2021

2021

குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய உயிருள்ள ரொபோக்கள் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை !

உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரொபோக்கள் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன. அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர்.

These Tiny Living Robots Made From Frog Cells Can Swim And Heal Itself -  MobyGeek.com

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு ‘ஜீனோபாட்ஸ் 1.0’ என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.

தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 2.0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரொபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியுள்ளோம். இவற்றால் தங்களைப் போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியவிஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டப்ட்ஸ்பல்கலைக்கழக விஞ்ஞானி பிளாகிஸ்தான் கூறும்போது, “ஆய்வகத்தில் ஒரு ஜீனோபாட்ஸ் ரோபோ குழந்தையை பெற்றெடுக்க 5 நாட்கள் ஆகிறது. இதுவும் அச்சு, அசல் ஜீனோபாட்ஸ் ரோபோ போன்றே இருக்கிறது. எதிர்காலத்தில் அணுக் கழிவு, கடலில் சேகரமாகும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜீனோபாட்ஸ் ரோபோவை பயன்படுத்த முடியும்” என்றார்

அமெரிக்காவின் டூக் பல்கலைக்கழக பேராசிரியர் நிடா பாராஹனி கூறும்போது, “ஜீனோபாட்ஸ் ரோபோவால் தன்னைப் போன்றே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் அது ஆபத்தானது. இவை ஆய்வகத்தில் இருந்து தப்பி பூமியில் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவற்றின் இனப்பெருக்கம், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரி ரோபாவால் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக அனைத்து உயிரி ரோபோக்களையும் அழித்துவிட வேண்டும்” என்றா

“குற்றவாளிகளுக்கு கடவுளின் சட்டத்திலும் மன்னிப்பு இல்லை.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாக்கிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்துகொண்டிருந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாக்கிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

நியாயம் கிடைக்கும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை, இயன்றளவு உறுதி செய்யப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது.

இச்செயலுடன் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகப் பாக்கிஸ்தானில் தொழில்புரிந்த இலங்கையரான பிரியந்த குமார, ஒரு முகாமையாளராக உயர் தொழில் திறமையைக் காட்டியவர் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை என்றும் சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காதென்றும் தெரிவித்த பிரதமர், நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

“மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றுபடுங்கள்.” – இந்து சமுத்திர பிராந்திய நாடுகளிடம் கோத்தாபாய ராஜபக்ஷ கோரிக்கை !

தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று மாலை ஆரம்பித்த இந்து சமுத்திர மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

உயிர்களைக் காப்பாற்றுவது என்பதை விலை மதிக்க முடியாவிட்டாலும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அதிக செலவை ஏற்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றன கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வல்லரசு நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளால் மாத்திரமே, அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும்.

அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில், கொவிட் – 19 தொற்றுப் பரவல் இல்லாமல் போகப்போவதில்லை.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, வல்லரசு நாடுகள் உதவி புரிய வேண்டுமென்றும். உலகளாவிய தொற்றுப் பரவலைத் தடுக்கும் வேலைத்திட்டத்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலைமைத்துவம் வழங்கி வருகின்ற போதிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு, எந்தவோர் உலக அமைப்பும் உதவ முன்வரவில்லை.

தொற்றுப் பரவலென்பது, வறிய மற்றும் வல்லரசு நாடுகளை ஒரே விதத்தில் பாதிப்படையச் செய்திருப்பினும், வீதத்தின் அடிப்படையில், பாதிப்பின் சுமைகளை வறிய நாடுகளே தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான காலமாகும். தொற்று நோயால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளுக்கு கடன் மன்னிப்பு வழங்கல், மறுசீரமைப்பை மேற்கொள்ளல் அல்லது கடன் நிவாரண காலங்களை வழங்க வல்லரசு நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

தொற்றுநோய் அனுபவத்தின்படி, ஒரு நாட்டில் உள்ள பாதகமான நிலைமைகள், விரைவாக பிராந்தியத்துக்கும், இறுதியில் உலகம் முழுவதும் பரவக்கூடும். அதனால்தான், தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் விடயங்களில் நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க – பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் தொடர்பாக நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டும்.

மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாக தற்போதைய காலநிலை நெருக்கடி காணப்படுகிறது.எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவு என்பது, ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல், கூட்டு முயற்சியால் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இவ்விரு சம்பவங்களையும் சுட்டிக்காட்டக் காரணம், அபாயகரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களைக் கடற்பரப்புக்குள் கொண்டுசெல்வதில் கடுமையான கட்டுப்பாடுகளின் அவசரத் தேவை காணப்படுவதால் ஆகும். நவீன உபகரணங்களுடன் கூடிய இழுவைப் படகுகள் மூலம் எல்லைகடந்த கடற்பகுதியில் மீன்பிடிப்பது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது.

இதனால், தேசிய அளவில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டிருக்கும் வறிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சூழலையும் உள்ளூர் பொருளாதாரங்களின் நம்பகத்தன்மையையும் பராமரித்தல் போன்ற பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கியமாகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் மையமாகக் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரமானது, பிராந்திய நாடுகளுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதென்பதையும், புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.

மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறானதொரு நடவடிக்கையும் ஒருங்கிணைவும், ஒத்துழைப்புமே அவசியமாக உள்ளது. பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்குத் தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், இவ்வாறான ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது என்பதையும்,

இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து இவற்றை இல்லாது ஒழிக்கவில்லையாயின், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றன சுலபமாக இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகள் மற்றும் அந்தக் கடலைப் பரவலாகப் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொது நலன்கள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்துக்காக – 2016ஆம் ஆண்டில், “இந்து சமுத்திர மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது.

இதன் நான்காவது மாநாடு, 2019ஆம் ஆண்டில், மாலைதீவில் இடம்பெற்றதோடு, அதன்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வழக்கத்துக்கு மாறான சவால்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

“சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல்” என்ற தொனிப்பொருளில், இந்த முறை மாநாடு இடம்பெறுகின்றது.

“இந்து சமுத்திரத்தின் ஊடாகப் பல்தரப்பு செயற்பாடுகளுக்கான அரங்காகச் செயற்படக்கூடிய, பயன்மிக்க கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், வழிகாட்டி உள்ளார். சமுத்திரத்தின் அழகு மற்றும் உயிரியல் பல்வகைமையை எமது எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதன் மூலம் சுற்றாடல் மாசடைவதன் காரணமாக, இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைக்க நாம் இன்றே தொடங்க வேண்டும்” என்று – ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சாய்ட் பாட்ர் பின் ஹமாட் பின் ஹமூட் அல் பூசயிட் அவர்கள் தனது நேற்றைய சிறப்புரையில் குறிப்பிட்டார்.

“அதிகப் பொறுப்புக்களை வகிப்பதற்கும், தமக்கடையே மிகவும் சிறந்த தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டிய நிலை, இந்து சமுத்திர நாடுகளுக்கு இன்று ஏற்பட்டுள்ளது’ என்றும்,

“கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை இயல்வு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் வரவேற்புக்களுடன் விரைவான புதிய பொதுமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டும்” என்றும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தனது  சிறப்புரையின் போது குறிப்பிட்டார்.

18 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர், இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

தீவிரவாதிகளை தேடிச்சென்று பொதுமக்களை சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம் – 13 பேர் வரை பலி !

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரால் 13 பேர் சுட்டுக் கொலை - பலர் கவலைக்கிடம்!

மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் கடும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் பணியை முடித்து விட்டு திரும்பிய தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இதை அறிந்து ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் உள்ளூர் மக்கள் 5 பேரும், வீரர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டதாகவும், அங்கு நிகழ்ந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறும் செமேரு எரிமலை – 13 பேர் பலி !

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது. எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர். எனினும் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எரிமலையை  சுற்றி 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குட்டியின் கடைசி நிமிடங்கள் – நட்பு என்பது எதுவரை…

என்னுடைய அண்ணன் 1989 இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது வெறும் 23. மரணத்தின் வலியை உணத்திய மரணம். அவனது உடல் கூடக் கிடைக்கவில்லை. போராடப் போனவர்கள் முட்டாள்களா? போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முட்டாள்களா? அல்லது எமது போராட்டமே முட்டாள்தனமானதா? இதற்கு விடை கிடைக்கவில்லையா அல்லது விடையை அறியத் தயாரில்லையா தெரியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துவிட்டும், அதிமுட்டாள்தனமான அரசியலை இன்றும் முன்னெடுக்கின்றோம்.

2003இல் என் தந்தையார் தனது அறுபதுக்களில் மாரடைப்பால் மரணித்த போது, நான் லண்டனில். மரணச் செய்தி எனக்கு கிடைத்த போது தகனக் கிரியைகள் கூட முடிந்துவிட்டது. என்னிரு உறவுகளினதும் மரணத்திற்கு அருகில் நான் நிற்கவில்லை. பார்க்கவில்லை.

2001 செப்ரம்பரில் இரட்டைக் கோபுரங்களில் இருந்து மனிதர்கள் இறந்து கொண்டிருந்ததை நேரடியாக லைப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன். உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. உயிரைக் காக்க மாடிகளில் இருந்து குதித்து மரணத்தை தழுவிக்கொண்டிருந்தனர். விமானம் மோதி அதன் எரிபொருள் எரிந்து மக்கள் கருகிச் செத்துக்கொண்டிருந்ததை பாரத்தோம். அவர்களுக்கும் எனக்கும் இடையே மனிதம் என்பதைத் தவிர எந்த உறவும் இருக்கவில்லை. இந்த மரணங்களுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல் இடைவெளி.

இப்போது கடந்த 12 மாத காலத்திற்குள் என்னோடு எவ்வித இரத்த சம்பந்தமுமற்ற நெருக்கமான இரு நட்புகளை முற்றிலும் மாறுபட்ட சூழலில் இழந்துள்ளேன். இந்த இரு நட்புகளோடும் இரு தசாப்தங்களுக்கு மேலான ஒரு உறவு இருந்தது. வண்ணத்துப் பூச்சிவிளைவு – butterfly effect என்பார்கள் அது போல் தான் இதுவும். உலகின் ஒரு மூலையில் வண்ணத்துப் பூச்சி பறக்க அந்த வண்ணத்துப் பூச்சியின் அசைவு மலரை அசைக்க மலரின் அசைவு கிளையை அசைக்க கிளையின் அசைவால் … என்று போய் உலகின் இன்னொரு மூலையில் புவிநடுக்கம் ஏற்பட்டது போல்தான்.

1954 நவம்பர் 26இல் வண்ணத்துப்பூச்சி ஏதும் செய்திருந்தால் 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருக்காது. நான் யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்திருப்பேன். சிவஜோதியையோ மற்றும் யாழ் விக்ரோரியாக் கல்லூரி நண்பர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் எனக்கு ஒரு முகவரியற்ற மனிதனாக இருந்திருப்பான். ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் நண்பர்களானோம். மரணப் படுக்கையில் இருந்தபடியும் லிற்றில் எய்டைப் பற்றி பேசினான். இன்று அவன் துணைவிக்கு நான் உடன் பிறவா சகோதரன். லிற்றில் எய்ட் னை அவன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து சுமக்கின்றார்.

அதேபோல் 1991இல் ஸ்பெயினில் நாங்கள் தரையிறக்கப்படாவிட்டால் சுவிஸ்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியிருப்பேன். சஞ்சீவ்ராஜ் என்ற குட்டியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் ஸ்பெயினில் நாங்கள் மாட்டினோம். திருப்பி அனுப்பப்படும் போது லண்டனில் தரையிறங்கினோம். தமிழீழ மக்கள் கட்சியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். குட்டியைச் சந்தித்தேன். சமூகம், அரசியல் என்று ஓடித் திரிந்த குட்டியுடன் நட்பாகியது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் உண்டு. இருந்தாலும் தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், தேசம்நெற் ஆகியவற்றின் உத்தியோகப்பற்றற்ற செய்தி சேகரிப்பாளன். இறுதியில் அவன் வாழ்க்கையே எங்களுக்கு ஒரு செய்தியாகிவிட்டது.

