப்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர்.

கிடைத்த 620 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதால் அவை குறித்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்திய இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி !

அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி காணப்படுகிறது.

இந்நிலையில், “காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளது.

அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களுக்குப் பதிலாக இராணுவ இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து, நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “நாங்கள் அமெரிக்காவின் கருத்துக்களைக் கேட்கிறோம், ஆனால் எங்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் எங்கள் இறுதி முடிவுகளை எடுப்போம்” குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்த நிலையில் ஒரு ஆண்டை கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.