2024

2024

‘ஹலால் ஜிம்’ கொமன்ற் – இஸ்லாமிய விரோதத்தையும் குடும்பப் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன்

லண்டன் மேயர் சித்திக் கானை இஸ்லாமிய தீவிரவாதிகள் இயக்குகிறார்கள் என்று வலதுசாரி கொன்சவேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லீ அன்டர்சன் பெப்ரவரி பிற்பகுதியில் குற்றம்சாட்டி இருந்தார்;. இக்கருத்து தவறானது என்று தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக், அது இஸ்லாமிய விரோதக் கருத்துடையது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷி சுனாக்குக்கு எதிராக தலைமைத்துவப் போட்டியில் களமிறங்க உள்ள மற்றுமொரு தீவிர வலதுசாரி சுவலா பிரவர்மன், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களை ‘கலகக் கும்பல்கள்’ என்று விபரித்து வருகின்றார். அதே கட்சியின் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லெட்டர் பொக்ஸ்’ பகிடி 2018இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொறிஸ் ஜோன்சன் இஸ்லாமிய பெண்களின் கலாச்சார ஆடையைப் பற்றி பின்ருமாறு கூறினார்: பெண்கள் தபால் பெட்டிகள் போலவும் வங்கிக் கொள்ளையர்கள் போலவும் உடையணிந்து கொள்வது மிகவும் அபத்தமாக இருக்கின்றது – “it was “absolutely ridiculous” women chose to “go around looking like letterboxes” and “bank robbers”. பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள் கொல்லப்பட்டு பாலஸ்தீனக் குழந்தைகள் பட்டினியில் மரணத்தை தழுவ ஆரம்பித்துள்ள இந்நிலையில் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய விரோதப் பரப்புரைகளால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மம் கொழுந்துவிட்டெரிகின்றது.

இந்நிலையில் உரிமைப்போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழ் சமூகத்திலிருந்து வந்து, லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராகவும் லண்டன் சைவத்திருக்கோயில்கள் அமைப்பிலும் இருக்கும் ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ என்று கருத்துப் பதிந்து முஸ்லீம் பெண்கள் உடற் பயிற்சி செய்வதை கிண்டலடிக்கும் குறும் காணொலி ஒன்றை இன்று பெப்ரவரி 28இல் பகிர்ந்துள்ளார். அதனை நீக்குமாறு தேசம் ஜெயபாலன் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துள்ளார்.

லண்டன் வெம்பிளியில் உள்ள ஈழபதீர்வரர் ஆலயமும் அதன் உரிமையாளரும் எப்போதும் சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கைகளில் இருந்த ஆலயம் ஆர் ஜெயதேவனின் கைக்கு மாறியது முதல் இன்று வரை சர்ச்சைகள் ஓயவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தனக்குப் பிடிக்காதவர்களையும் தாக்குவதற்காக ஆர் ஜெயதேவன் இருபது ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும், தனக்கு பிடியாதவர்களையும் திட்டித் தீர்த்து நான்கு இதழ்களோடு அது நின்றுவிட்டது.

இப்போது ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் சமூக வலைத்தளங்களில் இனக்குரோதத்தை வளர்க்கும் வகையில் முஸ்லீம் சமூகத்தை கிண்டல் அடிக்கின்ற வீடியோ ஒன்றை லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் சமூகவலைத் தளத்தில் ‘ஜெ‘ என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். லண்டன் சைவத் திருக்கோயில்களின் அறங்காவலர்கள், உரிமையாளர்கள், பக்தர்கள் உள்ள இந்த வட்ஸ்அப் சமூகவலைத் தளத்திலேயே இப்பதிவு ஏற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் தங்களுடைய இஸ்லாமிய கலாச்சார உடையோடு வெவ்வேறு உடற் பயிற்சிகளைச் செய்வதை அந்த வீடியோ காட்டுகின்றது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும் ஒரு கறுப்பின இளைஞன் அவர்கள் இஸ்லாமிய கலாச்சார உடையோடு உடற் பயிற்சியை மேற்கொள்வதை விசித்திரமாகப் பார்த்துவிட்டு தனது நளினத்தை தலையசைத்து காட்டியவாறு அங்கிருந்து வெளியேறுவதாக, அக்குறும் காணொலி காட்டுகிறது. இந்த வீடியோவுக்கு ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ பாருங்கள் எனும் வகையில் கையால் திரையைக் குறிப்பிடும் குறியீட்டையும் சிரிப்புக்கான குறியீட்டையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோபதிவு முஸ்லீம் பெண்கள் தங்கள் இஸ்லாமிய கலாச்சார உடையணிந்து உடற்பயிற்சி செய்வதாக காட்டப்பட்டாலும் அது போலித் தன்மையுடையதாகவே உள்ளது. இது முஸ்லீம் பெண்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் சில விசமிகளால் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ போன்றேயுள்ளது. அந்த வீடியோ போலியானதோ உண்மையானதோ என்பதல்ல இங்கு பிரச்சினை. இதனை ‘ஹலால் ஜிம்’ என்று சொல்லி ஈழபதீஸ்வரர் ஆலயத்தினதும் லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தினதும் முக்கியஸ்தரும் தன்னை ஜனநாயகவாதியாகவும் சமூக அக்கறையுடையவராகவும் மாற்றுக் கருத்துடையவராகவும் விம்பம் கட்டும் ஆர் ஜெயதேவன் சமூகவலைத்தளங்களில் பகிருவதற்கு பின்னாலுள்ள மனநிலையும் மற்றைய சமூகங்களை மதங்களை எள்ளி நகையாடுவதும் ஆபத்தானது.

லண்டனில் தவறணை நடத்துபவர்கள், பார் நடத்துபவர்கள் இவ்வாறான பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவ்வாறானவற்றை பகிருவது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மது வியாபாரத்தை அதிகரிக்க பெண்களின் கவர்ச்சியை மூலதனமாக்கி அதில் மூழ்கிக்கிடப்பவர்கள் போல் ஆலயங்களின் உரிமையாளர்களும், அறங்காவலர்களும் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல.