கடந்த டிசம்பர் 27இல் வீட்டில் தனியாக இருந்தவனோடு நானும் வந்து சேர்ந்தேன். ஊர்த்துலாவரம் எல்லாம் பேசுவோம். கடைசியில் சண்டையும் வரும். ‘உனக்கே வாழத் தெரியவில்லை. உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு’ என்று சத்தம் போட்டு முடிப்பேன். கொலைவெறியோடு முறைச்சுக்கொண்டு போவான். மறுநாள் பிள்ளைகளுக்கு இறைச்சிக் கறி வைத்து கவனமாக பாத்திரங்களில் போட்டுத் தருவான். எனக்கும் குறைந்தது இரு மரக்கறி வைத்திருப்பான். அவன் ஊரில் சமைப்பதைப் பற்றியெல்லாம் கதையளக்கின்ற போது அந்தச் சுற்றாடலை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவான். இரு கைகளால் வடைதட்டுவதும் எடுப்பதும் அவன் சொல்கின்ற அழகே தனி. பயிற்றங்காய் பிரட்டல் கறி வைப்தை சொல்லிக்கொண்டு வந்தால் பயிற்றங்காய் பிரட்டல் கறி சாப்பிட்ட திருப்தி வரும். அவ்வளவு சாப்பாட்டில் நுணக்கம். அவனுடைய மஞ்சவனப்பதி முருகன் கோயில் கதைகளும் அரசியல் கதைகளும் என்றால் எவ்வளவு நேரமும் கதைத்துக்கொண்டிருப்பான். சிலவேளை அறுவையாகவும் இருக்கும்.

அவனுடைய வீட்டுக்கு வந்த போது சிவஜோதி எதிர்ப்புசக்தியை தாக்குப்பிடிக்கவல்ல பக்ரீரியா தாக்கத்தினால் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 30இல் எம்மைவிட்டுப் பிரிந்தான். அவனுடைய மரணம் முற்றிலும் எதிர்பாராதது. அவனொரு பன்முக ஆளுமை. மதுவின் வாசத்தையே அறியாதவன். தனது வாழ்வு முழவதும் மதுவை விலத்தி வைத்தவன். குட்டிக்கு சிவஜோதியை யாரென்றே தெரியாது. நான் சொல்லிக் கேள்விப்பட்டதும், நான் சிவஜோதியுடைய மனைவி ஹம்சகௌரியோடு உரையாடுவதை கேட்டு அறிந்ததும் தான். ஆனால் சிவஜோதியுடைய நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்ற போது அதற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவஜோதியுடைய நினைவாக தென்னங்கன்றுகள் வழங்குவோம் என்று சொல்லி அதற்கான செலவையும் தானே தந்தான்.

எனது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை’ நூல் வெளியீட்டு விழா பற்றி 2016இல் அவனோடு பேசினேன். ‘டேய் வித்தியாசமா செய்வோம். எங்களுடைய பிள்ளைகளையும் பேச வைப்போம். இரண்டாம் தலைமுறையையும் இறக்குவோம்’ என்றான். அவனொரு ஐடியா திலகம். ஆளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வேலையைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் சொன்னதும் நல்லதாகப்பட்டது. அவனுடைய மூத்தவளை வரவேற்புரைக்கும் என்னுடைய மூத்தவனை நூல் அறிமுகத்திற்கும் போட்டு புத்தகவெளியீடு இனிதே முடிந்தது.

2019இல் அவன் மாடியில் இருந்து வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது நானும் தோழர் சிவலிங்கமும் அவனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவன் நினைவுகளில் குழப்பம் இருந்தது. அவனுக்கு கொழுவப்பட்டிருந்த ரியூப்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டேன். அதற்குப் பிறகு நானும் நண்பர் ஹரியும் சென்று பார்த்து வந்தோம். அப்படி இருந்தவனுக்கு அவள் மறுஜென்மம் கொடுத்து பார்த்தாள்.

கடைசிக் காலங்களில் பலரைப் பற்றியும் ஆராய்வோம். தோழர் சிவலிங்கம் பற்றி எப்போதும் உயர்வான மதிப்பீட்டோடு பேசுவான். தோழர் ரகுமான் ஜானின் நூல்வெளியீட்டை முன்நின்று நடத்தினான். பின் பாரிஸ் நூல்வெளியீட்டுக்கு நான், குட்டி ரகுமான் ஜான் மூவரும் சென்று சில தினங்கள் தங்கி வந்தோம். அந்தப் பயணத்தின் போது நான் மிகுந்த மனக்கஸ்டத்தில் இருந்தேன். அவர்களோடு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மற்றையவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியது கிடையாது. வீட்டுக்கு வெளியே என் போன்ற நண்பர்களுக்கு அவன் உன்னதமான நண்பன்.

ஆனால் அவனுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்த அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவனை மீட்கலாம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டே வந்தது. அவனுடைய கடைசி 12 மாதங்களில் அவனுக்கு நெருக்கமான ஒரே உறவு நான்தான். அவன் கொக்குவில் கிராமத்திலும் நான் அனுராதபுரத்திலும் பிறந்து எங்கெங்கோ வளர்ந்து இறுதியில் லண்டன் நியூமோல்டனில் அவனுக்கு நான் என்றாகியது.

தூரத்தே இருந்தாலும் கட்டியவள் பாசத்தோடு சாப்பாடு எடுத்து வருவாள். நண்பர்கள் ரமேஸ் உம் பிரபாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து எங்களையும் நடக்க அழைத்துச் செல்வார்கள். ரமேஸின் குழு குழவென்ற வெண்நிறப் பஞ்சு போலானா அந்நாய் எங்களிலும் பார்க்க கம்பீரமாகவே நடக்கும். அதன் வழி நாங்கள் நடப்போம். சிவமோகன் அடிக்கடி நிலைமையை மதிப்பீடு செய்து கவனமெடுப்பார். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற வாசகத்தை குட்டி முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டான். வண்ணத்துப் பூச்சி விளைவு விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் வினையில் வந்து முடிந்தது. சில வேளை முதல் முதல் அருந்தும் போது இன்னுமொரு வண்ணாத்திப் பூச்சியால் க்கிளாஸ் தட்டி ஊத்தி தடங்கல் வந்திருந்தால் அவன் குடிக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு குறிப்பு வேறு யாருடனாவது பொருந்தியிருந்தால் வந்தவள் பென்ட் எடுத்திருப்பாளோ என்னவோ… இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு எங்கெங்கெல்லாமோ முடிச்சவிக்கின்றது. முடிச்சுப் போடுகின்றது.

ஒக்ரோபர் ஒன்பது அவனுக்கு இயலாமலாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரிரு நாளிலேயே வந்துவிட்டான். அப்போது தான் ஓரளவு எனக்கும் அவனுக்கும் கூட இனி நிறையக்காலம் இல்லை என்பதை உணர முடிந்தது. எமது உடலுறுப்புக்களில் முக்கிய உறுப்பான ஈரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அவனுடைய நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதிலும் பலனில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்திருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் நவம்பர் 12இல் மீண்டும் மருத்துவமனைக்கு. அதுவே அவனது கடைசிப் பயணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. அதுவே அவனுக்கு இந்த வலி, வேதனையில் இருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று எண்ணினேன்.

அவனிருந்த வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே எண்பது வயதைத் தாண்டியவர்கள். இவன் மட்டுமே ஐம்பதுக்களில். அவன் வாழ்வதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தது. ஆனால் அவனது தவறான முடிவுகள், அவனது முடிவை முன்பதிவு செய்ய காரணமானது. மருத்துவமனையில் இருந்து, கட்டியவளுக்கு தொலைபேசி அழைப்பு இரவு பதினொருமணியளவில். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

மொழிபெயர்ப்பாளர் தேவை என்றாள். நான் அவளுக்கு நிலைமையை விளக்கினேன். அந்த இடியான செய்தியைச் சொல்லப் போகின்றனர். அவனுடைய கடைசிநாள் இது. அவனது உடல்வலிக்கு இது விடுதலை கொடுக்கும் என்று சமாதானம் சொல்லி தேற்றினேன். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவளையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிதானமாக விளங்கப்படுத்தினார். “இனிமேல் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவரை நிம்மதியாக கஸ்டமில்லாமல் வழியனுப்பி வைப்பதே ஒரேவழி” என்றார். அவருடைய மருத்துவவியல் மொழியில் நாங்கள் வழியனுப்பி வைப்பதற்காக உயிரைப் பிடித்து வைத்துள்ளனர் என்பது தான் சாரம்சம். ஓரளவு எதிர்பார்த்தது தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரோடு இருக்கலாம் என்றவர் மெதுவாக திடீரென் எப்பவும் எதுவும் நடக்கலாம், அதனால் தமதிக்காமல் உள்ளே செல்வோம் என தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே வார்ட் எட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் ரியூப்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவன். கட்டியவள் அவன் முகத்தை வருடி இதயத்தை வருடி கண்ணீர் விட்டிருக்க பிள்ளைகள் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். பத்து நிமிடங்களிருக்கும் மருத்துவர் என்னை சைகையால் வரச்சொன்னார். இனி தாமதிக்க முடியாது. சிலவேளை பிள்ளைகளுக்கு முன் ஏதும் ஆகிவிடலாம். ஆதனால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை கூட்டிச்சென்றுவிடலாம்” என்றார். அவ்வாறே பிள்ளைகள் கண்ணீரோடு அப்பாவை வழியனுப்பி வைத்தனர். அவர்களை இன்னுமொரு மருத்துவ தாதி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவனைக் கட்டியவளும் நானும்.

