துவாரகாவாக உயிர்த்தெழுந்தவர் கொல்லப்படும் அபாயம் ! புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வீரவணக்க அஞ்சலி !!

மே 18, 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் வகையிலும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரபாகரனுக்கு வீர வணக்க அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டால் துவராகாவாக மாறிய பெண் படுகொலை செய்யப்படுவார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வே பிரபாகரனின் இரத்த உறவான அவருடைய மூத்த சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இளவயதில் பிரபாகரன் இருந்த தோற்றத்திலேயே இருக்கும் மனோகரன் வேலுப்பிள்ளையின் மகன் கார்த்திக் மனோகரன் தனது சித்தப்பா வே பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு பல்வேறு செவ்விகளை வழங்கிய காரத்திக் மனோகரன் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிய தனது சிறிய தந்தையை அவமானப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பணத்தைக் கொள்ளையிடும் வகையிலும் கதைகளைப் பரப்பி வருவதால் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே தாங்கள் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் மனோகரன் இந்த அஞ்சலி நிகழ்வை தான் தோன்றித்தனமாகச் செய்யவில்லை எனவும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கும் அமையவே இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 18 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த செய்தியை தமிழ் ஊடகப் பரப்பில் தேசம்நெற்றே முதலில் உறுதிப்படுத்தி வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பில் தேசம் நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலாளராக இருந்த கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் வெளியிட்டு இருந்தது. அவர் இச்செய்தியை சர்வதேச ஊடகங்களுக்கும் 48 மணி நேரங்களில் அறிவித்து இருந்தார். இச்செய்தி அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என் இலும் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்குழுவின் தலைவராக இருந்த எஸ் கருணைலிங்கம். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் செயற்பாட்டாளரான சுவிஸ் ரஞ்சனின் சகோதரர். இச்செய்தி வெளியிடப்பட்டதற்காக தங்களைப் புலிகளின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட சிலர் அத்தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியும் இருந்தனர். அதன் பின் ரி.ரி.என்னும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று கும்பலோடு கோவிந்தாவாக ஜால்ரா அடித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை முற்று முழுதாக உறுதிப்படுத்தினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் கொதித்தெழுவார்கள். பிரபாகரன் எப்படி இறந்தார்? இறுதி நேரத்தில் என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழும். இலங்கை, இந்திய அரசுகள் மீது யுத்தக் குற்றங்களும் எழும் தமிழர்கள் மத்தியில் இந்தியா நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இதற்காக பிரபாகரன் உயிரோடு தப்பித்துவிட்டார் என்ற வதந்தியை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கசிய விட்டனர். நெடுமாறன், காசி ஆனந்தன் போன்ற இந்திய உளவுப் பிரிவான ரோ வின் முகவர்கள் இதனைப் பரப்புவதில் முன்நிற்கின்றனர். இவர்கள் தான் இப்போது துவாரகா வந்துவிட்டார், பிரபாகரனும் வருகிறார். ஆனால் இம்முறை பிரபாகரன் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் கட்டியம் கூறுகின்றார் காசி ஆனந்தன்.

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட புலிகளின் ஒரு பிரிவினர் தற்போது இந்திய உளவுத்துறையின் முகவர்களாக சுவிஸில் உள்ள பெண்ணை துவாரகாவாக மற்றியுள்ளனர். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மக்கள் அவர் இனி வரமாட்டார் என்று நம்பினால் துவாரகா வேடம் போட்ட பெண் கொல்லப்பட்டு அவருடைய கதை முடிவுக்கு வந்துவிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போதைய வேடம் கலைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள் மேலும் இந்திய உளவுத்துறையும் அம்பலப்படுத்தப்படும் என்பதால் போலித் துவாரகா கொல்லப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது நலன்களுக்காகத் தூண்டிவிட்டு தமிழ் – சிங்கள முரண்பாட்டை படுகொலைகளாக மாற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ. இந்திய புலனாய்வுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் விக்ரர் தலைமையில் அனுராதபுரம் படுகொலையை 1985இல் மேற்கொண்டனர். சிங்களக் கிராமங்கள் தாக்கியளிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே. தாங்கள் சொன்னதைச் செய்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயதப் பயிற்சியை இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்திய நலன்களைப் பேணுவதற்கான போராட்டமாக மாறியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய இந்தியா, 1987 இல் அமைதிப்படையாக இலங்கைக்குள் நூழைந்தது. புலிகளைக் குறைத்து மதிப்பிட்ட இந்தியாவும் இந்திய இராணுவமும் புலிகளிடம் வாங்கிக் கட்டியது.

