31

31

வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கமைப்பில் யாழில் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை   நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையானது யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறுகிறது. இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்சேவையில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த நடமாடும் சேவையானது நாளை செவ்வாய்க்கிழமை (நவ 1) கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்தவர்களும், கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது மேற்படி தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் பாலம் இடிந்து வீழ்ந்த விவகாரம் – 125 பேரை மட்டுமே தாங்கக் கூடிய பாலத்தில் 500 பேருக்கு அனுமதி !

குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

மாநில காவல் துறை இந்த விபத்து தொடர்பில் கூறியதாவது: “மோர்பியில் நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்த பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. முன்னதாக பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய மதிப்பு ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய Fitness Certificate பெறப்படவில்லை என்று மோர்பி நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் பாலத்தின் மீது இருந்துள்ளனர். பாலத்தின் மீது இருந்தவாறு மக்கள் பலரும் சாத் பூஜை செய்துள்ளனர்.

அதேநேரத்தில், பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், புகார் அளித்ததாகவும் எனினும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியள்ளார்.

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் !

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர்.

இதேபோல் கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் அலி. இவர் 2020 ஆகஸ்டில் அதிபர் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் கோஸ்ட் டெமார்ரா பகுதியில் 1980 ஏப்ரல் மாதம் பிறந்த இவர், இந்தோ-கயானிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2015-ல் போர்சுக்கல் பிரதமராக பொறுப்பேற்றவர் அன்டோனியா கோஸ்டா. இவர் 1961-ல் லிஸ்பனில் பிறந்தார். இவரது தாத்தா-பாட்டி கோவாவைச் சேர்ந்தவர்கள்.

மொரீஷியஸ் பிரதமராக 2017-ல் பொறுப்பேற்றவர் பிரவிந்த் ஜக்நாத். இவர் 1961-ல் மொரீஷியஸின் வாகோஸ்-பீனிக்ஸ் பகுதியில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். மொரீஷியஸ் அதிபராக 2019-ல்பொறுப்பேற்ற பிரித்விராஜ் சிங் ரூபன் 1959-ல் இந்திய ஆர்ய சமாஜி இந்து குடும்பத்தில் குவாட்ரே போர்ன்ஸ் என்ற பகுதியில் பிறந்தார்.

சூரிநாம் நாட்டின் அதிரபராக 2020-ல்பதவியேற்ற சந்திரிகா பிரசாத் சன்டோகி,1959-ல் லெலிடார்ப் என்ற பகுதியில் இந்தோ-சூரிநாமிஸ் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.

கயானாவின் துணை அதிபராக 1999 முதல் 2011 வரை பதவி வகித்த பாரத் ஜக்தேவ், முந்தைய பிரிட்டிஷ் கயானா பகுதியிலுள்ள டெமார்ரா-மஹாய்கா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா ராம் ஜியாவன், 1912-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிட்டிஷ் கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்.

அயர்லாந்து அரசின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் லியா வராட்கர். 1979-ல் டப்ளினின் பிறந்த வராட்கரின் தந்தை மும்பையைச் சேர்ந்தவர். அதேபோல் சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 55 இந்திய வம்சாவளியினர் கேபினட் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். மேலும் 63 இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், பெடரல் அவை உறுப்பினர்களாவும் உள்ளனர். 12 பேர் தூதர்களாக பணிபுரிகின்றனர்.

மொரீஷியஸ், ஃபிஜி, சிங்கப்பூர், சூரிநாம் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.

ஃபிஜி, கயானா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பலர் மத்திய வங்கி நிர்வாக தலைவர்களாகவும் இருந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் நீரா டாண்டன் உள்ளிட்ட 112 இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் உள்ளனர்.

பழுதுபார்க்கப்பட்டு மீள திறக்கப்பட்ட பாலம் இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி !

குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ந்திகதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக 60 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  இந்த பணியில் தேசிய பேரீடர் மீட்பு குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆற்றுத் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே  மீட்புப் பணிகளை ஆய்வு செய்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கே ராணுவ டாக்டர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லட்சங்கள் சம்பளம் பெறும் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதில்லை – பௌசர் : கூட்டத்தின் பின்னணியில் மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

இலங்கையில் உள்ள பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் உழைக்கின்ற போதும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை வெளிக்கொணர்வதில்லை என லண்டன் புறநகர்ப் பகுதியான நியூமோல்டனில் நடைபெற்ற ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் பௌசர் தெரிவித்தார். வைத்திய கலாநிதி சி சிவச்சந்திரனின் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டின் போதே அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். சி சிவச்சந்திரன் ஒரு மருத்துவ கலாநிதியாக இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் ஆய்வுகளையும் தேடலையும் செய்து இந்நூலைக் கொண்டுவந்திருப்பதை பாராட்டிய பௌசர், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தைப் பெற்ற போதும் தங்கள் கடமைகளைச் செய்யாதிருப்பதையே பௌசர் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஓக்ரோபர் 30 காலை 11:00 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வெளிவரும் ஆயிரக்கணக்காண நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த அ முத்துகிருஷ்ணனும் கலந்துகொள்டிருந்தார். அவருடைய மதுரை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்திய, “தூங்காநகர் நினைழவுகள் – மதுரையின் ழுழமையான வரலாறு” என்ற நூலும் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் தொடர்பான கனதியானதொரு அறிமுகத்தை ஆய்வாளர் மு நித்தியானந்தன் பதிவு செய்திருந்தார்.

‘கிழக்கு மண்’ நூல் வெளியீட்டு மறுநிர்மாணம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வுக்கு மாதவி சிவலீலன் தலைமை தாங்கினார். ஆனால் இந்நூல் ஆய்வை மேற்கொள்ளச் சம்மதித்திருந்த மயூரன் அம்பலவாணர், கௌரி பரா, பால சுகுமார் ஆகிய மூவரும் நிகழ்ச்சியின் போது சமூகமளித்திருக்கவில்லை. இவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு குறும் அரசியல் காரணிகள் காரணமாக இருந்ததா என்று மறுநிர்மாணம் குழுவிடம் கேட்ட போது அது தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதிலளித்தன். புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது மிகச் சிறிய வட்டமாக இருந்தாலும் அதற்குள்ளும் பல்வேறு நுண் அரசியல் சதுரங்கங்களுக்கு குறைவிருப்பதில்லை.

வழமையாக தமிழ் புத்தக வெளியீடுகள் நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே நடைபெறுவது வழமை. ஆனால் மறுநிர்மாணம் குழுவினர் குறித்த நேரத்துக்கு நிகழ்வை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டு நிகழ்வு வழமைக்கு மாறாக இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் வராத குறையை தலைமை தாங்கிய மாதவி சிவலீலன் மிகச் சிறப்புற நூலின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச்சென்று தலைமையுரையை ஒரு ஆய்வுரையாகவே மேற்கொண்டார். அவர் நூலை ஆழமாகவும் கவனமாகவும் வாசித்திருந்ததை அவரது தலைமையுரை ஆய்வுரை வெளிப்படுத்தியது. மட்டக்களப்பில் இருந்த கண்ணகி வழிபாடு பற்றி நூல் சொல்கின்ற விடயாத்தைக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கண்ணகி வழிபாடு இல்லாமல் போனது என்பதனையும் சுட்டிக்காட்டினார். கண்ணகி வழிபாடு தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து வன்னியூடாக மட்டக்களப்பிற்குச் சென்றதெனக் குறிப்பிட்ட அவர், ஆறுமுகநாவலர் ‘விதவைக்கு எதற்குக் கோயில்’, ‘வாணிபம் செய்தவளுக்கு என்ன கோயில்’ என்று சொல்லி கண்ணகி கோயில்களை மனோன்மனி அம்மன் என்றெல்லாம் அம்மண் கோயில்களாக்கினார் எனச் சுட்டிக்காட்னார்.

கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் வரவில்லை என்றால் நித்திய மேளம் அடிப்பவரை வைத்துத்தான் விழாவைச் சமாளிக்க வேண்டும், நான் தான் இன்றைக்கு நித்திய மேளம் என்று பௌசர் நகைச்சுiவாயாக நிகழ்ச்சியை ஆரம்பித்து நூல்பற்றிய விபரங்களுக்குள் சென்று வந்தார். ‘கிழக்கு மண்’ மட்டக்களப்பின் வரலாற்றைச் சுரக்கமாகச் சொல்வதோடு மட்டக்களப்பு பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நூலாசிரியர் சி சிவச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் ஊர்ப்பெயர்களும் அதற்கான காரணங்களும், அங்குள்ள பேச்சுத் தமிழ், சமூக சாதிய அமைப்புகள், சடங்குகள், கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், சமய வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றுள்ளது.

மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

என்னதான் கூட்டம் நடைபெற்றாலும் கூட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் தான் மிகுந்த சுவாரசியமானதக இருக்கும். அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் மயூரன் அம்பலவாணர் கூட்டத்தின் முன்னும் பின்னுமான பேசுபொருளாகி இருந்தார். மயூரன் அம்பலவாணர் தலைமைச் செயலகத்தின் செயற்பாட்டாளராக முன்னர் அறியப்பட்டவர். தற்போது இந்தியாவுடன் பிஜேபியுடன் அவர்களின் தீவிர வலதுசாரிப் பிரிவான சிவசேனாவுடன் இவர்சார்ந்த குழுவினர் நெருக்கமாகிவிட்டனர். இதனால் இவரைச் சர்ச்சைக்குள்ளாக்க நாடுகடந்த அரசினரும் ரிசிசி என்கின்ற தமிழ் சமூக மையமும் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் புத்தக வெளியீட்டுச் சூழல் அவர்களுக்கு சாதகமில்லாததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மயூரன் அம்பலவாணரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரேயே அங்கு வந்திருந்தார்.

மயூரன் அம்பலவாணர் வந்ததும் அவரும் அவருடைய நண்பரும் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவேற்றிய செய்திகள் தொடர்பாக மாதவி சிவலீலன் தம்பதிகள் கேள்வி எழுப்பினர். மயூரன் அம்பலவாணரிடம் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக மாதவி சிவலீலன் தம்பதிகள் சரமாரியாக ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த ஆக்கிரோசத்துடன் கேட்டனர். மயூரன் அம்பலவாணர் மௌனமாகவே நின்றிருந்தார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பிரபா’ என்ற நபருக்கு எதிராக முகவலைத் தளத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அந்நபர் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே அவர் வெளியே வந்ததாகவும், வெளியே வந்தும் பெண் போராளிகளைக் காட்டிக்கொடுப்பேன் என மிரட்டி அவர்களை பாலியல் ரீதியில் சுரண்ட முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பதிவுகளில் ஒன்றில் மாதவி சிவலீலனுடன் அவர் வீட்டில் வைத்து மயூரனுடனும் அவருடைய நண்பர் ஒருவருடனும் உரையாடிய விடயமும் அச்சொட்டாக எழுதப்பட்டிருந்தது. அதை வைத்தே அப்பதிவை மயூரன் அம்பலவாணரே மேற்கொண்டார் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டது. மாதவி சிவலீலன் தம்பதியருக்கு பிரபா என்ற தூரத்து உறவுள்ள ஒருவர் இருந்தார். ஆனால் மயூரன் அம்பலவாணர் குறிப்பிட்ட பிரபாவும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்காரப் பிரபாவும் ஒருவர் அல்ல. அது முற்றிலும் இரு வேறு நபர்கள். ஆனால் மயூரனும் அவருடைய நண்பரும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்கார பிரபாவே தாங்கள் குற்றம்சாட்டும் நபர் என்று சொல்லி மாதவி சிவலீலனின் குடும்பத்தாரையும் அவர்களின் உறவான பிரபாவையும் அவருடைய தாயாரையும் பற்றி கீழ்த்தரமான பதிவுகளை ஜேவிபி நியூசில் வெளியிட்டனர். தன்னுடைய வீட்டில் வைத்து தான் நம்பிக்கையோடு தேநீர் உணவு பரிமாறிய பின் தங்களுக்கு தெரியாமலே தங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்தது நம்பிக்கைத் துரோகம் என மாதவி சிவலீலன் தம்பதியினர் மயூரன் அம்பலவாணரைச் சாடடினர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் பா உ சிறிதரனுக்கு எதிரானவர்கள் அவ்விணையத்தளத்தில் பழிவாங்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் மயூரன் அம்பலவாணர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் பா உ சிறிதரனுடன் தேன்நிலவு கொண்டாடிய காலம். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசுவினால் எழுதப்பட்ட நூலை வெளியிட்ட நிகழ்வுகளும் அக்காலகட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கான அனுசரணையை மயூரன் அம்பலவாணரும் அவருடைய நண்பர்களும் வழங்கி இருந்தனர். நூல் வெளியீட்டு நிகழ்வை இவர்களுக்காக பா உ எஸ் சிறிதரன் மற்றும் முன்னாள் பா உ, மா உ பிரேமச்சந்திரனும் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பெரிய அரசியலும் சில்லறைத் தனங்களும் தமிழ் அரசியலுக்குள் கொட்டிக்கிடக்கின்றது.