“அவரது இதயத்தை இயக்க வழங்கப்படும் மருந்தை நிறுத்துவோம். இதயத்துடிப்பு படிப்படியாகக் குறையும். அதேநேரம் சுவாசத்தையும் நிறுத்துவோம். அவர் எவ்வித வலியும் இன்றி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்” என்று மிவும் இதமாக முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொன்னார். அவள் அவனது இதயத்தையும் முகத்தையும் வருடியவாறு நிற்க அவளது கண்ணீர்த்துளிகள் அவன் மீது வீழ்ந்தது. நான் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். இதயத்துக்கு வழங்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டது. இதயத்துடிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. உயிரை போகவிடாமல் இழுத்து வைத்திருந்த அந்த மெசின் சிவப்பு விளக்குகளை மின்னி மின்னி அலறியது. அந்தத்தாதி எதையெல்லாமோ அழுத்தி அந்த அலறலை மௌனமாக்கினால். இப்போது சிவப்பு விளக்கு மட்டும் மின்னி மின்னிக் கொண்டிருந்தது. சுவாசத்தை சரி செய்து அவனை அமைதியாக சுவாசிக்கச் செய்தனர். பின் சுவாசத்திலும் வீழ்ச்சி. இறுதியில் அவனது இதயம் கடைசியாக ஒரு தடவை துடித்தது. அவன் மார்பில் கை வைத்திருந்தவள் அதை உணர்ந்தாள். அவன் உயிர் பிரிந்தது. அந்த மெசினும் நிறுத்தப்பட்டது.

“என்ரை பிள்ளைகளை உன்ரை பிள்ளைகளைப் போல் பார்க்க மாட்டியா?” என்று கேட்டது மட்டும் என் காதில் எதிரொலித்துக்கொண்டது.

அவன் மரணத்தை நோக்கிச் செல்கின்றான் என்பது மிக உறுதியாகத் தெரிந்தும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னுமொரு உயிர் இவ்வாறு இழக்கப்படக் கூடாது என்று எண்ணினேன். சஞ்சீவ்ராஜ் என்ற இந்தக் குட்டியின் முடிவை ஒரு வாழ்க்கை அனுபவபாடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனின் கடைசிக் காலங்களில் எனக்கு ஏற்பட்டது. அவனுக்கும் அதனைத் தெரியப்படுத்தி இருந்தேன். அவன் மறுத்தானா சம்மதித்தானா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அதனாலேயே இப்பதிவுகள். சேற்றில் கால் வைக்காமல் விதைக்க முடியுமா? ஆகவே குட்டியின் மரணம் யாராவது ஒருவருக்காயினும் படிப்பினையானால் அதுவே அவனது ஆத்மாவை சாந்தியடையச் செய்யும். அவ்வாறானவர்களின் வாழ்கையினூடாக அவன் நிம்மதியாக உறங்குவான்.

ஆகவே எங்கள் நண்பர்கள் நினைவாக அவர்களுடைய ஆத்மாசாந்தியடைய இந்த ஆண்டு முதல் நாங்கள் மதுவை எம் வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு கற்றுக்கொள்வோம். வரும் புத்தாண்டுச் சபதம் எடுப்பவர்கள் ஜனவரி மாதத்தை மதுவற்ற மாதமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே. அது வாழ்வதற்கே. மரணம் என்றோ ஒரு நாள் எம்மை அனைத்துக்கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மரணத்தைத் தேடி நாம் ஏன் செல்ல வேண்டும்? அதற்காக எம் வாழ்வில் மதுவிலக்குச் செய்வோம்.

மதுவைத் தவிர்த்தால் நோய் நொடியிலிருந்து தப்பலாம்!
மதுவைத் தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!
மதுவைத் தவிர்த்தால் உறவுகள் நட்புகள் சேரும் நேசிக்கும்!
மதுவைத் தவிர்த்தால் பொருளாதாரம் சிறக்கும்
மதுவை தவிர்த்தால் வாழ்க்கை மணம் கமழும்!

