தமிழரசுக் கட்சியை புலியரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம்!

எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது. எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை. புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன.

கனடா, லண்டன், சுவிஸ் நாடுகளில் புலத்துப் புலிகள் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் தமிழரசுக் கட்சியின் கிளைகள் ஆரம்பிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாயகத்தின் வடக்கு – கிழக்கிலும் இதற்கான வேலைத்திட்டங்கள் முடக்கிவிடப்படவுள்ளது என தேசம்நெற் க்குத் தெரியவருகின்றது. இதற்கு மணி கட்டுவது போல் மார்ச் 10 ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் ‘ரோ புலிகள்’ அழைப்பு விடுத்துள்ளனர்.

யார் இந்த ‘றோ’ புலிகள்:

முன்னாள் ரிஆர்ஓ பொறுப்பாளர் ரெஜி, அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும், இல்லை விநாயகதத்pன் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் அவர்கள் புலனாய்வுக்காக விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் விநாயகம் – சங்கீதன் அணியினரும் இணைந்து பிரித்தானியாவில் வரலாற்று மையம் என்ற ஒரு அமைப்பை 2009 இறுதி யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கி இருந்தனர். இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் போறம் என்ற பிரிஎப் க்கு எதிராக போட்டியாக மாவீரர் தினத்தை நடத்தியும் இருந்தனர். வெளிநாடுகளில் புலிகளை ஒருங்கிணைத்து செயற்பட ஒரு திட்டத்தை இவர்கள் தயாரிக்க முயன்ற போதும் அது தொலைபேசி உரையாடல்கள் ஸ்கைப் மீற்றிங்குகளுடன் முடிந்து போய்விட்டது.

அதற்குப் பின் அண்மைக்காலமாக வரலாற்று மையத்தை பின்புலமாகக் கொண்ட ‘நிலா – திவாகரன்’ அணி இந்திய உளவுப் பிரிவான ‘றோ’ தமிழீழம் பெற்றுத் தரும் என்று டெல்லியிலும் தமிழகத்திலும் மாநாடுகளை நடத்தி அதுபற்றிய சந்திப்பு ஒன்றை இவ்வாண்டு ஜனவரி 28இல் நோத் ஹரோவில் ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பிலும் அவர்களுடைய ‘அரச அறிவியல்’ தெளிவின்படி ‘றோ’ தமிழீழம் பெற்றுத்தரும் என்று அடித்துச் சொன்னார்கள். மோடியின் கோசலத்தின் தாக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்களிலும், அவர்கள் வெளியிட்ட முஸ்லீம் எதிர்ப்பு மாநாட்டு அறிக்கையிலும் தெளிவாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

மீண்டும் லண்டனில் மார்ச் 10இல் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழை ‘நிலா – திவாகரன்’ அணியினரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட முதலாவது ஒன்றுகூடல் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட போஸின் தொடர்பிலக்கமும் இருந்தது.

அது தொடர்பில் தேசம்நெற் நேற்று பெப்ரவரி 25இல் போஸ் உடன் தொடர்பு கொண்டு, “இலங்கையில் தமிழரசுக் கட்சி மீது வழக்குகள் தொடரப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரனின் தலைமைப் பதவியே கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் எவ்வாறு தமிழரசுக் கட்சி லண்டனில் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்ய முடியும் ?” என்று கேட்ட போது, “அதே கேள்வி தான் தன்னிடமும் உள்ளது” எனத் தெரிவித்த போஸ் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தான் நாங்கள் இயங்கினோமே அல்லாமல் தமிழரசுக் கட்சிக்கு என்று இங்கு எந்தக் கட்டமைப்பும் இல்லை” என்றும் “அவ்வாறு தமிழரசுக் கட்சியின் பெயரில் அழைப்பு விடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் தெரிவித்தார்.

