2024

2024

இப்ராஹீம் ரைசி உயிரிழந்தமைக்கும் எங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை – மறுக்கும் இஸ்ரேல்!

ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தமைக்கும் தங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல்  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்ககு வானூர்தி கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.

அதன்போது, அதிபர் ரைசி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகம் உறுதிபடுத்தியது.

அத்துடன், ஈரான் அதிபரின் மரணத்திற்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புதான் காரணம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருவதோடு இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசியின் உலங்கு வானூர்தி விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல,இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் இப்ஸ்விச் மாநகராட்சியின் மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் !

பிரித்தானியாவிலுள்ள நகரமொன்றின் மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ இளவழகன் என்பவர் இப்ஸ்விச் மாநகராட்சியின் வருடாந்த கூட்டத்தில் அதிகவாக்குகளை பெற்று ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்” என இளங்கோ இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுவை முன்மொழிந்த நகராட்சி தலைமை ஆளுநர் நீல் மெக்டொனால்ட் , தான் பதவியில் இருக்கும் ஆண்டில் பொதுத் தேர்தல் முடிவை இளங்கோ இளவழகன் அறிவிப்பார் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய மேயராக இளங்கோ இளவழகன் நியமிக்கப்பட்டமைக்கு அங்குள்ள தமிழ் சமூகம் வாழ்த்து தெரிவித்து நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பலி !

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

நாம் வெற்றி பெற்றால் சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். – அமித் ஷா

என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று (மே 16) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

“அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி காங்கிரஸும், ஆர்ஜேடியும் ஒருபோதும் நினைக்கவில்லை. மோடி அரசுதான் அதை செய்தது. பீகாருக்கு வளர்ச்சி அரசியல்தான் தேவை, காட்டுராஜ்ஜியம் அல்ல.

நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோயில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். ராமர் கோயிலுக்குச் செல்லாமல், ஒதுங்கியவர்களால் (எதிர்க்கட்சிகள்) நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. சீதைக்கு யாராவது கோயில் கட்ட முடியும் என்றால், அது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும்” என தெரிவித்தார்.

பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு உடல்நலக் கோளாறுகள் !

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துவாரகாவாக உயிர்த்தெழுந்தவர் கொல்லப்படும் அபாயம் ! புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வீரவணக்க அஞ்சலி !!

மே 18, 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் வகையிலும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரபாகரனுக்கு வீர வணக்க அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டால் துவராகாவாக மாறிய பெண் படுகொலை செய்யப்படுவார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வே பிரபாகரனின் இரத்த உறவான அவருடைய மூத்த சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இளவயதில் பிரபாகரன் இருந்த தோற்றத்திலேயே இருக்கும் மனோகரன் வேலுப்பிள்ளையின் மகன் கார்த்திக் மனோகரன் தனது சித்தப்பா வே பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு பல்வேறு செவ்விகளை வழங்கிய காரத்திக் மனோகரன் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிய தனது சிறிய தந்தையை அவமானப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பணத்தைக் கொள்ளையிடும் வகையிலும் கதைகளைப் பரப்பி வருவதால் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே தாங்கள் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் மனோகரன் இந்த அஞ்சலி நிகழ்வை தான் தோன்றித்தனமாகச் செய்யவில்லை எனவும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கும் அமையவே இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 18 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த செய்தியை தமிழ் ஊடகப் பரப்பில் தேசம்நெற்றே முதலில் உறுதிப்படுத்தி வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பில் தேசம் நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலாளராக இருந்த கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் வெளியிட்டு இருந்தது. அவர் இச்செய்தியை சர்வதேச ஊடகங்களுக்கும் 48 மணி நேரங்களில் அறிவித்து இருந்தார். இச்செய்தி அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என் இலும் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்குழுவின் தலைவராக இருந்த எஸ் கருணைலிங்கம். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் செயற்பாட்டாளரான சுவிஸ் ரஞ்சனின் சகோதரர். இச்செய்தி வெளியிடப்பட்டதற்காக தங்களைப் புலிகளின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட சிலர் அத்தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியும் இருந்தனர். அதன் பின் ரி.ரி.என்னும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று கும்பலோடு கோவிந்தாவாக ஜால்ரா அடித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை முற்று முழுதாக உறுதிப்படுத்தினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் கொதித்தெழுவார்கள். பிரபாகரன் எப்படி இறந்தார்? இறுதி நேரத்தில் என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழும். இலங்கை, இந்திய அரசுகள் மீது யுத்தக் குற்றங்களும் எழும் தமிழர்கள் மத்தியில் இந்தியா நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இதற்காக பிரபாகரன் உயிரோடு தப்பித்துவிட்டார் என்ற வதந்தியை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கசிய விட்டனர். நெடுமாறன், காசி ஆனந்தன் போன்ற இந்திய உளவுப் பிரிவான ரோ வின் முகவர்கள் இதனைப் பரப்புவதில் முன்நிற்கின்றனர். இவர்கள் தான் இப்போது துவாரகா வந்துவிட்டார், பிரபாகரனும் வருகிறார். ஆனால் இம்முறை பிரபாகரன் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் கட்டியம் கூறுகின்றார் காசி ஆனந்தன்.

