2024

2024

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் சேர் என தன்னை அழைக்குமாறு கூறி தர்க்கம் செய்த ஊசி அர்ச்சுனா!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் சேர் என தன்னை அழைக்குமாறு கூறி தர்க்கம் செய்த ஊசி அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.

அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார்.

அத்தோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.

மீண்டும் ஒருமுறை அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/v/75njvG1Rsf3XoKvx/

உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அனுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு!

உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அனுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு!

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்று, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி (Khaled Nasser AlAmeri) இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவைவ நேற்று (09)மரியாதையின் நிமித்தம் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், கௌரவ சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்றும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிப்படையான மற்றும் ஈர்க்கக்கூடிய முதலீட்டு நடைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகளை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது. முதலீடுகளை விஸ்தரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளவும் ஸ்தாபித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழல் காணப்படுகின்றது.  அதேவேளை சாதாரண மக்களை வைத்து தமிழ்தேசியம் பேசும் தரப்பினர் அரசியல் செய்யும் போக்கு காணப்படுவதையும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். தொடர்ச்சியாக இதனை ஒரு அரசியல் வியாபாரமாக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை என்ற குரல்களும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று பல்வேறு பிரிவுகளாக சுயேட்சைக்குழுக்கள் போல் சிதறிப்போயிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியும் தமிழ் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான அனந்தி சசிதரன் முன்னைய உரையாடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட இப்பெண்கள் அரசியல் கட்சிகளாலும் வெளிநாட்டு சக்திகளாலும் முகாமைத்துவப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டினார்.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற தேசம் நெட் நேர்காணலில் பேசிய எழுத்தாளர் தமிழ்க்கவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

ஊசி அர்ச்சுனா – டொக்டர் சத்தியமூர்த்தி முறுகல்: சலிப்படையும் யாழ் மக்கள்!

வைத்தியரும் எம்பியுமான அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டிசம்பர் 09 இல் முன் அனுமதியின்றி நுழைந்து வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியுடன் தகராறில் ஈடுப்பட்டு பணிக்கு இடையூறு செய்ததால் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாடு மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வெளிக்கிடும் ஊசி அர்ச்சுனாவுக்கு கடைசியில் மிஞ்சுவது நீதி மன்ற வழக்குகள் தான். மறுபுறம் அர்ச்சுனா மருத்துவ மாபியாக்கள் தொடர்பாக கூறிய குற்றச்சாட்டுக்கள் உரிய ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் சிறையும் சென்று வந்திருக்கிறார். ஊசி அர்ச்சுனா யாருக்கும் அண்மையில் ஊசிபோட்டதாகத் தெரியவில்லை. அவருக்குத் தான் ஊசி போட இடமில்லாமல் ஊசி வழக்குகள் அடிக்கடி போடப்படுகின்றது.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் முன் தம்பி தம்பிராஜா தொட்டு கொழும்பு அழைத்துச் சென்று போராடிய விடயத்தை தற்போது அர்ச்சுனாவும் தன்கையில் எடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் நேரலையில் வந்த அர்ச்சுனா இது பற்றி இவ்வாறு விளக்குகிறார். சுமார் 180க்கு மேற்பட்ட இளவயதினரை சுகாதார தொண்டர் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துள்ளதாகவும். வெறுமனே 5 மாதங்கள் அவர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளதாகவும் நலன்புரி சங்க மூலம் சுகாதார தொண்டர் ஊழியர்களாக வேலை செய்பவர்களுக்கு நிரந்தர வேலைக்கான அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊதியம்மின்றி மூன்று வருடங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வேலை செய்யும் சுகாதார தொண்டர் ஊழியர்களுக்காக அர்ச்சுனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் விளக்கம் கேட்க சென்றதாகவும் கூறுகிறார்.

இவர்களை நிரந்தர பணிக்கு அமர்த்துவதாக கூறி மோசடி செய்துள்ளார் வைத்தியர் சத்தியமூர்த்தி. இது பற்றிய விடயங்களை திரட்டவே சென்றேன் என கூறியுள்ளார். மேலும் த. சத்தியமூர்த்தியுடன் தான் உரையாடி குரல்பதிவை பாராளுமன்றத்தில் வெளியிட இருப்பதாகவும் பகீர் கிளப்புகிறார். மேலும் சத்தியமூர்த்தி தற்போதைய கடற்தொழில் அமைச்சர் தன்னுடைய ஆள் என கூறி தனக்கு சவால் விட்டதாகவும் , அதனையும் தான் பதிந்து வைத்துள்ளதாகவும் பெருமையடிக்கிறார்.

 

ஜனாதிபதி அனுரா டெல்லி பயணம்: எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள்! தொடரும் கைதுகள்!

ஜனாதிபதி அனுரா டெல்லி பயணம்: எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள்! தொடரும் கைதுகள்!