இந்தத் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தவர் வேறுயாருமல்ல, கிழக்கு லண்டனில் உள்ள லண்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஆலயத்துடன் நெருக்கமான ஒருவரே. அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் “இவனுகள் எல்லாம் கோயில் நடத்தினால், சைவம் எப்படி உருப்படும் ?” என்றார். “இவனுகள் ஊரிலும் போய் நிம்மதியாய் இருக்கின்ற சமூகங்களை வெட்டுக்குத்தில தான் இறக்குவான்கள்” என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாரம் தூக்கும் போட்டியில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் சேலைகட்டி வந்து பாரம் தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். உடலில் இரத்தம் கசியுமளவுக்கு காயம் ஏற்படுத்தக்கூடாது என்றாலும் லண்டனிலும் பறவைக்காவடி எடுக்கின்றோம். இவற்றை மற்றய இனத்தவர், மதத்தவர் கொச்சைப்படுத்துவது சரியா?

அதுமட்டுமல்ல, ஒரு இளம் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார். மேலும் தனக்கு பிடிக்காதவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் படத்தை கொச்சைத்தனமாக எழுதி பொதுத்தளங்களில் பரப்பி வருகின்றார்.

நீண்டகாலமாகவே இஸ்லாமிய விரோதக் கருத்துக்களை வெளியிட்டுவரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரான இவர் இறுதி யுத்தத்திற்குப் பின் மோடியின் கோசலம் பருகி பிஜேபி க்கு விசுவாசியாகியுள்ளார். இறுதி யுத்தத்திற்கு முன் ஈழபதீஸ்வரர் கோயிலை தங்களிடமிருந்து பறித்தார் என்ற குற்றச்சாட்டில் புலிகளால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது இவரை விடுதலை செய்யக் கோரி இவரது முஸ்லீம் நண்பர்கள் ரிபிசி வானொலியூடாகவும் ஏனைய ஊடகங்களுடாகவும் குரல் எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட பதிவை நீக்குமாறூம் பெண்களது படங்களை கொச்சைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவததை நீக்குமாறும் அதே சமூகவலைத் தளத்திலேயே ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை தேசம் ஜெயபாலன் விடுத்திருந்தார். அதனைக் கீழே பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் தனக்கு எதிராகவும் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கும் சைவ ஆலயங்களுக்கும் எதிராகவும் நான் தொடர்ந்து மேற்கொள்ளும் பழிசுமத்தல்களே என்று ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் தேசம் ஜெயபாலன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போன்றதொரு மதவிரோதக் கருத்து, இதே சமூகவலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இவ்வாறான பதிவுகளை நீக்குமாறு நானும் இன்னும் சிலரும் கோரியிருந்தும், எதுவும் ஆகவில்லை. அதனால் “நாய் வாலை நிமித்த முடியாது” என்று கூறி சிலர் அந்த சமூகவலைத்தளத்திலிருந்தே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரின் இந்த முஸ்லீம் விரோதச் செயற்பாடுகள் பற்றி பாருக் மொகமட் தெரிவிக்கையில், “மேற்குலகமும் அதன் ஊடகங்களும் முஸ்லீம் விரோதத்தைக் கக்குகின்றன. இதில் ஜெயதேவன் போன்ற மத அடிப்படைவாதிகள், வலதுசாரிகள் மற்றும் இனவாதிகள் முஸ்லீம் விரோதம் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல” என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் கலாச்சார விழுமியங்களைப் பாகாக்க வேண்டிய ஆலயங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் ஜெயதேவன் போன்றவர்கள் ஊடுருவி, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு, இன ஐக்கியத்தை குலைக்கும் இவ்வாறான செயல்களைச் செய்வது மிகத்தவறானது எனத் தெரிவித்தார்.

ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர், பெண்களது படங்களை கொச்சையாக எழுதி சமூகவலைத்தளங்களில் பரப்புவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி நற்சான்றிதழ் வழங்குவது, பெண்கள் உடற்பயிற்சியில் என்ன உடை உடுத்த வேண்டும் என்று சொல்வது எல்லாமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இவர்கள் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று பல்லின, பல்கலாச்சார, பெண்ணுரிமைகளை மதிக்கின்ற சட்டங்கள் உள்ள நாடுகளுக்குப் போனபோதும் மத அடிப்படைவாதிகளாகவும் இனவாதிகளாகவும் வலதுசாரிகளாகவும் பெண்களுக்கு எதிரானவர்களாகவும் செயற்படுவது ஆச்சரியமாக உள்ளது என்கிறார் வன்னியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் போராளியும் பெண்ணியவாதியுமான மரியதாஸ் ஜொய்சிமலர்.

Thesam Jeyabalan’s letter to Mr R Jeyadevan:

Dear Mr. Jeyadevan (Jey),

I am writing to you urgently about concerns that have recently surfaced regarding certain comments and content attributed to you on various public platforms, including WhatsApp and social media.

It has come to my attention that the video you shared today and the comments made are being perceived as Islamophobic and misogynistic. Additionally, there are concerns about the use of female family members in addressing issues with individuals, particularly when it involves making misogynistic comments and sharing their photos. The video also shows Muslim women exercising in a gym with their traditional clothing, and your comment referring to it as ‘halal gym’ has raised concerns.

Such actions and comments are not aligned with the principles of unity and respect that are crucial in our diverse communities.

Furthermore, there are claims that you provided a character certificate to an individual who was found guilty of abusing a young girl. This has raised questions about the values upheld by the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples, of which you are a trustee.

As a trustee responsible for running these esteemed institutions, it is imperative to ensure that our actions and words align with the values of inclusivity, tolerance, and harmony. Saivam, as a belief system, encourages understanding and compassion rather than promoting hatred.

I kindly request that you review and consider removing any content that may be perceived as Islamophobic and misogynistic. Such comments have the potential to harm the reputation of the institutions you represent and may create divisions within the community.

Addressing these concerns in a transparent and respectful manner will contribute to fostering a more inclusive and harmonious environment. I appreciate your prompt attention to this matter and trust that you will take the necessary steps to maintain the positive reputation of the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples.