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட புலிகளின் ஒரு பிரிவினர் தற்போது இந்திய உளவுத்துறையின் முகவர்களாக சுவிஸில் உள்ள பெண்ணை துவாரகாவாக மற்றியுள்ளனர். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மக்கள் அவர் இனி வரமாட்டார் என்று நம்பினால் துவாரகா வேடம் போட்ட பெண் கொல்லப்பட்டு அவருடைய கதை முடிவுக்கு வந்துவிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போதைய வேடம் கலைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள் மேலும் இந்திய உளவுத்துறையும் அம்பலப்படுத்தப்படும் என்பதால் போலித் துவாரகா கொல்லப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது நலன்களுக்காகத் தூண்டிவிட்டு தமிழ் – சிங்கள முரண்பாட்டை படுகொலைகளாக மாற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ. இந்திய புலனாய்வுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் விக்ரர் தலைமையில் அனுராதபுரம் படுகொலையை 1985இல் மேற்கொண்டனர். சிங்களக் கிராமங்கள் தாக்கியளிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே. தாங்கள் சொன்னதைச் செய்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயதப் பயிற்சியை இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்திய நலன்களைப் பேணுவதற்கான போராட்டமாக மாறியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய இந்தியா, 1987 இல் அமைதிப்படையாக இலங்கைக்குள் நூழைந்தது. புலிகளைக் குறைத்து மதிப்பிட்ட இந்தியாவும் இந்திய இராணுவமும் புலிகளிடம் வாங்கிக் கட்டியது.

அடிபட்டுக் கிடந்த இந்தியா தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. பிரபாகரனிடம் எவ்வித அரசியல் பார்வையும் தெளிவும் இல்லாதது இந்தியாவுக்கு மிகச் சாதகமாக அமைந்தந்து. இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2006இல் மாவிலாற்றை மூடி சண்டையை வலிந்து ஆரம்பித்து இலங்கை இராணுவத்திடம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தனர். இதற்குப் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செயற்பட்டனர். ஒப்பிரேசன் பீக்கன் என்ற 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட தாக்குதல் திட்டமே பின் மீள்திருத்தம் செய்யப்பட்டு 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2008 பிற்பகுதிகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. விடுதலைப் புலிகள் சிறிய ரக மல்ரிபரல்கள் கொண்டு தாக்க இலங்கை இராணுவம் கனரக சக்தி வாய்ந்த மல்ரிபரல்களைக் கொண்டு வந்து புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தது. ஒரு சில மணித்தியாலங்களே கட்டாய இராணுவப் பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விட்டில் புச்சிகளாக வன்னி மண்ணில் உயிரிழந்தனர். இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று 2009 ஜனவரியில் வேண்டுகோள் விடுத்தனர். அச்சமயத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் பாரிய உயிரிழப்பொன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் பார்வையற்ற அரசியல் தெளிவற்ற ஒரு முட்டாள்தனமான இராணுவக் கட்டமைப்பாக இருந்தமையால்தான் சர்வதேசம் ‘உங்களை இப்படித்தான் தாக்கி அழிப்போம்’ என்று கால அட்டவணை போட்டு அவர்களுடைய கையில் திட்டத்தை ஒப்படைத்து விட்டு தாக்கி அழித்துள்ளனர். நிலைமை தங்களுக்கு சாதகமாகவில்லை என்பது தெரிந்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பிதில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தமிழகத்தில் திமுகாவுக்குப் பதில் அம்மா ஜெயலலிதா அதிமுகா ஆட்சிக்கு வரும் என்றும் நம்பினர். அதனால் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 16, 2009 வரை சரணடையாமல் யுத்தத்தை இழுத்துக் கொண்டிருந்தனர். இலங்கை அரசோ யுத்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியத் தேர்தல் ஆரம்பிக்க முன்னரே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் செயற்பட்டது.