டிசம்பர் 7 சனிக்கிழமை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை நெடுந்தீவுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு படகுகளும் பறிமுதல். இது தவிர கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் மட்டும் எல்லை தாண்டிய 537 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 க்கு மேற்பட்ட மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடபகுதி தமிழ் மீனவர்கள் முறையிட்டு வருகின்றனர். மறுபுறம் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு ஆதரவான போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி அநுரா திஸ்ஸநாயக்க தன்னுடைய பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக யாழ் குருநகரில் வைத்து உறுதியளித்திருந்தார்;. டிசம்பர் 16 ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்கள் பிரச்சினையை இந்திய மத்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்று இலங்கை வடக்கு தமிழ் மீனவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கோருகின்றனர்.

2009 இறுதி யுத்தமும் மனித உரிமைகளும் த ஜெயபாலனின் மனித உரிமைகள் தினக் குறிப்பு:

2009 இறுதி யுத்தமும் மனித உரிமைகளும் த ஜெயபாலனின் மனித உரிமைகள் தினக் குறிப்பு:

இலங்கையின் 2009 இறுதி யுத்தம் இவ்வளவு அழிவுகளுக்குச் சென்றிருக்க வேண்டியதில்லை. மாவிலாறு மூடப்பட்டது முதல் பெப்ரவரி 2009 வரையான காலத்தில் ஆயிரம் பேர்வரையே கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்தள்ளினர். ‘பனை மரத்தில், வெளவாளா தலைவருக்கே சவ்வாலா’ என்பவர்கள் தற்போது மனித உரிமைகள் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். பெரும் தொகையில் தமிழர்கள் பலிகொடுக்கபட்டால் சர்வதேசம் இராணுவத்தை இறக்கி தங்களைக் காப்பாற்றி தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என புலம்பெயர் தமிழர்களில் கணிசமானவர்கள் சிந்தித்தனர். அவ்வாறே செயற்பட்டனர். அன்றைய கொசோவோ போல் தாங்களும் அங்கிகரிக்கப்படுவார்கள் என இவர்கள் கனவு கண்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்தக் கனவுக்கு தாயகத் தமிழர்கள் கொடுத்த விலை மிக அதிகம்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவை நம்பி அழிக்கப்பட்டது தான் பெரும்பாலான உயிரிழப்புகள். 2006இல் யுத்தத்திற்குச் சென்றது மிகப்பெரும் அரசியல் முட்டாள்தனம். அவ்வளவு தோல்விகளுக்குப் பின் 2009 பெப்ரவரியில் ஆயுதங்களை ஒப்படைத்து அரசியல் நீரோட்டத்திற்கு வருமாறு சர்வதேசம் அழைப்பு விடுத்தது. அன்று அதனைச் செய்திருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மக்கள் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கும் போது மனித உரிமை பற்றிக் கதைக்காமல். பலிகொடுத்துவிட்டு மனித உரிமை பற்றி கூக்குரலிடுவதில் எவ்வித பலனும் இல்லை.

எதிர்காலத்திலாவது பலிகொடுத்துவிட்டு மனித உரிமைப் போராட்டம் நடத்தலாம், பழிவாங்கலாம் என்ற உலுத்துப்போன சிந்தனையோடு அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உயிர்கள் கொல்லப்படாமலிருக்க மனித உரிமைப் போராட்டம் நடத்த வேண்டும்.

சகமனிதர்களை மனிதாபிமானமாக நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை வலியுறுத்தும் பலர், இன்றும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். எம்மோடு வாழும் சக மக்களை கீழானவர்களாக கருதுகின்ற மதிக்கின்ற போக்கு இன்னமும் தாயகத்திலும் புலம்பெயர் மண்ணிலும் உள்ளது. இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மனித உரிமைகள் பற்றிப் பேசினால் அதில் ஒரு தார்மீக நியாயம் இருக்கும். யாரும் கொல்லப்படாமலிருக்க, ஒடுக்கப்படாமலிருக்க மனித உரிமைகளைக் கோருவோம். பழிவாங்கலுக்கு அல்ல. காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை செய்யும் சர்வதேசத்திடம் மனித உரிமை நியாயம் கேட்பது மிக இழிவான செயல்.

இன்று சர்வதேச மனித உரிமை தினம்!

இன்று சர்வதேச மனித உரிமை தினம்!

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சமத்துவம், நீதி, தன்னுணர்வின் முக்கியத்துவத்தை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வலியுறுத்துவதற்கான நாள் இதுவென ஐக்கியநாடுகள் சபை குறிப்பிடுகின்றது. ‘எங்களுடைய உரிமைகள், எங்களுடைய எதிர்காலம், இப்பவே வேண்டும்’ என்ற கருத்தியலோடு இவ்வாண்டு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆனால் மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத யுத்தங்களுக்கு மனித உரிமைகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட மேற்குலகம் உலகை வழிநடத்துகின்றது. உக்ரைன், நோட்டோ – ரஷ்ய யுத்தம், காஸா, லெபனான் – இஸ்ரேல், அமெரிக்க யுத்தம். சிரியாவில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடரும் பதட்டம் வேறொரு அரசியல் திருப்பு முனையில் வந்து நிற்கின்றது.

