24

24

“பும்ரா என்னை ஆட்டமிழக்கச்செய்ய பந்து வீசியதாக தெரியவில்லை.” – ஜேம்ஸ் ஆண்டர்சன்

லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ரத் பும்ரா தன்னை ஆட்டமிழக்கச் செய்வதை விட, தனக்கு ஷார்ட் பால்களைப் போடுவதிலேயே முனைப்பாக இருந்தார் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த டெஸ்ட் போட்டி ஹெட்டிங்க்லி மைதானத்தில் நடக்கிறது.

இரண்டாவது டெஸ்ட்டில் பும்ரா உள்ளிட்ட இந்திய அணியினரும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடியும் வரை வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் இருந்தனர்.

இந்த போட்டியில் தனது ஆட்டத்தைப் பற்றி பேசியிருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்,

“நான் வந்த முதல் பந்தே எனக்கு எதுவும் புரியவில்லை ஏனென்றால் அதற்கு முன் ஆட்டமிழந்து வந்த அத்தனை பேட்ஸ்மேன்களுமே களத்தில் பந்து நிதானமாக வருவதாகவே சொன்னார்கள். மேலும் நான் ஆட வரும்போது ஜோ ரூட்டும், பும்ரா வழக்கத்தை விட நிதானமாக வீசுவதாகவே சொன்னார். ஆனால் முதல் பந்தே எனக்கு 90 மைல் வேகத்தில் வந்தது. ஒன்றும் புரியவில்லை.

இதுவரை என் கிரிக்கெட் வாழ்க்கையில் நினைக்காத ஒரு விஷயத்தை அப்போது நான் நினைத்தேன். பும்ரா நான் ஆட்டமிழக்க வேண்டுமென்று பந்துவீசியதாகவே தெரியவில்லை. ஷார்ட் பால் வீசுவதிலேயே முனைப்பாக இருந்தார். ஒரு ஓவரில் பல நோபால்கள் வீசி 12 பால்களை வரை கூட போட்டார். இரண்டு பந்துகளை மட்டுமே ஸ்டம்பை நோக்கி வீசினார். அதனால் நான் ஆடிவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டி முடிந்ததும் இதில் நடந்த வார்த்தை சீண்டல் பற்றிய கேள்வி எழுந்தபோது, எதிரணி அப்படிப் பேச ஆரம்பித்தால் தங்களுக்கும் எப்படி பதில் சொல்வதென்று தெரியும் என இந்திய அணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பதிலளித்தார்.

இதே நேரம்  ரவிச்சந்திரன் அஸ்வினுடன் யூடியூப் சேனலில் உரையாடிய இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் , ஸ்ரீதர் கூறிய போது “ஆட்டம் முடிந்து, இரு அணி வீரர்களும் ஓய்வறைக்குத் திரும்பியபோது பும்ரா, ஆண்டர்சன் முதுகில் செல்லமாகத் தட்டி, ‘வேண்டுமென்றே செய்யவில்லை, மன்னியுங்கள் ’ எனத் தெரிவித்தார். ஆனால், ஆண்டர்சன் அதைக் கண்டுகொல்லாமல் அலட்சியப்படுத்தி ஒதுக்கினார். அதன்பிறகுதான், இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமானார்கள். அதன் விளைவைத்தான் 5ஆவது நாள் ஆட்டத்தில் பார்த்தோம்” எனக் கூறியமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

“ஆப்கானிஸ்தானை பாதுகாப்பது அமெரிக்காவின் கடமை .” – அமெரிக்க துணை ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் சென்றது.
இதற்கிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், ஆப்கன் நிலவரம் குறித்து அவர் கூறுகையில்,
அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியைப் பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றார்.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரை அடுத்து அவர் வியட்நாம் சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

“தலிபான்களுடன் போருக்கு தயார்.” – எதிர்க்கத்துணியும் பஞ்ச்ஷிர் !

ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார். இவர் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவராகவுள்ளார்.

இந்நிலையில் தலிபான்களுடன் சண்டையிடத் தயார் என்று அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரைத் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அகமத் மசூத் கூறும்போது, “பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான முக்கிய வழி என்பதைத் தலிபான்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும் தலிபான்களுடனான போருக்கு நாங்கள் தயார். சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

 

தமிழருக்காக குரல் கொடுத்த மங்கள இன்று காலமானார்!!!

மங்கள சமரவீர இன்று காலமானார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இருந்த மங்கள சமரவீர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இலங்கையில் கொரோனாவிற்கு காலமான முக்கியமானவர் இவர். இவர் சென்ற வாரமே காலமானதாக தவறான செய்தி ஒன்றும் வெளியாகி இருந்தது.

நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டு வந்த மங்கள இலங்கையின் இரு பிரதான கட்சிகளிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்து 2020இல் கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். இவர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையை ஐநா மனித உரிமை சாசன உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட வைத்ததன் மூலம், போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கிடுக்குப்பிடிக்குள் இலங்கை சிக்கியது. அதனால் மங்கள சமரவீர நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்ற அவப் பெயருக்கு மகங்கள உள்ளானார்.

மங்கள அமெரிக்க தெற்காசிய பிரிவின் பொறுப்பாளர் சமந்த பவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டு இருந்தது. சமந்தா பவருடன் மங்களவுக்கு இருந்த நெருக்கம் தற்போதைய அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

மங்கள சமரவீர கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கை மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணப்பாட்டை உடையவர். அதனால் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நன்மதிப்பைக் கொண்டிருந்தார். அவர் யுத்தத்திற்குப் பின் தமிழ் – சிங்கள சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி தமிழ் சமூகத்திற்கு அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தவர்.

கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தேசபிமான இயக்கம் என்பதனை உருவாக்கி இலங்கையின் இரு பிரதான தேசியக் கட்சிகளும் – ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இறுதியாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தான் பெருமைப்படுகின்ற இரு விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று 1981 மே 31 இரவு எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை 1990இல் சந்திரிகா குமாரதுங்கவின் சமாதான முயற்சியால், வெண்தாமரை இயக்கத்தினூடாக புனரமைத்து தமிழ் மக்களிடம் கையளிக்க உதவியது எனக் குறிப்பிட்டார். அடுத்தது இலங்கை தொலைத்தொடர்பாடலை தனியார் மயப்படுத்தி தொலைபேசி இணைப்பை அனைவரும் பெறும்வகையில் செய்தது என்றும் கூறினார்.

மங்கள சமரவீர வெளிப்படையாக பேசுவதாலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததாலும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“முதல் தடுப்பூசியே இல்லாது பல நாடுகள் தவிக்கும் நிலையில் பூஸ்டர்டோஸ் தேவையில்லாதது.” – உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிருப்தி !

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி பூஸ்டர்டோஸ் எனும் மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும் பணியை ஆரம்பித்துவிட்டது.

ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக சுகாதார மையம் ஆரம்பநிலையிலேயே வேண்டுகோளை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் டெட்ரோஸ் அதோனம் நேற்று ஹங்கேரியில் செய்தியாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ,

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “தடுப்பூசி தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது டோஸை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது டோஸ் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம்.

இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியன் டோஸ் தடுப்பூசியில் 75% தடுப்பூசிகள் 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன. தடுப்பூசி அநீதி கொரோனா மேலும் பலமுறை உருமாறி அச்சுறுத்தும்.

இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும் வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது” எனத் தெரிவித்தார்.