மதுவைத் தவிர்ப்போம் மாண்புள்ள மனிதர்களாக வாழ்வோம்!

அவனது இறுதிக் கிரியைகள்:
தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

நிகழ்வுகள்:
 
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021 2:00 PM – 5:00 PM
Richard Challoner School Xavier centre School House Richard Challoner, Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom
 
கிரியை
Wednesday, 08 Dec 2021 9:00 AM – 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
தகனம்
Wednesday, 08 Dec 2021 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தை – ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம் – லண்டன் அசம்பிளியில் ஏகமனதாகத் தீர்மானம்!

டீசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி லண்டன் அசம்பிளி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற, அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.

லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற, பலவர்ணம் கொண்ட, ஒருபோதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன், கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் மட்டுமே. ஆகக்கூடியது 2% வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கள் நிலையமாக காண்கின்றனர்.

லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.

தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.

லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.

லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் ரிரெயில் செக்ரரில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் ஸ்ரேசன்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தெரியக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.

டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14கை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதே போல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவரான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.

லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள், தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்ணுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984 இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்களின் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸரீற் இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்ணுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.

‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாக குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.

இறுதியாக நிக்களஸ் ரொஜர், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே இன்னமும் உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனையிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.

இவ்வாறு எல்லாவற்றையும் முன்ணுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான தமிழ் படுகொலைகள் தமிழர்களால் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.

ஆகவே ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ள சிக்கல்களும் கஸ்டங்களும் தமிழ் சமூகத்திற்குள்ளும் உள்ளது. அவற்றை ஆராய்ந்து பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகரவேண்டும். யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் ஈஸ்ற்ஹாமிலும் ஹரோவிலும் குடை பிடிக்கும் அரசியல் இன்னும் எத்தினை நாளைக்கு. லண்டனில் பலநூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் குடும்பவன்முறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு அதீத மதப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மனவழுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இவை ஒரளவு வெளித்தளத்தில் தெரிகின்ற பிரச்சினைகள் இதைவிடவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பலவும் உள்ளது. இங்குள்ள தமிழர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் அவசியமாகின்றது. லண்டன் அசம்பிளி ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்று அறிவித்தது போல் லண்டன் தமிழர்கள் ஜனவரியை மது விலக்கு மாதமாக அறிவிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களில் மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும். பொது நிகழ்வுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மதுப் பாவனையையும் அதன் படங்களைப் போட்டு கொண்டாடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் – 100க்கும் மேற்பட்டோர் கைது !

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

76 ஆண்டுகளின் பின்பு வெடித்த இரண்டாம் உலகப்போர் கால குண்டு – 4 பேர் படுகாயம் !

ஜேர்மனியில் தொடருந்து கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போர் 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

வெடிக்காத போர்க்கால குண்டுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளால் எறியப்பட்ட குண்டுகள், போர் முடிந்து 76 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஜேர்மனியில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.

அதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்காமல் நிபுணர்களால் செயலிழக்க செய்யப்படுகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிராங்பர்ட் நகரில் 1.4 டன் எடையுடைய ‘பிளாக் பஸ்டர்’ குண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே தொடருந்து துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி இடம்பெற்று வருகிறது.

அந்தப்பகுதியில் நேற்று முன்தினம், இரண்டாம் உலகப்போர் குண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.

பாலத்துக்கு அருகே சுரங்கப்பாதை பணியின்போது இந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு

டெல்டாவை விட அதிக வீரியம் கொண்ட ஒமிக்ரோன் – ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் !

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதன் பாதிப்பு குறைய தொடங்கிய போது கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதில் டெல்டா வகை உருமாறிய கொரோனா மற்றவைகளை விட அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது.

ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது.

ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

தென்ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27-ந்திகதியில் இருந்து 35 ஆயிரத்து 670 பேர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் மீண்டும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம் கூறும்போது, “தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை” என்றார்.

மற்றொரு விஞ்ஞானியான அன்னேவான் கோட் பெர்க் கூறும்போது, “நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே தீவிர நோய், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாகவே போராடுகிறது” என்றார்.