Thank you for your understanding and cooperation.

Sincerely,
T. Jeyabalan

பாலஸ்தீன் மீது தொடரும் அமெரிக்காவின் அழுத்தம் – பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா !

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது

மோடியின் கட்சி ஆட்சி செய்யும் இந்திய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் 75 சதவீதமாக அதிகரிப்பு – “இஸ்ரேல் – காசா“ மோதலை முன்வைத்தும் பிரச்சினை !

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதமும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் பேச்சு 25 சதவீதமும் இதில் அடங்கும்.

கடந்த 2023-ல் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இந்தியா ஹேட் லேப்’ எனும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் இது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் 223 மற்றும் பிற்பாதியில் 413 என வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல்.

இதில் 498 சம்பவங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இதன் பங்கு 75 சதவீதமாகும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதம் ஒட்டுமொத்தமாக பதிவாகி உள்ளது. ஜிஹாத் போன்றவற்றை முன்வைத்து 63 சதவீத சம்பவங்களும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் வகையிலான பேச்சு 25 சதவீதமும் பதிவாகியுள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் வெறுப்புப் பேச்சு அதிகரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரா (118), உத்தர பிரதேசம் (104), மத்திய பிரதேசம் (65), ராஜஸ்தான் (64), ஹரியாணா (48), உத்தராகண்ட் (41), கர்நாடகா (40), குஜராத் (31), சத்தீஸ்கர் (21) மற்றும் பிஹார் (18) மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அரங்கேறும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளன.

பாஜக ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதை ஒப்பிட்டு பார்த்ததில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்தும் வெறுப்பை பரப்பும் பேச்சுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் 78 சதவீதம் அரங்கேறி உள்ளன. இதில் பாஜக பிரமுகர்கள்/பிரதிநிதிகளின் பங்கு 10.6 சதவீதம். அதுவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அக்கட்சியின் பிரமுகர்கள்/பிரதிநிதிகள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 27.6 சதவீதம் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பு ரீதியாக வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சங் பரிவார், கோ ரக்‌ஷா தளம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ நிதிஷ் ராணா, ஏஹெச்பி தலைவர் பிரவீன், வலதுசாரி ஆதரவாளர் கஜல் சிங்காலா, சுரேஷ் ஷவாங்கே, யதி நரசிங்கானந்த், காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகிய 8 பேர் வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவதில் முதல் 8 இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இஸ்ரேல் – காசா இடையிலான போர், நூ (ஹரியாணா) வன்முறை சம்பவம் போன்றவற்றை முன்வைத்தும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சை பரப்புவதில் புதியவர்களும் ஆர்வம் காட்டி வருவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழரசுக் கட்சியை புலியரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம்!

எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது. எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை. புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன.

கனடா, லண்டன், சுவிஸ் நாடுகளில் புலத்துப் புலிகள் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் தமிழரசுக் கட்சியின் கிளைகள் ஆரம்பிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாயகத்தின் வடக்கு – கிழக்கிலும் இதற்கான வேலைத்திட்டங்கள் முடக்கிவிடப்படவுள்ளது என தேசம்நெற் க்குத் தெரியவருகின்றது. இதற்கு மணி கட்டுவது போல் மார்ச் 10 ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் ‘ரோ புலிகள்’ அழைப்பு விடுத்துள்ளனர்.

யார் இந்த ‘றோ’ புலிகள்:

முன்னாள் ரிஆர்ஓ பொறுப்பாளர் ரெஜி, அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும், இல்லை விநாயகதத்pன் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் அவர்கள் புலனாய்வுக்காக விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் விநாயகம் – சங்கீதன் அணியினரும் இணைந்து பிரித்தானியாவில் வரலாற்று மையம் என்ற ஒரு அமைப்பை 2009 இறுதி யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கி இருந்தனர். இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் போறம் என்ற பிரிஎப் க்கு எதிராக போட்டியாக மாவீரர் தினத்தை நடத்தியும் இருந்தனர். வெளிநாடுகளில் புலிகளை ஒருங்கிணைத்து செயற்பட ஒரு திட்டத்தை இவர்கள் தயாரிக்க முயன்ற போதும் அது தொலைபேசி உரையாடல்கள் ஸ்கைப் மீற்றிங்குகளுடன் முடிந்து போய்விட்டது.

அதற்குப் பின் அண்மைக்காலமாக வரலாற்று மையத்தை பின்புலமாகக் கொண்ட ‘நிலா – திவாகரன்’ அணி இந்திய உளவுப் பிரிவான ‘றோ’ தமிழீழம் பெற்றுத் தரும் என்று டெல்லியிலும் தமிழகத்திலும் மாநாடுகளை நடத்தி அதுபற்றிய சந்திப்பு ஒன்றை இவ்வாண்டு ஜனவரி 28இல் நோத் ஹரோவில் ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பிலும் அவர்களுடைய ‘அரச அறிவியல்’ தெளிவின்படி ‘றோ’ தமிழீழம் பெற்றுத்தரும் என்று அடித்துச் சொன்னார்கள். மோடியின் கோசலத்தின் தாக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்களிலும், அவர்கள் வெளியிட்ட முஸ்லீம் எதிர்ப்பு மாநாட்டு அறிக்கையிலும் தெளிவாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

மீண்டும் லண்டனில் மார்ச் 10இல் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழை ‘நிலா – திவாகரன்’ அணியினரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட முதலாவது ஒன்றுகூடல் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட போஸின் தொடர்பிலக்கமும் இருந்தது.

அது தொடர்பில் தேசம்நெற் நேற்று பெப்ரவரி 25இல் போஸ் உடன் தொடர்பு கொண்டு, “இலங்கையில் தமிழரசுக் கட்சி மீது வழக்குகள் தொடரப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரனின் தலைமைப் பதவியே கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் எவ்வாறு தமிழரசுக் கட்சி லண்டனில் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்ய முடியும் ?” என்று கேட்ட போது, “அதே கேள்வி தான் தன்னிடமும் உள்ளது” எனத் தெரிவித்த போஸ் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தான் நாங்கள் இயங்கினோமே அல்லாமல் தமிழரசுக் கட்சிக்கு என்று இங்கு எந்தக் கட்டமைப்பும் இல்லை” என்றும் “அவ்வாறு தமிழரசுக் கட்சியின் பெயரில் அழைப்பு விடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் தெரிவித்தார்.

அவ்வாறானால் உங்களுடைய பெயர் எவ்வாறு அழைப்பிதழில் உள்ளது எனக் கேட்டதற்கு நிலாவும் சிறிவாஸ் என்பவரும் தன்னோடு போனில் தொடர்பு கொண்டு இது பற்றி உரையாடியதாகவும் “அவ்வாறான ஒரு சந்திப்பு செய்யத்தான் வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமில்லை. வழக்குகள் முடிந்து தாயகத்தில் கட்சி செயற்பட ஆரம்பிக்கும் போதே அதனை மேற்கொள்ள முடியும்” என்று தான் தெரிவித்ததாக போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னுடைய உடன்பாடில்லாமலேயே அவர்கள் தன்னுடைய தொடர்பிலக்கத்தை வெளியிட்டதற்கு நிலாவோடு தொடர்பு கொண்டு கண்டித்ததாகவும் தன்னுடைய பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். அதன்படி பெப்ரவரி 25இல் வெளியிட்ட புதிய அழைப்பிதழில் போஸின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

அந்த அழைப்பிதழில் இருந்த மற்றைய இருவர்: சிறிவாஸ் மற்றும் கேதீஸ். சிறிவாஸ் தமிழரசுக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்ட ஆவரங்கால் சின்னத்துரையின் மகன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய போது தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்த முயன்றனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்கமறுத்த முரண்பாட்டினால் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உதயசூரியன் சின்னத்தையும் வழங்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனிலிருந்த ஆவரங்கால் சின்னத்துரையை தாயகத்துக்கு அழைத்து தமிழரசுக்கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நோக்கங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர்.

சின்னத்துரை சிறிவாஸ் தமிழீழு விடுதலைப் புலிகளின் நல்ல விசுவாசியாகவும் அவர்களின் அரசியல் செயற்பாடுகிளிலும் முன்னின்றவர். தற்போது தமிழரசுக் கட்சி என்ற பெயரில் அழைப்பிதல் வெளியிட்டுள்ளார். அக்கூட்டத்தில் தேசம்நெற் ஊடகவியலாளராகக் கலந்துகொள்ள முடியுமா? என்று கேட்டபோது “சமஸ்டிக் கொள்கையை ஏற்று கட்சியின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் கட்சியின் உறுப்பினர்களானால் மட்டுமே அந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்தார். “அப்படியானால் நீங்கள் தமிழீழக் கொள்கையை விட்டுவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்குப் பதிலளித்த அவர் “யுத்தம் தீவிரமாக நடந்த காலகட்டத்தில் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். சமஸ்டிக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் யாரானாலும் தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார்.

“நீதி மன்றம் கட்சியின் செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் அவசரப்பட்டு இந்த ஒன்றுகூடலை நடத்துகிறீர்கள் ?” என்று கேட்ட போது, “லண்டனில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சியை புலத்தில் உள்ள புலிகள் கைப்பற்றுவதற்கான சதித்திட்டமா இது ?” எனத் தேசம்நெற் கேட்டபோது அப்படியல்ல என்றவர், “புலிகள் சமஸ்டிக்கொள்கையை ஏற்றுக்கொண்டு வரவிரும்புகிறார்கள். அவர்களை நாங்கள் உள்வாங்குவோம்” என்றார். அது போல், “ரொலோ மற்றும் புளொட் அமைப்புகளும் தங்கள் அமைப்புகளை விட்டுவிட்டு தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார். அப்படியானால் “தமிழரசுக் கட்சி இனி புலி அரசுக்கட்சியாகி விடுமா? வெளிநாட்டு கிளைகளில் இருந்தும் கட்சியின் மத்திய குழுவுக்கு உறுப்பினர்கள் அனுப்பப்டுவார்களா?” என்று கேட்டதற்கு “சமஸ்டிக்கு உடன்படும் புலிகள் தமிழரசுக் கட்சியில் இணையலாம். லண்டனில் இருந்து ஐவர் மத்திய குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கும்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

சின்னத்துரை சிறிவாஸ் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முடிவுகளின் பின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறிதரன் மற்றும் எம் ஏ சிறிதரனுடன் பேசியதாகவும் அவர்கள் இருவரும் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் அல்லாமல் இணைந்து பயணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் போடப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் எம் ஏ சுமந்திரன் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்படியானால் இந்தக் குழப்பத்திற்குப் பின் யார் உள்ளனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க சின்னத்துரை சிறிவாஸ் மறுத்துவிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியானவர்கள் யாரும் இல்லை. சுமந்திரனை வெளியேற்றும் நோக்கத்தில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். “ஆனால் எம் ஏ சுமந்திரனை புலத்து புலிகள் நேற்று பெப்ரவரி 25இல் ஏற்பாடு செய்த எழுச்சிநாள் கூட்டத்தில் ‘தேசியத் துரோகி’ என்று அறிவித்துள்ளனரே ?” என்று கேட்ட போது, “புலத்து புலிகள் அவ்வாறு கூறவில்லை. சிலர் அக்கருத்துடன் உள்ளனர். இலங்கையில் உள்ள கட்சியின் சில உறுப்பினர்களே அதனை எழுச்சி மாநாட்டில் கூறியுள்ளனர்” என்றார்.

“தமிழரசுக் கட்சிக்குள் புலிகளை உள்வாங்குகிறீர்கள் அதே சமயம், எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியுள்ளவர் இல்லை என்கிறீர்கள்? இதுவென்ன விசித்திர அரசியல்?” எனத் தேசம்நெற் கேட்டபோது ஊடகங்கள் உண்மையான விடயங்களை அறிந்திருக்வில்லை எனத் தெரிவித்தார் சின்னத்துரை சிறிவாஸ். ஊடகங்கள் உண்மையை அறியவில்லையா அல்லது சிறிவாஸ் புலிகளின் ‘டபிள் ஏஜென்டா’ என்பது விரைவில் தெரியவரும்.

தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு மாவை சேனாதிராஜாவின் பதவிமோகமே காரணம் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றுமொரு தமிழரசுக் கட்சி ஆதரவாளர் தெரிவித்தார். அதே சமயம் எம் ஏ சுமந்திரன் மற்றவர்களை அனைத்துச் செல்வதில்லை என்றும் அவரிடம் ஆளுமையும் திறமையும் இருந்த போதும் அவரது எதேட்சதிகாரம் ஆபத்தானது என மற்றுமொருவர் தெரிவித்தார். அவர் சிறிதரனிடம் மற்றவர்களை அனைத்துச் செல்லும் பண்பு இருப்பதாகவும் அது முக்கியமானதும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழில் இருந்த மற்றையவர் கேதீஸ், வரலாற்று மையத்திலிருந்த ஒரு ‘றோ புலி’. இவர் ‘நிலா – திவாகரன்’ அணியின் ‘றோ – தமிழீழம் எடுத்துத் தரும்’ என்று நம்புகின்ற ஒரு தூண். அவர்கள் ஏற்பாடு செய்த ‘மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்’ என்ற ஜனவரி 28 நடந்த சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர். இவர்களின் ‘றோ – தமிழீழம்’ கதையாடலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. தன்னையொரு வல்லரசாக ஆக்கிக்கொண்ட இந்தியாவுக்கே கதைசொல்லி தமிழீழம் வாங்கலாம் என்று நம்பிய ஆர்வக் கோளாறுகளுக்கு, தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இந்த றோ – புலிகள் விக்கினேஸ்வரனுக்கு காவடி எடுத்தது அனைவருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து தற்போது றோ வின் பராமரிப்பில் தமிழ்நாட்டில் உள்ள சீன எதிர்ப்பு ஆய்வாளர் மு திருநாவுக்கரசு எழுதிய வட்டுக்கோட்டை தீர்மானம் 2 என்று ஒரு காவடியையும் எடுத்தனர். அது தொடர்பான நூல் ஒன்றை தமிழ் தேசிய பற்றாளர்களான சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டனர். காலத்துக்கு காலம் இந்த ஆர்வக்கோளாறுகளின் குறும்புகள் தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்துவதாக அமைகின்றது.

2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழம் பெற்றுத் தருவார் என்று நம்பிய அவர்களின் ‘அரச அறிவியல்’ தெளிவை நாங்கள் குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால் ‘மதியுரைஞர் பாலசிங்கம்’ அவர்களை சிஐஏ ஏஜென்ட் என்றும் அவருக் ‘அரச அறிவியல்’ போதாது என்பதும் கொஞ்சம் ரூ மச். ஆனால் மோடி ஜீ யின் கோசலம் பருகி வளர்த்த ‘அரச அறிவியல்’படி ‘றோ தமிழீழம் பெற்றுத் தரும்’ என்று ஜனவரி 28இல் ஒற்றைக் காலில் நின்று சன்னதம் ஆடிவிட்டு 28 நாள் கழிந்து. தமிழீழத்தை கைவிட்டு தமிழரசுக் கட்சியின் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளுங்கள், கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு விடும் அந்தர் பல்டி அடிப்பதற்கு றோ புலிகளால் மட்டுமே முடியும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் போய், தமிழர்களின் தாகம் றோத் தமிழீழம் ஆகி இப்போது தமிழர்களின் தாகம் சமஸ்டி என்று தொடங்கின இடத்திலேயே வந்து நிற்கிறது.

1970களில் முன்னெடுக்கப்பட்ட கல்விசீர்திருத்தம் இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஏற்பட காரணமானது – இந்தியாவில் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய !

அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார்

 

இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை 1980களின் நடுப்பகுதியில் இனமோதலை எதிர்கொண்டது என்பது உங்களிற்கு தெரியும்- இனமோதலிற்கு முன்னர் நாங்கள் பாதுகாப்பு செலவீனங்களிற்காக மிகவும்குறைவாகவே 0.5செலவிட்டோம்.

 

இது 1985 இல் மூன்று வீதமாக அதிகரித்தது பின்னர் பத்து வருடங்களின் 1995 இல் 5.9 வீதமாக அதிகரித்தது.

 

1985 இல் எங்களின் பாதுகாப்பு செலவீனம் 188 மில்லியன் டொலர் 2008 இல் இது 1.5 மில்லியன் டொலராக மாறியது. 1980-90களில் எங்களின் சமூகஅபிவிருத்தி சுட்டிகள் ஏனைய தென்னாசிய நாடுகளை மிகவும் சிறப்பானவையாக காணப்பட்டன.

 

நாங்கள் அபிவிருத்திக்காக செலவிட்டிருக்ககூடியவற்றை பாதுகாப்பிற்காக செலவிட்டோம். இலங்கையை பொறுத்தவரை நாங்கள்அனைவரும் ஜனநாயகம் குறித்து நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் நாங்கள் பெரும்பான்மைவாதம் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும்.

 

1970களில் இலங்கையில் கல்விசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அது சில சமூகத்தினர் பாரபட்சத்திற்குள்ளாக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. இது அந்த சமூகத்தினர் ஆயுதங்களை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியது.

 

ஆகவே நாங்கள் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதை நாங்கள் நம்புகின்ற போதிலும் அபிவிருத்தி என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியாக காணப்படவேண்டும்,சமூகத்தின் ஒரு பகுதியினருக்கான அபிவிருத்தியாக மாத்திரம் அது காணப்படமுடியாது.