அடிபட்டுக் கிடந்த இந்தியா தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. பிரபாகரனிடம் எவ்வித அரசியல் பார்வையும் தெளிவும் இல்லாதது இந்தியாவுக்கு மிகச் சாதகமாக அமைந்தந்து. இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2006இல் மாவிலாற்றை மூடி சண்டையை வலிந்து ஆரம்பித்து இலங்கை இராணுவத்திடம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தனர். இதற்குப் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செயற்பட்டனர். ஒப்பிரேசன் பீக்கன் என்ற 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட தாக்குதல் திட்டமே பின் மீள்திருத்தம் செய்யப்பட்டு 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2008 பிற்பகுதிகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. விடுதலைப் புலிகள் சிறிய ரக மல்ரிபரல்கள் கொண்டு தாக்க இலங்கை இராணுவம் கனரக சக்தி வாய்ந்த மல்ரிபரல்களைக் கொண்டு வந்து புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தது. ஒரு சில மணித்தியாலங்களே கட்டாய இராணுவப் பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விட்டில் புச்சிகளாக வன்னி மண்ணில் உயிரிழந்தனர். இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று 2009 ஜனவரியில் வேண்டுகோள் விடுத்தனர். அச்சமயத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் பாரிய உயிரிழப்பொன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் பார்வையற்ற அரசியல் தெளிவற்ற ஒரு முட்டாள்தனமான இராணுவக் கட்டமைப்பாக இருந்தமையால்தான் சர்வதேசம் ‘உங்களை இப்படித்தான் தாக்கி அழிப்போம்’ என்று கால அட்டவணை போட்டு அவர்களுடைய கையில் திட்டத்தை ஒப்படைத்து விட்டு தாக்கி அழித்துள்ளனர். நிலைமை தங்களுக்கு சாதகமாகவில்லை என்பது தெரிந்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பிதில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தமிழகத்தில் திமுகாவுக்குப் பதில் அம்மா ஜெயலலிதா அதிமுகா ஆட்சிக்கு வரும் என்றும் நம்பினர். அதனால் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 16, 2009 வரை சரணடையாமல் யுத்தத்தை இழுத்துக் கொண்டிருந்தனர். இலங்கை அரசோ யுத்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியத் தேர்தல் ஆரம்பிக்க முன்னரே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் செயற்பட்டது.

இந்தப்பின்னணியில் நிகழ்த்தப்பட்டது தான் ஏப்ரலில் பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். அச்சண்டையில் பிரபாகரன் உயிர் தப்பினார். அப்போது கூட அவர்கள் சரணடையும் முடிவை எடுத்திருந்தால் வன்னி யுத்தத்தில் 75 வீதமான உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் கதைகளைக் கேட்டும் அசட்டுத்தனமான முட்டாள்தனமான நம்பிக்கையிலும் பாஜாகா வரும் ஜெயலலிதா அம்மா வருவார், அவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பினர். இறுதி யுத்தம் நாளுக்குநாள் இறுக இறுக குறுகிய நிலப்பரப்புக்குள் மக்களும் புலிகளும் தள்ளப்பட்டனர். இந்திய – இலங்கைப் புலனாய்வுத்துறையும் யுத்தத்தை இழுத்தடிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஏப்ரல் முதல் மே 18 வரையான ஆறு முதல் ஏழு வரையான வாரங்களிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. இந்தப் பேரவலத்திற்குக் காரணம் பாஜாகா வும் ஜெயலலிதாவும் வந்து தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையே.

மே 16 2009 தேர்தல் முடிவுகள் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பில் மண் வீழ்ந்தது. அதனை அறிந்த சில மணி நேரங்களிலேயே தாங்கள் ஆயுதங்களை மௌனிக்கத் தயார் என்று தங்களுடைய தொடர்புகளுக்கு அறிவித்தனர். எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் இருக்கவில்லை. வெறும் வாய்வார்த்தைகளை நம்பி சரணடைய வேண்டியதாயிற்று. குறைந்தது சில வாரங்களுக்கு முன் தங்கள் சரணடைவை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்து சரணடைந்திருந்தால் வரலாறு வேறு வதமாக அமைந்திருக்கும். சரணடைந்த முக்கிய தலைவர்கள், தளபதிகள், பிரபாகரன் குடும்பத்தினர் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் படுகொலை செய்யப்பட்டனர். ஆட்டத்தை தொடக்கிய இந்தியா, அதனை முடித்தும் வைத்தது. இப்போது தனது அடுத்த ஆட்டத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது. ஆனால் நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை…

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Democracy
    Democracy

    ஐயா மதுரை பழ நெடுமாறன் அவர்களும், ஐயா நாட்டுக்கோட்டை செட்டி (பணத்தில் கெட்டி) பழ கருப்பையா அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்கள் ஆகியோர், கவிப்பேரரசு கண்ணதாசன் போன்றோர்கள்போல் தேனீக்களல்லாமல்,.. #குளவிகள் என்று நிரூபித்துள்ளனர்..!

    தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான்.

    டாக்டர் கலைஞர் அவர்களின் குடும்பம் ஏற்கனவே #2G பணத்தை 2008 கடைசியில் வாங்கிவிட்டார்கள் (ஆப்பிரிக்கா வாக்னர்), ஆனால் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக, ஏற்கனவே அதே தருணத்தில் “சீனாவின் Brajesh Chandra Mishra (1928 – 2012) வின்” பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த ஜெயலலிதா, #LTTE யினரை ஆதரிப்பார் என்பதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை..!

    இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர் (முக்கியமாக சுரேஷ் பிரேமச்சந்திரன் or பிரேம் சந்த் ஜி).. ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    Reply