அவ்வாறானால் உங்களுடைய பெயர் எவ்வாறு அழைப்பிதழில் உள்ளது எனக் கேட்டதற்கு நிலாவும் சிறிவாஸ் என்பவரும் தன்னோடு போனில் தொடர்பு கொண்டு இது பற்றி உரையாடியதாகவும் “அவ்வாறான ஒரு சந்திப்பு செய்யத்தான் வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமில்லை. வழக்குகள் முடிந்து தாயகத்தில் கட்சி செயற்பட ஆரம்பிக்கும் போதே அதனை மேற்கொள்ள முடியும்” என்று தான் தெரிவித்ததாக போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னுடைய உடன்பாடில்லாமலேயே அவர்கள் தன்னுடைய தொடர்பிலக்கத்தை வெளியிட்டதற்கு நிலாவோடு தொடர்பு கொண்டு கண்டித்ததாகவும் தன்னுடைய பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். அதன்படி பெப்ரவரி 25இல் வெளியிட்ட புதிய அழைப்பிதழில் போஸின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

அந்த அழைப்பிதழில் இருந்த மற்றைய இருவர்: சிறிவாஸ் மற்றும் கேதீஸ். சிறிவாஸ் தமிழரசுக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்ட ஆவரங்கால் சின்னத்துரையின் மகன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய போது தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்த முயன்றனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்கமறுத்த முரண்பாட்டினால் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உதயசூரியன் சின்னத்தையும் வழங்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனிலிருந்த ஆவரங்கால் சின்னத்துரையை தாயகத்துக்கு அழைத்து தமிழரசுக்கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நோக்கங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர்.

சின்னத்துரை சிறிவாஸ் தமிழீழு விடுதலைப் புலிகளின் நல்ல விசுவாசியாகவும் அவர்களின் அரசியல் செயற்பாடுகிளிலும் முன்னின்றவர். தற்போது தமிழரசுக் கட்சி என்ற பெயரில் அழைப்பிதல் வெளியிட்டுள்ளார். அக்கூட்டத்தில் தேசம்நெற் ஊடகவியலாளராகக் கலந்துகொள்ள முடியுமா? என்று கேட்டபோது “சமஸ்டிக் கொள்கையை ஏற்று கட்சியின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் கட்சியின் உறுப்பினர்களானால் மட்டுமே அந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்தார். “அப்படியானால் நீங்கள் தமிழீழக் கொள்கையை விட்டுவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்குப் பதிலளித்த அவர் “யுத்தம் தீவிரமாக நடந்த காலகட்டத்தில் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். சமஸ்டிக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் யாரானாலும் தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார்.

“நீதி மன்றம் கட்சியின் செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் அவசரப்பட்டு இந்த ஒன்றுகூடலை நடத்துகிறீர்கள் ?” என்று கேட்ட போது, “லண்டனில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சியை புலத்தில் உள்ள புலிகள் கைப்பற்றுவதற்கான சதித்திட்டமா இது ?” எனத் தேசம்நெற் கேட்டபோது அப்படியல்ல என்றவர், “புலிகள் சமஸ்டிக்கொள்கையை ஏற்றுக்கொண்டு வரவிரும்புகிறார்கள். அவர்களை நாங்கள் உள்வாங்குவோம்” என்றார். அது போல், “ரொலோ மற்றும் புளொட் அமைப்புகளும் தங்கள் அமைப்புகளை விட்டுவிட்டு தமிழரசுக் கட்சியில் இணையலாம்” என்றார். அப்படியானால் “தமிழரசுக் கட்சி இனி புலி அரசுக்கட்சியாகி விடுமா? வெளிநாட்டு கிளைகளில் இருந்தும் கட்சியின் மத்திய குழுவுக்கு உறுப்பினர்கள் அனுப்பப்டுவார்களா?” என்று கேட்டதற்கு “சமஸ்டிக்கு உடன்படும் புலிகள் தமிழரசுக் கட்சியில் இணையலாம். லண்டனில் இருந்து ஐவர் மத்திய குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கும்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

சின்னத்துரை சிறிவாஸ் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முடிவுகளின் பின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறிதரன் மற்றும் எம் ஏ சிறிதரனுடன் பேசியதாகவும் அவர்கள் இருவரும் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் அல்லாமல் இணைந்து பயணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் போடப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் எம் ஏ சுமந்திரன் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்படியானால் இந்தக் குழப்பத்திற்குப் பின் யார் உள்ளனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க சின்னத்துரை சிறிவாஸ் மறுத்துவிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியானவர்கள் யாரும் இல்லை. சுமந்திரனை வெளியேற்றும் நோக்கத்தில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். “ஆனால் எம் ஏ சுமந்திரனை புலத்து புலிகள் நேற்று பெப்ரவரி 25இல் ஏற்பாடு செய்த எழுச்சிநாள் கூட்டத்தில் ‘தேசியத் துரோகி’ என்று அறிவித்துள்ளனரே ?” என்று கேட்ட போது, “புலத்து புலிகள் அவ்வாறு கூறவில்லை. சிலர் அக்கருத்துடன் உள்ளனர். இலங்கையில் உள்ள கட்சியின் சில உறுப்பினர்களே அதனை எழுச்சி மாநாட்டில் கூறியுள்ளனர்” என்றார்.

