சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழல் காணப்படுகின்றது.  அதேவேளை சாதாரண மக்களை வைத்து தமிழ்தேசியம் பேசும் தரப்பினர் அரசியல் செய்யும் போக்கு காணப்படுவதையும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். தொடர்ச்சியாக இதனை ஒரு அரசியல் வியாபாரமாக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை என்ற குரல்களும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று பல்வேறு பிரிவுகளாக சுயேட்சைக்குழுக்கள் போல் சிதறிப்போயிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியும் தமிழ் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான அனந்தி சசிதரன் முன்னைய உரையாடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட இப்பெண்கள் அரசியல் கட்சிகளாலும் வெளிநாட்டு சக்திகளாலும் முகாமைத்துவப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டினார்.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற தேசம் நெட் நேர்காணலில் பேசிய எழுத்தாளர் தமிழ்க்கவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *