2021

2021

“அரிசி இல்லையேல் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள்.” – சமல் ராஜபக்ஷ மக்களுக்கு அறிவுரை !

“நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும்.” என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் இடம்பெற்ற பூஜையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நானும் ஒரு விவசாயி தான். இயற்கை உரத்தில்தான் பயிரிட்டுள்ளேன். நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு மற்றும் வற்றாளங்கிழங்கு போன்றவற்றை உட்கொண்டார்கள். பாண் சாப்பிடுவதற்குப் பதிலாக, மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது புற்று நோய்க்கும் சிறந்தது. பச்சைப்பயறு மோசமானதாக இல்லை.

புதியவர்கள் இதைத் தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக அமையும். முதல் பருவத்தில் ஓர் அனுபவமாக இருக்கும். அறுவடை குறைவாக இருந்தால், கொடுப்பனவு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பயப்படத் தேவையில்லை.

இயற்கை விவசாயத்தை யாரும் விரும்புவதில்லை என தெளிவாகிறது. மக்களுக்குத் தரமான நச்சுத்தன்மையற்ற உணவை வழங்க வேண்டும். கடந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கூடாது என்று கூக்குரல் எழுப்பப்பட்டது. இப்போது இரசாயன உரம் பெற வேண்டும் என்கிறார்கள். இதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நம் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு நன்றாக விளைகிறது.

உள்ளூரில் 60இற்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன. பச்சை பயறு , கௌப்பி போன்ற பயிர்கள் பல உள்ளன. இவற்றைச் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். எங்களின் பணமும் இரசாயன உரங்களுக்கு அதிக செலவாகின்றது. இதற்கு இருவரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியை நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் அறிவிப்பு !

“இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும் எனவும் அதனை வலியுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்கிழமை (2) யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, பின்வரும் தீர்மானங்களை அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம் என ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்.

அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நாம் நிராகரிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு இருவாரங்களுக்குள் நடாத்தப்படும் என்றும் பிரஸ்தாப தீர்மானங்களின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானங்களை தமிழீழ விடுதலை இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டணி என்பன கூட்டாக வெளியிட்டுள்ளன.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“தமிழ் – முஸ்லீம் அரசியல் தரப்புக்கள் இணைந்து செயற்பட சாத்தியம்.” – ரவூப் ஹக்கீம்

தமிழ் தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய சந்திப்பு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சி இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமை தொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஏற்கனவே தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் நடந்திருக்கின்றது.

அடையாள ரீதியாக நாம் இன்று சந்தித்தாலும் எதிர்வரும் காலங்களில் நாங்கள் சந்தித்து இதனை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம். தமிழ் தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்பட சாத்தியப்பாடுகள் இருக்கின்றது. அனைத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது என்றார்.

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பெண்கள் மயங்கிய நிலையில் கிளி மருத்துவமனையில்!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து மயங்கிய நிலையில் பணியில் இருந்த சில பெண்கள் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வைத்தியசாலையில் இருந்து தகவல் வந்ததையடுத்து அக்குடும்பத்தினர் வைத்திய சாலைக்கு விரைந்துள்ளனர். மாலை இரண்டு மணி முதல் இரவு பத்துமணி வரையான நேரத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களே கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதுவரை தேசம்நெற் க்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பிரேசிலில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட 25 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸார் !

பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது.
வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 பேர் பலி – குறியீடுதகவலறிந்து அங்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சண்டையில் 25 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில், விடுமுறையில் வங்கிகளை கொள்ளையடிக்க இந்த குழு திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நான் தயார்.” – ஹரின் பெர்னாண்டோ

தற்போது சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ தயாராக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்றும் தனது தேசியப் பட்டியல் பதவியை ராஜினாமா செய்தால், சஜித் பிரேமதாசாவுக்கு அல்லது கட்சியின் பொதுச் செயலாளருக்கே பொருத்தமான நபரை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அதற்குத் தகுதியற்றவர் என இலங் கையில் எந்தவொரு நபரும் கூற மாட்டார்கள்.

வீதியில் இறங்கிப் போராட எனக்குத் தெரியும் என்றும் ரஞ்சன் பாராளுமன்றில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் ஏனென்றால் தவறு செய்யாமல் ஒருவர் சிறைக்ஷகுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் ஆரம்பமானது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் – முக்கிய தமிழ்தேசிய கட்சிகள் பங்கேற்கவில்லை!

யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் பட்லர் அதிரடி – இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இங்கிலாந்து !

டி20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இயன் மோகன் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பானுக்க ராஜபக்ஷ மற்றும் தசுன் சானக ஆகிய இருவரும் தலா 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மொய்ன் அலி, ஆதில் ரஷீத்,கிரிஸ் ஜோர்தன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலுள்ள நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் !

இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய புலனாய்வு பிரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியசந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய அடிப்படையவாதியான சஹ்ரான் ஹசீமின் புகைப்படங்கள், குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் குறித்த தொலைபேசியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டபாயராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – கிளாஸ்கோ நகரில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் !

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ஷ கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.