 

ஒருநாடாகவும் முன்னோக்கி செல்வதற்கும் நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும், நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டால் அரசியல்வாதிகள் பெரும்பான்மைவாதம் என்ற துரும்புச்சீட்டை பயன்படுத்துவார்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை மாத்திரம் கவரும் நோக்கத்துடன் செயற்படுவார்கள்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

 

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

 

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

இந்தியா மிருகாட்சி சாலையில் சீதா மற்றும் அக்பர் என பெயருடைய ஜோடி சிங்கங்கள் – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

இந்தியாவில் சிலிகுரி மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மிருகக்காட்சி சாலையில் ஒரே பகுதியில் சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்களை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விஹெச்பி தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மிருகக்காட்சி சாலையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் மிருகக்காட்சி சாலைக்கு பெப்ரவரி 12-ம் திகதி இரண்டு சிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

 

இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு ‘அக்பர்’ என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு ‘சீதா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது.

 

மனுவில், “சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்த விஸ்வ ஹிந்து பரிஷத், “மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் இராமாயணத்தில் ஒரு பாத்திரம்.

 

மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, ‘அக்பர்’ உடன் ‘சீதா’வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது” என்று கோரியது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, “உங்களது செல்லப் பிராணிக்கு இந்து கடவுள் அல்லது இஸ்லாத்தின் நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?” என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

தொடர்ந்து சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “இந்தப் பெயரை யார் வைத்தது? நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 

சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல, நானும் ஆதரிக்கவில்லை. அக்பர் மிகவும் திறமையான மற்றும் உன்னதமான முகலாய பேரரசராக இருந்தார். மிகவும் வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் அவர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடை !

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னியின் மரணத்திற்கு பின்னர் அந்த அதிகாரிக்கு விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனிற்கு எதிராக ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் ரஸ்யாவிற்கு எதிராக பரந்துபட்ட தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை தமிழர்களை நாடு கடத்தியது சீனா !

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் இருவரும் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த வெற்று கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்த இவர்கள் இருவரும் மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதி மலேஷியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “மெர்க்ஸ் யூனிகார்ன்” என்ற கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் குறித்த இருவரும் இரகசியமாக நுழைந்துள்ளனர்.

 

ஆனால் குறித்த கப்பல் மலேஷியாவை சென்றடைந்தபோது, அந்த கொள்கலனில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களையும் ஏற்றுக்கொள்ள மலேஷியா மறுத்த நிலையில் சந்தேக நபர்களுடன் குறித்த கப்பல் சீனாவை சென்றடைந்தபோது சீன அதிகாரிகள் இவர்களை் இருவரையும் கைது செய்தனர்.

 

26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தர்மராசா ஆகிய இரு இலங்கையர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

1980களில் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாகி தங்கள் வாக்கு வங்கி இடதுசாரிகள் பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்க முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்ற கோசம், அன்று தமிழ் இளைஞர்களை ஐஸ் போதை மாத்திரைக்கு இணையாக உசுப்பேற்றியது. அவ்வாறு தனது பதின்ம வயதில் உசுப்பேற்றப்பட்ட பல்லாயிரம் இளைஞர்களில் ஆர் ஆர் உம் ஒருவர். ஆம் இவருடைய சொந்த ஊரான சுழிபுரம் மண் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கோட்டையாக இருந்தது. இந்த மண்ணின் வடக்கம்பரை பகுதியிலேயே 1976இல் தமிழீழக் கோரிக்கையை முன் வைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அதனால் ஆர் ஆர் இன் தலைமுறையினர் ஆயதங்களை நோக்கித் தள்ளப்பட்டனர்.

சுழிபுரத்தில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் பொன்னாலையில் யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவை தமிழ் தேசியம் தனது வாக்கு வங்கிக்கு இடைஞ்சல் எனக் கருதி போட்டுத்தள்ளியது. அதே சமயம் தெற்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்பு சக்தியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பெரும் தேசியவாதத்தை பரல் கணக்கில் நெய்யூற்றி தென்பகுதி எங்கும் எரியவிட்டது. முறுக்கேறிய இளைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்கள் தாக்குதல்கள் எதிரியைக் குறி வைத்ததிலும் பார்க்க தங்களுக்குள்ளேயே குத்து வெட்டு போட்டுத் தள்ளியும் உள்ளனர். அவ்வாறு முதற் சகோதரப் படுகொலையாகக் கருதப்படும் சுந்தரம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

இதே சுழிபுரத்தில் பொதுவுடமைக் கருத்துக்களை வளர்த்தெடுத்தவர் கே ஏ சுப்பிரமணியம். எழுபதுகளின் பிற்பகுதிகளிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் ஈழத்தமிழர் அரசியலில் சுழிபுரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய வாதக் கருத்துக்களும் இடதுசாரித்துவச் சிந்தனையும் ஒன்றையொன்று முரண்டுபிடித்த இடங்களில் சுழிபுரம் குறிப்பிடத்தக்கது. அதில் கே ஏ சுப்பிரமணியத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. மீரான் மாஸ்ரர் என்று அறியப்பட்ட இவருடைய மகனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு முரண்பட்ட அரசியல் கருத்துநிலைகளால் உந்தப்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறையற்ற வடிவமாகச் செயற்பட்ட காந்தியத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களில் சுழிபுரத்தைச் சேர்ந்த சந்ததியார் மிகக் குறிப்பிடத்தக்கவர். அவரால் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலர் காந்தியத்துக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் பின்னர் புதிய தமிழ் புலிகள் பிளவுபட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாக்கப்பட்ட போது கழகத்தின் உறுப்பினர்கள் ஆயினர். இவ்வாறு சுழிபுரத்தில் அவருடைய பதின்ம வயதில் அரசியல் நடவடிக்கைகளால் தேடப்பட்ட ஆர் ஆர் 1981களில் திருகோணமலையில் இயங்கிய காந்தியப் பண்ணையில் மறைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கை பாதுகாப்புப் படையினர் இஸ்ரேல் மோசாட் உளவுப் பிரிவின் ஆலோசணைப்படி தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தினர். 1981 இல் யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலை உட்படப் பல படுகொலைகள் இடம்பெற்றது. இளைஞர்கள் கண்மூடித்தனமாகக் கைது செய்யப்பட்டனர். யாழ் திருநல்வேலியில் 1983இல் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலும், அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்புசக்தியாக என்றும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தென்பகுதி எங்கும் தமிழ் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. இவற்றின் எதிரொலியாக தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக ஆயுத அமைப்புகளை நோக்கித் தள்ளப்பட்டனர்.