“தமிழரசுக் கட்சிக்குள் புலிகளை உள்வாங்குகிறீர்கள் அதே சமயம், எம் ஏ சுமந்திரன் அளவுக்கு கட்சிக்குள் தகுதியுள்ளவர் இல்லை என்கிறீர்கள்? இதுவென்ன விசித்திர அரசியல்?” எனத் தேசம்நெற் கேட்டபோது ஊடகங்கள் உண்மையான விடயங்களை அறிந்திருக்வில்லை எனத் தெரிவித்தார் சின்னத்துரை சிறிவாஸ். ஊடகங்கள் உண்மையை அறியவில்லையா அல்லது சிறிவாஸ் புலிகளின் ‘டபிள் ஏஜென்டா’ என்பது விரைவில் தெரியவரும்.

தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு மாவை சேனாதிராஜாவின் பதவிமோகமே காரணம் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றுமொரு தமிழரசுக் கட்சி ஆதரவாளர் தெரிவித்தார். அதே சமயம் எம் ஏ சுமந்திரன் மற்றவர்களை அனைத்துச் செல்வதில்லை என்றும் அவரிடம் ஆளுமையும் திறமையும் இருந்த போதும் அவரது எதேட்சதிகாரம் ஆபத்தானது என மற்றுமொருவர் தெரிவித்தார். அவர் சிறிதரனிடம் மற்றவர்களை அனைத்துச் செல்லும் பண்பு இருப்பதாகவும் அது முக்கியமானதும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் அழைப்பிதழில் இருந்த மற்றையவர் கேதீஸ், வரலாற்று மையத்திலிருந்த ஒரு ‘றோ புலி’. இவர் ‘நிலா – திவாகரன்’ அணியின் ‘றோ – தமிழீழம் எடுத்துத் தரும்’ என்று நம்புகின்ற ஒரு தூண். அவர்கள் ஏற்பாடு செய்த ‘மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்’ என்ற ஜனவரி 28 நடந்த சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர். இவர்களின் ‘றோ – தமிழீழம்’ கதையாடலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. தன்னையொரு வல்லரசாக ஆக்கிக்கொண்ட இந்தியாவுக்கே கதைசொல்லி தமிழீழம் வாங்கலாம் என்று நம்பிய ஆர்வக் கோளாறுகளுக்கு, தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இந்த றோ – புலிகள் விக்கினேஸ்வரனுக்கு காவடி எடுத்தது அனைவருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து தற்போது றோ வின் பராமரிப்பில் தமிழ்நாட்டில் உள்ள சீன எதிர்ப்பு ஆய்வாளர் மு திருநாவுக்கரசு எழுதிய வட்டுக்கோட்டை தீர்மானம் 2 என்று ஒரு காவடியையும் எடுத்தனர். அது தொடர்பான நூல் ஒன்றை தமிழ் தேசிய பற்றாளர்களான சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டனர். காலத்துக்கு காலம் இந்த ஆர்வக்கோளாறுகளின் குறும்புகள் தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்துவதாக அமைகின்றது.

2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழம் பெற்றுத் தருவார் என்று நம்பிய அவர்களின் ‘அரச அறிவியல்’ தெளிவை நாங்கள் குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால் ‘மதியுரைஞர் பாலசிங்கம்’ அவர்களை சிஐஏ ஏஜென்ட் என்றும் அவருக் ‘அரச அறிவியல்’ போதாது என்பதும் கொஞ்சம் ரூ மச். ஆனால் மோடி ஜீ யின் கோசலம் பருகி வளர்த்த ‘அரச அறிவியல்’படி ‘றோ தமிழீழம் பெற்றுத் தரும்’ என்று ஜனவரி 28இல் ஒற்றைக் காலில் நின்று சன்னதம் ஆடிவிட்டு 28 நாள் கழிந்து. தமிழீழத்தை கைவிட்டு தமிழரசுக் கட்சியின் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளுங்கள், கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு விடும் அந்தர் பல்டி அடிப்பதற்கு றோ புலிகளால் மட்டுமே முடியும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் போய், தமிழர்களின் தாகம் றோத் தமிழீழம் ஆகி இப்போது தமிழர்களின் தாகம் சமஸ்டி என்று தொடங்கின இடத்திலேயே வந்து நிற்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Democracy
    Democracy