ஒப்பீட்டளவில் இலங்கை ஒரு அமைதிச் சூழலுக்குள் திரும்பியுள்ளது. வன்முறைகளற்ற தேர்தல். இனவாதத்துக்கு எதிரான கருத்துருவாக்கம் என்பன இலங்கையில் நம்பிக்கை துளிர்விடுவதைக் காணக்குடியதாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இருந்தாலும் தீர்க்கப்படாத தொடரும் பிரச்சினைகளும் உள்ளது. அது அண்மைய எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழர்களுக்கு மாகாண சபை தவிர்ந்த ஒரு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் புறம்பான ஒரு தீர்வை நோக்கி என்பிபி – ஜேவிபி போகின்றது. நாங்கள் தமிழர்கள். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் அனைவரும் சரி சமமமானவர்கள் என்ற ரீதியிலான அதிகாரப்பரவலாக்கத்தை நோக்கியே அவர்கள் நகர உள்ளனர்” என்கிறார் ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற இறுதி யுத்தம் தொடர்பான நூலின் ஆசிரியர் த ஜெயபாலன். “எப்போதும் தாங்கள் சரிசமமாக நடத்தப்படுவார்கள் என்கின்ற பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவானால் கணிசமான தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்” என்றும் அந்நிலையை உருவாக்குவதும் அதனை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவதும் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

மனித உரிமைகளில் மிக முக்கியமானது உயிர்வாழ்வதற்கான உரிமை. இந்த யுத்தங்களை ஆதரிப்பவர்களும் யுத்தங்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகித்து உயிர்வாழ்வதற்கான உரிமையை இல்லாமல் செய்பவர்கள் மனித உரிமைகள் பற்றிக் கதைக்க தகுதியற்றவர்கள் எனவும் நூலாசிரினர் த ஜெயபாலன் தெரிவித்தார். இதனை காஸாவிலும் லெபனானிலும் பார்க்கின்றோம். உக்ரைன் யுத்தமும் சாட்சியாகின்றது.

அசாத்தின் வீழ்ச்சி – சிரியா விடுவிக்கப்பட்டது- மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் !

அசாத்தின் வீழ்ச்சி – சிரியா விடுவிக்கப்பட்டது- மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் !

 

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளனர். சிரிய அதிபர் அசாத்க்கு என்ன நடந்தது என்பது செய்தி எழுதப்படும்வரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் பயணித்த விமானம் சிறிது நேரத்தில் ராடரிலிருந்து மறைந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் விமானம் வீழ்ந்ததாக எந்தச் செய்தியும் இல்லை.

 

ரஷ்யாவின் நெருங்கிய நண்பரா அசாத்தைக் காப்பாற்ற ரஷ்யா இம்முறை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. சிரியாவின் எதிர்ப் புரட்சி என்பது ஒரு மிகத் திட்டமிடப்பட்ட அசாத்தின் வெளியேற்றமாகவே கருதப்படுகின்றது, பெருமளவு யுத்தமின்றியே சிரிய இராணுவம் பின்வாங்க கிளர்ச்சிப்படைகள் முன்னேறி தலைநகரையும் ஆட்சித்தலைவரின் மாளிகையையும் அரச ஊடகத்தையும் கைப்பற்றி சிரியா விடுவிக்கப்ட்டுவிட்டது என கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்த கூட்டுத் திட்டத்தில் ஏர்டவான் தலைமையிலான துருக்கி முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளது. துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்தின் பின் இருந்ததாக நம்பப்படுகின்றது. இக்கிளர்ச்சி தொடர்பாக துருக்கி வெளிவிகார அமைச்சு செய்தியாளர் மாநாட்டையும் நடாத்தியுள்ளது.

 

ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தக் கிளர்ச்சிப்படை என்பது ஒரு சாம்பார். இதில் பல்வேறு வல்லாதிக்க சக்திகளினதும் ஏவல்படைகளின் கூட்டாகவே உள்ளது. ஒன்றரை வாரத்திற்கு முன்னர் சிரியாவை மீட்கும் தாக்குதலை தொடங்கியவர்கள். மிகக் குறுகிய காலத்திற்குள் சிரியாவின் முக்கிய நகரங்களை படிப்படியாக கைப்பற்றி தாம் இறுதி இலக்கான சிரியாவை இன்று முழுமையாக அசாத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டுவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

“சிலந்தி வலையாக செயற்பட்ட இலங்கையின் சட்டங்கள் – சிறிய பூச்சிகள் சிக்கின. பெரிய விலங்குகள் வலையை சேதமாக்கி தம்பி விடுகின்றன” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் “தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.

இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கையை குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின்(UNDP)ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகனம் மோதி யாசக பெண் மரணம் !

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி கடவையில் பயணித்த யாசகப் பெண் ஒருவர் 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், பொலவத்தை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் 70 வயது நபராவார். விபத்தின்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜீப் வாகனத்தில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஜீப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஐந்து லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.