தனது பங்குக்கு இந்தியாவும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடம் புகட்ட தமிழ் ஆயத அமைப்புகளுக்கு பயிற்சியும் ஆயதங்களும் வழங்கி அவர்களை வீங்கிப் பெருக்க வைத்தது. இயற்கையான முறையில் அரசியல் ரீதியாக படிப்படியாக வளராமல் ஆயதம் தாங்கிய அரசியலற்ற இயந்திரங்களாக ரோபோக்களாக போராளிகள் உருவாக்கப்பட்டனர். படுகொலைகளும் சகோதரப்படுகொலைகளும் சர்வசாதரணமானது. எல்லாப் போராளிகளும் தமிழ் மக்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தங்கள் உயிர்களை துச்சமென மதித்து ஆயதம் ஏந்தச் சென்றனர். அப்போது திருவடிநிலையில், மாதகலில் எந்த இயக்கத்தின் படகு அக்கரைக்குச் செல்ல காத்திருக்கின்றதோ அந்தப் படகில் ஏறினர். படகு தரையிறங்கும் போது தான் தெரியும் அவர்கள் எந்த இயக்கத்தில் சேர்கிறார்கள் என்பது. புளொட் படகில் ஏற வந்தவர் புலிகளின் படகில் ஏறி புலியான கதையும் மாறி நடந்த கதைகளும் ஏராளம்.

காந்தியப் பண்ணையில் திருகோணமலையைச் சேர்ந்த பார்த்தன் என்று அறியப்பட்ட ஜெயச்சந்திரனை நண்பராக்கிக் கொண்ட ஆர் ஆர் ஓரிரு ஆண்டுகள் திருகோணமலையிலேயே வாழ்ந்து 1983 இல் தமிழகத்துக்குச் சென்று ஆயதப்பயிற்சி எடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயத அமைப்புகைள நோக்கி ஓடிய போது அவ்வாறு ஓடியவர்களை கவர்ந்து இழுத்ததில் புளொட் வெற்றிகண்டது. வடக்கு கிழக்கின் கிராமங்கள் தோறும் புளொட் அமைப்பின் கட்டமைப்புகள் பெருமளவில் காணப்பட்டன. எண்ணிக்கையின் அடிப்படையில் புளொட் ஒரு பெரும் அமைப்பாக காணப்பட்டது. அதிலும் சுழிபுரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோட்டையாக இருந்து புளொட்டின் கோட்டையாக மாறியது. புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் விசுவாசிகள் பெரும்பாலும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் 1984இல் உமாமகேஸ்வரன் பின்தளமான இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது சுழிபுரத்திலேயே தங்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தாயகத்துக்கு வந்த முதல் போராட்டக் குழுவின் தலைவர் உமாமகேஸ்வரன் தான்.

சுழிபுரம் புளொட்டின் வளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எவ்வளவு முக்கியமாக இருந்ததோ அதே அளவுக்கு அதன் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தங்கள் தலைவர் உமாமகேஸ்வரனை உளவுபார்க்க வந்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் நோட்டிஸ் ஒட்ட வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆறு பதின்மவயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிகக் கோரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அரையும் குறையுமாக புதைக்கப்பட்டனர். ஈழத்தமிர்கள் பல்வேறு படுகொலைகளைச் சந்தித்த போதும் இவ்வாறு மோசமானதொரு படுகொலையை அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மேற்கொண்டது இன்றும் மாறாத வடுவாக உள்ளது. அந்த ஆறு இளைஞர்களும் கூட சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களைப் படுகொலை செய்த கந்தன் என்ற கந்தசாமியின் தலைமையில் இப்படுகொலையைச் செய்தவர்களும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே. ஏற்கனவே புளொட் அமைப்புக்குள் சந்ததியார் உட்பட உட்படுகொலைகள் தொடர்பான விடயங்கள் பூதாகரமாகி கழகம் பாரிய இருப்புச் சிக்கலை எதிர்நோக்கியிருந்த நிலையில் சுழிபுரம் படுகொலை மக்கள் மத்தியில் இருந்து கழகத்தை அந்நியப்பட வைத்தது.

தமிழீழ மக்கள் கழகத்தில் இருந்த அரசியல் தெளிவுடைய சக்திகள் படிப்படியாக தங்களை கழகத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அதனால் பெரும்பாலும் அரசியல் தெளிவற்ற ஆயதங்களை மட்டுமே நம்பியவர்களின் கையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தள்ளப்பட்டது. இதற்கு கழகத்திலிருந்து வெளியேறியவர்களுக்கும் கணிசமான பொறுப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமை அரசியல் தெளிவற்ற ஆயதமேந்திய சுழிபுரம் ரோபோக்களிடமே இருந்தது. சுடு என்று நினைத்தாலேயே சுட்டுவிடுவார்கள்.

இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய இயக்கங்களை ஒவ்வொன்றாக அழித்து 1986இல் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவை முற்றாக அழித்த போது, தமிழீழம் என்ற கோரிக்கையே அர்த்தமற்றதாகியது. அன்றைய காலகட்டத்தில் இலங்கை இராணுவம் படுகொலை செய்த போராளிகளைக் காட்டிலும் தங்களுக்குள்ளேளே சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் அதிகம். 1987 இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குள் நுழைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வவுனியாவில் தளம் அமைத்து தனித்து செயற்பட ஆரம்பித்தது. கடத்தல், கொள்ளை, கப்பம், கொலை என்பன தாசன் என்று அறியப்பட்ட மாணிக்கதாசனால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காலப் பகுதிகளில் ஆர் ஆர், உமாமகேஸ்வரனின் தலைமையை பாதுகாக்கும் அனைத்தையும் மேற்கொண்டு வந்தவர். 1988இல் உமமாகேஸ்வரனின் மாலைதீவைக் கைப்பற்றும் திட்டத்திற்கு புலனாய்வை மேற்கொண்டவர் ஆர் ஆர் எனத் தெரியவருகின்றது. மேலும் இத்தாகுதல் திட்டத்திற்கு சென்றவர்களில் ஆர் ஆர் மிக முக்கியமானவர். அதனால் ஆர் ஆர் க்கு ஏனையவர்களைக் காட்டிலும் கூடுதல் தண்டணை வழங்கப்பட்டது.