இந்தப்பின்னணியில் நிகழ்த்தப்பட்டது தான் ஏப்ரலில் பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். அச்சண்டையில் பிரபாகரன் உயிர் தப்பினார். அப்போது கூட அவர்கள் சரணடையும் முடிவை எடுத்திருந்தால் வன்னி யுத்தத்தில் 75 வீதமான உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் கதைகளைக் கேட்டும் அசட்டுத்தனமான முட்டாள்தனமான நம்பிக்கையிலும் பாஜாகா வரும் ஜெயலலிதா அம்மா வருவார், அவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பினர். இறுதி யுத்தம் நாளுக்குநாள் இறுக இறுக குறுகிய நிலப்பரப்புக்குள் மக்களும் புலிகளும் தள்ளப்பட்டனர். இந்திய – இலங்கைப் புலனாய்வுத்துறையும் யுத்தத்தை இழுத்தடிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஏப்ரல் முதல் மே 18 வரையான ஆறு முதல் ஏழு வரையான வாரங்களிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. இந்தப் பேரவலத்திற்குக் காரணம் பாஜாகா வும் ஜெயலலிதாவும் வந்து தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையே.

மே 16 2009 தேர்தல் முடிவுகள் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பில் மண் வீழ்ந்தது. அதனை அறிந்த சில மணி நேரங்களிலேயே தாங்கள் ஆயுதங்களை மௌனிக்கத் தயார் என்று தங்களுடைய தொடர்புகளுக்கு அறிவித்தனர். எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் இருக்கவில்லை. வெறும் வாய்வார்த்தைகளை நம்பி சரணடைய வேண்டியதாயிற்று. குறைந்தது சில வாரங்களுக்கு முன் தங்கள் சரணடைவை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்து சரணடைந்திருந்தால் வரலாறு வேறு வதமாக அமைந்திருக்கும். சரணடைந்த முக்கிய தலைவர்கள், தளபதிகள், பிரபாகரன் குடும்பத்தினர் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் படுகொலை செய்யப்பட்டனர். ஆட்டத்தை தொடக்கிய இந்தியா, அதனை முடித்தும் வைத்தது. இப்போது தனது அடுத்த ஆட்டத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது. ஆனால் நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை…

 

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது – அமெரிக்க தூதுவர்ஜூலி சங்

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற பூர்த்தியாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக காணாமல்போனோர் குடும்பங்கள் முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்தேன் என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்றும் பல குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் கதைகள் அமைதியான நீடித்த அரசியல்தீர்வின் அவசியத்தை நினைவுபடுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம்

பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை ஒருபோதும் மறக்ககூடாது என்பதனை இந்த அறிக்கை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் டேர்க் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்கள் குறித்து அக்கறையுள்ளவர்களும் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் விடுதலை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

 

குறித்த வழக்கானது நகர்த்தல் பத்திரத்தின்மூலம் இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராந்த நீதிபதி குறித்த நால்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

குறித்த நபர்களுடைய பிணைக்கான நகர்த்தல் விண்ணப்பத்தினை சட்டத்தரணி நாகராஜா மோகன் இன்றையதினம் தாக்கல் செய்திருந்தார். இதற்கு ஆதரவாக சட்டத்தரணி புவிராஜசிங்கம் முகுந்தன், சட்டத்தரணி தேவராஜா ரமணன் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

 

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிசாரினால் குறித்த நால்வருக்கும் எதிராக ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் 3 (1) இன் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அதற்கான போதியளவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அதனை நீக்கிக் கொண்டு குறித்த வழக்கை சம்பூர் பொலிசார் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் தண்டனைச் சட்டக்கோவை பிரிவின்கீழ் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த பிணை விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தார். குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

கடந்த 12ஆம் திகதி சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அன்றைய தினம் இரவு கமலேஸ்வரன் விஜிதா, பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா, செல்வவினோத்குமார் சுஜானி, நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.