    “றோ தமிழ்ஈழ அரச அறிவியல் அறிவு” என்பதைவிட, “இராம இராஜ்ஜியத்தில், இராவண திராவிட மாடல் தமிழ் ஈழம்” என்பதே சரியாக இருக்கும்.
    கீழே உள்ள வீடியோவில் அதற்கான கிங்கரர்களின் மண்டோதரிகளையும், சூர்ப்பநகைகளையும், லூலூ குரூப் மற்றும் இ.டி.ஏ. ஸ்டார் குரூப் மூலமாக உருவாக்கிவிட்டார்கள்..? அதாவது, டாக்டர் கனிமொழி ஜி மூலம், சமீபத்தில் தமிழ்நாட்டை “மனிதவள சக்தி (ஒருவர் இருப்பது கைகளில் ‘சவூதி லைன் சிட்டி’ கட்டும், வருடத்திற்கும் இருபதினாயிரம் பேர் இறக்கும்) மாநிலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
    தன் குடும்பம் மட்டுமே தொழிற்சாலைகளில் முதலீடு செய்யவேண்டுமென்று மோடி ஜி யுடன் “டீல்” (கோயம்புத்தூர் வெள்ளாள கவுண்டர்கள், வன்னிய அல்ல, மட்டும் முதலீடு செய்யவேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி அடம்பிடித்து, தங்கமணி போன்றோர்களுக்கு மு.க. ஸ்டாலின் முதலீட்டில் பங்கு என்றவுடன், எடப்பாடி தன் எம்.எல்.ஏ. களையே இழக்கிறமாதிரி)..?
    வருங்கால பொருளாதாரத்தை தன் குடும்ப கையில் இருக்கவேண்டுமென்று ராஜபக்சே போன்று தெற்காசிய மனோநிலையில் ஆசைப்பட்டாலும்,
    மோடி ஜி யின் பின்னால் இருக்கும் இந்திய நிர்வாகமும், அம்பானி அதானி, டாட்டா, போன்றோர்கள் கேணையர்களா (இவர்கள் போர்டு போன்ற அமெரிக்க நிறுவனங்களையும், தென்கொரிய நிறுவனங்களையே விடமாட்டேன் என்கிறார்கள்).
    ஆனாலும் அனுமதிப்பது, தமிழர்களை “இராவண வளையத்திற்குள்” ஒரு டெரரிஸ்ட் மாநிலமாக கொண்டுவருவது வசதியாக இருக்கும் என்பதால்தான்.

    ஆனாலும் “தமிழன் கெட்டால் நமக்கென்ன” அதானியுடன் சேர்ந்து நாம் தொழில் செய்யலாமே என்று “பனம்பழ அரச அறிவியல்” யோசிக்கக்கூடும்.
    அதானி போன்றோர் கட்டமைப்பின் பிரதிநிதிகளே தவிர சுதந்திர தொழில் முனைவோர் அல்ல. இது போன்றுதான் “அலிபாபாவின் ஜேக் மா” வுக்கு நடந்தது.
    “இராவண அரச அறிவியல் மாடலை” காசை வாங்கிக்கொண்டு ஏற்றுக்கொள்வது, “குச்சியைக் கொடுத்து அடிவாங்குவது” போன்றது ..!?

    இவர்களுடைய நோக்கம், பிரச்சனைக்குரிய பகுதியாக “லடாக்கிலிருந்து”,
    “புலிப் பயங்கரவாதப் பகுதியாக” “பாக்கு நீரிணைப் பகுதியை” மாற்றுவதுதான்..!?

    https://youtu.be/a112rwoqJEw?si=s0RPPAvDYkZMor4k

    Reply