மாலை தீவில் 5 ஆண்டுகால சிறைவாசம் ஆர் ஆர் ரை மிகவும் மாற்றியமைத்தது. எம் கே சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்த ஆர் ஆர் க்கு அவர்கள் தொடர்ச்சியாக நூல்களை அனுப்பி வந்துள்ளனர். சிறையில் நிறையவே வாசித்த ஆர் ஆர் வாசிப்பால் பூரணமடைந்த ஒரு மனிதராக மாறினார். ஆனால் 1993 இல் ஆர் ஆர் மாலை தீவிலிருந்து நாடு திரும்பிய பொழுது அவருடைய கழகத்தினதும் நாட்டினதும் நிலை முற்றிலுமாக மாறியிருந்தது.

ஆர் ஆர் போன்று தமிழ் இளைஞர்கள் வரிசையில் நின்று தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி தமிழ் தேசியத் தலைவர்களுக்கு நெற்றித் திலகம் இட்ட காலங்கள் மறைந்தது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழ் தேசியத் தலைவர்கள் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்குத் திரும்ப, இவர்களை நம்பி ஆயதம் ஏந்திய, அரசியலில் அரிச்சுவடி மட்டும் படித்த அல்லது அதுவும் படியாத இளைஞர்கள் ஆயதங்களை அத்தலைவர்கள் பக்கம் திருப்பினர். தங்கள் கைகளைக் கீறி இரத்த திலகம் இட்டவர்கள், 1989 யூலை 13 அத்தலைவர்களையே இரத்த வெள்ளத்தில் வீழ்த்தியது வரலாறு. அதற்கு அடுத்த சில தினங்களிலேயே ஆர் ஆர் இன் நேசத்துக்குரிய தலைவர் உமாமகேஸ்வரன் ஆர் ஆர் இன் சுழிபுரம் நண்பர்களாலேயே திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆர் ஆர் இன் இன்னும் சில நெருங்கிய நண்பர்கள் ஊரவர்கள் அதற்கு சில மாதங்கள் முன் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் மாலைதீவுச் சிறையில் இருந்து திரும்பிய ஆர் ஆர் தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளரானார். 1999 செப்ரம்பர் 2இல் உள்வீட்டு சதியும் சேர்ந்து மாணிக்கதாசன் கொல்லப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மிக மோசமான படுகொலைகள் உட்பட பல கப்பம், கடத்தல், கொள்ளை எனப் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பின்னால் இருந்தவர் மாணிக்கதாசன். இவரது படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் ஐரோப்பாவரை நீடித்திருந்தது. இதுவரை இவ்விடயங்கள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை.

இதுவிடயமாக ஆர் ஆர் உடன் பேசப்பட்டபோது, “நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எதுவும் சொல்லலாம். எங்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறீர்கள். இங்கு வந்து வாழ்ந்து பாருகங்கள். எங்கள் வாழ்வே ஒவ்வொரு நாளும் போராட்டமே” என்று பதிலளித்தார். தமிழ் மக்களிள் விடுதலைக்காக அன்று போராடச் சென்ற ஆர் ஆர் போன்ற குழந்தைப் போராளிகளின் வாழ்க்கையை எப்படி மதிப்பீடு செய்வது என்பது மிகக் கடினமானதும் சிக்கலானதுமாகும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட ஏராளமான கோடிக்கணக்கான சொத்துக்கள் இன்னமும் அதன் தலைவர் சித்தார்த்தனின் குடும்பத்திடமும் மாணிக்கதாசனின் உறவினர்களிடமும் இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகின்றது. ஆர் ஆர் இடம் இருந்த சொத்துக்களும் அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே கைமாற்றப்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆர் ஆர் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்ல மனிதராகவே பலராலும் கணிக்கப்படுகின்றார். தன்னுடைய பதின்ம வயதில் தன்னுயிரை துச்சமென மதித்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச் சென்றவர்களை, அவர்களது போராட்டப் பயணத்தின் பின்னணியில் மதிப்பீடு செய்வதென்பது மிகக் கடினமானது. மாலைதீவில் இருந்து நிறைந்த வாசிப்போடு தாயகம் திரும்பிய ஆர் ஆர் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் சட்டக் கல்வியைக் கற்றுள்ளார். பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகளையும் செய்துள்ளார். உலகம் பூராகவும் உள்ள அவருடைய தோழர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்துகின்றனர். நிறைந்த அநியாயங்களும், நியாயங்களும் கொண்ட போராட்டப் பயணத்தில் அநியாயத்திற்கும் நியாயத்திற்குமான இடைவெளி எமது போராட்டத்தில் மிகக் குறுகியதாக்கப்பட்டுவிட்டது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போராளிகளிடையே காணப்பட்டது. ஆதலால் ஆர் ஆர் இன் போராட்ட வாழ்வும் அதன் நியாயத்தன்மையும் எப்போதும் விவாதத்துக்குரியதாகவே இருக்கும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைப் பொறுத்தவரை அந்த அமைப்பின் கடைசித்தூண் ஆர் ஆர் என்றால் மிகையல்ல. இப்போதைய தலைவர் சித்தார்த்தன் கூட கழகத்தின் உறுப்பினராக உமாவின் மறைவுக்குப் பின் தன்னை இணைத்துக்கொண்டவர். அவருக்கு கழகத்தையும் தெரியாது. போராட்டமும் தெரியாது. கழகத்தின் இருப்புக்கான தேவை இல்லாமல் போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. கழகம் காலாவதியாகி விட்டது. இனிக் கழகம் மெல்லக் கலையும். அதுவே அரசியல் யதார்த்தமாகும்.