லட்சங்கள் சம்பளம் பெறும் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதில்லை – பௌசர் : கூட்டத்தின் பின்னணியில் மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

இலங்கையில் உள்ள பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் உழைக்கின்ற போதும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை வெளிக்கொணர்வதில்லை என லண்டன் புறநகர்ப் பகுதியான நியூமோல்டனில் நடைபெற்ற ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் பௌசர் தெரிவித்தார். வைத்திய கலாநிதி சி சிவச்சந்திரனின் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டின் போதே அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். சி சிவச்சந்திரன் ஒரு மருத்துவ கலாநிதியாக இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் ஆய்வுகளையும் தேடலையும் செய்து இந்நூலைக் கொண்டுவந்திருப்பதை பாராட்டிய பௌசர், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தைப் பெற்ற போதும் தங்கள் கடமைகளைச் செய்யாதிருப்பதையே பௌசர் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஓக்ரோபர் 30 காலை 11:00 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வெளிவரும் ஆயிரக்கணக்காண நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த அ முத்துகிருஷ்ணனும் கலந்துகொள்டிருந்தார். அவருடைய மதுரை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்திய, “தூங்காநகர் நினைழவுகள் – மதுரையின் ழுழமையான வரலாறு” என்ற நூலும் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் தொடர்பான கனதியானதொரு அறிமுகத்தை ஆய்வாளர் மு நித்தியானந்தன் பதிவு செய்திருந்தார்.

‘கிழக்கு மண்’ நூல் வெளியீட்டு மறுநிர்மாணம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வுக்கு மாதவி சிவலீலன் தலைமை தாங்கினார். ஆனால் இந்நூல் ஆய்வை மேற்கொள்ளச் சம்மதித்திருந்த மயூரன் அம்பலவாணர், கௌரி பரா, பால சுகுமார் ஆகிய மூவரும் நிகழ்ச்சியின் போது சமூகமளித்திருக்கவில்லை. இவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு குறும் அரசியல் காரணிகள் காரணமாக இருந்ததா என்று மறுநிர்மாணம் குழுவிடம் கேட்ட போது அது தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதிலளித்தன். புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது மிகச் சிறிய வட்டமாக இருந்தாலும் அதற்குள்ளும் பல்வேறு நுண் அரசியல் சதுரங்கங்களுக்கு குறைவிருப்பதில்லை.

வழமையாக தமிழ் புத்தக வெளியீடுகள் நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே நடைபெறுவது வழமை. ஆனால் மறுநிர்மாணம் குழுவினர் குறித்த நேரத்துக்கு நிகழ்வை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டு நிகழ்வு வழமைக்கு மாறாக இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் வராத குறையை தலைமை தாங்கிய மாதவி சிவலீலன் மிகச் சிறப்புற நூலின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச்சென்று தலைமையுரையை ஒரு ஆய்வுரையாகவே மேற்கொண்டார். அவர் நூலை ஆழமாகவும் கவனமாகவும் வாசித்திருந்ததை அவரது தலைமையுரை ஆய்வுரை வெளிப்படுத்தியது. மட்டக்களப்பில் இருந்த கண்ணகி வழிபாடு பற்றி நூல் சொல்கின்ற விடயாத்தைக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கண்ணகி வழிபாடு இல்லாமல் போனது என்பதனையும் சுட்டிக்காட்டினார். கண்ணகி வழிபாடு தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து வன்னியூடாக மட்டக்களப்பிற்குச் சென்றதெனக் குறிப்பிட்ட அவர், ஆறுமுகநாவலர் ‘விதவைக்கு எதற்குக் கோயில்’, ‘வாணிபம் செய்தவளுக்கு என்ன கோயில்’ என்று சொல்லி கண்ணகி கோயில்களை மனோன்மனி அம்மன் என்றெல்லாம் அம்மண் கோயில்களாக்கினார் எனச் சுட்டிக்காட்னார்.

கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் வரவில்லை என்றால் நித்திய மேளம் அடிப்பவரை வைத்துத்தான் விழாவைச் சமாளிக்க வேண்டும், நான் தான் இன்றைக்கு நித்திய மேளம் என்று பௌசர் நகைச்சுiவாயாக நிகழ்ச்சியை ஆரம்பித்து நூல்பற்றிய விபரங்களுக்குள் சென்று வந்தார். ‘கிழக்கு மண்’ மட்டக்களப்பின் வரலாற்றைச் சுரக்கமாகச் சொல்வதோடு மட்டக்களப்பு பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நூலாசிரியர் சி சிவச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் ஊர்ப்பெயர்களும் அதற்கான காரணங்களும், அங்குள்ள பேச்சுத் தமிழ், சமூக சாதிய அமைப்புகள், சடங்குகள், கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், சமய வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றுள்ளது.

மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

என்னதான் கூட்டம் நடைபெற்றாலும் கூட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் தான் மிகுந்த சுவாரசியமானதக இருக்கும். அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் மயூரன் அம்பலவாணர் கூட்டத்தின் முன்னும் பின்னுமான பேசுபொருளாகி இருந்தார். மயூரன் அம்பலவாணர் தலைமைச் செயலகத்தின் செயற்பாட்டாளராக முன்னர் அறியப்பட்டவர். தற்போது இந்தியாவுடன் பிஜேபியுடன் அவர்களின் தீவிர வலதுசாரிப் பிரிவான சிவசேனாவுடன் இவர்சார்ந்த குழுவினர் நெருக்கமாகிவிட்டனர். இதனால் இவரைச் சர்ச்சைக்குள்ளாக்க நாடுகடந்த அரசினரும் ரிசிசி என்கின்ற தமிழ் சமூக மையமும் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் புத்தக வெளியீட்டுச் சூழல் அவர்களுக்கு சாதகமில்லாததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மயூரன் அம்பலவாணரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரேயே அங்கு வந்திருந்தார்.

மயூரன் அம்பலவாணர் வந்ததும் அவரும் அவருடைய நண்பரும் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவேற்றிய செய்திகள் தொடர்பாக மாதவி சிவலீலன் தம்பதிகள் கேள்வி எழுப்பினர். மயூரன் அம்பலவாணரிடம் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக மாதவி சிவலீலன் தம்பதிகள் சரமாரியாக ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த ஆக்கிரோசத்துடன் கேட்டனர். மயூரன் அம்பலவாணர் மௌனமாகவே நின்றிருந்தார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பிரபா’ என்ற நபருக்கு எதிராக முகவலைத் தளத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அந்நபர் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே அவர் வெளியே வந்ததாகவும், வெளியே வந்தும் பெண் போராளிகளைக் காட்டிக்கொடுப்பேன் என மிரட்டி அவர்களை பாலியல் ரீதியில் சுரண்ட முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பதிவுகளில் ஒன்றில் மாதவி சிவலீலனுடன் அவர் வீட்டில் வைத்து மயூரனுடனும் அவருடைய நண்பர் ஒருவருடனும் உரையாடிய விடயமும் அச்சொட்டாக எழுதப்பட்டிருந்தது. அதை வைத்தே அப்பதிவை மயூரன் அம்பலவாணரே மேற்கொண்டார் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டது. மாதவி சிவலீலன் தம்பதியருக்கு பிரபா என்ற தூரத்து உறவுள்ள ஒருவர் இருந்தார். ஆனால் மயூரன் அம்பலவாணர் குறிப்பிட்ட பிரபாவும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்காரப் பிரபாவும் ஒருவர் அல்ல. அது முற்றிலும் இரு வேறு நபர்கள். ஆனால் மயூரனும் அவருடைய நண்பரும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்கார பிரபாவே தாங்கள் குற்றம்சாட்டும் நபர் என்று சொல்லி மாதவி சிவலீலனின் குடும்பத்தாரையும் அவர்களின் உறவான பிரபாவையும் அவருடைய தாயாரையும் பற்றி கீழ்த்தரமான பதிவுகளை ஜேவிபி நியூசில் வெளியிட்டனர். தன்னுடைய வீட்டில் வைத்து தான் நம்பிக்கையோடு தேநீர் உணவு பரிமாறிய பின் தங்களுக்கு தெரியாமலே தங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்தது நம்பிக்கைத் துரோகம் என மாதவி சிவலீலன் தம்பதியினர் மயூரன் அம்பலவாணரைச் சாடடினர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் பா உ சிறிதரனுக்கு எதிரானவர்கள் அவ்விணையத்தளத்தில் பழிவாங்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் மயூரன் அம்பலவாணர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் பா உ சிறிதரனுடன் தேன்நிலவு கொண்டாடிய காலம். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசுவினால் எழுதப்பட்ட நூலை வெளியிட்ட நிகழ்வுகளும் அக்காலகட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கான அனுசரணையை மயூரன் அம்பலவாணரும் அவருடைய நண்பர்களும் வழங்கி இருந்தனர். நூல் வெளியீட்டு நிகழ்வை இவர்களுக்காக பா உ எஸ் சிறிதரன் மற்றும் முன்னாள் பா உ, மா உ பிரேமச்சந்திரனும் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பெரிய அரசியலும் சில்லறைத் தனங்களும் தமிழ் அரசியலுக்குள் கொட்டிக்கிடக்கின்றது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *